Monday, March 25, 2013

ஊடும், பாவுமாய்

அவன் ஒரு கைதேர்ந்த நெசவு தொழிலாளி. வீட்டு ஆசாரத்தில் குழிதறி ஒன்றும் மேல்தறி ஒன்றுமாய் போட்டு வைத்து கூட்டுறவு சொசைட்டி  மூலமாக கிடைக்கிற வேலைக்கு, நெசவு கூலிக்கு மட்டுமாய் நெய்து கொண்டு இருக்கிறான்.
விழா கால அவசரத்துக்கு மட்டும், கூட இருவரை சேர்த்துக்கொண்டு இரண்டு மட்ட தறிகளும் இயங்கும்.. இல்லாத நேரத்தில் அவனும் அவன் பொஞ்சாதியும் சேர்ந்தே  ஒப்பேத்தி விடுவார்கள்.. அவளுக்கு இப்போது நிறைமாதம் என்பதால் கூட மாட ஒத்தாசைக்கு வேலன் வந்து போவான். கருநீல உடம்பில் பொன்சரிகை வேய்த சேலை முடிகிற கட்டத்தில் இருந்தது. விளக்கு வெளிச்சத்தில் நிஜ பட்டு போல போல மின்னியது அந்த கோரா பட்டு சேலை..
இது அவனுக்கு தனி பட்ட முறையில் கிடைத்த ஆர்டர்.. பொதுவாக வருடத்தில் இரண்டு, மூன்று ஆர்டர் தான் இப்படி அரிதாக கிடைக்கும்.. நூல் கொள்முதல் செலவு போக கொஞ்சம் நல்லபடியே வரும்படி பார்க்க முடியும்.
சங்கத்தின் மூலம் கிடைக்கும் கூலியை விட மூன்று மடங்கு அதிகமே.. ஆனால் அப்படி நேரடியாக  ஆர்டர் கிடைப்பது அரிது, வியாபாரிகள், சங்கத்தின் மொத்தமாய் வாங்கி போய் விற்பனை செய்து கொள்வார்கள். விசைத்தறி காலம் என்றாலும் கைத்தறிக்கு மௌசு குறையாமல் இருப்பது அதிசயம் தான்.
கண்கள் கவனத்துடன் கூர்ந்திருக்க, கைகளும், கால்களும் தறியோடு ஓயாமல் அசைந்து கொண்டு இருந்தது. தறி இயக்கியோடு பிணைக்கப்பட்ட நீளமான கட்டையில் அதுவரை முடிந்த சேலை பகுதியை வாகாக சுருட்டி வைக்கப்பட்டு இருந்தது. பாவும், ஊடுமாய் நூல்கள் ஒன்றோடு ஒன்று சிக்கிகொள்ளாமல் அன்போடு பிணைந்து ..இனி எனக்கு பெயர் சேலையாக்கும் என பெருமை பேசிக்கொண்டதோ.. இனிய லயத்துடன் டக்கட்டி டக்கட்டி டக்ககென்ற  தறியோசை கேட்டுக்கொண்டு இருந்தது அங்கே..
கருப்பட்டி தட்டி போட்ட கடுங்காபியும், கடலை வறுத்து போட்ட காரப்பொரியும் தட்டில் ஏந்தி மெதுவான அசைவுகளில் அடுபங்கரையில் இருந்து வந்தாள் அவள்.
கிழே தரையில் அவன் கைக்கெட்டும் வண்ணம் வைத்து அருகில் கைகளை ஊன்றி சற்றே சிரமத்துடன் ஒருக்கணித்து அமர்ந்தாள், எப்படியும் இன்னும் பதினைந்து, இருபது நாட்களுக்குள் பிரசவித்து விடுவாள்.. தறி சத்தத்தோடு பிள்ளையின் வீல் வீளும் சேர்ந்தே ஒலிக்கும்.
அந்த இனிய கற்பனையில் வேலை பளுவிலும் அவன் முகம் இளகியது.
" சூடாருக்கு, குடி மாமோய், சோறு தண்ணி காணாட்டியும் இந்த கடுங்காபியும், கடலைப்பொரியும் பக்கத்தால இருக்கோணும் உனக்கு"
இது, ஏன் கெடந்து தனியா இம்புட்டு அவசரத்தில் வேலைய செய்யுதே.. மக்காநாள் வேலன் வந்ததும் பாத்துக்கிடலாம், பொழுதாகிப்போச்சு.. சமையத்துக்கு உறங்க பாரு மாமோய்" அவளுடைய ஒவ்வொரு அழைப்பு மாமோயிலும் அத்தனை அன்பு கலந்து இருக்கும்.
"விரசா முடிச்சுக்கொடுத்தா சடுதியில காசு பார்க்கலாம்மிலே.. அதோட ஒரம்பர வீட்டுக்கு  சீராட வந்த புள்ள ஆசை பட்டு கேட்டுச்சு..  விரசா முடிச்சு கொடுத்தா சந்தோசப்படும்"
சரித்தே, அடுத்தவங்க சந்தோசத்தையே பாரு, ராத்தூக்கதில உடம்பு நோவிலே அனத்துவியே, உனக்கு எங்கே தெரிய போகுது.. பொட்டச்சி நான், தான் கிடந்தது தவிக்கேன்"
நாள்பூராவும் கையும், காலும் அசைத்து வேலை செய்து அசதியில் வலி கண்ட போதும் மரம் போல தூங்கிடுவான் ...எத்தனையோ நாள் அவள் தான் கை விரல்களை, கால்களை அழுத்தி பிடித்து விடுவாள்.. பெத்தவங்க இல்லாத அவனுக்கு யாதுமாய் அவளே இருக்கிறாள்.
தலைச்சன் பிள்ளையை வயிற்றில் சுமந்தும், கணவனை தனித்து விட்டு போக மனமில்லாமல், தாய்வீடு போகவில்லை பிரசவத்துக்கு..
தறிக்குள் பிணைந்து நெய்தல் காணும் ஊடும் பாவுமாய்.. இழைத்த உணர்வோட்டம் இருவருக்குள்ளும்.. ஏட்டை படிக்காத போதும் மனதை படித்த தம்பதி என்றே அக்கம் பக்கத்தில் அதிசயமாய் பார்ப்பார்கள்.
"புலம்பாத புள்ள, நீ பக்கத்தில இருக்க, ஒன்னு என்ன ஒன்பது பொடவைய கூட தறியோட்டி போடுவேன்"
சரித்தே, சூடேறி போச்சுது, மிச்சமிருக்கிற சோத்திலே தண்ணிய ஊத்தி வைக்கேன், விடிஞ்சதும் கரைச்சு குடிக்க" அவள் மீண்டும் கைகளை ஊனி எழுந்து போனாள்..
அடுத்தநாள் மதியத்துக்குள் சேலை, உடுத்துகிற தகுதியை பெற்று உருவாங்கி இருந்தது. உழைப்பில் உண்டானது.. ஒரு குழந்தையை போலவே பாவிப்பான் ஒரு ஒரு உருவாக்கத்துக்கு பிறகும், சுருக்கம் நீக்கி, தோதாய் மடித்து அவளிடம் தந்தான்.. இந்தா புள்ள கொடுத்திடு, இதில மொதல் போட்டது போக சொளையா ஆயிரத்தி அறுநூறு நிக்கும். புள்ளத்தாச்சி உனக்கு எதுவும் வாங்கி தந்தது இல்லை.
ஆசைப்பட்டத கேளு புள்ள, டவுனுக்கு போய் வாங்கியாறேன்"
"இந்தா,இந்த பேச்சே வேணா, கேட்டுக்க..கையில காசு காணும் முன்னாடி செலவுக்கு பந்தி வைக்க பாக்கிற, புள்ள பொறப்பு நேரத்துக்கு கைக்காசு தக்க வைக்கோணும்... பக்கத்தால தானே, தந்து போட்டு வாரேன்"
அவள் எப்போதும் அப்படித்தான்.. அது வேண்டும், இது வேண்டும் என ஆற்பரிக்காத மனசு.பத்து ரூபாய் வீட்டு செலவுக்கு வைத்தாலும் அதில் நான்காவதும் மீதம் செய்து உண்டியலில் சேர்ப்பாள். அவனும் தனக்காக ஏதும் செய்து கொள்ளமாட்டான், அவள் விஷயத்துக்கு மட்டும் கணக்கு பார்ப்பது இல்லை.
சேலையை எடுத்து கொண்டு, அதிர்ந்து நடந்தால் வயிற்று பிள்ளைக்கு வலிக்குமோ என மெல்லிய எட்டுக்களில், தாய்மை பொங்க அவள் நடந்து போவது பார்க்க அழகாய் இருந்தது..                                                                                                    
எம்புட்டு நேரமா போட்டோவ பார்த்து ரோசனை பண்ணுவ லே, பொண்ணு பிடிச்சுதா ??, இந்த புள்ளைக்கு அடுத்து பொறந்தது நாலும் பொட்டபுள்ளைக, இம்புட்டு நாளா தறியை ஓட்டி தனியா தள்ளிட்ட, நாளைக்கு பங்காளி, பகுதாளின்னு ஒறவு கூடும், தோது படும்னா சொல்லு பேசி முடிச்சுபோடலாம்."
செய்யுங்க சித்தப்பு என்றான் அவன்
 கையளவு புகைப்படமாய் அவன் உள்ளங்கைக்குள் சிரித்தாள் அவள். 

-புவனா கணேஷன்

Sunday, March 24, 2013

அடுத்த

நாழிகை நகர்வுகளை
கடிகார முள் காட்டி சுமப்பதில்லை
இயக்குதல் சுயேச்சை
இயங்குதல் அனிச்சை
நிசியில் நனைந்த
மை தொட்டு இட்டு
... கடந்த வழிக்கு அடையாள குறியீடு
வழுக்கி விழுகிற தேடல்களில்
இழுத்து சொருகிய நம்பிக்கை
பாத சுவடுகளுக்கும்
பதியும் பரப்புக்குமான
அடர்வு முத்தமாய்
அடுத்த நிமிடத்தை நோக்கி

-புவனா கணேஷன்

இவள்

 குப்பன் வீட்டில் அடுப்பெரிகிறது
உலையில் கொதிக்கிற சோறு
தின்று செரித்தாலும் தீராத வறுமை
நெகிழியாகிறது இடக்கரம் எதிர்காலம் சுமக்க
நெருப்பாகிறது வலக்கரம் நிஜகாலம் சமைக்க
இரும்படித்தும் துருப்பிடியா குபேரனின் கஜானா

-புவனா கணேஷன்

பூத்த

தூர நீள அளப்புகள் காணா
வான் விரிப்பின் கீழ்
நீயும் நானும்
வனைவு காண் மீள் நொடிக்காய்
பூத்த வண்ணம்
நைச்சிய மலர்களில் வாசனை தடவி..
புகை கக்கி புலம்பெயரும்
எதோ ஒரு நகர்வுக்காய்
காத்திருப்பு..
யாசித்தல் அற்ற எதிர்நோக்குகள்
இலச்சினை ஈவு காணுமோ !!!

-புவனா கணேஷன்

நூலிழையில்

அவன் ஒரு கைதேர்ந்த நெசவு தொழிலாளி. வீட்டு ஆசாரத்தில் குழிதறி ஒன்றும் மேல்தறி ஒன்றுமாய் போட்டு வைத்து கூட்டுறவு சொசைட்டி  மூலமாக கிடைக்கிற வேலைக்கு, நெசவு கூலிக்கு மட்டுமாய் நெய்து கொண்டு இருக்கிறான்.
விழா கால அவசரத்துக்கு மட்டும், கூட இருவரை சேர்த்துக்கொண்டு இரண்டு மட்ட தறிகளும் இயங்கும்.. இல்லாத நேரத்தில் அவனும் அவன் பொஞ்சாதியும் சேர்ந்தே  ஒப்பேத்தி விடுவார்கள்.. அவளுக்கு இப்போது நிறைமாதம் என்பதால் கூட மாட ஒத்தாசைக்கு வேலன் வந்து போவான். கருநீல உடம்பில் பொன்சரிகை வேய்த சேலை முடிகிற கட்டத்தில் இருந்தது. விளக்கு வெளிச்சத்தில் நிஜ பட்டு போல போல மின்னியது அந்த கோரா பட்டு சேலை..
இது அவனுக்கு தனி பட்ட முறையில் கிடைத்த ஆர்டர்.. பொதுவாக வருடத்தில் இரண்டு, மூன்று ஆர்டர் தான் இப்படி அரிதாக கிடைக்கும்.. நூல் கொள்முதல் செலவு போக கொஞ்சம் நல்லபடியே வரும்படி பார்க்க முடியும்.
சங்கத்தின் மூலம் கிடைக்கும் கூலியை விட மூன்று மடங்கு அதிகமே.. ஆனால் அப்படி நேரடியாக  ஆர்டர் கிடைப்பது அரிது, வியாபாரிகள், சங்கத்தின் மொத்தமாய் வாங்கி போய் விற்பனை செய்து கொள்வார்கள். விசைத்தறி காலம் என்றாலும் கைத்தறிக்கு மௌசு குறையாமல் இருப்பது அதிசயம் தான்.
கண்கள் கவனத்துடன் கூர்ந்திருக்க, கைகளும், கால்களும் தறியோடு ஓயாமல் அசைந்து கொண்டு இருந்தது. தறி இயக்கியோடு பிணைக்கப்பட்ட நீளமான கட்டையில் அதுவரை முடிந்த சேலை பகுதியை வாகாக சுருட்டி வைக்கப்பட்டு இருந்தது. பாவும், ஊடுமாய் நூல்கள் ஒன்றோடு ஒன்று சிக்கிகொள்ளாமல் அன்போடு பிணைந்து ..இனி எனக்கு பெயர் சேலையாக்கும் என பெருமை பேசிக்கொண்டதோ.. இனிய லயத்துடன் டக்கட்டி டக்கட்டி டக்ககென்ற  தறியோசை கேட்டுக்கொண்டு இருந்தது அங்கே..
கருப்பட்டி தட்டி போட்ட கடுங்காபியும், கடலை வறுத்து போட்ட காரப்பொரியும் தட்டில் ஏந்தி மெதுவான அசைவுகளில் அடுபங்கரையில் இருந்து வந்தாள் அவள்.
கிழே தரையில் அவன் கைக்கெட்டும் வண்ணம் வைத்து அருகில் கைகளை ஊன்றி சற்றே சிரமத்துடன் ஒருக்கணித்து அமர்ந்தாள், எப்படியும் இன்னும் பதினைந்து, இருபது நாட்களுக்குள் பிரசவித்து விடுவாள்.. தறி சத்தத்தோடு பிள்ளையின் வீல் வீளும் சேர்ந்தே ஒலிக்கும்.
அந்த இனிய கற்பனையில் வேலை பளுவிலும் அவன் முகம் இளகியது.
" சூடாருக்கு, குடி மாமோய், சோறு தண்ணி காணாட்டியும் இந்த கடுங்காபியும், கடலைப்பொரியும் பக்கத்தால இருக்கோணும் உனக்கு."
இது, ஏன் கெடந்து தனியா இம்புட்டு அவசரத்தில் வேலைய செய்யுதே.. மக்காநாள் வேலன் வந்ததும் பாத்துக்கிடலாம், பொழுதாகிப்போச்சு.. சமையத்துக்கு உறங்க பாரு மாமோய்" அவளுடைய ஒவ்வொரு அழைப்பு மாமோயிலும் அத்தனை அன்பு கலந்து இருக்கும்.
"விரசா முடிச்சுக்கொடுத்தா சடுதியில காசு பார்க்கலாம்மிலே.. அதோட ஒரம்பர வீட்டுக்கு  சீராட வந்த புள்ள ஆசை பட்டு கேட்டுச்சு..  விரசா முடிச்சு கொடுத்தா சந்தோசப்படும்"
சரித்தே, அடுத்தவங்க சந்தோசத்தையே பாரு, ராத்தூக்கதில உடம்பு நோவிலே அனத்துவியே, உனக்கு எங்கே தெரிய போகுது.. பொட்டச்சி நான், தான் கிடந்தது தவிக்கேன்"
நாள்பூராவும் கையும், காலும் அசைத்து வேலை செய்து அசதியில் வலி கண்ட போதும் மரம் போல தூங்கிடுவான் ...எத்தனையோ நாள் அவள் தான் கை விரல்களை, கால்களை அழுத்தி பிடித்து விடுவாள்.. பெத்தவங்க இல்லாத அவனுக்கு யாதுமாய் அவளே இருக்கிறாள்.
தலைச்சன் பிள்ளையை வயிற்றில் சுமந்தும், கணவனை தனித்து விட்டு போக மனமில்லாமல், தாய்வீடு போகவில்லை பிரசவத்துக்கு..
தறிக்குள் பிணைந்து நெய்தல் காணும் ஊடும் பாவுமாய்.. இழைத்த உணர்வோடும் இருவருக்குள்ளும்.. ஏட்டை படிக்காத போதும் மனதை படித்த தம்பதி என்றே அக்கம் பக்கத்தில் அதிசயமாய் பார்ப்பார்கள்.
"புலம்பாத புள்ள, நீ பக்கத்தில இருக்க, ஒன்னு என்ன ஒன்பது பொடவைய கூட தறியோட்டி போடுவேன்"
சரித்தே, சூடேறி போச்சுது, மிச்சமிருக்கிற சோத்திலே தண்ணிய ஊத்தி வைக்கேன், விடிஞ்சதும் கரைச்சு குடிக்க" அவள் மீண்டும் கைகளை ஊனி எழுந்து போனாள்..
அடுத்தநாள் மதியத்துக்குள் சேலை, உடுத்துகிற தகுதியை பெற்று உருவாங்கி இருந்தது. உழைப்பில் உண்டானது.. ஒரு குழந்தையை போலவே பாவிப்பான் ஒரு ஒரு உருவாக்கத்துக்கு பிறகும், சுருக்கம் நீக்கி, தோதாய் மடித்து அவளிடம் தந்தான்.. இந்தா புள்ள கொடுத்திடு, இதிலே மொதல் போட்டது போக சொளையா ஆயிரத்தி அறுநூறு நிக்கும். புள்ளத்தாச்சி உனக்கு எதுமே வாங்கி தந்தது இல்லை.
ஆசைப்பட்டத கேளு புள்ள, டவுனுக்கு போய் வாங்கியாறேன்"
"இந்தா,இந்த பேச்சே வேணா, கேட்டுக்க..கையில காசு காணும் முன்னாடி செலவுக்கு பந்தி வைக்க பாக்கிற, புள்ள பிறப்பு நேரத்தில் கைக்காசு தக்க வைக்கோணும்... பக்கத்தால தானே, தந்து போட்டு வாரேன்"
அவள் எப்போதும் அப்படித்தான்.. அது வேண்டும், இது வேண்டும் மாதிரி ஆற்பரிக்காத மனசு.பத்து ரூபாய் வீட்டு செலவுக்கு வைத்தாலும் அதில் நான்கு மிச்சம் பிடித்து உண்டியலில் சேர்ப்பாள். அவனும் தனக்காக ஏதும் செய்து கொள்ளமாட்டான், அவள் விஷயத்துக்கு மட்டும் கணக்கு பார்ப்பது இல்லை.
சேலையை எடுத்து கொண்டு, அதிர்ந்து நடந்தால் வயிற்று பிள்ளைக்கு வலிக்குமோ என மெல்லிய எட்டுக்களில், தாய்மை பொங்க அவள் நடந்து வருவது பார்க்க அழகாய் இருந்தது..
ஏனுங்க, உங்க சேலை பதவிசா, நீங்க கேட்ட மாதிரியே வந்து இருக்குங்க, இந்த நெறத்துக்கு கட்டிகிட்டா அம்சமா இருப்பீங்க, ஒருக்கா கட்டி பாத்திடுங்க " என்று நீட்டினாள்.
நெய்தவரிடம் இருந்து நேரிடையாக, புது வாசனையோடு, மொட மொடப்பாய்.. உடனே உடுத்தி பார்த்துவிடும் ஆவலில் கைகளை நீட்டி வாங்க எத்தனித்த போது
எங்கோ, தொலைவில் ஒரு குயில் விடாமல் கூவி இருவர் கவனத்தையும் திருப்பியது.
, கைபேசியில் அலார சினுங்கல்!! ..
விழிப்பு தட்டிவிட்டது..
 
-புவனா கணேஷன்

Thursday, March 14, 2013

மறைந்தும் மறையாமல் மனதோடு...

மறைந்தும் மறையாமல் மனதோடு...

ஸ்மிதா படேல் :
மோனோலிசா போல் சிரிக்கும் முகபாவம் .. காதல் பேசும் கண்கள்.. மாநிற,
அழகு ததும்பும், எனக்கு மிக பிடித்த நடிகை.என் 7 அல்லது 8 வயதில் மறைந்துபோனார்.. அதே நாளில் என் 5 வயது தம்பியும்.. நாடு முழுதும் மூளை காய்ச்சல் பரவி இருந்த சமயம் அது.

ஸ்மிதா :
கண்களை சுழட்டி, சொருகி ஆயிரம் மொழி பேசும் காந்த
கண்ணழகு பெண்மணி..அரிதார பூச்சுக்கு அப்பாற்ப்பட்டு இயல்பில் மென்மையானவர்.பேறும், புகழும், பணமும் கூடவே நிறைய மன அழுத்தமும் கண்டு மறைந்தவர்.

அனுராதா ரமணன் :
பெண் எழுத்தாளர்...இயல்பில் துணிச்சலும், நிமிர்வும் உள்ள பெண்மணி, எழுத்திலும் அதையே பிரதிபலித்தார் , சொந்த வாழ்க்கையில் மகிழ்ச்சி காணாத போதும் நகைச்சுவை ததும்ப எழுத எத்தனித்தவர்...தான் கண்ட நோய், பிணி குறித்து எழுதிய போதும் அப்படியே, இவரின் கதைகளின் தலைப்பு ஈர்ப்பு உள்ளதாக இருக்கும் ரமணிச்சந்திரனின் தலைப்புகளை போலவே ... விதவா கோலத்துக்கு எதிராக நின்ற பெண்மணி.

கே.பி.சுந்தராம்பாள் :
நிஜத்தில் அவ்வையார் எப்படி இருப்பாரோ !.. அவ்வையாரை நினைத்தால் இவர் முகமே தெரியும் ... பக்தி பாடல்கள் பாடியே இவரது கண்கள் தெய்வீகம் பேசுதோ !! என்ன வளமையான குரல்.. முருகன் சிலைகளை பார்க்கும் பொழுது எல்லாம் இவரது குரலில் சென்று வா மகனே, வென்று வா பாடல் மனதில் ஓடும்.

ஷோபா :
செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் ..கண்கள் , சிரிப்பு எல்லாம் அள்ளும்.. மாடர்ன் டிரஸ் காட்சியில் கூட மூக்குத்தி மின்னும்.. தனித்தன்மை அழகி ..உண்மையில் முள்ளும் , மலரும் ஒருங்கே கண்டவர்...ரொம்ப சின்ன வயதில் கே.கே.நகர் குடியிருப்பில் நாங்கள் வசித்த வீட்டுக்கு சற்று அருகே ஒரு இடுகாடு இருக்கும் .. இன்றளவும் ஷோபா சுடுகாடு என்றே சுட்ட படுகிறது .. அங்கே தான் இவர் உறைவிடம்.

-புவனா கணேஷன்

உதிரபோக்கு

பெண், என்னதான் குடும்பத்தின் ஆணிவேராக,மரமாக இருந்தாலும், பிடிமானமாய் அன்பை வேண்டி நிற்பவளாகவே இருக்கிறாள் வாழ்நாள்முழுதும்.. கடக்கும் ஒவ்வொரு நிலையிலும் உடல், மனம் இரண்டிலும் வாதையை சுமந்தவளாக
பெண்களில் மூன்று வகை
1. வேகமாய் காற்று அடித்தால் கசங்கி விடும் காகிதம் போல் மிக சென்ஸிட்டிவ் வகை பெண்கள்.
2. கொஞ்சம் ஒரு மாதிரி சமாளித்து அடுத்ததை பார்க்கபோகும் பக்குவ நிலை பெண்கள் .
3. அழுத்தமாக எதையும் வெளியே காட்டிகொள்ளாமல் அதே சமயம் உள்ளுக்குள் போட்டு குமைந்து தன்னை தானே வருத்தி கொள்ளும் பெண்கள்.
*இதில் முதல் மற்றும் மூன்றாம் வகை பெண்கள் ... சுலபத்தில் மனசோர்வுக்கு ஆளாகிறார்கள்.
சிறுமி என சுற்றி திரிந்த நிலை திரிந்து, பதின் பருவ பூப்பெய்தும் காலத்தில் இரண்டு முக்கிய காரணங்களால் முதல் முறையாக பெண் மன அழுத்தம் காண்பாள் என்பது மனோத்தத்துவ கூற்று.
1.உதிரபெருக்கு..தன்னில் இருந்து தடுக்க முடியாத, தாங்கி கொள்ளமுடியாத சங்கடமாய் அதை அந்த வயது பெண் உணர்வாள். (கருப்பை விரிந்து வளரும் நிலை காண்பதால் வயிற்றை சுருட்டி சுருட்டி படுபயங்கர வலியை தன்னுள் உணரும் திகைப்பின் பிரதிபலிப்பாக வரக்கூடிய மன அழுத்தம்)
2. தன் சொந்த உடம்பில் அதுவரை கண்டிராத வளர்சிதை மாற்றம்.. மார்பகம் வளரும் நிலையில் நூறில் 60 பெண்கள், பதிமூன்று வயதில் இருந்து பதினாறு வயது-க்குள் (கவனம் சிதறுதல், விரக்தி, பயம், வெறுப்பு, சுயக்கட்டுபாட்டை இழத்தல், அழுது புலம்புதல், அதிதீதமான கோவம் கொள்ளுதல்) போன்ற மன அழுத்தம் காண்பதாகவும் உளவியல் கூற்று. தற்கொலை எண்ணம் முதல் முதலில் தலைதூக்குவதும் இந்த வயதில் தான்.
·         எனவே தான், வயது வந்த பருவத்தில் தாயன்பும், தக்க வழிகாட்டுதலும், அரவணைப்பும் கட்டாயம் வேண்டும்.. அந்நிலையில் ஒரு பெண் தாயற்று போவது பெருங்கொடுமை..அந்த வயதில் ஏற்படும் மன அழுத்தத்தை கடக்க அம்மாதான் சிறந்த மருந்து.
பதினாறு வயதில் இருந்து திருமணம் ஆகும் வரை மாதவிடாய் உதிரபோக்கை பெண்ணின் மனம் இயல்பாக ஏற்றுகொள்ளும்..திருமணம், உடலுறவு கண்ட நிலை இதில் மீண்டும் மாதவிடாய் நேரத்தில் மனசோர்வு விழித்துக்கொள்ளும்.( அதுவரை தூங்கிகொண்டு இருந்த கருப்பை விழிப்போடு தனக்கான செயல்பாட்டை தொடங்கிவிடுவதாலும், ஹார்மோன் சுரப்பிகள் உள்ளுக்குள் பல்வேறு மாற்றங்களை எற்ப்படுத்தி விடுவதாலும்)
·         இங்கே இந்த இடத்தில முன்பு அம்மாவிடம் தேடிய ஆறுதலை கணவனிடம் தேடதொடங்குவாள் பெண். அந்த அளவு நெருக்கத்தை அம்மாவுக்கு பிறகு கணவனிடத்தில் வைப்பவள்.மாதவிடாய் சங்கடங்களை புரிந்து கொள்ளாமல் மேலும் முட்டி மோதி மடை திறப்பு செய்வது போல் கணவன் நடந்து கொண்டால் அங்கே தான் சங்கடம் பிறக்கிறது.
 
·         பெரும்பாலான ஆண்கள் செய்யும் தவறு இதுதான்.உதிரபோக்கு என்பது பெண் உடல் சார்ந்த, அவள் மட்டுமே படக்கூடிய விஷயம்.. தனக்கும் அதற்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பது போல பாவிப்பது.
பொதுவாகவே ஆண் தனியானவன் இல்லை, ஏதோ ஒரு கோட்டின்கீழ் உதிரபோக்கு காணும் பெண்ணோடு சார்பு உள்ளவனாகவே இருக்கிறான்.
1. மெனோபாஸ் நிலையை கடக்கும் அன்னையின் மகனாக
2. மாதவிடாய் காணும் மனைவியின் கணவனாக
3. பூப்பெய்திய பெண்ணின் தகப்பனாக
இது குறித்து சரியான புரிதலும், அணுகுமுறையும் ஆண் கொண்டிருத்தல் அவசியம்..இயல்பாய் இருக்கும் பெண்கள் உதிரபோக்கு நேரத்தில் தளர்ந்த மனநிலையில் இருப்பார்கள் என்பது மருத்துவ அறிவியல் உண்மை.
1. தளர்ந்த மனநிலையில் நூறுசதவீத பெண்களும்
2. மன சோர்வில் அறுபத்தைந்து சதவீத பெண்களும்
3. அதையும் தாண்டிய மன அழுத்தத்தில் முப்பது சதவீத பெண்களும்
4. வரம்பு உடைந்த மனபிறழ்வில் பதினைத்து சதவீத பெண்களும் பாதிக்கபடுகிறார்கள்..
·         மனைவி ஹிஸ்டீரியா நோயாளி போல் நடந்து கொள்கிறாள், கோவத்தில் கத்தி வெடிக்கிறாள், ஓயாமல் சண்டை இடுகிறாள், எரிந்து விழுகிறாள் என்று ஒரு கணவன் நினைப்பானேயானால் முழு தவறும் அவன் பக்கம் இருக்கிறது,மனைவியை ஆறுதல் தோளோடு அணையவில்லை என்பதே பொருள்.
உடலும் மனமும் சோர்ந்து இருக்கும் போது, உறங்கியும் உறங்காத நிலையில் படுக்கையில் கிடக்கும் பொழுது .. ஆழ்மனது விழித்துக்கொண்டு பார்த்தது, நடந்தது, செய்தது என பலவாறு உண்மை போல் ஒரு கற்பனை நிலையை உருவாக்கும். ... உடலும் மனதும் அதீதமாக சோர்ந்து இருக்கும் போது காண்பது இது.
பயங்கரமான கற்பனைகளை அந்த நேரத்தில், மூளை செய்து கொண்டு இருக்கும்... உதாரணம், ஒருவன் அல்லது ஒருத்தி ஆழ்ந்து உறங்கி கொண்டு இருக்கும் போது.. உருவம் இல்லாத எதோ ஒன்று தன்னை தூக்க நிலையில் அழுத்தி, அமிழ்த்தி துன்புறுத்துவதாக தோன்றும், கண்களை விழித்து பார்த்து, பயந்து, அபய குரலுக்காய் வாயை திறந்தால் குரல்வளையை தாண்டி பேச்சு வராதது போலவும்,பக்கத்தில் படுத்து இருபவர்களை எழுப்ப முடியாதது போலவும் தோன்றும்.. அது கனவோ கற்பனையோ அல்ல...முற்றிலும் நிஜம் என்று ஆழ்மனது நம்பும்.. இப்படி தான் பேய், பிசாசு கதைகள் கூட உருவாகியது என்பது உளவியல் கூற்று.
·         உதிரபோக்கு நேரங்களில், மனசோர்வு காணும் பெண்கள் இதுமாதிரியான அழ்மனதின் கற்பனைகளால் தானும் துன்புற்று தன்னை சேர்ந்தவர்களையும் குழப்பம் அடைய செய்ய கூடும்
மாதவிடாய் கால தளர்வுநிலை குறித்து சரியான புரிந்துணர்வுடன் அடுத்து அருமருந்தாக அமைவது கணவனின் நெருக்கம். கணவன் மனைவிக்கிடையே தொடு உணர்தலில் புரிந்துணர்வை சொல்வது அவசியம்.பெரும்பாலும்..பெரும்பான்மை, பெண்களின் கருத்து யாதெனில் பாலுறவு தேவை இருந்தால் ஒழிய கணவன், மனைவியை சாதரணமாக தொடுவதில்லை என்பது.
·         மனசோர்வை இயல்பாக கடக்க கணவனின் ஒரு பார்வை, ஒரு செயல் அன்பில் கலந்தது போதும் பெண்ணுக்கு..பொத்தானை அழுத்தி மின்விசிறியை முடுக்குவதில் பொத்தானுக்கும், மின்விசிறிக்கும் இடையில் ஆன செயல்விசை போன்றது தொடுமொழி...

மெனோபாஸ்
இது பொதுவாக 45-55 வயதுக்குள் வருவது. கருப்பை வழக்கமாக சுரக்கும் ஹர்மோனாகிய ஈஸ்ட்ரோஜன்..படி படியாக குறைந்து சுரப்பது தொடங்கும் நிலை இந்த கட்டத்தில் முன் எப்போதும் இல்லாத அளவு அதீதமான உடல் உபாதைகளையும், மூப்பின் இயலாமையையும் சேர்ந்தே சுமக்க வேண்டயவள் ஆகிறாள்... ஓடி ஓடி செய்வதற்கு 45 லிருந்து 55 வரையிலான பெண்களுக்கு நிறையவே இருந்திடும். பிள்ளைகள் திருமணம் மற்றும் பல படிநிலைகளை வாதைகளோடு சுமக்க வேண்டிய கட்டத்தில், இருமடங்கு சோர்வு கொள்ளுதல் இயல்பே...
சிறுவயதில் தனக்கென நேரம் ஒதுக்கி தன் உடல்நலம் பேணாத பெண்கள் இந்த வயதை கடக்கும் போது அறுந்து விழுந்த கயிற்று பாலத்தில், பிடிமானம் இல்லாமல் தொக்கி கொண்டு கடப்பதை போல கடினமானது..
நம் பாட்டி மற்றும் அம்மா செய்த வேளையில் பாதியை கூட நம் காலத்தில் செய்ய முடியாத உபாதைகளுக்கு  ஆளாவதற்கு முறையற்ற, ஊட்டம்ற்ற அவசரகதி உணவுகலாச்சாரமும் ஒரு காரணி
மனரீதியாக மெனோபாஸ் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்
·         உடல் தொல்லைகளால் எரிச்சல் கூடி எரிந்து விழுந்து பேசுதல், பொருமையின்னமை,காரணமற்று அழத்தொடங்குவது,நிலையான பிடிப்பு தன்மை இல்லாமல் அடிக்கடி மாற்றி கொள்வது,மறதி இன்னும் பொதுவான சொற்களில் அடக்கமுடியாத பலவும் இருக்கலாம்.
குடும்பத்தில் இருக்கும் அனைவரும் தரும் இணக்கமும், புரிதலும் மெல்ல மெல்ல தளர்வுநிலை கடந்து தன்னிலை அடைய உந்துசக்தியாக இருக்கும்.. தவிர தியானமும், மூச்சு பயிற்சியும் சிறந்த மருந்து
**புவனா கணேஷன்  

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...