Saturday, May 11, 2013

வேரிலிருந்து விழும் நிழல்


அம்மாவின் நிழல் பேசி

தந்தை- படித்து பாதியில் மூடிவைக்கும் புத்தகப் பக்கத்தின் அடையாள குறியீடாய் இருப்பவள் தாய்.

தன் நான்கு சுவர்களுக்குள் நகரும் உயிரிகளையே உலகமென்று எண்ணுபவள்.

வெகு ருசி எனும் ஒற்றை வார்த்தைக்குச்செவி குளிர, வலியில் மூட்டு முனகுவதையும்தாங்கி அடுக்களையில் நிற்பவள்.

"அப்பாவை போலவே பொண்ணும் நெருப்புக்கோழி " அங்கலாய்த்தபடியே கை பொறுக்காதசூட்டில் உணவையும் பிசைந்தே தருபவள்.

வெளியே விளையாட போகத் தோன்றாது சோம்பிக்கிடந்த ஒரு மாலைக்கு மறுநாள் மசூதிக்கு அழைத்துப்போய் மந்திரித்து விட்ட பின்பே அமைதி அடைந்தவள் .

அம்மை கண்டபோதும், மஞ்சள் காமாலைக்கு நிறம் வாங்கிய போதும்.. மகளுக்கான பத்திய சமையலையே மொத்த வீட்டுக்கும் என்றாக்கியவள்.

அபூர்வமாய் விடுமுறை நாட்களில் வீட்டோடு தங்கிவிட்ட போதும் .. அதிரும் இசையும், புத்தகமுமாக நேரம் கழிக்கையில்ஆசையாக அருகமர்ந்து பேசத்துடித்தவள்.

"ம்மா, சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லாதம்மா" - முகம் சிடுசிடுக்கையில்..

" எல்லா நாளும் எல்லோரும் வெளியே போய்டறீங்க, நான் தனியே வீட்டில், புதுசா எந்த விஷயத்தை தெரிஞ்சுகிட்டுவந்து பேச" பொட்டில் அறைவதான கேள்வி.

காகிதம் நிறைக்க வேறுவேறு ஸ்டைலில் கையெழுத்து போட்டுக்கொண்டு இருந்தாள்.

- "என்னம்மா இது ?"

- " இல்ல, கொரியர் கொடுக்கிறவன் கையெழுத்துக் கேட்டான், அதான் எப்படி போட்டா நல்லாருக்குன்னு போட்டு பார்க்கிறேன்"

மணமான பின்பு தான் மகளானவளுக்கு தாய் வீடு சொர்க்கம் என்பது விளங்கும் .. என்ன தான் கணவன் தங்கத்தட்டில் வைத்து தாங்கினாலும் ..

தனக்கான பேறுகாலத்துக்குகூட அவள் அத்தனை வலி கண்டிருப்பாளா தெரியாது .. மகளுக்கு நேரம் நெருங்கியதும் படபடப்பில் செய்வதறியாது கண்கலங்கி ஒரு முழு நாளும் மருத்துவமனையில் இங்கும் அங்கும் அலைச்சலில் நீர் அருந்தக் கூட மறந்தவள்..

மகளாய் இருந்தவளும் தாயான பின்பே கேட்கத் தோன்றியது " அம்மா சொல்லு உனக்கு என்ன பிடிக்கும்?"

மடை திறந்து அவள் கொட்டத் தொடங்கிய தருணமே உச்சம் தலையில் உரைத்தது.

தினமும் அலைப்பேசியில்குரல்வழி நிறைந்தாலும்" எப்போ வருவே " அலுக்காமல் இதே கேள்வி.

மகன்களை பெற்றத் தாய் கூடுதலாகக் கொடுத்து வைத்தவள் .. எந்த நேரமும் மகன் வீடே என்ற உரிமையின் சாசனம் இருக்கவே செய்யும்.

மகளைப் பெற்ற தாய், மருமகன் வீட்டில் ஒரு வேளை தங்கவும் தயக்கமே, பொருத்திக்கொள்ள முடியாத சங்கடம் இருக்கும்.

இந்நாட்களில் சின்ன மகள்கள் .. எனக்காகவென சின்ன சின்னதாய் இயன்றதை செய்யும் போது மனம்குறுகவேசெய்கிறது .. இதில் துளியளவு அம்மாவுக்கு என கவனம் வைக்காமல் இருந்ததை நினைத்து. தாய்மையால் அழகாகிறது உலகம்..

அம்மாவைப்போலவே நானும் மகள்களை பெற்றத் தாயாக..

 



வேரிலிருந்து விழும் நிழல் ..

- புவனா கணேஷன்

2 comments:

  1. அம்மாவின் நிழல் இங்கு உன் கதை மூலமாக பேசுகிறது புவன்.... அம்மா என்றாலே தியாகத்தின் மொத்த பிம்பம் தான்.... தன் அன்பை முழுமையாக்கி தான் உண்ணும் கவளத்தை கூட தியாகம் செய்யும் ஒரு அற்புத பிறவி... பெண்ணாய் பிறக்க மாதவம் செய்திடல் வேண்டும்.... பெண்ணாய் பிறந்தால் தாய்மையை பூரணமாய் உணரலாம்... தாய்மையை பூரணமாக பகிரலாம்.... தெய்வத்தின் மொத்த உருவம் தாய்....

    எத்தனை அப்பா சேர்ந்தாலும் ஒரு அம்மா ஆக முடிவது சிரமமே… அம்மாவின் அன்புக்கு முன்னாடி மீதி எல்லாமே அற்பம் தான்….

    ஒரு சின்ன உதாரணம்.. எங்கோ எப்போதோ படித்தது… திருத்த வேண்டிய ஃபைல் எதிரே… குழந்தை தத்தி தத்தி நடந்து வருகிறது… அப்பா சொல்கிறார்.. ஹே குழந்தை வருகிறது ஃபைலை மிதித்து ஃபைல் நாசமாகிடப்போகிறது கவனம்… அம்மா சொல்கிறாள்… அடடா குழந்தை தத்தி வருகிறதே.. ஃபைல் தடுக்கி விழுந்து அடிப்பட்டுவிடும்…

    அம்மா எப்போதுமே எல்லாமாய் விஸ்வரூபமெடுக்கிறாள்… தகப்பனாய், தோழமையாய், தாயாய், ஆசானாய்….

    தாய்மையின் அன்பை உணர நாமும் தாயாகும்போது முடிகிறது…. அம்மாவின் தியாகம் எல்லாம் நான் தாயாகும்போது உணரமுடிந்தது… நமக்கு குழந்தைகள் பிறந்து நாம் குழந்தைகளை பேணி வளர்க்க நாம் செய்யும் தியாகங்களின் போது… பிள்ளைகள் வீடு திரும்ப கொஞ்சம் தாமதம் ஆனாலும் நம் தாய் இப்படித்தானே பதறி இருந்திருப்பாள் நாம் வர தாமதம் ஆகும்போது என்று நினைக்கத்தோணுகிறது…

    புவன் உன் எழுத்துகளில் தாய்மை வாழ்கிறதுப்பா… தாய்மையை உணர தாயாகவேண்டும் என்பது அவசியமில்லை…. அன்னைத்தெரசாவைப்போல மனதில் தாய்மையை நிரப்பி இருந்தாலே போதுமானது…என்பதை உணர்த்துகிறது உன் எழுத்துகளின் வலிமை…

    வேரில் படர்ந்த நிழல்.. தாயிடமிருந்து நமக்கு,, நம்மிடமிருந்து நம் குழந்தைகளுக்கு. நம் குழந்தைகளிடமிருந்து இப்படியாக நம் சந்ததி முழுமைக்கும்…. அன்பை தியாகத்தை கருணையை நல்லவையை ஒழுக்கத்தை மிக அற்புதமாய் படரச்செய்துக்கொண்டே இருக்கிறோம்….

    ஒவ்வொரு வரியுமே வைரமான உறுதியான தாய்மையை போற்றும் வரிகள்…

    தாயின் அன்பை, அதன் பூரணத்துவத்தை, மகத்துவத்தை, வலிமையை இயல்பாய் சொல்லிச்சென்ற வரிகள் புவன்…

    கதையில்லை இது… உலகில் உள்ள ஒவ்வொரு தாயின் மனம்…. அதை அற்புதமாக பகிர்ந்த விதம் சிறப்பு புவன்…

    ReplyDelete
  2. தூய்மைக்கு இன்னொரு பெயர் தாய்மை. அந்த
    தாய் மடியின் அன்பில் இன்பம் கண்டவர் உண்டவர்
    சொல்வது...
    அது .
    சுவர்க்கம்.

    அழகான பதிவு. வாழ்த்துக்கள்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com

    ReplyDelete

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...