Thursday, March 21, 2019

MAY - 2017 KODAI TRIP

கனாக்காணும் காலத்தில் என் பள்ளி கல்லூரி இருந்த போதும் நிறைய ஊர் சுற்றியிருக்கிறேன். ஆனால் அதெல்லாம் அப்பா அம்மாவோடு.
கன்ச்சு வந்தபின் அவரின் வேலைசுமையால்
 பெரும்பாலும் என் பயணம் தனியே தான் இருக்கும். தனியே என்றால் தனியே இல்லை. தலைக்கு மேல் இழுத்துச் சுமக்கும் பொறுப்புகளோடு குட்டீஸை பத்திரமாய் கூட்டிப்போய் வருகிற கவனக்குவிப்போடுமேயிருக்கும்.
இம்முறை இது தனி. தனி என்றால் தனியே தான்.
முற்றிலும் புத்தம்புதிய  சூழல் அதுவரை பார்த்தறியாத புதுமனிதர்களையும் காட்டிய எனக்கே எனக்கானதொரு பயணம்.

சுகிர்தாவை இப்பதான் முதல்முறை நேரில் பார்க்கிறேனென என்னாலயே நம்பமுடியவில்லை. எங்கு எங்கோ இருந்தும் அதிகம் பேசிக்கொண்டுமில்லாமலேயே இத்தனை அடர்வு தோழமையில். எடுத்த எடுப்பில் ஒருமையில் பேசித்திரிய முடிகிற நட்பு  வாய்ப்பது சுகம்.

 பேசியில் நெட்வொர்க்கும் இணையமும் இல்லாதுபோன தொடர்பு எல்லைக்கு அப்பால்  எவ்வளவு அழகான உலகம்  விரிந்திருக்கிறதென இந்த பயணத்தில் பிரம்மிப்போடும் பெரும் உவகையோடும்
தெரிந்துகொண்டதை வார்த்தைகளைக் கொண்டு சொல்லவே இயலவில்லை. ஆனாலும்  சொல்லியே ஆக வேண்டும்.

இந்த மையம் அது அமைந்திருக்கும் இடம் அதன் குளிர்மை அமைதி அது தந்த மனநிறைவு முக்கியமாய்
 மலைக்காட்டிற்கே உரியதொரு திமிர்ந்த அழகு. மொத்தமாய் கண்களில் அள்ளிக்கொள்ள தங்கியிருந்த மூன்று நாட்கள் போதவே இல்லை. உரைக்காத வெயிலும் கூடவே சில்லிப்பும் எப்போது வேண்டுமானாலும் முகாந்தரமே இல்லாமல்   துளிர்ந்த தூரல் மழையும் இன்னும் இன்னும் போதாமையை கூட்டிக்கொண்டே இருந்ததே தவிர திகட்டலே இல்லையே.

இந்த மூன்று நாட்களுக்கு முந்தைய நாளில் தங்கியிருந்த கொடைக்கானல் மலை என்னை பெரிதும் ஈர்க்கவில்லை.ப்ப்பா சீசன் நேரம் வேறா! கால்வாசி ஜனத்தொகை இங்குதான் இருக்கும் போல. அப்படியொரு கூட்டம் நசநசப்பு  வெக்கை ட்ராபிக் நிற்க நகர இடமில்லாத அளவு. கோக்கர்ஸ் வாக் பக்கமெல்லாம் டிக்கட் வாங்கிக்கொண்டு  உள்ளே நுழையும் மக்கள் இடப்புறம் விரிந்திருக்கும் இயற்கையை நிதானமாய்  காணக்காணோம். வலப்புறம் பரப்பபட்டிருக்கும் கடைகளில் குவிந்து
வியாபார பேரத்தில் மும்முரமாய் இருந்ததை பார்க்க முடிந்தது. லேக் பக்கம் அரைமணிக்கு ஐம்பது ரூபாய்க்கு வாடகை சைக்கிள் எடுத்து சுற்றலாம் ஆனால் எங்கே!! மனிதக்கூட்டத்திற்கு இடையே நடையே பெரிய விசயம்.

மேக் மை ட்ரிப்பில் ரிவ்யூ பார்த்து இது தேறுமென தோன்றிய  பின் தான் தங்கும் அறை புக் செய்த்திருந்தேன். Valley view inn hotel. பெண்கள் மட்டும் தங்க ஏதுவாய் சிக்கலில்லாமல் தான் இருந்தது.ஆனால்
கொடுத்த காசுக்கு அறைவசதிகள் மட்டம். போகட்டும்.

மறுநாள் கிளம்பி ஜென் மையத்திற்கு போன நொடியில் இருந்து அங்கிருந்து கிளம்பின நிமிடம் வரை மறக்கவே முடியாதது.
 இந்தியன், ஈரோப்பியன், திபேத்தியனென யாருக்கும் யாரோடும் எந்த பேதமும் பாகுபாடும் இல்லாமல் மனிதம் என்ற நிறம் மட்டுமே தெரிந்த இடம்.   சுகிர்தாவை  சுகியின் இலகுவாக பழகும் நண்பர்கள் எனக்கும் நண்பர்களானதையும் நால்வருமாய் மலைக்காடெல்லாம் கணக்கில்லாமல் சுற்றிவந்ததையும் என்ன சொல்ல.

சுகியின் நண்பனுக்கு அங்கே சுற்றுவட்டார மலைக்காடுகளின் இண்டு இடுக்குகலெல்லாம் தெரிந்திருக்கிறது. காலை பசியாறலுக்கு பின் ட்ரெக்கிங் கிளம்பினோம்.
 எதிரே..
 இரோம் சர்மிளா இலகு நடை முடித்து  ஒரு பெரியவரோடு வந்துகொண்டிருந்தார்.

காட்சிப்பிரதியாய் தன்னை மற்றவர்கள் பார்ப்பதை அவர் ஒருபோதும்  விரும்புவதில்லையென சுகிர்தா சொன்னதால் மலர்ந்த புன்னகையையும் கைகுவித்த வணக்கத்தையும் அவ்விருவரையும் போலவே பதிலாகத் தந்து நாங்களும் எங்கள் பாதையில் பயணமானோம்.

 ட்ரெக்கிங் இது எனக்கு முதல் அனுபவம். நாளொன்றுக்கு ஒன்பது கிலோமீட்டர் கணக்கிற்கு ஏறி இறங்கியிருந்தாலும் களைப்போ சோர்வோ துளியும் எட்டவில்லை.  எங்களைத்தவிர வேறு ஆள் நடமாட்டமே இல்லாத, அட்டைப்பூச்சிகளும் காட்டுப்பன்றிகளும் தாக்கக்கூடிய அபாயமிருந்தும் கொஞ்சமும் திகில் எழாமல் ஆர்வத்தோடு  காட்டுப்பாதையில் ஏற முடிந்தது.மலை உச்சியை எட்டிய போது ஹப்ப்ப்பா ரம்யம்.  உள்ளே பொங்கிப்பூரித்த பிரம்மிப்பு.  உடலும் மனதும் பஞ்சு போல் இலகுவாயிருந்தாலோ என்னவோ அன்றைய நாளின் தியான நேரம் அவ்வளவு பிரமாதமானதாய் இருந்தது.
இப்படியெல்லாம் ஏறி இறங்குகிற அலைந்து திரிகிற  தெம்பு இன்னும் கொஞ்சம் வயதேறும் காலத்தில் இல்லாமலே போகும். அதற்குள் இந்த அனுபவங்களையெல்லாம் அள்ளிக்கொண்டு பொத்திவைக்க வேண்டும்.  - #ஆனந்தம்
Photo

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...