Wednesday, September 11, 2013

அவள் என்பதன் நிச்சலனம்



அறைந்து சாற்றியப்பின்
கதவின் முதுகில்
தழும்பு ஏற
உள்ளொன்று வைத்ததன்
புறம்பேசிகள்

உறவெச்சங்கள் உமிழ்ந்த
புள்ளிகளில்
கோடுகளைக் கீய்ச்சியே
வாசலை நிரப்ப

அவசரகதியில்
அருந்தியதுப்  போக
ஆடைத் தேம்பிய
தேநீரில்
ருசித்தே மிதக்கிறது
சிற்றெறும்பு

செலவில் சேமித்த காசிலும்
விடிவிளக்கு வெளிச்சத்தில்
வந்து போனவனின்
வாசனை

பெயரணிந்த பிம்பங்களை
அவள் சுமப்பாள் என்பதன்
காலக்கோல்
காளான் முளைக்க
உதிர்வதாய்  மேகங்கள்
 
- புவனம் 

உறக்கத்தை தைக்கும் கனவின் கூர்

 
 
நீரில்
நட்டுவைத்த வார்த்தைகள்
ஒவ்வொன்றும் பூப்பெய்த

நீளாத கைக்குள்ளும்
பிணைந்தே கிடக்கும்...
வேர்க்கொடிகளின்
நீட்சியிலோ

உப்புத்தாள் தேய்த்த
சுவரிலிருந்து
உரு உதிர்ந்த
ஓவியப்பெண்ணின்
உயிர் மிஞ்சிய நிறங்களின்
மீட்சியிலோ

தியானித்தலின் அலைவரிசையில்
இடுகுறிப் பெயரணிந்த
சப்தங்கள் ஒடுங்கும்
அத்தருணம்
பசித்த கண்களில்
மகிழ் துளி

வளர்பிறை
வட்டங்கள்
புள்ளிகளாய்
வளைந்து மூடும் முன்


--புவனம்

Tuesday, September 3, 2013

அன்னத்தூவியென


உச்சி முகரும் கூதலின்
காதல் எவ்வி
திருகிய வெண் சங்கு
மேனித் திண்மத்தில்
கையணைப்பு

குவிந்த சிமிழில் நிலம் பார்க்கும்
அந்தியின் விகசிதம்
மெல்லப் பரவியது
ஸ்பரிசத்தில்

மின்மினிகள் ஒளிர்கூட்டும்
தூக்கணாங்குருவிக்  கூட்டின்
இலைநரம்புப் பின்னல்
வயணத்துடன் விரவியது
விரல்கள்

விதும்பும் நரம்புத்  தீண்டலின்
திகைப்பில் மேலும் அதிர்வு
கூடியதொரு
கூடற் பொழுதில்
அலர்ந்து அவிழ்ந்த 
அன்னத்தூவியென 
நிரம்பியது
இசை

-புவனம்
 

Monday, September 2, 2013

காட்சி மாற்றம்



இருளோடு இறுகப் பிணைந்த
கரும்புள்ளிகளைக் குறித்தே
புனைந்ததில்
மேலும் குழையாதிருக்கட்டும்
அரிச்சுவடேறிய
சதுப்பு நிலச்சொற்கள் 

மிகைத்ததன் ஒளி
கண்களில் தூர்ந்ததன்
குறும்பொறையானதும்
அணையாததாகவே காண்கிறது
எவரும்  ஏற்றத்துணியாத
தீபத் திரிமுனைகள்

தீயிற் பாகமாக்குதலில்
பதம் பிசகிய போதும்    
அதனோடு இதுவுமாக
கடந்து போதலின் காட்சி மாற்றம்   

-புவனம் 

Friday, July 12, 2013

ஒளி பிரிகையின் ஒலி

 
மெல்லியல்
நரம்புப் பின்னலில்
குருதியும் சதையுமாய்
இசையூட்டம்

தொடர்பு எல்லைக்கு வெளியேயும்
அலைப்பேசும்
சிகைக்கோதல்
ஞாபகக் கோர்ப்பின்

கடவுச்சொல்லடுக்கில்
காற்றுப்புகாத
கையடக்க
கனவில் மடித்து
காத்திருப்பு

உப்பு நீர் முகந்த மேகங்கள்
நம் பாதையை உரசும் வரை

புழுதி துறந்த 
புதுமணலில்
வானவில்
வனையட்டுமென

ஒளி பிரிகையின் ஒலி

-புவனம்
 

Wednesday, July 10, 2013

இணைமுரண்



இலையுதிர் காலத்து
இணக்கமற்ற விதிர்த்த  மொழியில்
திருப்பப் பாதை எங்கும்
இருள் கவ்விய
வெறுமை சூழ
 
அவளும் தனிமையும்

எவ்விடமோ
இறுக்கிப் பிணைந்த
முரண் முடிச்சுகளின் கயிறு
வேரூடி
துருத்திய உருவோடு
துரத்துவதாய்

கால்கள் பின்னிப் புதைய
அசாதாரண தருணத்தில்
அமிழ்ந்து போனபின்
நினைவு தப்புதலே
விதையென

-புவனம்
 

Sunday, July 7, 2013

ஜோக்வா (விழிப்பு ).. மராத்தி மொழி திரைப்படம்


முன்பு  நம் பகுதியிலும்  வழக்கில்  இருந்த  தேவதாசி முறையே  கிட்டத்தட்ட .. ஆனால் ஆண்களையும் சேலை கட்டி இது மாதிரி இறைவிக்கு அர்ப்பணிப்பு செய்ததாக கேள்விப் பட்ட வரை  இல்லை

கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர கிராமப் புறங்களில் அதீத நம்பிக்கையோடு பின்பற்றப்படும்  எல்லம்மா என்ற பெண் தெய்வத்துக்கு நேர்ந்து விடப்படும் பெண்கள்  (ஜோடின்) மற்றும் ஆண்கள்  (ஜோக்தா)   மஞ்சள் தரித்து எல்லம்மாவுக்கு என நேர்ந்து விட்ட ப்பிறகு அந்த ஆணோ, பெண்ணோ  பிச்சை எடுத்து  வாழ்வதை, அவ்வூரில் இருக்கும் ஆண்களுக்கு பொதுச் சொத்தாக மதிக்கப்படுவதை  மிகுந்த வலியோடுக் கூடிய  காட்சிகளில் சொல்லப்பட்ட படமே ஜோக்வா (விழிப்பு ).. மராத்தி மொழி திரைப்படம்

றுக்கிப் பிடித்து அட்டையாய்  உறிஞ்சும் சமூக மூடப் பழக்கமும் அதில் கருகிச் சாம்பலாகும் தனி மனித உணர்வுகளையும் நகரும் காட்சிகளில் நேர்த்தியாகப்  படம் பிடித்துக்  காட்டப்படுகிறது.

சுலி என்ற இளம்பெண் பட்டாம்பூச்சியாய் கிராமத்தில் சுற்றித்  திரிந்து தனக்கு உரிய அழகான எதிர்காலத்தின் கனவில் நனைபவள் .. தலைமுடியில் சற்றே சிக்குப்பிடித்ததே  அறிகுறி என எல்லம்மாவுக்கு நேர்ந்துவிடப்  படுகிறாள் .. மிகுந்த அதிர்ச்சியோடு .. தனக்கு நேர்வதை எதிர்க்கொள்ள முடியாமல் .. சுற்றி இருப்பவர்களை எதிர்க்கவும்  இயலாமல்..

தாயப்பா என்கிற ஆண் மகனுக்கும் இதுவே நேர்கிறது... ஆடைகள் பறிக்கப்பட்டு சேலையில் வலம்வர ச்செய்கிற அவன் சமூகத்தை, வீட்டை, உறவினர்களை ச்  சினத்தோடு  எதிர்க்கிறான் அவன் ..

இவ்விருவருக்கும் இடையே மலரும் காதலும் .. சுற்றிப் பிணைந்த கட்டுடுடைத்து  தங்கள் சுயம் காணும் ஒரு அழகான சித்திரமாகவும்  ஜோக்வா சிறந்த வெளிப்பாடு.

ஆண் என்பதையும் பெண் என்பதையும் கடந்த மனிதப்பிறவிகள் நாம் .. உலகின் நிர்வாணக் கண்களுக்கு ஆடை அணிந்த மனிதன் நீ மட்டுமே என்கிற வசனங்கள் உயிர்ப்பு
தவிர பின்னணி இசையும் .. பாடல்களும் செவிக்கு இசைவு 
மீன்கொத்தியின் அலகில் தொக்கி நின்றப்போதும் தன்னைப்பாதுகாப்பாய் மீன் உணர்ந்தால் அதுவே காதலுற்றத் தருணம்என்பதாக தோன்றியது 
புவனம்

Wednesday, July 3, 2013

அந்நாளில்



கூடுடை சாமரம் தொகைந்து
திரிந்தலைந்த அந்நாளில்
அப்பறவைக்கு

அகத் திறவும் கோள்
பச்சை மருதாணி இட்டதும்
சிவப்பாய் முகிழ்ந்தது

விடியலுக்குப் பின்னும்
நிலவில்
கால் மடக்கி
குளிர்ந்துறங்கும்
கனவுகளுக்கு
தின்னக்கொடுத்தது
தன் சிறகுகளை

கூண்டடைப்பில்
சிரம் முட்டியபோதினும்

-புவனம்

 

Monday, July 1, 2013

எங்கே தொடங்கினாலும்



களிமண் குழைத்திழைத்த
கையளவு உலகம்
மிட்டாய் களிப்பு
மிதக்கும் காதல்
மோகக் குறிப்பெய்தும்
 கூழாங்கல் இணை
 உரசலிசை ஸ்பரிசம்
அடைநிலத்தில் காந்தபுயல்
அதிர்வு இடுங்கால்
மெல்லோசை
அவளெனில்

காலுக்குக்  கீழே
இடறி எக்காளமிடும்
தேய் காலமும்
தவறவிட்ட இரயிலுமாய்

தேவைக்கு மேல் சொல்புகாமல்
தினவுக்கு மிஞ்சி தீண்டல் மிகாமல்
மறுத்தளித்த தேடல் நிமித்தம்
உப்பு மறந்த பண்டத்தோடு
ஊறுகாய் பதத்தில்
தொட்டிடுங்கை
 நிரல் நிறைப்பவன்
அவனெனில்

அங்கே பிரிகிறது பாதை....

-புவனம்

 

Friday, June 28, 2013

-► அனாமிகாவின் தீவு ◄-



இருட்டுப்  போர்வைக்குள்
எரிதூபத்தின் இளவரசி நான்

உப்புகண்டம் ஆன பின்பும்
உக்ரத்தில் நீந்தும்
மீன்களில் ஒருத்தியாய்

கருக்கட்டலுக்கு நேர்ந்து விட்ட
விந்துக்கள்  வாங்கி

பிறப்போ இறப்போ 
பெயரிலி எம் முதுகுக்குப்  பின்னால்
வழியும் உலகின்
புறம் மறைக்கும் புலம்பி

ஈரம் பொதிய கனவுகள் மென்று
 தூக்கத்தில் உயிர்க்கும் பதுமைகளின்
உறைந்த புன்னகையும் , உதிரமும் வற்றிய
உரநிலம் வாங்கியவனின் கிடப்பில்
பத்தோடு பதினொன்றாம்
தூண்டா மணிவிளக்கு

விழி மின்னும்ஒளியல்
அதரம் சிந்தும் மிளிரல்
அழகுதிர்க்கும்  மேனி இயம்பல்
நுண்ணுனர் அக நெகிழ் தூறல்

நிதானித்து ருசிக்கும்
இரகசிய காதலன்
 கண்ணாடியில்

-►புவனம் 
 
** ஆப்பிரிக்க பெண் வாரிஸ் டேரியின் கதை, அரேபிய பெண் -பிரின்சஸ் சுல்தானாவின் கதைகளை வாசிக்க நேர்ந்ததன் தாக்கம் ..
இந்திய அதிலும் தென்னிந்திய பெண்ணாய் பிறந்தது யப்பா சாமி.. வரம்.
நிமிர்வு கொஞ்சமேயானாலும் முதுகெலும்பு ஜீவி என்ற வகையில் 
 

Wednesday, June 26, 2013

சாரல்

 
 
மகிழ்-ந் -தேன்

நின் மஞ்சரியில் மலர்ந்த காட்டுப் பூக்களுக்கு
கடத்திப் போகும் வாசச் செய்தியில்
முத்தமிட்ட முதல் துளியும்
சந்தமிட்ட கடைசித் துளியுமாய்
நீர் விரவிய தாபம்!
என் யன்னலில் சாரல்...

-புவனம்

Monday, June 24, 2013

-► --- நின்னையே நிழலாய் --- ◄-



 

அவளுக்கு முன்பே அந்த குபெயில் ஒரு ஜோடி அளவிட்ட வரையில் புதுமண தம்பதி போலும்.

பெட்டி படுக்கையை வைத்த மாத்திரத்தில் ஜோடி காணாமல் போய் விட்டது. இன்னும் பத...்து நிமிடத்தில் ரயில் கிளம்ப தயார் நிலை.

அவளுக்கான படுக்கையை மேல்பர்தில் விரித்து வைத்து விட்டு கையோடு கொண்டுவந்த புத்தகத்தில் அமிழந்துவிட நினைத்து, வெண்ணிற விரிப்பை போட்டுகொண்டு இருந்தாள் சுரபி
பயணத்தில் தூக்கம் வராது அவளுக்கு ,முழு இரவும் கொட்ட கொட்ட விழித்து இருப்பது கொஞ்சம் கடுப்படிக்கும்.
கைபேசி சிணுங்கியது, என்னை கொஞ்சம் கவனியேன் என்று.

அவள் தான் கடங்காரி வினோதினி.. மூக்கை சுருக்கி கைபேசி வழியே விநோதினியை கொஞ்சம் முறைத்து பின் தொடர்பை இணைத்து காதுக்கு கொடுத்தாள்.

"கோவிச்சுக்காதே செல்லமே.. அடுத்த முறை உன்னோட கண்டிப்பா வருவேன். இப்போ முடியலை, ப்ளீஸ்..ப்ளீஸ் புரிஞ்சுக்கோ சுரபி மா, என் கண்ணுல்ல " ஏகத்துக்கு கொஞ்சி , திட்டு விழறதுக்கு முந்தி ஊதி அணைத்தாள் வினோ..

" சரி, எப்படியோ பொழச்சுப்போ , இப்போ நான் மட்டும் தனியா போர் அடிக்க பயணப்படுறேன் "

"போர் அடிக்காது.. நான் ஒரு யோசனை சொல்றேன், கண்ணை மூடிகிட்டு உன்னோட கனவு ராஜகுமாரனை நினைச்சுகிட்டு தூங்கு, காலையிலே ஊருக்கு போய்டலாம் எப்படி என் ஐடியா "

"என்னோட ராஜகுமாரனா!! பல்லை உடைப்பேன் என்கிட்ட இப்படி பேசினா "

ஐயோ வேண்டாமடி, பல்லை உடைச்சிடாதே அப்புறம் என் ராஜகுமாரன் என்னை பார்க்கவே மாட்டான் "பொய்யாய் பயந்தாள் வினோ
ச்சு, போனை வை, ட்ரெயின் கிளம்ப போது .அணைத்து, சீட்டில் போட்டு விட்டு மீண்டும் படுக்கை விரிப்பை தொடர தொட்ட போதுதான் கவனித்தாள் .

அவன் அங்கு நின்று கொண்டு இருப்பதை.. சற்றே அதிர்ந்து நின்று விட்டாள் .

அடுத்த பயணி போலும், யாரும் இல்லாத தனிமையில் விநோவிடத்தில் சற்றே சுதி ஏத்தி பேசியதை எல்லாம் கேட்டு இருப்பான் இந்த புதியவன் இல்லை நெடியவன்,
அவளை விட உயரம் அவன் அதற்கேற்ற உடல்வாகு, கொஞ்சம் மாநிறம் என்றாலும் கண், நெத்தி, மூக்கு, வாய் , மீசை எல்லாமே அளவெடுத்த ஆண்மை சொல்லியது. ச்சே என்ன இது ...

மூளை மரத்து ஏதேதோ யோசிக்குது. இவன் எப்படிப்பட்ட மன்மதனாக இருந்தால் எனக்கென்ன.. பார்வையை திருப்பிவிட வேண்டும் .

இப்படி அவள் எண்ணவோட்டம் இருக்கும் போதே அவனும் அதையே சொன்னான்."ஆள் பார்க்க கொஞ்சம் நல்லா இருந்தா போதும் இந்த பெண்கள் எல்லாம் பார்வையில் விழுங்கிவிடுகிறார்கள்..

பார்த்து முடிச்சிட்டா, கொஞ்சம் வழிவிட்டால் என் இருக்கைக்கு போவேன்" சற்றே, புருவத்தை உயர்த்தி, ஏளனம் துலங்க பேசினான் அவன்.

என்ன அநியாயம், இவனை கண்கொட்டாமல் பார்க்க பெண்கள் வரிசை கட்டி நிற்பதாக என்ன ஒரு பீற்றல் . இவனக்கு காட்டாயம் பதில் அடி தரவேண்டும் .. இல்லாவிடின் நான் சுரபி அல்லவே , உள்ளுக்குள்ளே கறுவினாள் அவள்..

"ஹ.. அதிசயத்துத்துக்குமேல் அதிசயமாக கண்ணில் தென்படுவதை நம்பவே முடியவில்லையே !! கண்களை விரித்து ஏகத்துக்கு அதிசயித்தாள் அவள் "
என்ன.. என்பது மாதிரி , புருவத்தை சுருக்கி கண்ணால் இடுக்கி பார்த்தான் அவன்.

காதில் மாட்டியிருந்த தொங்கட்டான்கள் ஆட ஒரு முறை தலையை சிலிர்த்து, பாவனையோடு மொழிந்தால் அவள் " தலையில் கொம்பு முளைத்த எதோ ஒன்று எல்லாம் இந்த குபெயில் கூட பயணிப்பதை நினைத்துக்கூட பார்க்கவில்லை.

ம் இது வரை மனிதர்களுக்கு மட்டும் தான் பேச தெரியும்னு தப்பா நினைத்துவிட்டேன் போல .இவ்வளவு அதிசயமும் நிஜம் தானான்னு உற்று பார்த்தேன். வேறே ஒன்னும் இல்லை.. சொல்லிவிட்டு, வழி விலகி இருக்கையில் அமர்ந்தாள்.

சண்டை கோழி, ச்சே.. சேவல் மாதிரி சிலிர்த்து கொண்டு சண்டைக்கு அவன் வரப்போவதை எதிர் நோக்கியபடி.
அப்படியே, நேர் மாறாக, அவள் சொல்லிமுடித்த சங்கதிக்கும், முக பாவனைக்கும் ..வரிசை பற்கள் பளிச்சிட, கண்ணோரம் துடிக்க நிறுத்தமாட்டாமல் சிரித்தான் அவன்....
மீண்டும் அதிர்ந்தாள் அவள், என்ன இது ! மட்டம் தட்டினால் சிரிக்கிறான். இன்னும் கொஞ்சம் உறைக்கிற மாதிரி வாரவேண்டும் போல உள்ளுக்குளே துடித்தது...தானும் நகைமுகத்தை காண்பித்து.
"ஹய்யோ, ஜந்து சிரிக்கவேறு செய்யுமா! யாரும் சொன்னால் நம்ப கூட மாட்டங்களே
ப்ளீஸ், நான் ஒரு போட்டோ எடுத்து வச்சுக்கட்டுமா ??"
இப்போதும், நகை முகம் மாறவில்லை அவனுக்கு, மாறாக கண்களில் குறும்பு பளிச்சிட்டது... "தாராளமாய்" விளையாட்டாய் எடுத்துக்கொண்டது போல தோளை குலுக்கி,இருக்கையில் ,அமர்ந்தவண்ணம் பார்வையால் அவளையே அளவிடுவது போல தோன்றியது அவளுக்கு.
இது மாதிரி ஆட்கள் கொஞ்சம் ஆபத்தானவர்கள். இவனிடம் பேச்சை வளர்க்ககூடாது என்று முடிவுக்கு வந்தாள், அவள்.

சட்டென எழுந்து தன் படுக்கையில் விழுந்து புத்தகத்தை விரித்தாள். இரயில் கிளம்பியது, புது ஜோடி தனக்கே, தனக்கான உலகத்தில் மூழ்கி இருந்தது.

சுரபி,தன்னை தவிர இன்னும் மூன்று பேர் அங்கே இருப்பதாகவே கணக்கில் கொள்ளாத வண்ணம்,புத்தகத்தோடு ஒன்றி விட்டாள். அது அவள் சுபாவம்.. ஒரு நல்ல புத்தகமும், வினோதினியும் அவளுக்கு ஒன்று.
எப்படியோ, தூங்கியும் இருக்க வேண்டும். முழிப்பு தட்டியபோது நேரம் ஐந்து எனக்காட்டியது. படுத்து இருக்க பிடிக்காமல் எழுந்து கதவை திறந்து வெளியே வந்தாள்.
முகத்தை கழுவி விட்டு, வெளிக்கதவை திறந்து, பிடித்து .. சில்லென்று முகத்தில் உரசிய அதிகாலை காற்றை சுவாசித்து சற்றே மயங்கி நின்றாள்.

மே மாதம் என்பதால் சீக்கிரமே விடியல் எட்டிப்பார்த்தது.
"குட் மார்னிங்".. அவன் தான், அவனுடைய குரல் இயல்பாய் தொனித்தது. பதிலுக்கு அவள் சொல்லவில்லை. கைகளை கட்டி விறைப்பாக வெளியே பார்த்தபடியே நின்றாள்.
அதே மாதிரி கைகளை கட்டி, குறும்பு கண்களால், அளவிட்டபடியே மீண்டும் " குட்மார்னிங் " என்றான் அவன்.
பொறுமையற்று திரும்பி,பாருங்கள் மிஸ்டர் "காலையில் எனக்கு சண்டை போட கொஞ்சமும் மூட் இல்லை" என்றாள் அவள்.

"எனக்கும் அதே தான். இன்னும் கொஞ்ச நேர பயணம், நாம் ஏன் ப்ரெண்ட்ஸ் ஆயிட கூடாது ? "வினவினான் அவன்.
"வேண்டாம்" வெட்டி துண்டித்த மாதிரி பதில் வந்தது அவளிடம் இருந்து
அல்லாமல், விரோதம் பாராட்ட காரணம் ஒன்றும் இருப்பதாக தோன்றவில்லை " என்றான் அவன்.
கூடவே" நான் நரேந்திரன், வீட்டிலும்,நட்பு வட்டத்திலும் நரேன்" என்றான்.

"சுயபுராணத்தை யார் கேட்டது!"அசட்டையாக அவள்
" சுயபுராணமா, பெயரை, சொல்வதா! சரி கேட்க்காமலே அளந்து விட்டேன் போல, இப்போது நான் கேக்கிறேன் உங்களை என்னவென்று அழைப்பார்கள்?? "
காதில் வாங்காமல் எங்கோ பார்த்தபடி நின்ற நிலை மாறவில்லை அவள்

ஒரு நிமிர்வான அவளுடைய பிடிவாதம் அவனுக்கு பிடிக்கவே செய்தது.

அதற்குள் அந்த வழியை கடந்த சீட்டு பரிசோதகர்.. இவர்கள் இருவரையும் பார்த்தவர்,கடமையே கண்ணாக அறிவுரை வழங்கினார்.

" பாருங்கள் சார், இது மாதிரி வெளிக்கதவை திறந்து நின்று காதல் செய்யாதீர்கள், ஒரு நேரம் மாதிரி இருக்காது... மூடி வையுங்கள்.." இருக்கிற வேளையில் இவங்களை எல்லாம் மேய்ப்பது தனி வேலையா போய்டுச்சு" புலம்பியபடி நகர்ந்தார் அவர்.

அவர் தலை மறையும் போதே, நகை துலங்க அவன் சொன்னான். " பாவம், இந்த மனிதருடைய மனைவி " குறும்பில் கண்களும் சிரிக்க, சேர்த்து சொன்னான்.
" வீட்டில் இவ்வளவு தள்ளி நின்று தான் காதல் செய்வார் போல!! "
இதற்க்கு, கோவமாய் முறைத்து பார்க்க வேண்டும் என்று தான் அவள் நினைத்து இருந்தாள்..ஆனால், அவளையும் அறியாமல் கன்னங்களில் ரோஜாக்கள் பூத்துவிட்டன"
போறேன்.. மாதிரி எதோ புலம்பிவிட்டு அங்கே இருந்து நகர்ந்துவிட்டாள்.உண்மையில் இவன் அபத்தானவனே.இன்னும் கொஞ்ச நேரமே, அதுவரை அந்த கண்களையும், சிரிப்பையும் மறந்தும் பார்த்துவிட கூடாது.நான், ஒன்றும் நெகிழி இல்லை.. தனக்கு தானே உருப்போட்டுகொண்டாள்.

ரயில், ஸ்டேஷன் வந்தடைந்தது.. தனது தோள் பையுடனும், இழுவை பெட்டியுடனும் இறங்கி விட்டாள் சுரபி. மருந்துக்குக்கூட அவன் பக்கம் திரும்பினாள் இல்லை.. வேக நடையில், அந்த இடம் விட்டு நகரும் பொருட்டு எட்டுகளை வைத்தாள் தான்.

எனினும், எதோ ஒரு உள்ளுணர்வு முதுகில் துளைப்பது அவன் பார்வையாக இருக்குமோ, பார்ப்பானா? அன்றி தோளை குலுக்கி விட்டு தன் வழியில் போய்விடுவானா? தெரிந்து கொண்டுவிட வேண்டும் போல உந்தி தள்ளியது.

ஒரு முடிவுக்கு வந்தவளாக, நடை தளர்த்தி, திரும்பினாள் அவள், மீண்டும் அதிர்ந்தே விட்டாள் ..
அவள் பின்னோடு .. மிக அருகில் அவன்.

அவள் பார்வையில் அதிர்வை காணவும், கைகளை மேல தூக்கி சொன்னான் அவன்" இது நாள் வரையில், பெண்களின் பின்னோடு அலைகிறவன் இல்லை நான். இப்போ, என்னோட ஒன்னு மிஸ்ஸிங்,ஒரு வேலை உங்க லக்கேஜோடு கலந்து விட்டதோனு ஒரு சந்தேகம் அது தான்."

என் லக்கேஜோடு!!,என்ன மிஸ்ஸிங்?? குழப்பத்தில் அவள்..
நிதானமாக அவன் சொன்னது " என் நிழல், பயணம் வரை என் கூடவே இருந்தது.. இப்போது என்னை விட்டு உங்களோடு போகிறது" இதை சொல்லும் போது அவன் கண்கள் குறும்பில் சிரிக்கவில்லை.கவனத்தோடு ஒரு எதிர்பார்ப்பு மட்டுமே இருந்தது.

ஆயிரம் பேர் நடமாடும் ரயிலடியில், இரண்டு, இரண்டு.. நான்கு கண்களும் தனித்து, ஒரே சங்கதி பேசியது..
 

-► புவனம்
 

Wednesday, June 19, 2013

அத்விகா



உயிர் உலவிப் பதுமைகளைப்
புனைபவன் எவனோ
சற்றே கூடுதல் உரம் ஊற்றி
அத்விகாவென   செய்திட்டான்
அவளை

இதுகாறும் அவள்
தலைக்கு ஏற்றமிட்டதில் கனமில்லை

எனினும்
மேய்ப்பானை விஞ்சி
 தெறித்தோடிய செம்மறியின்
கண்களையொத்த
கடவுளின் நிறத்தில்
ஒழுகியது வெயில்

-புவனம் 

Monday, June 17, 2013

மகிழ் நனைந்து



நகரும் காட்சிகள் முட்டிச் சிரித்தன
பயணச் சீட்டுக்கு வயதெழும்பாத 
சிறுமியின் ஆர்ப்பரித்தலோடு

உச்சமேறித் திரிதலில்
தரைதட்டாத
சிற்றெறும்புக்கு
முளைத்த சிறகின் கண்

மெல்ல இமை தாழ்த்தி
நிலவிடுக்கில்
கடல் விழுங்கும்
சூரியனின்
மயக்கொளி விம்பம்

எரியா நெருப்பின்
புகைச்சரப் பூக்கள்
தீராநதியில்

புவனம் 

தி.ஜானகிராமனின்



சரஸ்வதி பூஜையன்று புத்தகம் படிக்க கூடாது என்பார்கள். ஆனால், அன்று ஒரு நாளுமில்லாத திருநாளாகப் புத்தகத்தின் மேல் வருகிற ஆசை !

கீழே கிடக்கிற - பல்பொடி மடிக்கிற - காகிதத்தையாவது எடுத்துப் படிக்க வேண்டும் என்ற மோகம்!

அப்படி ஒரு மோகம் அல்லவா பிறந்திருக்கிறது இன்று இந்த காவேரிமீது (ஆறு)

தி.ஜானகிராமனின் - அம்மா வந்தாள் நாவலில் இருந்து
மனப்பிசாசு வாசித்தது

Saturday, June 15, 2013

மற்றுமொரு

 

நேற்று உன்னோடான பேச்சுவார்த்தைக்குப் பின்
அரைமயக்கத்தில் இரைந்து கிடந்த
மௌனத்தைக் கூட்டிச் சேமிப்பிலிட்டது
மாயம்

பச்சைப் பதியனிட்டதோ
 பாசியைப் படரச்செய்ததோ

விசைந்து மண்ணூரித்
தடமேறிய நாகத்தின்
புடைத்த படிமமாய்

பிடரியில் குழறிய
வெப்பச் சலனக் கதையின்
மீள்வாசிப்பு ..

தொடரும்

-புவனம்

Friday, June 14, 2013

நானென்பதும்.. எனதென்பதும்




 சிறு வயதில் இருந்து எனக்கு மிகவும் பிடித்த குறள் .. ஒரு சிறந்த தலைவன் இத்தகையவனாய் இருத்தல்

"காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம் "

-காட்சிக்கு எளிமையும், கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும். எம் அய்யன் மொழி ஊறிய கூற்று.

மிகையுணர்ச்சிக்கு தாழாதவனும், மென்னகை தவழும் முகத்தில் ஒளித் ததும்பும் கண்கள்,கூர் நுணுக்கம்,மிதம் இதைத் தான் ஒரு ஆணில் பெண் தேடுவது ... இது என் பார்வையில்

நல்ல ஆண் மகனாக, நல்ல கணவனாக இல்லாதவன் கூட கனவுறுதியாய் சிறந்த தந்தையாக விளங்கக்கூடும்..

என் அப்பாவைப்போல -- எல்லா பெண் பிள்ளைகளுக்கும் போலவே எனக்கும்.அப்பா தான் உலகத்தின் சிறந்த ஆண்மகன் என்றே எப்போதும் நினைப்பு .. அப்பாவில் இருந்து தான் பெண் அடுத்த ஆண்களை கூர்கிறாள்.

வீட்டின் மூத்தப் பெண் என்பதாலும் அப்பாவையே அடர்த்தியாக பார்த்து வளர்ந்ததாலும் பெரும்பாலும் அவர் குணத்தையே பிரதிபலிப்பவள் ஆகிப்போனேன்.

அப்பா ஒரு சிறந்த வாசிப்பாளர், சிறந்த மேடைப் பேச்சாளர்..

உயிர்மெய் எழுத்துக்கள் கற்றுத் தெளிந்த வயதில் நேரடியாக வாசிக்க பாடப்புத்தகம் அல்லாமல் கதைப்புத்தகம் தந்தார்..

பாடப்புத்தகம் ஒரு விதமான திணிப்பு .. கதைப்புத்தக வாசிப்பின் ருசியில் மொழியறிவு தானே கைவரப்பெறும் என்றபடி..

விரல் பிடித்து வரிகளில் நகர்த்தி எழுத்தெழுத்தாகக் கூட்டி வாசிக்கச் செய்வார்.. அம்புலிமாமா தான் முதன்முதலாய் வாசிக்க கையில் எடுத்த புத்தகம் .. இன்றளவும் அம்புலிமாமா,சந்தமாமா புத்தகங்கள் மனதில் நிழலாடும்..

பிறகு முழுக்கதையும் அவர் தன் பாணியில், குரலில், ஏற்ற இறக்கத்தோடு வாசித்துக் காட்டும் போது கண்முன்னே கதையின் உருவங்கள் மிதக்கும்..

வேகமாய் அதே சமயம் பொருள் உள்வாங்கி வாசிக்க சிறந்தப் பயிற்சி தந்தவர் அப்பா..

இப்படித்தான் அந்த வயதில் புனைவுக்கதைகளில் மூழ்கி முத்தெடுக்க விழைந்தது.

பட்டிமன்றம்,பேச்சுப்போட்டிகளில் கலந்துக் கொள்ளும் போது கண்ணாடியில் நம் முகத்தை நாமே பார்த்துப் பேச கற்றுக்கொடுத்தவர் அப்பா .. பிறகு மேடை ஏறியதும் எவர் முகமும் கண்ணுக்கு தெரியாது, தயக்கம் இல்லாமல் , வாய் குழறாமல் பேச்சு கைவருமென.

உணவு விஷயமும், நுணுக்கி ருசித்தே என்பது அப்பாவிடம் இருந்து தொற்றிக் கொண்டது.

சம்பிரதாயம் ,பண்டிகைகள் , பூஜை புனஸ்காரம் இதில் எதுவும் அப்பாவுக்கு விருப்பம் இருந்தது இல்லை .. எனவே வளர்ந்தச் சூழலில் எனக்கும் இது எதுவும் தெரிந்து இருக்கவில்லை.. பின்னாளில் தெரிந்துகொள்ள விரும்பவும் இல்லை..

வாழ்கையை எந்த வித திணித்தலும் இல்லாமல் அதன் போக்கில் நீந்த விடுவதே பிடிப்பு.

வீட்டில் சாமியோ பூஜையோ இல்லை என்றாலும் ஒரு கோவில் விடாமல் அழைத்துப் போயிருக்கிறார்.. கோவில் என்றால் பக்தி மார்கத்தையும் தாண்டி ஒரு ஈர்ப்பு இப்போதும்..

எங்கும், எப்போதும் புது புது இடங்களுக்கு பயணிப்பது அவருக்கு பிடித்தம்.அப்பா ஒரு ஊர் சுற்றிப் பறவை.

பள்ளிநாட்களின் விடுமுறையில் விதிவிலக்கில்லாமல் திரிவோம் குடும்பத்தோடு எங்கேனும்..

பௌர்ணமி நடு நிசியில் கடற்கரையில், குளிர் காற்று மோத, மண் குழைத்து கட்டிய குகைக்குள் கற்பனை எஸ்கிமோக்கள் கூட விளையாட எவருக்கும் வாய்க்குமெனில் .. அவர் என் வீட்டில் பிறந்தவரே.

வருடத்தின் எல்லா பௌர்ணமிகளும் கடற்கரையில் தான்..

கோடை இரவில் எந்த ஒரு குல்பி ஐஸ் வண்டியும் எங்கள் வீட்டு வாசலில் வியாபாரத்தை முடிக்காமல் நகர்ந்தது இல்லை.

புவன், கண்ணு என்ற அழைப்பும்.. அன்பின் இசைச்சொறிவும், நெடுந்தூர பயணமும், நகையொலிக்கும் வீடும், கேரளத்து எல்லை வாளையாறு வனப்பகுதியில், மலைமுகட்டின் உச்சியில்,தாமரைக்குள நடையில், கடற்கரையில் அப்பாவோடு பிள்ளைகள் நாங்கள் ஓடிப்பிடித்து விளையாடிய அந்த முன்பாதி நாட்களில் மீண்டும் பயணிக்க முடிந்தால்..

வேர் பெயர்ந்த ரேகைகள்
தூரத்தில் எங்கோ பொன்ஆம்பல் பூக்காட்டில்
உள்ளங்கைக்குள் கரைசலாய் நான்

வேரில் இருந்து விழும் நிழல்..

-புவனம்

Monday, June 10, 2013

வள்ளி மயிலாள்!



போகிறப்போக்கில் எச்சமிட்டுப்
பறந்ததொரு பறவையின்
கீழ் கணக்கில்
துளிர்த்தவள்
அந்திமந்தாரையின் தாய்

இருள் பேழைக்கு
ஒளியேற்றலுகறக் குறிப்பெழுத
நியந்தவனின் கண்த்தடத்தில்
கிளர்ந்தவள் அவள்

தடதடக்கும்
நிமிடங்களை   நெட்டித்தள்ளியபடி
நெடுந்தூரப்  பயணத்துக்கான
பெட்டியடுக்களில்
விட்டுப்போனதன்
அடைப்புக்குறிச் சொல்லாய்
ஆகிப்போனான் அவன்

கிளை தன்
சிறகுகளோடு
தற்கொலைத்ததின்
வீச்சம் ஏகியது
பிரிவு நுகர்க்  காற்று

புவனம் 

Friday, June 7, 2013

மகிழ் துஞ்சிய


வளர்பிறைத்  தேயும்
சித்திரத்தாளின்
வடிவுணர்ப்  புணர்ச்சி
மசியின் கைச்சூடென
மகிழ்சிறந்து
உயிர்நீவிப் படர்ந்த
பெருந்தீ

கழிமுகக் கூடலின்
நீர்பசை குடுவை
தீண்டாதெனினும்
பூங்குழை மிதப்பசைவு

ஒளிமுடங்கியதொரு
யாமத்தின் அடர்வில் 
புதுப்பெயல் துவலையாய்
பச்சை நரம்பூடி
பனி நித்திலப்
பிரியத்தைப்  பருகக்கொடுத்தே
தாகமூட்டும்  காதல்


*கழிமுகம் - ஆறு, கடலோடு கலத்தல்
புதுப்பெயல் - முதல் மழை
துவலை - குளிர்ந்த நீர்

-புவனம்
 

Tuesday, June 4, 2013

நித்திலப் பணிலம்



நெகிழ் விசும்பு ஊடிச்சொரிந்த
பிறை முத்தத்தில்
குழையும் மூங்கில் சுவர்

கதகதப்பு வேண்டி குளிர்மூட்டிச் சூரியனுக்கு
மலர் விடுத் தூது மடலின்
மகரந்த மினுக்கல்

மீட்டெடுத்தலில் சொட்டுச் சொட்டாய்
படர்ந்து தழுவிய வெய்யிலின்
நிழல் விழுந்த மோட்சம்

புலன் விகசிக்கும் தருணம் புரட்டி தோய்தலின்
மந்தகாசம்

உதிர்காலத்து இலைப்பேசி அந்தாதி நோக்கமாய் 
காதல் காசினி !

-- புவனம்  
 

 

Saturday, June 1, 2013

பௌர்ணமியின் நிழல்



நிசப்தத்தின் எதிரொலிப்பை
காப்பிட்டுக்  கட்டி  இருத்திக்கொள்ள  நிழல்
நேர்ந்துவிட்ட நோன்பு
ஓங்காரமாய் ..

வெற்றிடத்தை வெறிக்க
திராணியற்று
இலக்கிலியாய்
எங்கோ திரியும்
கப்பல் பறவை ..

கனமேறிப் போன
சுவாசத்தை
கழற்றக்  கைகூடாது
காற்றின் மிடறில்
கற்பூரம் !!

-புவனா கணேஷன்

Friday, May 31, 2013

இசைந்ததுவும்



கலைக்கூத்தாடியின் கைக்குழையும்
வித்தை எந்தியவனின் சொற்கள்
ஏணியில் ஏற்றி
நெளிநாகத்தில் இறக்கியாடும்
சொக்கலாட்டம்

மையம் கொண்டாடும் காற்றோடு கூடி
மையலில் வீழ்ந்தாடும் மழையின்
கடைசி சொட்டு ஈரம் தொட்டு
எழுத எத்தனித்தப்  பெயரின்
காந்த ஊக்கியாய்
அத்தேர்ந்த இசைஞன்
இழுத்த இழுப்புக்கெல்லாம்
இயைந்து திறவும் மீட்டலோசையில்
ஆனந்த பைரவி

-புவனா கணேஷன் 

Wednesday, May 29, 2013

விதி

 

முதுகுக்கூனில் கல்லெறிந்து
 குருதிக் குமிழ்
உடைத்து உவந்தவனின்
மனையாள்
கை நிறைய கர்ப்பை அள்ளி
நெருப்பில் குழைத்தாள் ..

பணையச் சூதில்
மதி தொலைத்தவனின்
பத்தினி
மீந்திருந்த  மானத்தை
சமைத்து
காக்கைக்குச்  சோறு படைத்தாள்..

குதவையில் குடும்பத்தை வைத்து
குடி  மிதவையில் மிதந்தவனின்
துணையாள்
குடைசாய்ந்த அவரைக் கொடியை
தாலிக்கொடியில் நிமிர்த்தினாள்..

புறமுதுகிட்டது விதி!

- புவனா கணேஷன் 

Monday, May 27, 2013

வாடகை வீடு

 
கிழிக்காத நாள்காட்டியிலும்
நகர்கிறது தேதி

பற்றுப் பிரியாமல் பாத்திரத்தில் கனக்கிறது
பாலேடு

கழண்ட தாழ்ப்பாளுக்கும்
உடைந்த கதவுக்கும்
உரிமைப் போர்

வாயில் போட்டாலும்
வயிற்றை நிறைக்காத
வாய் - கா தகராறு

உடன் பிறந்தோனும்
ஒன்று விட்ட சோதரனும்
அண்டை நிலத்தோனும்
அன்னியனாக

நீதிமன்ற படிக்கட்டும்
கால் செருப்பும்
தேயத்தேய
வாய்தா
வக்கீலுக்கு வரும்படி

பங்காளியும் செத்துப்போனான்
பகுத்தாளியும் செத்தேப் போனான்..


-புவனா கணேஷன்

குங்குமம் தோழி

மே மாதம்  "குங்குமம் தோழி" இதழின் ஒரு கேள்வி ஒரு மனசு பகுதியில் புவனமும்
 

உவகைச்சாரல்



புல்லோடு பயில் கொண்டு
ஊறிச்  சலனித்த பனித்துளியின்
முத்த ஈரம்

சிடுக்கிடும் காற்றோடு
சப்திக்கும் குழல் நகை 

உருவிலி காணாததொரு
உவத்தல் மொழி மோனம்

விழித்துயிர்த்த நுண்ணுணர்வை
தீண்டி திகைக்கச் செய்யும்
ஒற்றை விரல்

மண் வாசம் அள்ளி நுகரும்
மழை மோகம்

கவிதைக்கு வாழ்க்கைப்பட்டவள்
சூல் கொண்டதன்
சுவை முடிச்சு

- புவனா கணேஷன்

Wednesday, May 22, 2013

அனாதைக்கூடு




சிறகுச் சீமாட்டிகள் புணர்ந்ததின்
கூட்டுத் தொகைப் பெருக்கம்
கழிந்ததைச் சுட்டும்
அடையாளச் சுவடுகள்

பாதசாரிகள் அள்ளி உண்டதில்
இரைந்த கூட்டாஞ்சோறு கதைகளின்
மிச்சில்

வாமனன் தலைப் பட்டு பெயர்ந்த
வானத்துண்டு

பாட்டனின் நிலத்தில் பிடாரிக்கூத்து
பேரனின் கடவுச்சீட்டுக்கு
அகதி முத்திரை

-புவனா கணேஷன்

என்னென்பது

வானத்தின் வைபவம்..
கூடிக் குழுமிய மேகங்களுக்குப் போட்டியாக
வீதிக்குளியலை விரும்பாத பலரும்
குடைவாசிகளாய் உலாவியதொரு
மாலைத் தொட்டு
இதுகாறும்..

 நீ நின்ற இடத்தின் நிழலையும்
பெயர்த்தே நகர்வது
களவாடலில் சேர்த்தியா!!

ஓர் இரவுச்சொல்லுக்கு
இறக்கை புணரமைத்து
உன் இருப்பிடம் நோக்கி
பறக்கச் செய்திருந்தேன்..

நீயோ!

பேரத்திற்கு மசிந்த துயிலோடு
இமை மூடிய லயிப்பில்..

உறக்கத்துள் ஊடிக் கலந்து
கனவில் சொன்னது
காலையில் காலாவதியாகும் என்றறிந்தே
இருப்பினும்

வாசல் விரிய நானிட்ட கோலத்தின் வடிவு கூடிப் போனது
என் மிகைச்சொல்லா!
உன் பதில்ச்சொல்லா!

-புவனா கணேஷன்

Saturday, May 11, 2013

வேரிலிருந்து விழும் நிழல்


அம்மாவின் நிழல் பேசி

தந்தை- படித்து பாதியில் மூடிவைக்கும் புத்தகப் பக்கத்தின் அடையாள குறியீடாய் இருப்பவள் தாய்.

தன் நான்கு சுவர்களுக்குள் நகரும் உயிரிகளையே உலகமென்று எண்ணுபவள்.

வெகு ருசி எனும் ஒற்றை வார்த்தைக்குச்செவி குளிர, வலியில் மூட்டு முனகுவதையும்தாங்கி அடுக்களையில் நிற்பவள்.

"அப்பாவை போலவே பொண்ணும் நெருப்புக்கோழி " அங்கலாய்த்தபடியே கை பொறுக்காதசூட்டில் உணவையும் பிசைந்தே தருபவள்.

வெளியே விளையாட போகத் தோன்றாது சோம்பிக்கிடந்த ஒரு மாலைக்கு மறுநாள் மசூதிக்கு அழைத்துப்போய் மந்திரித்து விட்ட பின்பே அமைதி அடைந்தவள் .

அம்மை கண்டபோதும், மஞ்சள் காமாலைக்கு நிறம் வாங்கிய போதும்.. மகளுக்கான பத்திய சமையலையே மொத்த வீட்டுக்கும் என்றாக்கியவள்.

அபூர்வமாய் விடுமுறை நாட்களில் வீட்டோடு தங்கிவிட்ட போதும் .. அதிரும் இசையும், புத்தகமுமாக நேரம் கழிக்கையில்ஆசையாக அருகமர்ந்து பேசத்துடித்தவள்.

"ம்மா, சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லாதம்மா" - முகம் சிடுசிடுக்கையில்..

" எல்லா நாளும் எல்லோரும் வெளியே போய்டறீங்க, நான் தனியே வீட்டில், புதுசா எந்த விஷயத்தை தெரிஞ்சுகிட்டுவந்து பேச" பொட்டில் அறைவதான கேள்வி.

காகிதம் நிறைக்க வேறுவேறு ஸ்டைலில் கையெழுத்து போட்டுக்கொண்டு இருந்தாள்.

- "என்னம்மா இது ?"

- " இல்ல, கொரியர் கொடுக்கிறவன் கையெழுத்துக் கேட்டான், அதான் எப்படி போட்டா நல்லாருக்குன்னு போட்டு பார்க்கிறேன்"

மணமான பின்பு தான் மகளானவளுக்கு தாய் வீடு சொர்க்கம் என்பது விளங்கும் .. என்ன தான் கணவன் தங்கத்தட்டில் வைத்து தாங்கினாலும் ..

தனக்கான பேறுகாலத்துக்குகூட அவள் அத்தனை வலி கண்டிருப்பாளா தெரியாது .. மகளுக்கு நேரம் நெருங்கியதும் படபடப்பில் செய்வதறியாது கண்கலங்கி ஒரு முழு நாளும் மருத்துவமனையில் இங்கும் அங்கும் அலைச்சலில் நீர் அருந்தக் கூட மறந்தவள்..

மகளாய் இருந்தவளும் தாயான பின்பே கேட்கத் தோன்றியது " அம்மா சொல்லு உனக்கு என்ன பிடிக்கும்?"

மடை திறந்து அவள் கொட்டத் தொடங்கிய தருணமே உச்சம் தலையில் உரைத்தது.

தினமும் அலைப்பேசியில்குரல்வழி நிறைந்தாலும்" எப்போ வருவே " அலுக்காமல் இதே கேள்வி.

மகன்களை பெற்றத் தாய் கூடுதலாகக் கொடுத்து வைத்தவள் .. எந்த நேரமும் மகன் வீடே என்ற உரிமையின் சாசனம் இருக்கவே செய்யும்.

மகளைப் பெற்ற தாய், மருமகன் வீட்டில் ஒரு வேளை தங்கவும் தயக்கமே, பொருத்திக்கொள்ள முடியாத சங்கடம் இருக்கும்.

இந்நாட்களில் சின்ன மகள்கள் .. எனக்காகவென சின்ன சின்னதாய் இயன்றதை செய்யும் போது மனம்குறுகவேசெய்கிறது .. இதில் துளியளவு அம்மாவுக்கு என கவனம் வைக்காமல் இருந்ததை நினைத்து. தாய்மையால் அழகாகிறது உலகம்..

அம்மாவைப்போலவே நானும் மகள்களை பெற்றத் தாயாக..

 



வேரிலிருந்து விழும் நிழல் ..

- புவனா கணேஷன்

Wednesday, May 8, 2013

உயிர்த்தலின் நிறம்


சலங்கைக்கு சபிக்கப்பட்டவள்
குளியலறையின்
குழாய் நீர் ஓசைக்கு
கால்கொலுசில் கூட்டிய
ஜதி..

தன்னைப் போன்றதொரு
ஜீவியின் முகபாவத்தை
கண்ணாடியில்
வியந்துப் பார்த்தப் பறவையின்
சிலிர்ப்பு..

நிறம் கவ்வும் வண்ணத்துப்பூச்சி
மலர்வசம் கொண்டப் பித்து..

விழிவிசை படகசைவில்
உவகை நீர் சிலும்பல் !

 

- புவனா கணேஷன்

Tuesday, May 7, 2013

சுயம் என்ற தன்மயா

:: சுயம் என்ற தன்மயா ::
 


குறை பிரசவத்தில்
வலிப்பதில்லையாம்!
நெளி நாவின் நர்த்தனம் 

சுடுசூளைக்குளியல்
வார்ப்பிரும்பின் வலிமை

உறைந்து போனதில் குறைந்த வெப்பம்
உயிர் இடப்பெயரலின் மசகு

கிட்டாது இருப்பினும்
வியாபித்தே இருப்பது
நிழல்

நிதானித்தத் தெரிவையின்
தியானிப்பு
மகிழ் தெளிந்த விம்பம்

விரல் சொடுக்கில்
இயைந்து இசைந்து அணுக்கமாய்
ஓர் ஓசை

எவ்வகை இரைச்சலிலும்
தனித்தே சிமிட்டும் எனக்கான
இசை

சொந்த அடிசிலில் எழுதியது
எவருக்கான பதம்!!

தீண்டிவிட்ட வினைப்போக்கின்
எதிர்வினைகாண் சுடரொளிரும்
தீபத்தின் மிளிர்வு

நானாகிய நான் ...


-புவனா கணேஷன்

நினைவின் கூடு

 
 
அத்தோடு நில்லாமல்
பரண்மேல் கிடப்பெல்லாம்
தூசி தட்டி தும்மல்
கிளப்புவதோ

பழுத்த இல்லாளோடும்
பிசின் முறியா காதல்

ஒட்ட பிழிந்திடுனும்
ஓரம் காயா ஈரம்

மழை நனைத்த நிசியில்
நுணல் எழுப்பும் கூப்பாடு

தீரா பசி
உன் வரமா சாபமா !

குடைந்த வண்டும்
குழப்பத்தில் மாம்பழமும்

வேர் வாசமோ
விதை வாட்டமோ

மறதி இட்டுக்கொள்
மதில் மேல் பூனையே..

-புவனா கணேஷன்

நின்னோடு

குழல் குலாவி
மடல் முகர்ந்து
நுதல் நீவி
விழி ஊர்ந்து
சுவாசம் உரசி
ஊறும் மொழி
புலன் விரவி
இலை
குவிந்து உதிர்த்த
துளி வார்த்தை
மீண்டும் மீண்டும் உச்சரிப்பினும்
வேண்டும் வேண்டும்
என்பதுவாய் ...

-புவனா கணேஷன்

Wednesday, May 1, 2013

கடைநிலை உழைப்பாளர்களை நினைவு கூறும் நாள்


குர்கானில் வசித்த வருடங்களில் கணவரோடு அல்லாமல் தனித்து நான் மட்டும் வெளியே எங்கே போவதாக இருந்தாலும் பயணிப்பது சைக்கிள் ரிக்சாவில் தான்..

அங்கே ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடம் போக ஒன்று சொந்த வாகனம் இருக்க வேண்டும் அல்லது முக்கு, முனை தி...ரும்பல்களில் எல்லாம் ரிக்சா மட்டுமே.. குறைந்த அளவு கட்டணம் ஐந்து ரூபாய் இருந்தது.

பெரும்பாலும் பிஹாரி அல்லது பெங்காலி ஆட்கள் தான் அங்கே ரிக்சா ஓட்டியது..தனியே போவதால் சற்றே கவனமாய் வயது முதிர்ந்தவரின் வண்டியாக தேடி ஏறுவேன்.

நம்மை வைத்து ஒரு வயதானவர் வண்டி மிதிப்பதா என்றே நினைத்தாலும் வேறு வழி இல்லை.. பாதுகாப்பு குறைச்சல் அத்தோடு அது அவருக்கு வரும்படி...

கடைநிலை உழைப்பாளிகள் அங்கே எந்த மொழியை கொண்டவர் எனினும் ஹிந்தி நன்கு பேசுவர்.. தொடர்ந்து போவதால் என்முகம் சிலருக்கு பழகி விட்டு இருந்தது... ஏறியதில் இருந்து இறங்குமிடம் வரும் வரை அவர் அவர் சொந்த கதையை சொல்லுவார்கள்..

படிப்பு வாசனை அறவே இருக்காது, சிறு வயதில் திருமணம் முடிந்து இருக்கும்.. குறைந்தது 7 அல்லது 8 குழந்தைகள் இருக்கும்... வறுமையை போர்த்தி சொந்த ஊரில் பிழைக்க முடியாமல் குடும்பத்துடன் மொத்தமாக பஞ்சம் பிழைக்க இடம்பெயர்ந்தவர்கள் .

மானைவிமார்கள் எல்லாம் அங்கே மற்ற வீடுகளில் வீட்டு வேலை செய்ய, பிள்ளை கண்மணிகளை வருடத்திற்கு இவ்வளவு என ஒரு குறிப்பிட தொகைக்கு வீட்டுவேலைக்கு, வாடகைக்கு பெரிய பெரிய வீடுகளில் விட்டு விடுவார்கள்.. வருடம் ஒரு முறை தந்தையானவர் பிள்ளை கண்மணியை சந்தித்து குசலம் விசாரித்தும், விசாரிக்காமலும் முதலாளியிடம் இருந்து பிள்ளைக்கான வாடகை பணத்தை வசூலித்து வருவார்.

அங்கே திறந்தவெளி மைதானம் நிறைய.. பொதுவாக பெரிய பெரிய விழாக்கள், திருமணம் எல்லாம் மைதானத்தில் பந்தல் இட்டே நடத்தப்படும்.. அம்மாதிரி மைதானங்களின் மூலையில் தற்காலிக குடில் அமைத்து இம்மக்கள் உறைவிடம் செய்து கொள்வார்கள்..

அங்கே, எங்கள் வீட்டுக்கு மேல்வேலை செய்ய ஒரு அம்மா வருவார்... பெங்காலி பெண்மணி,நடுத்தர வயது.. வேலை சுத்தம், கை சுத்தம்.. கேட்டை திறந்து உள்ளே வரும் போதே சுருட்டு வாசனை தூக்கி அடிக்கும்..

அளவுக்கு அதிகமாக அவர் கை நடுங்குவதாக தோன்றும் சிலவேளை.. அம்மாஜி என் இப்படி கை நடுங்குதென கேட்டால்

" அது ஒன்னும் இல்லை , இன்னைக்கு இன்னும் சாராயம் குடிக்கவில்லை" அனாயசமாக சொல்வார்.

கடைநிலை உழைப்பாளர்களை நினைவு கூறும் நாள்
 
 - புவனா கணேஷன்



தூரிகா மொழிபெயர்த்தாள் !


தூரிகா மொழிபெயர்த்தாள் !

நிறங்களின் கூட்டுக்கலவை
புலம்பல்கள்

சிரபுஞ்சிக்கும் சஹாராவுக்குமான
விரவுதல் நெகிழ்த்தி

தேவைக்கு திறந்த குழாயில்
வராத நீரும்
வறண்ட ஓசையும்

கைக்குள் கட்டுண்ட நிலவு
உருகி கசிந்து
உறைந்து போவதற்குமுன்

இருந்தும் விளங்கா பொருளோடு

வீதியில் விரித்த கடையில்
அவன் ஓவியமும்....

-புவனா கணேஷன்

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...