Monday, June 24, 2013

-► --- நின்னையே நிழலாய் --- ◄-



 

அவளுக்கு முன்பே அந்த குபெயில் ஒரு ஜோடி அளவிட்ட வரையில் புதுமண தம்பதி போலும்.

பெட்டி படுக்கையை வைத்த மாத்திரத்தில் ஜோடி காணாமல் போய் விட்டது. இன்னும் பத...்து நிமிடத்தில் ரயில் கிளம்ப தயார் நிலை.

அவளுக்கான படுக்கையை மேல்பர்தில் விரித்து வைத்து விட்டு கையோடு கொண்டுவந்த புத்தகத்தில் அமிழந்துவிட நினைத்து, வெண்ணிற விரிப்பை போட்டுகொண்டு இருந்தாள் சுரபி
பயணத்தில் தூக்கம் வராது அவளுக்கு ,முழு இரவும் கொட்ட கொட்ட விழித்து இருப்பது கொஞ்சம் கடுப்படிக்கும்.
கைபேசி சிணுங்கியது, என்னை கொஞ்சம் கவனியேன் என்று.

அவள் தான் கடங்காரி வினோதினி.. மூக்கை சுருக்கி கைபேசி வழியே விநோதினியை கொஞ்சம் முறைத்து பின் தொடர்பை இணைத்து காதுக்கு கொடுத்தாள்.

"கோவிச்சுக்காதே செல்லமே.. அடுத்த முறை உன்னோட கண்டிப்பா வருவேன். இப்போ முடியலை, ப்ளீஸ்..ப்ளீஸ் புரிஞ்சுக்கோ சுரபி மா, என் கண்ணுல்ல " ஏகத்துக்கு கொஞ்சி , திட்டு விழறதுக்கு முந்தி ஊதி அணைத்தாள் வினோ..

" சரி, எப்படியோ பொழச்சுப்போ , இப்போ நான் மட்டும் தனியா போர் அடிக்க பயணப்படுறேன் "

"போர் அடிக்காது.. நான் ஒரு யோசனை சொல்றேன், கண்ணை மூடிகிட்டு உன்னோட கனவு ராஜகுமாரனை நினைச்சுகிட்டு தூங்கு, காலையிலே ஊருக்கு போய்டலாம் எப்படி என் ஐடியா "

"என்னோட ராஜகுமாரனா!! பல்லை உடைப்பேன் என்கிட்ட இப்படி பேசினா "

ஐயோ வேண்டாமடி, பல்லை உடைச்சிடாதே அப்புறம் என் ராஜகுமாரன் என்னை பார்க்கவே மாட்டான் "பொய்யாய் பயந்தாள் வினோ
ச்சு, போனை வை, ட்ரெயின் கிளம்ப போது .அணைத்து, சீட்டில் போட்டு விட்டு மீண்டும் படுக்கை விரிப்பை தொடர தொட்ட போதுதான் கவனித்தாள் .

அவன் அங்கு நின்று கொண்டு இருப்பதை.. சற்றே அதிர்ந்து நின்று விட்டாள் .

அடுத்த பயணி போலும், யாரும் இல்லாத தனிமையில் விநோவிடத்தில் சற்றே சுதி ஏத்தி பேசியதை எல்லாம் கேட்டு இருப்பான் இந்த புதியவன் இல்லை நெடியவன்,
அவளை விட உயரம் அவன் அதற்கேற்ற உடல்வாகு, கொஞ்சம் மாநிறம் என்றாலும் கண், நெத்தி, மூக்கு, வாய் , மீசை எல்லாமே அளவெடுத்த ஆண்மை சொல்லியது. ச்சே என்ன இது ...

மூளை மரத்து ஏதேதோ யோசிக்குது. இவன் எப்படிப்பட்ட மன்மதனாக இருந்தால் எனக்கென்ன.. பார்வையை திருப்பிவிட வேண்டும் .

இப்படி அவள் எண்ணவோட்டம் இருக்கும் போதே அவனும் அதையே சொன்னான்."ஆள் பார்க்க கொஞ்சம் நல்லா இருந்தா போதும் இந்த பெண்கள் எல்லாம் பார்வையில் விழுங்கிவிடுகிறார்கள்..

பார்த்து முடிச்சிட்டா, கொஞ்சம் வழிவிட்டால் என் இருக்கைக்கு போவேன்" சற்றே, புருவத்தை உயர்த்தி, ஏளனம் துலங்க பேசினான் அவன்.

என்ன அநியாயம், இவனை கண்கொட்டாமல் பார்க்க பெண்கள் வரிசை கட்டி நிற்பதாக என்ன ஒரு பீற்றல் . இவனக்கு காட்டாயம் பதில் அடி தரவேண்டும் .. இல்லாவிடின் நான் சுரபி அல்லவே , உள்ளுக்குள்ளே கறுவினாள் அவள்..

"ஹ.. அதிசயத்துத்துக்குமேல் அதிசயமாக கண்ணில் தென்படுவதை நம்பவே முடியவில்லையே !! கண்களை விரித்து ஏகத்துக்கு அதிசயித்தாள் அவள் "
என்ன.. என்பது மாதிரி , புருவத்தை சுருக்கி கண்ணால் இடுக்கி பார்த்தான் அவன்.

காதில் மாட்டியிருந்த தொங்கட்டான்கள் ஆட ஒரு முறை தலையை சிலிர்த்து, பாவனையோடு மொழிந்தால் அவள் " தலையில் கொம்பு முளைத்த எதோ ஒன்று எல்லாம் இந்த குபெயில் கூட பயணிப்பதை நினைத்துக்கூட பார்க்கவில்லை.

ம் இது வரை மனிதர்களுக்கு மட்டும் தான் பேச தெரியும்னு தப்பா நினைத்துவிட்டேன் போல .இவ்வளவு அதிசயமும் நிஜம் தானான்னு உற்று பார்த்தேன். வேறே ஒன்னும் இல்லை.. சொல்லிவிட்டு, வழி விலகி இருக்கையில் அமர்ந்தாள்.

சண்டை கோழி, ச்சே.. சேவல் மாதிரி சிலிர்த்து கொண்டு சண்டைக்கு அவன் வரப்போவதை எதிர் நோக்கியபடி.
அப்படியே, நேர் மாறாக, அவள் சொல்லிமுடித்த சங்கதிக்கும், முக பாவனைக்கும் ..வரிசை பற்கள் பளிச்சிட, கண்ணோரம் துடிக்க நிறுத்தமாட்டாமல் சிரித்தான் அவன்....
மீண்டும் அதிர்ந்தாள் அவள், என்ன இது ! மட்டம் தட்டினால் சிரிக்கிறான். இன்னும் கொஞ்சம் உறைக்கிற மாதிரி வாரவேண்டும் போல உள்ளுக்குளே துடித்தது...தானும் நகைமுகத்தை காண்பித்து.
"ஹய்யோ, ஜந்து சிரிக்கவேறு செய்யுமா! யாரும் சொன்னால் நம்ப கூட மாட்டங்களே
ப்ளீஸ், நான் ஒரு போட்டோ எடுத்து வச்சுக்கட்டுமா ??"
இப்போதும், நகை முகம் மாறவில்லை அவனுக்கு, மாறாக கண்களில் குறும்பு பளிச்சிட்டது... "தாராளமாய்" விளையாட்டாய் எடுத்துக்கொண்டது போல தோளை குலுக்கி,இருக்கையில் ,அமர்ந்தவண்ணம் பார்வையால் அவளையே அளவிடுவது போல தோன்றியது அவளுக்கு.
இது மாதிரி ஆட்கள் கொஞ்சம் ஆபத்தானவர்கள். இவனிடம் பேச்சை வளர்க்ககூடாது என்று முடிவுக்கு வந்தாள், அவள்.

சட்டென எழுந்து தன் படுக்கையில் விழுந்து புத்தகத்தை விரித்தாள். இரயில் கிளம்பியது, புது ஜோடி தனக்கே, தனக்கான உலகத்தில் மூழ்கி இருந்தது.

சுரபி,தன்னை தவிர இன்னும் மூன்று பேர் அங்கே இருப்பதாகவே கணக்கில் கொள்ளாத வண்ணம்,புத்தகத்தோடு ஒன்றி விட்டாள். அது அவள் சுபாவம்.. ஒரு நல்ல புத்தகமும், வினோதினியும் அவளுக்கு ஒன்று.
எப்படியோ, தூங்கியும் இருக்க வேண்டும். முழிப்பு தட்டியபோது நேரம் ஐந்து எனக்காட்டியது. படுத்து இருக்க பிடிக்காமல் எழுந்து கதவை திறந்து வெளியே வந்தாள்.
முகத்தை கழுவி விட்டு, வெளிக்கதவை திறந்து, பிடித்து .. சில்லென்று முகத்தில் உரசிய அதிகாலை காற்றை சுவாசித்து சற்றே மயங்கி நின்றாள்.

மே மாதம் என்பதால் சீக்கிரமே விடியல் எட்டிப்பார்த்தது.
"குட் மார்னிங்".. அவன் தான், அவனுடைய குரல் இயல்பாய் தொனித்தது. பதிலுக்கு அவள் சொல்லவில்லை. கைகளை கட்டி விறைப்பாக வெளியே பார்த்தபடியே நின்றாள்.
அதே மாதிரி கைகளை கட்டி, குறும்பு கண்களால், அளவிட்டபடியே மீண்டும் " குட்மார்னிங் " என்றான் அவன்.
பொறுமையற்று திரும்பி,பாருங்கள் மிஸ்டர் "காலையில் எனக்கு சண்டை போட கொஞ்சமும் மூட் இல்லை" என்றாள் அவள்.

"எனக்கும் அதே தான். இன்னும் கொஞ்ச நேர பயணம், நாம் ஏன் ப்ரெண்ட்ஸ் ஆயிட கூடாது ? "வினவினான் அவன்.
"வேண்டாம்" வெட்டி துண்டித்த மாதிரி பதில் வந்தது அவளிடம் இருந்து
அல்லாமல், விரோதம் பாராட்ட காரணம் ஒன்றும் இருப்பதாக தோன்றவில்லை " என்றான் அவன்.
கூடவே" நான் நரேந்திரன், வீட்டிலும்,நட்பு வட்டத்திலும் நரேன்" என்றான்.

"சுயபுராணத்தை யார் கேட்டது!"அசட்டையாக அவள்
" சுயபுராணமா, பெயரை, சொல்வதா! சரி கேட்க்காமலே அளந்து விட்டேன் போல, இப்போது நான் கேக்கிறேன் உங்களை என்னவென்று அழைப்பார்கள்?? "
காதில் வாங்காமல் எங்கோ பார்த்தபடி நின்ற நிலை மாறவில்லை அவள்

ஒரு நிமிர்வான அவளுடைய பிடிவாதம் அவனுக்கு பிடிக்கவே செய்தது.

அதற்குள் அந்த வழியை கடந்த சீட்டு பரிசோதகர்.. இவர்கள் இருவரையும் பார்த்தவர்,கடமையே கண்ணாக அறிவுரை வழங்கினார்.

" பாருங்கள் சார், இது மாதிரி வெளிக்கதவை திறந்து நின்று காதல் செய்யாதீர்கள், ஒரு நேரம் மாதிரி இருக்காது... மூடி வையுங்கள்.." இருக்கிற வேளையில் இவங்களை எல்லாம் மேய்ப்பது தனி வேலையா போய்டுச்சு" புலம்பியபடி நகர்ந்தார் அவர்.

அவர் தலை மறையும் போதே, நகை துலங்க அவன் சொன்னான். " பாவம், இந்த மனிதருடைய மனைவி " குறும்பில் கண்களும் சிரிக்க, சேர்த்து சொன்னான்.
" வீட்டில் இவ்வளவு தள்ளி நின்று தான் காதல் செய்வார் போல!! "
இதற்க்கு, கோவமாய் முறைத்து பார்க்க வேண்டும் என்று தான் அவள் நினைத்து இருந்தாள்..ஆனால், அவளையும் அறியாமல் கன்னங்களில் ரோஜாக்கள் பூத்துவிட்டன"
போறேன்.. மாதிரி எதோ புலம்பிவிட்டு அங்கே இருந்து நகர்ந்துவிட்டாள்.உண்மையில் இவன் அபத்தானவனே.இன்னும் கொஞ்ச நேரமே, அதுவரை அந்த கண்களையும், சிரிப்பையும் மறந்தும் பார்த்துவிட கூடாது.நான், ஒன்றும் நெகிழி இல்லை.. தனக்கு தானே உருப்போட்டுகொண்டாள்.

ரயில், ஸ்டேஷன் வந்தடைந்தது.. தனது தோள் பையுடனும், இழுவை பெட்டியுடனும் இறங்கி விட்டாள் சுரபி. மருந்துக்குக்கூட அவன் பக்கம் திரும்பினாள் இல்லை.. வேக நடையில், அந்த இடம் விட்டு நகரும் பொருட்டு எட்டுகளை வைத்தாள் தான்.

எனினும், எதோ ஒரு உள்ளுணர்வு முதுகில் துளைப்பது அவன் பார்வையாக இருக்குமோ, பார்ப்பானா? அன்றி தோளை குலுக்கி விட்டு தன் வழியில் போய்விடுவானா? தெரிந்து கொண்டுவிட வேண்டும் போல உந்தி தள்ளியது.

ஒரு முடிவுக்கு வந்தவளாக, நடை தளர்த்தி, திரும்பினாள் அவள், மீண்டும் அதிர்ந்தே விட்டாள் ..
அவள் பின்னோடு .. மிக அருகில் அவன்.

அவள் பார்வையில் அதிர்வை காணவும், கைகளை மேல தூக்கி சொன்னான் அவன்" இது நாள் வரையில், பெண்களின் பின்னோடு அலைகிறவன் இல்லை நான். இப்போ, என்னோட ஒன்னு மிஸ்ஸிங்,ஒரு வேலை உங்க லக்கேஜோடு கலந்து விட்டதோனு ஒரு சந்தேகம் அது தான்."

என் லக்கேஜோடு!!,என்ன மிஸ்ஸிங்?? குழப்பத்தில் அவள்..
நிதானமாக அவன் சொன்னது " என் நிழல், பயணம் வரை என் கூடவே இருந்தது.. இப்போது என்னை விட்டு உங்களோடு போகிறது" இதை சொல்லும் போது அவன் கண்கள் குறும்பில் சிரிக்கவில்லை.கவனத்தோடு ஒரு எதிர்பார்ப்பு மட்டுமே இருந்தது.

ஆயிரம் பேர் நடமாடும் ரயிலடியில், இரண்டு, இரண்டு.. நான்கு கண்களும் தனித்து, ஒரே சங்கதி பேசியது..
 

-► புவனம்
 

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...