Thursday, March 21, 2019

APRIL 2017 - ஏலகிரி பயணம்

இன்றையகாலை நடையை ஏழு மணிக்கு தொடங்கினேன்.
துளிர் வெயிலும் பனிபோர்த்தலுமாய் இந்த மலைப்பாதையில் நடக்க நன்றாகவே இருக்கிறது. ஒரு சில ஆட்டோக்களையும் நடந்துவருகிற கிராம மக்களையும் தவிர விடியல் நேரத்தில் வேறு வாகனங்களைக் காணோம்.

அருகே மஞ்சக்கொள்ளி அத்தனாவூரென இரு கிராமங்களின் வழி, தங்கியிருக்கும் ரிஸார்ட்டிலிருந்து நான்கு கிலோமீட்டர்கள் இன்றைய நடை முடித்து வந்தேன். கூட கொஞ்சம் நடந்திருக்கலாம் ஆனால் பத்ரம் தூரம் போய்விடாதே. டூரிஸ்ட் மலைபகுதிகளில் பாதுகாப்பு இருக்காது உள்ளேயே நடந்துவிட்டு வந்துவிடச்சொல்லி கன்ச்சு தைரியமூட்டி அனுப்பியதால் அத்தோடு திரும்பவேண்டியதாகிவிட்டது.
 இங்குள்ள கிராமங்கள் விவசாய நிலத்தினூடே முப்பது நாட்பது வீடுகளோடு இருக்கின்றன. பீன்ஸ் கத்திரி வெண்டை தக்காளி பெரும்பாலும் காய்கறிகள் தான். கொஞ்சமாய் நெல்லும் உண்டு.  இங்கே  வசிப்பவர்கள் பூர்வீகமாய் அப்பன் பாட்டன் காலத்திலிருந்து இங்கேயே பிறந்து வளர்ந்த மலைவாழ் பழங்குடியினர். குறைந்தது வீட்டிற்கு இரு டாகீஸ் கட்டாயமாய் வளர்க்கிறார்கள் போல. வீடுகள் நிறைந்த ஊள்ளூடிப்பாதைகள் வழியே போக டாகீஸ்ஸை நினைத்து பயந்து வந்ததால் சாலையோரமே நடந்தேன்.
அருகருகே உள்ள வீடுகளின் வாசல்களில்  மாட்டிற்கு வைக்கோல் வைத்துக்கொண்டும் பாத்திரங்கள் கழுவியபடியும் இருந்த  பெண்களை பார்க்கமுடிந்தது. 

எதிரே சால்வையை போர்த்திக்கொண்டு வந்த வயதான பெண்மணியிடம் பேசிப்பார்க்கலாமேன்னு தோன்றியதால்..
உங்களுக்கு தமிழ் தெரியுமான்னு தொடங்கினேனா.
இல்ல தமிழ் தெரியாதென தமிழிலேயே பதில் சொன்னார்.
" அப்போ நீங்க என்ன பேசுவீங்க. என்ன மொழியிலென கேட்டால்

சும்மா வா போ அப்படி இப்படின்னு தான் பேசிப்போம். இதோ இப்ப பேசறா மாதிரி தான் பேசிப்போம். தமிழெல்லாம் எங்களுக்கு எங்கே தெரியப்போகுதென்றார்  தமிழில் பேசிக்கொண்டே. பேசிக்கொண்டிருக்கும்
மொழிக்கு பெயர்தான் தமிழென நிஜத்திலயே அவருக்கு தெரிந்திருக்கவில்லை என்பது ஆச்சர்யம்.  பெயர் சாந்தாமணியாம்.  பாதையிலிருக்கும் திட்டில் அமர்ந்து கூட இரண்டு மூனு நிமிசம் பேசிக்கொண்டிருந்தேன். "வூட்லர்ந்து கொள்ளிக்கு போறேன்" வட ஆர்காடு மாவட்டகாரர்களின் வட்டார தொனிப்பு.

எட்டு பிள்ளைகளாம். கொள்ளிக்கு போய்  அங்கிருந்து நெல்லை எடுத்துப்போய் குத்தக்கொடுக்கவேண்டுமென்றார்.  மங்களம் கிராமத்திலிருக்கிறதாம் வீடு. அங்கே எத்தனை வீடுகளென்றால் ஒரு பத்திருக்குமென்றார். படம் எடுத்துக்கவா உங்களை என்றால் கொஞ்சம் சங்கோஜித்து சரி என்றார். ரொம்பவும் நசநசவென கேள்விகளாக கேட்டு கஷ்டபடுத்த வேண்டாமென தோன்றியதால் அத்தோடு நகர்ந்தாச்சு. அப்படியே கேட்டுவைத்தாலும் அதற்கெல்லாம் சாந்தாமணி அம்மைக்கு பதில் தெரியுமான்னும் தெரியல.

மேலும் நடையில் .. அரசு கிராம அலுவலகக் கட்டிடம் அருகேயே அரசு நூலகம், மிக அழகான சுத்தமான பராமரிப்புடனான கட்டிடங்களில் அரசுப் பள்ளியும் , மலைவாழ் மாணவர்கள் தங்கிப்படிக்கிற உணவு உறைவிடப் பள்ளியும் ஹாஸ்டலும் அதில் நண்டும் சிண்டுமாய் பிள்ளைகளையும் பார்த்தேன். பள்ளி திறந்தே இருக்கிறது உள்ளே ஆட்களைக்காணோம். ஷாஸ்டல் கேட் உள்பக்கமாய் பூட்டியிருக்கிறது. உள்ளே அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்த நண்டுசிண்டுகளோடு கதைத்த போது இதோ ஒம்பது மணிக்கு ஸ்கூல் திறக்கும். இப்ப சாப்ட்டு கிளம்புவோம் பரிட்சை பதினாலாம்தேதியில் முடியும் அப்புறம் ஊருக்கு போய்டுவோமென சொன்னது  ஐந்து, ஏழு படிக்கிற குட்டிகள். குக்கு என்கிற குட்டிபெண் இரண்டாம் வகுப்பாம். கூந்தலை பின்னிக்கொண்டே  ஒரு பையனின் பின்னே ஒளிந்துகொண்டு வெட்கத்தோடு பெயரைச் சொன்னது.

திரும்பி  வரும்போது மஞ்சக்கொள்ளையில் பார்த்த மற்றுமொரு பெண் சொன்னது வீட்டுக்காரரோட வேலையினால் ( ஆட்டோ மெக்கானிக்) இந்த ஊருக்கு வந்து ஆறு வருடங்களாகிறதாம். வாடகை குறைவு காய்கள் விலையெல்லாம் குறைவு. பிள்ளைகள் படிப்பது ஓரளவு இங்கே பெயர்வாங்கிய தனியார் பள்ளி ( சார்லஸ்) வேன் வந்து கூட்டிட்டு போகுமாம். இந்த ஊர் செட் ஆயிடுச்சா கேள்விக்கு இல்லை பிடிக்கலையாம். இந்த ஊர் மக்கள் ஒட்டி பழகுகிறவர்கள் இல்லையாம். பழக்க வழக்கங்களும் பிடித்தமானதாக இல்லை.  என்னமாதிரி பழக்கவழக்கமென்றால் புருசன் பொண்டாட்டின்னு கணக்கில்லாமல்  யாரும் யாரோடும் சகஜமாய் வாழ்வார்கள் - என்றது உண்மைதானா தெரியவில்லை. இங்குள்ள மலைக்குடி மக்கள்  எந்த இனம்/ வகையைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு அந்த பெண்ணுக்கு பதில் தெரிந்திருக்கவில்லை.

இந்த ஏலகிரியில் சுற்றுலா தலம் என்கிற ரீதியில் பெரிதாய் ஏதுமில்லை.ஆனால்
 நிறைய பின்தங்கிய, உள்ளடங்கிய கிராமங்கள் இருக்கும்போல. இங்குள்ள நடப்புகளை நிதானமாய் சுற்றி நிறைய தெரிந்துகொள்ள ஆர்வமாய்த்தான் இருக்கு. வாய்ப்பு கிடைக்கட்டும்.

#ஏலகிரி

ஏலகிரி பயணம்
முத்துமுத்தான ஏழு தமிழ் புலவர்கள் பெயர்களும், கடையேழு வள்ளல்களின் பெயர்களும் பதினான்கு கொண்டை ஊசி வளைவுகளுக்கும் பெயராக வைத்திருப்பது தனியழகு.
கூகுளாண்டவரின் உதவியை கொண்டு காட்டி பேகன் பாரி காரி ஓரி ஆய் இவர்களையெல்லாம் பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்ய கிடைத்ததொரு வாய்ப்பு.

பரபரப்பு இல்லாத அமைதியான சூழலில், சுத்தமான காற்றோட்டத்தில் குடும்பத்தோடு நேரம் செலவிட நல்லாவே இருக்கு. சுடும் வெயிலிருக்கு ஆனால் வெக்கையில்லை.

நாங்க தங்கியிருந்த ஸ்டெர்லிங் ஹாலிடேஸ் ரிஸார்ட்டில் உணவும், வசதிகளும்  நலம். எந்நேரமும் ஐ- பேடும் எக்ஸ் பாக்ஸும் ஆன்லைன் கேம்ஸுமாக உட்கார்ந்திருக்கும்  கோச் பொட்டேட்டோ கேர்ள்ஸை வீட்டிலிருந்து பெயர்த்து கொஞ்சம் வெளி விளையாட்டிற்கு திருப்பவும் முடிந்தது.
 தங்ககத்தில் அப்பாவும் மகள்களும் கேரம், செஸ், ஷட்டில் காக், வில் அம்பு எறிதல், ஸ்விம்மிங் என போட்டாபோட்டியோடு சேர்ந்தே நேரம் செலவிட்டமை ப்ளஸ்.

ஆறுமணியோடு ஊரே அடங்கிவிடுகிறது.கோவிலைக் கூட அந்நேரத்திலேயே அடைத்து விடுகிறார்கள்.  மலைரோட்டில் மருந்துக்கும் விளக்கொளி இல்லை. இருட்டோ இருட்டு.

இரண்டாம் நாள் அட்வென்சர் பார்க் திரில் வேலி என சுற்றினோம். பெற்றவர்களுக்கு தான் ஃசேப்டிய நினைச்சு கதிகலங்கும்   போல. ஆனால் குட்டிஸுக்கு பயமேது.  சாகச விளையாட்டுக்களை  ரொம்பவே ரசித்தார்கள். இந்த அட்வென்சர் பார்க் போகும் பாதையே நிஜத்தில் ஒரு அட்வென்சர் தான். மிகக்குறுகலான சாலை. அவ்வளவு பெரிய பெரிய ஏற்ற இறக்கங்களோடு. எதிரே வேறொரு வண்டிவந்தால் ஒதுங்கி நிற்கக் கூட வழியில்லாத பாதை. . பளபளப்பாய் எதோ பெரிய சிவன் சிலையோடு கோவில் தென்படவே அதே காட்டுப் பாதையில் அட்வெண்ட்சர் பார்க் தாண்டி  மேலும் தூரம் போய் பார்த்தோம். வண்டியெல்லாம் செல்லக்கூடிய பாதையே இல்லைபோல அது. மணல் ரோடு அதிலும் மிக சரிவு. திக் திக்கென  இருந்ததால்  அட்வெண்ட்சர் போதும் திருப்புங்க வண்டியன்னு வந்தாச்சு.திரும்பி வந்ததும் தெரிந்துகொண்டது. பிரைவட் ப்ராப்பர்ட்டியாம் அது. மிக பிரம்மாண்டமாய் ஒருவர் அந்த கோயிலை எழுப்பினாராம். பின்ன என்ன காரணமோ ஆறு மாசமாய் கோவில் பூட்டியேதான் கிடக்குதாம். அந்த ஓனர் அதன் பிறகு அந்தபக்கமே வரக்காணோமாம். ( பாவம் சரியா கல்லா கட்டத்தெரியல போல. இந்த ஜோக்கி சத்துகுருவிடம் டியூசனுக்கு போயிருந்தால் பிழைத்திருக்கலாம்ல).

லேக் போகிற ரோட்டில் சுடச்சுட மீன் வறுத்துக்கொடுக்கும் ஒரு அம்மாவின்( பெயர மறந்திட்டேனே) கடையில் நல்ல காரசாரமான நாட்டு கெளுத்தி மீன் சாப்பிட்டேன். ஜோர்

நேர்எதிரே ஒரு கடையில் பெயர் பலகை ஏதுமில்லாமல் உள்ளே வைத்து விற்பனை செய்வது  எதுவென வெளியே தெரியாமல் அட்டை பெட்டிகளுக்கு உள்ளே மட்டும் அடுக்கி வைத்து சரக்கு விற்கிறார்கள். ஆச்சர்யம்.

மலைக்குடி மக்கள் சிலர்
உருமி மாதிரி ஒரு மேளமும், சங்கும், சதங்கை மணியும்  மற்றும்பல பெயர் தெரியாத ஓசை/ இசை எழுப்பும் கருவிகளைக் கொண்டு ஒலியெழுப்பியவாரே தலையில் மஞ்சள் துணிகொண்டு வாய் கட்டப்பட்ட கூடைகளோடு கூடையின் மேல் பெரிய அரிவாளோடு கூட்டமாய் நடந்துகொண்டிருந்தார்கள்.
அவர்கள் குடுப்பத்தில் எவரின் உடல் மீதோ அம்மன் இறங்கிவிட்டதால் ( அம்மை நோய் கண்டதால்) உறவினர் எல்லொரும் அவரவர் வீட்டில் சோறு பொங்கி மஞ்சள் கலந்து உருட்டி சாமி உருண்டைகளாய் பிடித்து பிடித்து நடுவீட்டில் வைத்து படையலிட்டு பின் அம்மன் கோவிலுக்கு வந்து பொங்க வைத்து பன்றி ஆடு கோழிகளை பலி கொடுத்து. கறித்துண்டங்களை உறவுக்கூட்டத்திற்கு பகிர்ந்து கொடுத்து மற்ற சில சாங்கியங்களை செய்த பிறகு ஊர் சாமியாடிகளில் ஒருவரைக்கொண்டு ( அவர்களுக்கு தான் அம்மன் கட்டுப்பட்டு இறங்குமாம்)
  வேப்பிலை முதற்கொண்ட பூஜை செய்த பொருட்களையெல்லாம் ஓட்டத்தில் இருக்கும் நீரில் கரைத்து அம்மையை குளிரச்செய்வார்களாம் - கேட்டுத்தெரிந்து கொண்டது.

திரும்பும் போது வாங்கிவந்த மலை பலா தித்திப்பு
பயணம் சுவை.
Photo

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...