Wednesday, September 18, 2013

நிறமற்றதன் அடர்த்தி



என் வட்டங்களைச் சுருட்டி
சதுரச் சுவர்களில் அறைந்தவனவன்
ஆதாமுக்குரிய ஆப்பிளில்
ஒரு துளி விஷமாய் இருந்திருக்கலாம்

உடைத்தெறிந்த நிலாத் துண்டங்களோடு
உப்பு நீரில் மிதக்கத்  தொடங்கியது
எனக்கான நிறம்

கடைசி அலை
கால்களைக் கடத்துவதாய்
கண்களைக் கவ்வும் உறக்கத்தில்
அமிழ்ந்து போகும் முன்
கிளிமீனின் ஒப்பனை நிறத்தில்
ஒளிந்தவளானேன்

சதையறுந்து
செதில்கள் சிதற
தொண்டையில் முள் சிக்கியவனின்
கண்களில் நீந்துகிறது அம்மீன் 

-புவனம்

 

Wednesday, September 11, 2013

அவள் என்பதன் நிச்சலனம்



அறைந்து சாற்றியப்பின்
கதவின் முதுகில்
தழும்பு ஏற
உள்ளொன்று வைத்ததன்
புறம்பேசிகள்

உறவெச்சங்கள் உமிழ்ந்த
புள்ளிகளில்
கோடுகளைக் கீய்ச்சியே
வாசலை நிரப்ப

அவசரகதியில்
அருந்தியதுப்  போக
ஆடைத் தேம்பிய
தேநீரில்
ருசித்தே மிதக்கிறது
சிற்றெறும்பு

செலவில் சேமித்த காசிலும்
விடிவிளக்கு வெளிச்சத்தில்
வந்து போனவனின்
வாசனை

பெயரணிந்த பிம்பங்களை
அவள் சுமப்பாள் என்பதன்
காலக்கோல்
காளான் முளைக்க
உதிர்வதாய்  மேகங்கள்
 
- புவனம் 

உறக்கத்தை தைக்கும் கனவின் கூர்

 
 
நீரில்
நட்டுவைத்த வார்த்தைகள்
ஒவ்வொன்றும் பூப்பெய்த

நீளாத கைக்குள்ளும்
பிணைந்தே கிடக்கும்...
வேர்க்கொடிகளின்
நீட்சியிலோ

உப்புத்தாள் தேய்த்த
சுவரிலிருந்து
உரு உதிர்ந்த
ஓவியப்பெண்ணின்
உயிர் மிஞ்சிய நிறங்களின்
மீட்சியிலோ

தியானித்தலின் அலைவரிசையில்
இடுகுறிப் பெயரணிந்த
சப்தங்கள் ஒடுங்கும்
அத்தருணம்
பசித்த கண்களில்
மகிழ் துளி

வளர்பிறை
வட்டங்கள்
புள்ளிகளாய்
வளைந்து மூடும் முன்


--புவனம்

Tuesday, September 3, 2013

அன்னத்தூவியென


உச்சி முகரும் கூதலின்
காதல் எவ்வி
திருகிய வெண் சங்கு
மேனித் திண்மத்தில்
கையணைப்பு

குவிந்த சிமிழில் நிலம் பார்க்கும்
அந்தியின் விகசிதம்
மெல்லப் பரவியது
ஸ்பரிசத்தில்

மின்மினிகள் ஒளிர்கூட்டும்
தூக்கணாங்குருவிக்  கூட்டின்
இலைநரம்புப் பின்னல்
வயணத்துடன் விரவியது
விரல்கள்

விதும்பும் நரம்புத்  தீண்டலின்
திகைப்பில் மேலும் அதிர்வு
கூடியதொரு
கூடற் பொழுதில்
அலர்ந்து அவிழ்ந்த 
அன்னத்தூவியென 
நிரம்பியது
இசை

-புவனம்
 

Monday, September 2, 2013

காட்சி மாற்றம்



இருளோடு இறுகப் பிணைந்த
கரும்புள்ளிகளைக் குறித்தே
புனைந்ததில்
மேலும் குழையாதிருக்கட்டும்
அரிச்சுவடேறிய
சதுப்பு நிலச்சொற்கள் 

மிகைத்ததன் ஒளி
கண்களில் தூர்ந்ததன்
குறும்பொறையானதும்
அணையாததாகவே காண்கிறது
எவரும்  ஏற்றத்துணியாத
தீபத் திரிமுனைகள்

தீயிற் பாகமாக்குதலில்
பதம் பிசகிய போதும்    
அதனோடு இதுவுமாக
கடந்து போதலின் காட்சி மாற்றம்   

-புவனம் 

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...