Thursday, March 21, 2019

#கீச்சுக்கதைகள் - நிறமற்றதன் நீர்மை

அடுத்து தன் பிள்ளைகளுக்கென எதுவும் சேர்த்துவைத்திராது பொருளாதாரத்தில் நிலைசுருண்ட தந்தைக்கு பின் தலையெடுக்கும் மகன் .. ஒக்கொங்வோ. சினுவா ஆச்சிபியின் ( Things Fall Apart ) சிதைவுகளின் கதை நாயகன்.   தோற்றுப்போனவனின் மகன் இவனென  முத்திரையோடு தன்னை இச்சமூகம் பார்க்கலாகாது. தன்னையும் தன் சுயத்தை கொண்டு சுற்றம் சூழ வேண்டுமென வேட்கையோடு வாழ  முன்னெடுப்பவனின் கதை

 அனுபவங்களின் நிழல் படியும் எதையும் வாசிப்பில் வெறும் வரிகளென கடந்துபோகமுடியாததில் தொடங்குகிறது மற்றொரு கதை.

     தேவைகள் அதுபாட்டுக்கு நிறைகிறது. உலகம் தானே சுழல்கிறதென தன்போக்கில் எந்த துன்பமும் காணாத வயது.. அந்த வயதில் அடிக்கடி மிரளச் செய்யும் ஒரே துன்பம் தேர்வுகள் தான். அப்படியாக  பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்கிய சமயம் அது  

எல்லாமே இருக்கிறது என்ற மிதப்பு அது நாள் வரை இருந்ததில்லை என்றாலும் திடுமென ஏதுமற்று போகக்கூடுமென எதிர்பாராத திகைப்பை தந்தது அப்பாவின் தொழில் முடக்கமும் தலைக்கேறிய கடனும். தனக்கு கீழே வேலை செய்த ஆறு பேருக்கும் கணக்கு தீர்த்து அலுவலகத்தை இழுத்துமூடியபின்
வசித்துவந்த ஏ.பி ப்ளாட்டில் இருந்து அளவில் சிறிய வாடகை வீட்டில் குடியேறியதும்,  முறைவாசலும், இரவு பத்துமணிக்கு பிறகு  மெயின் கேட் பூட்டபடும், விளக்கை எரியவிடக்கூடாதென வீட்டுக்கு சொந்தகாரரர் ஏகத்துக்கு விதித்த விதிகளோடும் தொடங்கியது வாழ்வு புரிதலின் பாலபாடம்.
 
   அடுத்து சித்தப்பாவின் திருமணம்.
ஊரில் பங்குபிரியாதிருந்த சொத்தில் பாதிக்குமேல் விற்று கடனில் கப்பல் மூழ்காமல் அடைத்திருந்தார் அப்பா. சித்தப்பாவிற்கு நிலபுலன்களை விற்றதில்  வருத்தமாகி போயிருக்கலாம். கல்யாண வீட்டில் நாங்கள் மட்டும் தனித்த பிள்ளைகளாக ஆகிப்போனதாய் உணர்வு.
 
"கல்யாணத்துக்கு உங்க சித்தப்பா உங்களுக்கு மட்டும் துணி எடுத்து தரலையா, உடுத்தியிருப்பது புதுசுபோல காணலையே !" மாதிரி எண்ணெய் ஊற்றி எரிய விட்டு குளிர்காயும் சொந்தங்களிருந்து இந்த சுறுக்கென தைக்கும் சொல் தாங்கவியலாத சுணக்கம் அடுத்தடுத்து நிகழ்ந்தது.

  அத்தை மகள் தனகொடி சொந்த கைவினையில் ஈர்குச்சிகளைக்கொண்டு கூண்டு வடிவம் செய்து பிறந்தநாள் பரிசாக கொடுத்தாள். ஆசையாகவும் சந்தோசமாகவும் வாங்கிகொண்ட பரிசு அது.
இருகைகளுக்குள் அடங்கும் அக்கூண்டினுள் சின்ன ப்ளாஸ்டிக் பந்தை போட்டு வைத்திருந்தேன். கட்டி தொங்க விட்டால் காற்றில் அசையும் போதெல்லாம் சிணுங்க ஒரு மணியும் அதன் நுனியில்.
 கல்யாண கூட்டத்தில் தன் நாத்தனாரின் மகன் அதை கேட்டு அடம்பிடிக்கவும் கொஞ்சமும் தயங்காமல் எடுத்துக்கொடுத்தாள் அத்தை.

திகைத்து "அத்தை அது என்னோடது"

ஏளனம் ததும்பும் ஒரு  பார்வையோடு
" என்ன உன்னோடதா, ஏன் உங்கப்பன் சம்பாரிச்ச சொத்தா! உங்கப்பனுக்கு சொத்தை அழிக்கதானே தெரியும். என்னோடதாமில்ல"  எதையும் கொண்டு அடித்திருந்தால் கூட வலித்திருக்காது போலும். கண்களில் நீர்முட்டிவிட்டது. ச்சீ இவர்கள் முன்னாலெல்லாம் அழுவதா எனும் வீராப்பு எழும்பியது.

பிறப்பு தொட்டு வாழும் நாள் வரை மனிதன் மனிதனுக்கே அஞ்சுகிறான்.
வாய்பேசத்தெரிவதாலும் மொழியக் கற்றத் திமிராலும்
அடிசறுக்கியவனை, காசில்லாத சகமனிதனை துன்புறுத்த, உயிர்வரை சுருளும்படி அடிக்க வாரத்தைகளே போதுமென்ற வித்தையை பயின்றவன் தான் ஆறறிவு இனம் போலும்.

சிரித்தமுகத்தோடும் இளகுத்தோற்றத்தோடும் பார்திருந்த அப்பா அடிமுதல் சோர்ந்துவிட்டார்.  நிலையிறக்கத்தில் இருந்து எப்படி மீள்வது ஒன்றுமில்லாதவனாகி மனைவி மக்களை படுத்துகிறோம் எனும் அழுத்தமும் சேர்ந்து பாதியாகிவிட்டார். இழப்பில் இருக்கும் மனிதனை தேற்றக்கூட யாரும் வரவேண்டியதில்லை. குத்திக் கிளராமல் இருந்தால் போதும். இந்த நிலையை மகனிருந்தால் தாங்கியிருப்பானே எண்ணம் ஒருபோதும் அப்பாவிற்கு வராமல் மகளும் இருப்பாளென காட்டவேண்டுமென ஒரு உத்வேகம்.
கான்வென்ட்டில் படித்தால் தான் படிப்பா,    கவர்மெண்ட் ஸ்கூலில் படித்தாலும் எதும் குறைந்துவிடாதென பள்ளிமாற்றி படிக்க நேர்ந்த போதும்.
 கடனோடு கடனாய் கணினி படிக்க ஆப்டெக்கில்  சேர்த்து செலவிட அப்பா முன்வந்த போதும் தடுத்து
" கம்ப்யூட்டர் பாயிண்ட்டில் சேர்ந்து படிக்கிறேன்ப்பா. மூன்று மடங்கு பீஸ் குறைச்சல். என் படிப்பு பற்றிய பாட்டை நானே பார்த்துக்க முயற்சி பண்றேன்ப்பா என் கவலை வேண்டாமென நிமிர்வோடு சொல்ல வைத்தது.

இருப்பு மட்டுமல்ல இயலாமை கூட நிமிர்வு தரும் போலும்.

கனவுகள் கொஞ்சும் மற்றும் தூக்கதிற்கு   கெஞ்சும் கண்களை பிடிவாதத்தோடு பிரித்தெடுத்து, அவதியவதியாய் கிளம்பி ஓடினால் தான் அந்த ஏழரை பஸ்ஸை பிடிக்க முடியும் என்பதால் நிதானித்து உண்ண  நேரமிருக்காது. டிப்போவில் இருந்து கிளம்பி நான் ஏற வேண்டிய நிறுத்தம் வருவதற்குள் கிட்டதட்ட நிரம்பிவிடும் அந்நேரத்துக்கே.

இறங்க குறைந்தது ஒரு மணி நேரம் இருப்பதால் காலை உணவை ஓடும் மாநகரப் பேருந்தில் சாப்பிடும் கலாச்சாரத்தை முதலில் தொடங்கியவள் நானாகவுமிருக்கலாம்.
சக பயணிகள் குறித்து எவ்வித தயக்கமுமின்றி..  அத்தனை கூட்டத்தில் உணவெடுக்கும் என்னை ஆச்சரியத்தோடு பார்த்திருக்கலாம் பின்னே அது வழக்கமாகி அடுத்தடுத்து சிலருக்கும் தொற்றிக்கொண்டு காலை ஏழறை மணி பஸ்ஸில் நிறைய ப்ரேக்பாஸ்ட்  டப்பாக்கள் திறவும். மெல்ல மெல்ல பயணத்தில் தனித்திருத்தல் மாறி நிறைய நட்புகள் பூத்தது. அக்காலை நேர பஸ் பயணத்தை சுகமானதாக்கியது.
வாணி,லஷ்மி,ஈஸ்வரி,ரேகா,பிரியா,நிர்மலா போன்ற அரட்டை கும்பலோடு அவரவர் டப்பாக்களின் உணர்வை பகிர்ந்துண்டும் இன்னுமின்னும் பட்டாளம் விரிய கொண்டாட்டமாய், யாரெல்லாம் கவனிக்கிறார்களோ எனும் கவலையே இன்றி கதைபேசி களி(ழி)யும் பயணம்.
 அன்றும் அப்படித்தான் வழமை போல கேலி அரட்டைகளோடு டப்பாக்களை பிரிக்கும் போது புத்தம்புதிய எவர்சில்வர் டப்பா  முன்னே நீட்டபட்டது. நிமிர்ந்து பார்த்தால் புன்னகையோடு மத்தியவயதில் ஒரு பெண்மணி.
" ரொம்ப நாளா உங்களையெல்லாம் பார்த்துகிட்டு வரேன். எத்தனை சந்தோசமா இருக்கீங்க பொண்ணுங்களா நீங்க, மாங்காய் பச்சடிக்கு நீர் ஊறுதுன்னு நீ அன்னைக்கு சொல்லிகிட்டு இருந்ததை கேட்டேன். இன்னைக்கு காலம்பர செஞ்சதும் உன் நினைவு வந்தது அதான் எடுத்திட்டுவந்தேன், உங்கம்மா செய்யும் பாவக்காய் சாம்பர் அளவுக்கு இனிக்காது ஆனாலும் சாப்பிடலாம் " கோர்வையான அந்த பேச்சில் இதுமாதிரி யாரெல்லாம் என்னை கூர்ந்து கவனிதிருப்பார்களோ பிடிக்கும் பிடிக்காது வரை தெரிந்து வைத்துக்கொண்டு.
மாங்காய்பச்சடி அப்படியொரு சுவை. அந்த மாமியின் அன்பை போலவே. எங்கள் பஸ் ஸெட்டில் வயது கூடிய ஆனாலும் எங்களுக்கு ஏற்ப அரட்டை கச்சேரியில் அன்று முதல் ராஜேஸ்வரி மாமியும்.ஒரு  ஜட்ஜ் வீட்டுக்கு சமையல் செய்ய போகிறவர் மாமி.
இதே போல் தான் பஸ்ஸில் ஸ்னேகிதி யாகி கணினி  வகுப்பும், கல்லூரி நேரமும் முடிந்த பின் பார்ட்டைம் வேலை செய்ய வகை செய்த நாகம்மையும்.

எந்த இரத்த உறவுமில்லாமல் இப்படி நட்பில் இணைந்த கூட்டத்தில் உயிர்த்திருக்கும் மனிதமும் அது தரும் நம்பிக்கையிலும் அர்த்தமுள்ளதாக்கிவிடும் அன்றாடத்தின் ஓட்டத்தை.

"ரோட்டில் நடக்கும் போது முன்னாடி பின்னாடியெல்லாம் திரும்பவே மாட்டீங்களா. கூப்பிட கூப்பிட நில்லாம போய்ட்டீங்க "என்றான் குறைகுரலில் தரணி..

"நீ என்னை கூப்ட்டியா, எங்கே! நான் கவனிக்கலையே" பதிலுக்கு பின் மீண்டும் பாடத்தில் மூழ்கி விட

" மெட்டீரியல் நோட்ஸ் கிடைச்சிருச்சு, உங்களுக்கும் சேர்த்து ஒரு காப்பி எடுத்து ஸ்பரைல் பைண்ட் பண்ணிட்டு வந்தேன்" என நீட்டினான்.

வேண்டாம் தரணி இந்த வாரம் லஸ் கார்னர் போவென். நான் பார்த்துகிறேன்.  
இதை வேற யாருக்காவது கொடுத்திடு"

மீண்டும் அதே குறைகுரலில்.. " ஏன் வாங்கிக்ககூடாது, ஒரு சின்ன ஷேரிங் தானே .. நான் உங்க் ப்ரெண்ட் இல்லையா"

" ஆமா பின்ன எதிரின்னா சொன்னேன் ஆனால் இதுக்கெல்லாம் பழகிட்டா அப்புறம் எப்பவாவது எனக்கு பிடிக்காத மாதிரி நீ பிஹேவ் பண்ணாலும் நான். எக்ஸ்க்யூஸ் பண்ணவேண்டி வரும் அது தேவையில்லை" சொல்லிவிட்டு திரும்பிய  என் முதுகுக்கு பின்னால் அவன் தலையிடித்தும் கொண்டிருக்கலாம். இது என்ன மாதிரி ஜந்துவோவென நினைத்தும் கூட இருக்கலாம்.  கணினி வகுப்பில் கூடப்படிப்பவன் தரணி. பின்னால் சுற்றி வருகிறான் என்பது தெரிந்தே இருந்தது.

கூட இருக்கும் தோழிகள் சொல்லச் சொல்ல நாம் ஜடம் தான் போலுமென நினைக்கத்தோன்றும்.
தரணி மட்டுமல்ல அவன் வயதையொத்த எந்த பையன்களிடம் வயதுக்கேயுரிய ஈர்ப்பும் ஆர்வமும் தோன்றவே இல்லை. துளிர்ந்து சிறகசையும்  பட்டாம்பூச்சியாய் பதினேழு  வயதில் இயல்பாய் தோன்றக்கூடிய உணர்வுகள் மரத்து போயிருக்கும் படி அடுத்தடுத்த படிநிலை குறித்த நினைப்பும் ஓட்டமும் தடுத்துவிட்டது போலும் அதீத பக்குவம். சாமியாரினி  பெயரே மிச்சம்.

அரைநாளுக்கான கணினி வகுப்பு முடிந்து இடையே கிட்டும் ஒரு மணி நேரத்தில் பஸ் பிடித்து கல்லூரியை அடைந்து கேண்டின் வாயிலில் இருக்கும் மரத்தடியில் வாசித்த கதை பார்த்தகதையென  உலகவிஷயம் மென்று பகலுணவை முடித்தபின்  அடுத்த அரை நாளுக்கான வகுப்புகள் தொடங்கும்.
 சிங்காசினி.. சாந்திராஜா மேம். ஹெட் ஆப் டிபார்ட்மெண்ட். சும்மா பார்வையால் மிரள வைக்கும் மனுஷி. அசைன்மெண்ட் முடிக்காமல் போனால் தயவு தாட்சண்யமே இராது.. அவுட் கெட்அவுட் தான்.
 ஹைய்யோ தண்டனையாக வகுப்பு வாசலில் நிற்கிறோமே என்றும், அதான் க்ளாஸை விட்டு வெளியேறியாச்சே எனும் அசட்டை உணர்விலோ  மாணாவிகள் பல பாவங்களில் நிற்க திடுமென நடத்திக்கொண்டிருக்கும் பாடத்தில் கேள்வி கேட்பார். பதில் சொல்லமுடியாமல் திணரும் வேலையில் கண்களை சுறுக்கி
 "ஹிம் வெளியே நின்னாலும் க்ளாஸை கவனிக்கனும் . நான் கேட்ட கேள்விக்கான பதிலை ஐம்பது முறை எழுது. "
 தெரிந்த அத்தனை வசவுகளாலும் மனதிற்குள் அர்ச்சித்து போற்றப்படுவார் சாந்திராஜா.

பள்ளிகாலத்தில் கூட அனுபவத்திராத இம்போஷிசன் எழுதுகை. கொடுமை என்னவென்றால் ஐம்பதில் ஒன்று குறைந்தாலும் மறு நாள் நூறாகிவிடும்.

ஆறுமணிக்கு கல்லூரி முடிந்து பஸ்ஸிற்கு காத்திருந்து நிறைசூலி  கணக்காய் நிரம்பி வழியும் கூட்டத்தில் நெருக்கியடித்து ஏறி விருகம்பாக்கம் நிறுத்தத்தில் இறங்கி சத்யாகார்டன் வரை என்னதான் ஓட்டமும் நடையுமாய் போனாலும் மணி ஏழாகிவிடும்.

"மெல்ல.. மெல்ல மூச்சுதட்டி போய்சேர்ந்திட போற, சிரிக்காமல் ஜோக் அடிப்பாள் நாகம்மை  முகம் கழுவி. டீ குடிச்சிட்டு வந்திடு எனும் அக்கறையோடு.

வேகமாய் தட்டச்சு பயிலாத, ஒற்றை விரலை கொண்டு கீபோர்டில் தட்டும் நிலையிலும் நாகம்மையின் பரிந்துரைப்பின் பேரில் கேலஸிஸ் நிறுவனத்தில் வேலை தந்தவர் முத்து குமரன். ஆறு மணிக்கு ஷிப்ட் தொடங்கும் இடத்தில் நான் ஏழு மணிக்கு போய்ச்சேர சலுகையும், ஒன்றிரண்டு பிழை செய்யும் போதும் ஒற்றை விரலால் பத்திரம் காட்டுவார். இனி கவனம் என்பதோடு.

உறவுக் கூட்டம் போல அக்கா மாமா அண்ணாவெனும் அழைப்புகளோடு அந்த இடம் மிகப்பிடித்தமானதொரு வேலைத்தளம்.

வேலை நேரத்தில் அங்கிருக்கும் அத்தனை கணினிகளிலும் தட்டச்சும் ஓசை தவிர வேறு பேச்சில்லை. காகிதத்தில் இருப்பதை கணினியில் ஏற்றும் போது கவனம் சிதறாமல் இருக்க அந்த கட்டுபாடு. எனவே எனக்கான ஆசனத்தில் அமரும் போது அருகே இருப்பவள் வா எனும் முகமாய் கண்களால் பேசி ஒரு புன்னகை உதிர்த்து மீண்டும் காகிதத்திலும் மானிட்டரிலும் மாற்றிமாற்றி பார்வையை ஓடவிட்டாள். சேர்ந்த கொஞ்ச நாளிலேயே என் விரல்கள் தானே பழகிக்கொண்டது அவ்வித்தைக்கு.
ஏழு தொடங்கி பத்து மணி வரை இயந்திரகதியில் தட்டச்சி கொண்டே இருக்கும் விரல்கள் வாயிருந்தால் புலம்பித் தள்ளியிருக்கும்.  அத்தனை விரல்களையும் நீட்டி நிமிர்த்தி நெட்டிமுறித்து தளர்வு கொடுத்து வெளியே வந்தால் அழைத்துபோக அப்பா காத்திருப்பார். கேலஸிஸ்ஸில் சேர்ந்த முதல் நாள் காத்திருப்பில்

"ஏன்ம்மா சிரமப்பட்டு. "

முதுகிலும் கழுத்திலுமான வின் வின் வலியை புறந்தள்ளி " இல்லையே சிரமமொன்னுமில்லைப்பா வெறுமனே கம்யூட்டரில் ஏற்றும் வேலை"

வீம்பு பிடிவாதம், உன் இஷ்டம் என்றதோடு இந்த வீம்பு பிடிவாதத்துக்கும், என் இஸ்டம் என்றதுக்கும் எனக்காக வாசலில் காத்திருந்ததுக்கும் ஒரு ப்ளாஷ் பேக் கதையோடியது வீடு சேர்வதற்குள்.

துர்கா நர்சரியில் மகளை  எல்.கே.ஜியில் சேர்த்த நாளிலிருந்து கொண்டு விடுவதற்கும் கூட்டி வருவதற்கும் தன்னிடம் வேலை பார்த்த அசோகனை பணிப்பவர், வெளி வேலையாய் போன அசோகன் திரும்பாதிருந்ததில் பள்ளி விடும் நேரத்துக்கு தானே அழைக்க வந்தார் அப்பா.
 
அசோகன் மாமா வராது அப்பா வந்து நிற்பதை ஏற்காமல், கூட வராமல் முரண்டு பிடித்தேனாம். என்னென்னவோ சமாதான வார்த்தைகள் சொல்லியும், அப்பாகூடத்தானே போம்மாவென மிஸ் சொல்லியும் பிடிவாதமாய் மறுக்க.. பொறுமையிழந்த அப்பா தூக்கிகொண்டு நகர முயன்றிருக்கிறார். இரண்டெட்டு வைப்பதற்குள் துள்ளித் திமிறி இறங்கி தரையில் கிடந்து கதறியழ
" போங்க சார், போய் அவ மாமாவையே வரசொல்லுங்க.. பிள்ளை மூச்சுதிணற அழுவது நல்லதில்லை"
பின்பு அசோகன் மாமா வந்து அழைத்தபின்னரே பள்ளியை விட்டு நகர்ந்த அந்த வீம்பு பிடிவாதம்.
 இதை அம்மா கொடாரம் பிடித்தவள் என்பாள்.

அந்த நேரத்தில் வீடடைந்து உடம்பு கழுவி வரும் போது, குமிழ்ந்து ஊரடங்கிய நிசியிலும் ஆரிப்போன சாப்பாட்டை தரமாட்டாள் அம்மா. சூடு செய்தே சிலவேளைகளில் ஊட்டிவிடுவதும் உண்டு . போதுமே அந்த வினாடிகள் அந்நாளின் சுமை முழுவதையும் இறக்கி வைக்க.

 உடனே படுக்கையில் விழவே மனதும் உடலும்  கெஞ்சும் .. சாந்திராஜா முகமும் கையொடிய இம்போஷிசன் எழுதும்படியாக நேர்வதையும் காட்டிலும் தூக்கத்தை துறப்பது மேல் என தோன்ற பாடங்களை எழுத அமர்வதிலாகும் உறங்கா இரவுகள்.
"இதோ பார், உன்னை கவனிச்சுக்கவே மாட்டியா.. கண்ணை சுத்தி கறுவளையம் படியுது, ஓய்வு முக்கியம்"  என்பாள் வள்ளி.

அத்தனையும் கடந்து மூன்றாண்டுகள் படிப்பை முடிக்கும் போதே இரண்டு வருட வேலை அனுபவத்தோடு கன்யா ப்ரைவட் லிமிட்டெட்டில் கால் வைக்கும் போது உள்ளே ஊற்றெடுத்த நம்பிக்கை.
இனி எல்லாம்  நேராகிவிடும், இழந்ததெல்லாம் திரும்ப கிட்டசெய்துவிடுவார் அப்பா. முன்புமாதிரி உலகம் தானே சுற்றுமென.
அதற்குள் வாடகை வீட்டு முறைவாசலுக்கும், விரல்களிலேறிய தட்டச்சுக்கும்,  கறுவளைக் கண்களில் முகத்தை கண்ணாடியில் பார்க்கவும் பழகிவிட்டிருந்தது.

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...