Thursday, March 21, 2019

#கல்யாணத்தின் கதை


காதல் திருமணந்தான்னு  ஜாதகக்கட்டத்திலேயே இருக்கே எனும் ஆருடத்தை பொய்யாக்கி, குலம் கோத்திரம் பதினோறு பொருத்தங்கள் பொருந்த வீட்டு பெரியோர்களால் பார்த்து வைத்த கல்யாணம் என்றும் இல்லாமல் மணமக்கள் இருவரும் தன் துணையை முழுக்க முழுக்க சுயவிருப்பில் தாங்களே தேர்வு செய்தமையே எங்கள் கலயாணக் கதையின் தலையங்கம்.

அதிகப்படியான அலங்கார எதிர்பார்புகளோடு
கல்யாணக் கனவுகளெல்லாம் இருக்கவில்லை.
எந்த ஜாதி மத பேதங்களும் குறுக்கிடாமல், சாஸ்திர சம்பிரதாயங்களில் அமிழ்ந்து போகாமல், நயா பைசா கூட வரதட்சணை எதிர்பாராத மாப்பிள்ளையே வேண்டும் என்பதே என் உறுதிப்பாடாய் இருந்தது.
நீ கேட்கிற மாதிரியெல்லாம் மாப்பிள்ளை வேண்டுமானால் ஆர்டர் கொடுத்து தான் செய்யனுமென நட்பு வட்டத்தில் ஒரே கேலி.

எந்த திணிப்பும் இல்லாமல் எதையும் சுயமுடிவு எடுக்கும்படியே வீட்டில் வளர்ப்பு என்பதால் நானே மாப்பிள்ளை பார்த்துக் கொள்ள தடையேதும் இருக்கவில்லை.
இப்படியாக நண்பர்கள் நாங்கள் எல்லோரும் சேர்ந்து கும்மியடித்த பொழுதொன்றில் நொறுக்குத்தீனிகளோடு ஒரு சினிமாவை ருசித்துவிட்டு,  தி. நகரில் ஒரு பரவ்ஸிங் செண்டரில் அமர்ந்து விளையாட்டுதனமாய் மணமகன் தேவை விளம்பர ப்ரொஃபைல் உருவாக்கினோம். வெறும் விளையாட்டுக்கே. சத்தியமாய் அதற்கு யாரும் ரெஸ்பாண்ட் செய்வார்கள் என நினைத்தோமே இல்லை.

இப்படியாக கேணத்தனமாய் உருவாக்கிய ப்ரொஃபைல் டெல்லியில் இருக்கும் இம்மனிதருக்கு பிடித்துப் போகுமென யார்கண்டா !!. ஆச்சா

 அப்பாவுக்கு முதன்முதலில் தொலைபேசுகையில் " நூறு சதவீதம் உங்கள் பெண்ணை கொடுப்பது உறுதியென்றால் மட்டும் பார்க்க வருகிறேன்.(  இதெப்படி இருக்கு!!  )  வெறும் சம்பிரதாய நிமித்தம் பெண் பார்க்கும் படலம் என்றால் நேர விரயம். விடுப்பெடுத்து ஊருக்கு வருவது வீண். சொல்லுங்கள்" - இது அவர்
அதெப்படி! சந்தைகடைப் பொருளா!
நேரில் பார்த்துப் பேசி பிறகு சொல்றேன்ப்பா - இது நான்

இப்படியாக டிசம்பர் மாதத்தின் ஒரு மேகம் போர்த்திய நாளின் காலை வேலையில்  தான் ஐய்யா பெண் பார்க்க வந்தார். தனியாகத்தான். அதற்கு அவர் காரணமாகச் சொன்னது. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு மாதிரி விருப்பு வெறுப்பு இருக்கும். பந்தத்தில் இணையபோவதும் குடும்பம் நடத்தபோவதும் நானே. என் கல்யாண விஷயத்தில்  தொடக்கமும் முடிவும்  என்னுதே. தேதி குறிக்க எல்லோரையும் அழைத்து வருகிறேன் என்றார்.
எதிரெதிர் இருக்கைகளில் அமர்ந்து ஐந்து நிமிட பொதுப்படை உரையாடலின் போதும் நினைத்தேன் இல்லை இம்மனிதரே எனக்கான மணமகனென. நான் நானென பேசுகிற ஆள் நமக்கு ஒத்துவருவாரா என உள்ளூர யோசனை ஓடியது.
இருந்தும்

கல்யாணத்திற்கு பிறகு மேலே படிப்பதும், வேலை பார்பதும் உங்கள்  விருப்பம் எனவும்
இதுநாள் வரை நான் சேர்த்ததும் செய்வதும் என் சுய உழைப்பில்,
 பெண்ணை மட்டும் கொடுங்கள். பொன்னும் பொருளும் சுயமாய் சம்பாதித்து கொள்ளும் நம்பிக்கையிருக்கு என்று சொல்லக்கேட்ட  வார்த்தை போதுமாயிருந்தது சம்மதம் சொல்ல.

மாப்பிள்ளை உனக்கு தோற்ற பொருத்தமே இல்லை.
இருபது கூட்டல் வயதில் முப்பது கூட்டல் ஆளை மணப்பதா. சம வயதென்றால் தான் ஒரு அந்நியோன்யம் இருக்கும் என்றெல்லாம் சொன்னாள் ரஞ்சனி. அதெல்லாம் ஒரு பொருட்டாய் தோணவே இல்லை. மாறாக
"உன் மருங்கா புத்திக்கும் அடங்காத தனத்துக்கும் மாமியார் வீட்டில் போய் மாத்துபடப் போற பாரு" என என்னை பெத்த ஆத்தா அவ்வப்போது அன்போடு அர்ச்சித்து கொண்டிருப்பதால் இந்த தன்னிச்சையான மனிதரை மணந்தால் அப்படியான சிக்கல்கள் ஏதுமிறாது என்பதே ப்ரதானமாய் தோன்றியது. (இப்ப அதே வாயால் எங்கள் பெரியவளைப் போல பக்குவமும் பொறுமையும் உண்டா எனச் சொல்லவும் கேக்க வாய்பது அனுபவத்தின் முதிர்ச்சியால்)

இடையே என் பக்க நண்பர்களும், அப்பாவின் நண்பர்களும் மாப்பிள்ளையின் ஆதி தொட்டு அந்தம் வரை அலசி நன்மதிப்பு சான்றும் தந்திருந்தார்கள்.

இப்படியாக கல்யாணத் தேதி குறித்து பூ வைத்து உறுதி செய்யவே மாப்பிள்ளை அவரின் பெற்றோர் , உடன்பிறப்பு, மக்களை அழைத்து வந்திருந்தார். திருமணம் மாப்பிள்ளையின் சொந்த  ஊரான நெய்வேலியிலும், வரவேற்பு சென்னையில் என முடிவானது.

அடுத்ததா பொண்ணுக்கு கல்யாணப் பட்டெடுக்கவும் மாப்பிள்ளை தான் மட்டும் தனித்தே வந்தார். என் கல்யாணப் புடவை இப்படித்தான் இருக்கவேண்டும் எனவொரு முன்முடிவோடு இருந்ததால் குமரனில் நுழைந்த பத்தாவது நிமிடத்தில் தேர்வு செய்துவிட்டேன். அரக்கு பார்டர் போட்ட அரை வெளுப்பில் புடவை.

கல்யாணத்துக்கு குறித்த தேதிக்கு நடுவே ஒரு மாதமே இருக்கும் இடைவெளியில் இருவரும் ஆறு தடவைகள் தொலைபேசியிருப்போம்.என்ன பேசினோமெனக் கேட்டால் மருந்துக்கு கூட கிளுகிளுப்பு இல்லை. .

கல்யாணத்திற்கு பிறகு நியூஸ்லாந்தில் குடியுரிமை பெற்று அங்கேயே செட்டில் ஆவது அவர் திட்டமாம். அதற்கான தேர்வுகளுக்கு எப்படியெல்லாம் தயார் செய்யவேண்டும் எதையெல்லாம் படிக்க வேண்டுமென பாடக்குறிப்புகளே. தேவுடா ஏற்கனவே தேர்வுகள் என்றால் அலர்ஜி. கல்யாணத்தை ஒட்டி வரப்போகும் தேர்வு பயமே முந்தித் தெரிந்தது. பூரிப்பு எங்கிருந்து வரும்
போதாக்குறைக்கு இந்த சம்பாஷைனைகளைக் கேட்டு நண்பர்கள் வேறு ஓட்டத்தொடங்கினார்கள். சாமியாரினிக்கு ஏத்த சாமியார்தான் மாப்பிள்ளையென.

நல்லதொரு சுபயோக சுபதினத்தில் நெய்வேலியில் இருவீட்டு உறவினர்களும்  புடைசூழ தாலிகட்டு வைபவம் நடந்தேறியது. மாப்பிள்ளை பக்க உறவினர்கள் எல்லோரும் வெரித்த பார்வையோடு கொஞ்சம் வெறுப்புமாய் ஒரு வேற்றுகிரக வாசியை பார்பது போல நோக்கினார்கள் என்றால் மிகையில்லை.
"நம்ம சாதி சனத்தில சொந்தகாரப் பொண்ணுங்களுக்கா பஞ்சம். சொல்வதை கேக்காம இப்படி வேத்துசாதிப் பொண்ணக் கட்டுதே இந்தப்பய "என்னும் அங்கலாய்ப்பும்
அட இதென்ன தாலிகட்டு புடவையா பொண்ணு வெள்ளை சீலைய உடுத்தியிருக்கு இப்படியுமா ஊரில் இல்லாத வழக்கப்படி ஒரு கல்யாணம்
நடக்குமென புலம்பல்கள் ஒருபக்கம்.

இங்கிருந்து நகரும் வரை எதையும் காதில் வாங்கிக்க வேண்டாமென இவர் காதில் கிசுகிசுக்க சரியென தலையாட்டி வைத்தேன்.
அடுத்த பத்தாவது நிமிடமே இந்த நகை கால் விரலை உறுத்துதென கழட்டிய மெட்டியை இன்னவரை திரும்ப அணிந்ததில்லை.மஞ்சள் கயிற்றில் இருந்து சங்கிலிக்கு மாறிய தாலியை என்றாவதும் எடுத்து மாட்டிக்கொண்டாலும் அல்லாமல் போனாலும் இவர் கண்டுகொள்வதில்லை.

அடுத்த இரண்டே நாளில் டெல்லியில் புதுக்குடித்தனம் தொடங்கியாச்சு. வீடு நுழைந்த முதல் பார்வையிலேயே கணேசன் மேல் கூடுதல் மதிப்பு வந்திருந்தது. அந்நாள் வரை ஒரு பேச்சிலர் வசித்த இடமென்று சொல்வதன் அடையாளமாய் கிஞ்சித்தும் இருக்கவில்லை. அவ்வளவு திருத்தம்.

வீடு நிறைக்க நிறைக்க கண்ணில் பட்டதெல்லாம் புத்தகங்கள். கணவனாக வாய்த்தவர் இஞ்சினியர் மட்டுமல்லாது இலக்கியவாதியும் என்பதே பிற்பாடே தெரியும். பிரமிளும் பிரம்மராஜனும் ருசிக்கவே இல்லை.  அந்த வயதில் அத்தகைய இலக்கிய அறிவு இருந்திருக்கவில்லை   ( இப்ப மட்டும்!!! ) சிறுபத்திரிக்கைகாரர் என்பதால் கட்டுக்கட்டாய் அடுக்கி வைத்திருந்த உள் முகம், மீறல் இதெல்லாம் என் சிற்றறிவுக்கு எட்டவே இல்லை. யாஹூ முகப்பு பக்கத்தில் நான் பத்தி பக்தியால் கிறுக்கி வைத்திருந்த என் எழுத்து ஆர்வம் ஈர்த்ததாக இவரும்,
 உங்கள் வகை எழுத்து எதும் எனக்கு பிடித்தமானதாயில்லை ஒரே வறட்சியென பார்வைகளை பகிர்ந்து கொள்ள முடிந்தது.

மெஸ்ஸில் சாப்பிட்டே பழக்கப்பட்ட மனிதர் அதே பாங்குக்கு திங்கள் தொடங்கி ஞாயிறு வரை என்ன சாம்பார் என்ன காயென ஒரு லிஸ்ட் கொடுத்தார். வெவ்வேறு காய்களோடு தினமும் சாம்பாரா!!! ங்கே என வந்தது. அப்படியானவரை அனைத்து வகை மாமிசங்களையும் சாப்பிடப் பழக்கிய பெருமை எனையே சேரும்.

புதுக்குடித்தனத்தில் அடுப்பு கூட சரியா பற்றவைக்க தெரியாத அரைகுறை சமையல் அறிவில் பதினைந்தே நாளில்  குக்கர் வெடித்துச் சிதறி புதுமனைவியின்
முகமெல்லாம் வெந்து தோலுரிந்த போதும் முகத்தை கண்டு கல்யாணம் கட்டவில்லை எனும்படி  நடந்த விதம் பிடித்திருந்தது.

ஊரில் வீட்டுக்கெல்லாம் சொன்னால் அனாவசிய உளைச்சல். நாமே பார்த்துக்கோவோமென விடுப்பெடுத்து கவனித்துக் கொண்டது பிடித்தது.

என்னை பற்றி யார் என்ன சொன்னாலும். அல்லது உன்னை பற்றி எவர் எதை சொன்னாலும் அடுத்தவர் பேச்சில் வாழாமல் நாம் ஒருவரையொருவர் புரிந்தவர்களாய் இருப்போம். எந்த கருத்துவேறுபாட்டையும் பேசித்தீர்ப்போம் என்றதும் பிடித்தது. இன்றளவும் வண்டி அதே சக்கரத்தில் பிசக்கில்லாமல் ஓடுவது அப்புரிந்துணர்வே.

எந்த விஷயத்தையும் திட்டமிட்டு சரிவரச் செய்வதும், வரவு செலவுக் கணக்குகளை எழுதிவைத்து எதிர்காலத்துக்கு சேமிக்கும் பக்குவமும் பிடித்திருந்தது. இந்த தன்னிச்சையான குணம் தான் கணேசனை முன்னேற்றியது எனலாம். அதே தன்னிச்சையான தனியன் குணத்தில் குறையில்லாமல் இல்லை.

அப்பா நம்மை பார்க்க வரப்போவதாய் தொலைபேசினார் - இது நான்
ஏன் வருகிறார். நான் என் அப்பா அம்மாவையே ஒரு போதும் அழைத்ததில்லை. பார்க்கிறாய் தானே - இது இவர்.

கடந்த பத்துவருடங்களில் பத்து தடவைகளுக்கு குறைவாகவே  பார்த்திருந்த மாமியார் மற்றும் உறவினர்கள் இவரின் ஒட்டுதல் இல்லாத தன்மைக்கு சாட்சி

உன் உறவுகளும் நட்பும் உனக்கும் அதிமுக்கியமானதாய் இருக்கலாம். ஆனா அதை என் வரை கொண்டுவராதே. நான் இப்படித்தான் என்றுவிட்டபின்
சரிதான் . . இல்லை இல்லை என் உறவுகள் எல்லாம் உனக்கும் கட்டாயம் உறவே என வற்புறுத்தி திணித்தல் பழக்கமில்லை என்பதாலும், தன்மானம் மேலோங்கியதாலும் எனைச்சார்ந்த எவரையும் வீட்டுக்கு அழைப்பதே இல்லை நான்.
நானாக எங்கு போவதையும், எதை செய்வதையும் கட்டுறுத்துவதே இல்லை என்பதால் நானும் அப்படியே
 
 பெற்றோர் ,தங்கை வீடுகளுக்கு நானாக போய் பார்பதோடு சரி. மற்ற உறவினர் யார்வீட்டுக்கும் திருமணத்திற்கு பின் போனதே இல்லை. போனால் அவர்களை நம்வீட்டுக்கு அழைக்கும் சிக்கலை தவிர்க்கவே.. ஆனாலும் குழந்தைகளிடம் இந்த தனியன் குணம் ஒட்டிக்கொள்ளாமல் இருக்க அவர்களை பழக்குவதில் கவனமாக இருக்கிறேன். யாரையும் உறவு சொல்லி அழைத்து பேசக் கற்கும் என் பிள்ளைகள் பிற்காலத்தில் அவர்களின் பெற்றோரைப் போல் தன்னிச்சையான முடிவெடுப்பவர்களாய் இருப்பார்கள். அதே சமயம் தனியர்களாய் அல்லாமல்.

சரி போதும் கதை நீள்கிறது.
 இப்படியாக சில மேடுகளைப் பெயர்த்து பள்ளங்களை சமனித்து சமதளத்தில்,
 இருவர் பக்கங்களின் குறைகளையும் நிறைகளால் நிரப்பி இனிதே பயணம்.
அத்தியாயங்கள் தொடரட்டும். அடுத்த பத்துவருடங்கள் கழித்து எழுத வகைதொடுமாறு.

படத்தில் ஒரு பூ நந்திதா, அடுத்தது சம்ரிதா, மடி கணேசனுடையது விரல்கள் எனதே .. feb2015

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...