Sunday, June 8, 2014

கீச்சுக்கதைகள்


விமான நிலையத்திலிருந்து   உடமைகளை தள்ளியபடி வெளியே வரும் பொழுதே கொத்துகொத்தாய் வரவேற்கவும் வழியனுப்பவும் குவிந்திருக்கும் மக்கள். 

உறவோ நட்போ இப்படி வெளியே வரும்பொழுது யாரேனும் நமக்காக காத்திருப்பார்கள் உணர்வும் ஒரு சுகம். அப்படியே கண்களால் துளாவி, கண்டுகொண்டதும் மகிழுந்து.. துள்ளும் மனதோடு கையை உயர்த்தி அசைத்து அருகே போனதும் கண்கள் மின்ன கதைக்க தொடங்குவது .. நினைத்தாலே இனிக்கத்தான் செய்கிறது. இருந்தென்ன, 
நொடிக்குள் நூறு மைல் கணக்கை தாண்டும் கற்பனைக்குள் வெகு நேரம் பயணிக்க முடியாது. நிதர்சனம் கண்முன் முட்டி நிற்கும். பிறகு சொல்லும்.. விரையுங்கள் ஃபிரீபேய்ட் டாக்ஸி ஒன்றை அமர்த்தி நம் லக்கேஜுகளோடு நமக்கு நாமே " சென்னை நம்மை இனிதே?!!! வரவேற்கிறதென" சொல்லிக்கொண்டு இருப்பிடம் நோக்கி நகர்வோமென.. 

 "புது ப்ரிட்ஜ் போட்டிருக்கும் சாலையை  பிடித்தால் சள்ளுனு போய்டலாம் சார்.. ரோட் பக்காவா இருக்கும். அடியடின்னு அடிச்சு ஓய்ந்திருக்கும் மழை, மற்ற வழியென்றால் எப்படி இருக்குமோ" எனும் டிரைவர் ஆலோசனைக்கு அப்படியே ஆகட்டுமென்றாகிவிட்டது. அந்த சாலையில் கடைகள் எதுவும் இல்லாமல் போனதில் இரவு எட்டுமணி தானே, போகிற வழியில் இரவு உணவை வாங்கிக் கொள்வோம் நினைப்பில் மண். பிள்ளைகள் இருவரும் பயணத்தில் பார்த்த டின்டின்னிலும் டாய்ஸ் ஸ்டோரியிலும் அமிழ்ந்து கிடக்க, கணவர் ட்ரைவரோடு நடப்பு அரசியல் பேசிகொண்டிருக்க நான் மட்டும் வழமை போல் வெளியே வேடிக்கை. 
குளித்த பிறகு சிகைநுனியிலிருந்து நீர்சொட்டச் சிலும்பி சிலிர்த்தலின் உணர்வை தந்தது.     மழையில் குளித்திருந்த  புத்தம்புது மெருகில் இரவை கிழிக்கும் செயற்கை வெளிச்சத்தில் ஒளிர்ந்த  சாலை.. 
எந்த ஊறோடுமில்லாத ஒட்டுதல் பந்தம் சென்னையோடு எப்போதுமிருக்கிறது. நினைவு தெளிந்த நாளிலிருந்து, பிறந்த குழந்தை கண்முன் சிறுகச்சிறுக வளர்வதை பார்திருந்ததை போல் பார்த்த இடமென்பதாலோ அன்றி முழுக்கமுழுக்க தான் வளர்ந்த இடத்தோடு தான் மனம் உரிமையாடும் என்பதாலோ. எங்கே போயிருந்தாலும் சென்னை திரும்பும் போது இது நம்ம இடம் உணர்வு ஒட்டிக்கொள்ளும். 

இதோ இன்னும் இரண்டே நிமிடத்தில் வீட்டை தொட்டுவிடலாம் நிலையில் தெருமுனையிலிருந்தே கார்போக வழியில்லையில்லாத நிலையில் விழுந்தது அடுத்த மண். ஆமாம் மண்ணே தான். 
மழை எனும் போதே தெருவின் நீர்தேக்கத்தை எதிர்பார்த்தது தான் என்றாலும் சற்றும் எதிர்பாராத மற்றொரு சிக்கல். எதோ வேலை நடக்கிறது போலும்
தெருவை அகழ்ந்து ஆங்காங்கே பள்ளமும் குவியலாய் மணலும்..மண் என்றால் சும்மா இல்லை அப்படியொரு களிமண். இதற்கு மேல் டாக்ஸி நகரமுடியாதெனும் நிலையில் லக்கேஜ்களை வீடு வரை சேர்க்க உதவுகிறேன் சார் என்றார் டிரைவர். ஆனாலும் அது அத்தனை சுலபமாய் இருக்கவில்லை. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அப்படியொரு சறுக்கல். இருகுழந்தைகளோடும், சுமையோடும் சும்மா ஒரு ஐம்பதடியை தாண்ட நேர்ந்த நிலை சொற்களில் வடிவேறாது. 
தேடும் கண்பாவை பாட்டில் வருமே புதைகுழி..  அப்படி கால் வைத்தால் ஆழம் வரை போய் பெரியவளின் ஒற்றை கால் செருப்பு உள்ளே மாட்டிக்கொண்டது. பின்தான் நிதானித்து மணல் பகுதியில் கால்வைக்காமல் நீரில் இறங்கி நடந்தால் கடந்துவிடலாம் யோசனை வந்தது.. முடிந்தவரை ஜீன்ஸை மடித்து மேலேற்றி இரு குழந்தைகளையும் அழுந்த பற்றிக்கொண்டு சகதி குழம்பிய நீரில் கால் வைத்து நடக்கும் போதுதானா அநியாயத்துக்கு, எதேதோ விஷபூச்சிகளும் ஊர்வனவும்  நினைவுக்கு ஏறவேண்டும்!
 மழையின் காதலி எனினும் சதுப்பு நில வாசி எனில் ககதியோடு உறவவும் பழகிக்கொள்ள வேண்டும்.அந்த நிலைதான்.

அதிகமில்லை இருபது நிமிட முயற்சியில்  அபார்ட்மெண்ட் மெயின் கேட்டை அடைந்தாயிற்று. ஆனாலும் என்ன சொல்ல, இந்த காலத்தில் ஒரு தனிமனிதனின் சுயசம்பாத்தியத்தில் சொந்த வீடு அதிலும் ஆயிரத்தி இருநூறு சதுரடி இடபிடிப்பில் மூன்று படுக்கையறைகளோடு சென்னை மாதிரி மெட்ரோ நகரத்தில் வீடெனில் நகரத்தின் மையத்திலா முடியும்.. இப்படி அவ்ட்டர் ஏரியாவில் சிலபல சங்கடங்களை பொறுத்துக்கொள்ளவே வேண்டும். 

அப்பார்மெண்ட்டில் இரவு காவலர் இல்லை. காலை ஆறிலிருந்து மாலை ஆறு வரை பகல் நேரத்துக்கு மட்டும் ஒரு காவலாளி உண்டு. அந்த மனிதருக்கு தரும் சம்பளம், ட்ரைனேஜ் வசதியும், குடிநீர் வசதியும் எட்டாத பகுதி என்பதால் லாரி சர்வீஸுக்குமே மெயிண்டனஸ் தொகை கண்ணை கட்டுகிறது. இதற்கு வாடகை வீடே மேலென குடியிருப்பு வாசிகள் அபிப்பிராயப் பட்டத்தில் எப்படியும் இரவில் உறங்கும் நேரத்துக்கு காவலாளி எதற்கு!  அவரவர் பாதுகாப்பிற்க்கு அவரவரே பொறுப்பென முடிவு செய்திருந்தார்கள். 

நல்லவேளையாக பார்க்கிங் ஏரியாவில் செடிகளுக்கு நீர்விட ஒரு குழாய் வசதி உண்டு.. சகதி போக நீர்விட்டு கழுவ முடிந்தது.. கடல் நீருக்கு நேரடி கனெக்ஷன் எடுத்தது போல உப்பு நீர் அது. உடம்பில் பட்டால் பிசுபிசுப்புக்கு உத்தரவாதம். அந்த நிலத்தடி நீர் வேலைக்கு ஆகாதென்பதால் சகலத்துக்கு விலைக்கு வாங்கும் தண்ணீரே.. 

பெட்டிகளை லிப்டில் ஏற்றி  தளத்தை அடைந்து வீட்டுக்கதவை தாழ்திறவும் போது,  அப்பாடி சேர்ந்தோம்.. இனி குளித்து வேறு உடுத்திக்கொண்டுவிடலாம்.. மனதில் நிம்மதி பரவியது. 

திறந்ததும் "பொறுங்கள், முழுக்க அடைத்திருந்த வீடு, வெளிக்காற்று உள் நுழையட்டும். கொஞ்சம் பொருத்து போவோம் என்றார் இவர். இத்தனை அரவத்திற்க்கும் வந்து சேர்ந்த நிமிடத்தில் இருந்து ஒருவரைக்கூட வெளியே பார்க்க முடியவில்லை. எல்லா கதவுகளும் அடைத்தே இருந்தது. 

இதோ வருகிறேனோடு படிக்கட்டிகளில் இறங்கிப் போனார் இவர். எங்கே என்பது மூவருக்குமே தெரியும். பெட்டிகளை சுமந்து சகதி நீரில் அலைந்த எரிச்சலை புகைவிட்டு ஆற்றவே.. 
"பார்மா, அப்பா சிகரெட் பிடிக்கிறார்.. நீ கேக்கவே மாடேங்கிற, திட்றதே இல்ல, அதான் அப்பா இப்படி செய்யறார்" பிள்ளைகள் குறைவாசிப்பார்கள் தான். 
அதான் நீங்க இரண்டு பேரும் இருக்கீங்களே வளர்ந்த பிள்ளைகள், நல்லா மிரட்டி வையுங்க, அப்பா பயந்து பிடிக்க மாட்டார் பதில் தருவேன். 
நானாக ஒருநாளும் கேட்டதில்லை என்பதன் காரணத்தை எதில் சேர்ப்பது. அடித்து திட்டி திருத்துகிற வயதை கடந்தவர்கள், தான் செய்வது நலமில்லையென தெரிந்தே செய்பவர்களை என்ன சொல்வது. 

மனைவியானவள் தன் உரிமையின் பெயரில் இதைச் செய்யாதே அடக்குமுறை புள்ளியிடலாம். ஆனால் கணவனானவன் முழுமனதோடு இயைந்து ஒப்புவான் எனச்சொல்லுவதற்கில்லை. முரண்டுதல், மீறுதல் அல்லது மறைத்து செய்யுதலுக்கு கோலமிடுமே தவிர மாறாது என்பதென் எண்ணம். அவரவர் இயல்புகளோடும் பிடித்தங்களோடும் இருக்க விடுவதே சுமூக உறவின் நிலைப்படுதல் என்பதும்.

சரி இனி வீடு நுழையும் கதைக்கு போவோம். ஒருவழியாக புகைத்து முடித்து மேலே வந்ததும் உள்ளே போய் போர்டை திறந்து மெயின் ஸ்விட்ச்சை முடுக்கிய பின்பும் விடாது கறுப்பாக இருள் விலகவே இல்லை. "கீழேயும் ஆன் பண்ணியாச்சு, என்னதிது" குழப்பத்தில் நெற்றி சுருக்கி யோசித்தவர் மீண்டும் கீழே போய் பார்த்த பிறகே தெரிந்தது. பீயூஸ் கட்டைகள் பிடுங்கபட்டிருப்பதை. " கரண்ட் பில்லை ஆன்லைனில் கட்டினேனே ஒருவேளை கடைசி பில்லை கவனிக்கலையோ" மனிதர் தனக்குள் புலம்பினார். "அம்மா கால் வலிக்குது, தூக்கம் வருது" பிள்ளைகள் தொடங்கிவிட்டார்கள். 
"பொறுங்க, பக்கத்து வீட்டில் அவசரத்துக்கு மெழுகுவர்த்தியும், வத்திபெட்டியும் வாங்கிக்கொள்ளாலாம். மற்றதை பார்ப்போம்"  என்றேன் நான்.

அடுத்த வீட்டின் அழைப்புமணியழுத்தி காத்திருந்த பின் ஒரு அம்மா  பாதிமுகம் வெளியே தெரியும் படி, கொஞ்சமாய் கதவை திறந்து என்ன என்பதுபோல் பார்த்தார். ஒரு அடிப்படை அறிமுகம் கூட இல்லாமல் திடுமென மெழுகுவர்த்தியை எப்படி கேட்பதில் நிதானித்து சற்றே நகைமுகைத்தோடு தொடங்கினேன். "ஹல்லோ, நாங்கதான் பக்கத்துவீட்டுக்காரங்க" வரியை முடிப்பதற்குள் மூக்கு கண்ணாடி வழியே இடுங்கிய கண்களோடு பார்த்துகொண்டிருந்த அந்தம்மா "அவங்க இங்கில்லை" பதிலோடு பட்டென கதவையும் அடைத்து விட்டார். 
சரியான தமிழில் தெளிவாத்தானே சொன்னேன் ஏன் புரியவில்லை .. இப்ப புலம்பல் என் பங்குக்கு. 
" சரி விடு, பரவாயில்லை நான் பைக்கை எடுத்து போய், கரெண்டுக்கு எதும் வழியிருக்கான்னு பார்த்திட்டு, சாப்பிட எதாவதும் வாங்கியும் வருகிறேன்" நடக்கத்தான் சிரமம் பைகெனில் சமாளித்துவிடலாம் என  கிளம்பினார். 
மரக்கதவை திறந்தே வைத்து கிரில் கதவை மட்டும் வெளியே பூட்டிவிட்டு மூவரும் மொட்டைமாடிக்கு போனோம். 
திறந்தவெளி சுகம், அதிலும் உயரம் கூடிய கட்டிடத்தின் உச்சியின் பரந்திருக்கும் திறந்தவெளி..  
மழையடித்து விட்டிருந்த  குளிர்மை, மிதப்பான காற்றோடு அலாதியான சூழல். அடுத்த ஒரு மணி நேரத்தில் இவர் வந்துவிட்டார். சகதியடித்த சேதாரத்தோடு தான். 

பூட்டியிருக்கும் வீட்டுக்கு குறைந்த கட்டணத்தொகையே அதை கட்டாத மறதிக்கு பியூஸ் பிடுங்கிய புண்ணியவான்கள் காலையில் கட்டிவிடலாம் இப்ப ஒரு தொகையை வாங்கிகொண்டு கட்டைகளை தரும்படி கேட்டாராம.. முடியவே முடியாது காலையில் வந்து பாருங்கள் என்றுவிட்டான் என்றார்.. மின்சார வாரியத்தில் வேலை பார்பவர்களுக்கு  என்னவொரு பொறுப்புணர்வென வியந்து வைக்க வேண்டியிருந்தது. 

மெழுகுவர்த்திகளை வாங்கி வந்திருந்தார் என்றாலும் பொட்டலத்தை பிரித்து மொட்டைமாடியிலேயே உண்பதென முடிவாகியது. 
இதுவும் ஒரு வகை தனி அனுபவமே.. 
கரண்டோ, மெழுகுவர்த்தியோ கிடைத்திருந்தால் இப்படி நிலா வெளிச்சத்தில், குளிர்மையின் ரம்மியத்தில் இரவுணவு வாய்திருக்காது.

  இந்த காற்றுக்கு இங்கேயே உறங்கிவிடலாம் ஆலோசனைக்கு இவர் பாதுகாப்பில்லை,  வேண்டாமென்று விட்டார்..   
மெழுகுவர்த்தி வெளிச்சத்தோடு பிள்ளைகளின் அறையோடு ஒட்டிய பாத் ரூமை முதலில் திறந்த பெரியவள்  அலறிவிட்டாள். உள்ளே எதோ இருக்கு, திறந்ததும் பயங்கர சத்தமென்றாள் அழுகையோடு.  திறந்து பார்த்தால், அதை என்ன சொல்வது.. புறாக்கள்  மூடி வைத்திருக்கும் இந்த வீட்டை வாகாய் தேர்ந்தெடுத்து தன் ஜாகையை அமைத்து கொண்டிருந்தது. 

பால்கனியிலும், எக்ஸாஸிட் ஃபேனுக்குரிய துளைவழியே வந்து பல்கிபெருகிய தன் குடும்பத்தோடு.. இரு படுக்கையறைகளோடு ஒட்டிய பாத் ரூமிலும்.. மூன்றாவது மட்டும் கட்டிடத்தின் உள்ளடங்கிய பகுதியில் இருப்பதால் நிலை தப்பியது. இல்லாவிடில் பயன்பாட்டிற்கு இல்லாமல், கரெண்டும் இல்லாமல் இங்கிருந்து வெளியேறவும் வழியில்லாமல் .. 

 பிள்ளைகளுக்கும் உடம்பு கழுவி
புது விரிப்போடு படுக்கையை மட்டும் சுத்தம் செய்து, ஜன்னல் கதவுகளை விரியத் திறந்து படுத்தாயிற்று. காற்றில்லை என்ற போதிலும் ஈரபதத்தால் வெந்து புழுங்கவில்லை. பிள்ளைகள் உடனே உறங்கியும் விட்டார்கள். 
ஆனால் உறங்கும் பிள்ளைகள் முகம், கை, கால்  மேல் மொய்மொயென கொசுக்கள். வெளிகாற்று உள் நுழைந்த பின் நாம் நுழைவோமென கதவை திறந்து காத்திருந்த நிமிடங்களில் உள்ளே வந்துவிட்டிருந்த அழையா விருந்தாளிகள். ஜீனியர் விகடன் புத்தகம் வாசிக்க எப்படியோ ஆனால் விசிற ஏதுவாயிருந்தது. கொசுக்களை விரட்டவும் தான்..  என்ன கைதான் வலி கண்டது. 
உறங்கியும் உறங்காமலும் மறுநாள் விடிந்தெழுந்ததும் தலைக்கு மேல்   வேலைகள்
முதல் வேலையாய் பில்லைகட்டி கட்டைகளை கொண்டுவந்தார்.
வீட்டை சுத்தம் செய்ய ஆள் கிடைப்பது குதிரைக் கொம்பாயிருந்தது.  வாட்ச்மேன் அனுப்பி இரு பெண்கள் வந்தார்கள் சுத்தம் செய்ய .. "ஹைய்யோ பாத் ரூமெல்லாம் நாங்க செய்வதில்லை வீடு வரை சுத்தம் செய்யமுடியும், அவ்வளவுதான்." என்ற பின் என்ன செய்வது, வேறு வழி.. புறாக்கள் அசுத்தம் செய்திருந்த குளியலறைகளையும் பால்கனியையும் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு அடித்து கழுவி இவர் தான் சுத்தம் செய்தார். பிள்ளைகளுக்கு வெளி கேட்டை சுத்தம் செய்ய பணித்திருந்தேன்.பெரியவள் ஒரு ஸ்டூலை போட்டு மேல்பாதியையும் சின்னவள் கைக்கு எட்டியவரை கீழ்பாதியையும். 
படி வழியே ஏறப்போன, நேற்று பாதி திறந்து பார்த்த அம்மா பிள்ளைகளை கண்டதும் நின்று குரல் கொடுத்தார். அடுக்களை சுத்தம் செய்து சமையல் பாத்திரங்களை இறக்கி கொண்டிருந்த நான் எட்டிப்பார்த்தேன். 
"ஹைய்யோ மன்னிச்சிடுங்க, நீங்க தான் வந்தீங்களா?நான் உங்கள பார்த்தில்லையா, யாரோ உங்க வீட்டிக்கு தேடி வந்திருக்காங்கன்னு குழம்பிடேன்" என்றார். 
"பரவாயில்லையே, பிள்ளைகள் வேலை எல்லாம் செய்யறாங்களே" இத்யாதி இத்யாதியில் கொஞ்ச நேரம் பேசிவிட்டு நகர்ந்தார். நல்ல அம்மையார்தான் பாவம் பயந்திருப்பார் போலும். 

மொத்த வீட்டையும் தூசி தட்டி துடைத்து நிமிர்த்தி, கட்டி மேலே போட்டிருந்த சமையல் பாத்திரங்களை இறக்கி கழுவி,  மளிகை லிஸ்ட் எழுதி, பொருட்களை வாங்கி சமையலுக்கு அடுப்பில் ஏற்ற தொடங்கிய போது ஹைய்யோடா என்றிருந்தது. 
பிள்ளைகளின் விடுமுறையை கழிக்கவென அங்கிருந்து இங்கே வந்து அதேயே செய்துகொண்டிருக்கும் அலுப்பின் முகம்.
 ஆனாலுமென்ன
இக்கரைக்கு அக்கரை பச்சையோ நீலமோ 
கறுப்பு வெள்ளை கனவுகளை காட்டிலும் 
காட்சிக்கு படாத கற்பனையைவிடவும் 
நிஜத்தில் அடர்ந்திருக்கும் நிறங்கள், அனுபவ தீட்டல்கள் ..  அழகானவையே.


Sunday, June 1, 2014

சதுப்பு நிலச் சொற்கள்



சற்றே சமிக்ஞை மொழியில் 
இளைப்பாறட்டும்
 நானின் நிழல் முகிழ
 உவந்தணைத்த நிலா நேரம் 

உப்பு நிலமகழ்ந்து  
முட்டையிடும் 
அந்நேரத்தின் 
ஆமை வேகத்தை பேசுபொருளாக்கலாம்

கறுப்புக்கட்டங்களை விழுங்கும்
 வெள்ளைக் காய்களின்
விளையாட்டு மீறல் விதிக்கு 
பழகுவதாயிருக்கலாம்

பொதியாய் எங்கோ
 அடிமாடுகள் கடத்துமொரு
நகர்வை நெருங்கிபார்த்துமிருக்கலாம் 
அல்லாமல் 
சுள்ளிப் பொறுக்குகளை 
சுருளப் 
பொரிபறக்க ருசிக்கும் 
தீ நாவெனக் 
கலவித்தவரிகளின் வாசிப்பிலிருக்கலாம்

எது எப்படியோ
கொதி நீரின் 
குமிழிகள் உடையும் 
கதையின் 
மூடாதபாத்திரத்தை
சுமப்பவர் ஆகலாம் 
அடுத்த இரவின் 
கதுப்பிலும் 

மூடியிலாத சீசாவில் திரவ நிலையில் இதயம்

 


கிளைமாற்றி கிளைமாற்றி
காத்திருந்த கனவுகளின் இறக்கைகளை
சுலபமாய்ப்பிய்த்தெரியும் அவனில்
குரூரமுமில்லை காதலுமில்லையெனும்
கைமாற்றும் கசாப்புக்கணக்கில்
எதைக்கொண்டு எதையளப்பது

இல்லாததற்கெல்லாம்
இருப்பின்சாயலைத் தோய்த்து 
நீர்க்காதவண்ணம்
எவ்விதங் காப்பது

இன்னும் இன்னும்
கேள்வித்த பொழுதுகளெல்லாம்
நுரைக்குமிழியின் நிறையில்
தன்னிலை வட்டத்தில்

நெய்தலின் தையல்


தீண்டுகையின் 
காற்றில் 
உப்பு பூத்த 
குறுஞ்செய்திக்கெனவே 
கண்பொழிந்திருந்தாள் .. 
தீருகையற்ற 
முத்தங்களோடு 
தொடுதிரையில்  
திமிர்ந்து தேயும் 
நிலாக்களை வளர்ப்பவள் 

கண்ணெட்டிய தூரம் வரை 
கடலள்ளி வைத்த 
கரிக்கும் 
கரைததும்பும்
நீலம்பாரித்த 
பிரிவின் கண்துளையும்
அத்தனை அவசரத்திலும்
சந்திப்பின் இருப்பை 
அடுத்த பிரிவு வரை 
ஒத்திப்போடவே
மழைச்சொல்லாடுகிறாள் 

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...