Tuesday, March 26, 2019

THANJAI TRIP - கங்கைகொண்ட சோழபுரம்-AUG2017

நான்கு நாட்கள் தொடர்விடுமுறையில்
சோழர் கால பெருங்கோவில்களை சுற்றிவரலாமென திட்டமிட்டோம். அதன்படி முதலில் தொட்டது கங்கைகொண்ட சோழபுரம்.
பாரதிதாசனின் இருண்ட வீட்டை வாசித்த பிறகுதான் குடும்ப விளக்கு கூடுதலாய் மனதிற்கு பதமாகும் என்பதுபோல முதலில் ராஜ ராஜ சோழன் காலத்து கட்டுமானக் கலையை கண்டுவிட்டு ராஜேந்தர சோழன் கால கங்கைகொண்ட புரத்திற்கு வந்திருக்கலாமோவென பட்டது. இங்கு கண்ட பிரம்மிப்பின் உணர்வை அடுத்து போன தஞ்சை பெரியகோவிலில் பெரிதாக உணர முடியவில்லை என்பதால்.

இவ்விரண்டு இடங்களைக் காட்டிலும் மீண்டும் ஒருமுறை போயே ஆகவேண்டும் எனும் எண்ணத்தை தந்தது தாரசுரம்.

சோழனின் வெற்றிகொண்டான் ஊரிலிருந்து காதல் கொண்டான் ஊரை நோக்கி நகரும் வழிகளில் வேறென்னென்ன விஷேச தளங்களை பார்க்கலாமென கூகுளாரின் உதவியுடன் படம் போட்டு வைத்திருந்தேன்.

வழியில் அணைக்கரை எனும் ஊர் வழியே காரை செலுத்தினோம்.
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே வெள்ளைக்காரன் அவன் காலத்தில்  அட்டகாசமாய் கட்டிவைத்திருந்த அணை.
குமிக்கிமணியாறு எனும் பெத்த பெயரை பலகையில் மட்டும் தாங்கி சொட்டு நீரும் இல்லாமல் வெற்றுப்பள்ளமும் மிகக்குருகிய அணைக்கட்டு பாதையில் போக வர வாகனங்கள் முக்கி திணருதலும் அங்கே காட்சியாகி கிடந்தன. மீண்டும் இங்கே சொல்லத் தோன்றுவது இதுதான். ஆக்குதலுக்கு மெனக்கெட்டவர்களின் அளவில் துணுக்கு கூட அதனை பராமரிப்பதற்கு நம்ம மக்கள் மெனக்கெடுவதில்லை.

சின்ன வயதில் அப்பா கூட்டிப்போன கோவில்களில் மிக பிடித்தமானது திருநாகேஸ்வரம் ராகு கோவில். கிராபிக்ஸ் கதைகளில் சொட்டும் அதே ஆர்வம் இந்த கோவிலில் ராகுவுக்கு செய்யபடும் பாலாபிஷேகத்தில் கழுத்து பகுதியில் பால் நிறம் நீலமாகும் விந்தையை பார்க்க அந்த வயதில் அவ்வளவு ஆர்வமிருந்ததால் இந்த கோவில் பிடித்துப்போயிருந்தது. அந்த கதைகளை மகள்களுக்கு சொல்லியபடி மீண்டும் சுற்றிவந்தாயிற்று. போலவே

யாரும் அதிகம்போயிருக்காத மற்றுமொரு புராதன கோவிலை வழித்தடத்தில் கூகுள் உதவிகொண்டு படித்துவைத்திருந்தேன். திருநீலக்குடியில்  திருநீலகண்டேஷ்வரர் கோவில். சிவனின் உடலில் பரவிவிட்ட விஷத்தை எடுக்க இங்கே குடம் குடமாய் நல்லெண்ணெய் விட்டு அபிசேகம் செய்வார்களாம். எவ்வளவு எண்ணெய் விட்ட போதும் உடனே முழுக்க சிவலிங்கமே அதனை உறிஞ்சி கொண்டுவிடும் விந்தையென படித்ததால் இங்கும் பார்த்துவிடவேண்டுமென்றிருந்தது.

கூகுள் மேப் உதவியோடு தப்பும் தவறுமாய் சுற்றி ஒருவழியாய் இந்த சின்ன ஊரை கண்டுபிடித்தோம். "இந்த ஊர்காரர்களே இந்த கோவிலுக்கு வருவதே சந்தேகம் எங்கிருந்துப்பா பிடிச்சன்னு கன்ச்சு நொந்துகொண்டார். அப்படிதான் இருந்தது.
வெள்ளி மாலை என்ற போதும் ஒரேயொரு உள்ளூர் பெண்மணி தவிர பூசாரியும் நாங்களும் பின்னணி இசைக்கு நாதஸ்வரம் வாசித்துக்கொண்டிருந்த இசைஞரும் மட்டுமே.
பராமரிப்பு இல்லாத ஆனால் அமைதியான அந்த ஊருக்கு அளவில் பெரிய கோவிலே குளத்தோடு.
அங்கே பூசாரியே எங்களுக்கு கைடாக பின்னோடு சுற்றி வந்து நல்லெண்ணெய் கதையோடு அந்த கோயிலின் சிறப்பாக நிறைய கதைகள் சொன்னார்.

முழுக்க முழுக்க  கோவில்களை  மகள்களோடு முதன்முதலாக நிறுத்தி நிதானித்து ஒவ்வொரு கடவுளுருவுக்குப் பின்னிருக்கும் கதைகளை பேசியபடி
சிற்ப செதுக்கங்களோடு கட்டுமான கலைவடிவை ரசித்து சுற்றிவந்த இனிதான  #பயணம்.

கங்கைகொண்ட சோழபுரம்
Photo

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...