Thursday, March 21, 2019

FEB2016 - மண நாள்

மெட்டீரியலிஸ்டிக்  தான் என்றாலும்
கூர்மையான திட்டமிடலும் பொருளாதார தொலைநோக்கு பார்வையும் கன்ச்சுவிடம் ப்ளஸ்.
கல்யாணம் ஆன நாளிலிருந்து வாய்பாடு கணக்காய் சொல்லக்கேட்டதெல்லாம் நமக்குன்னு ஒரு சொந்த  வீடு வாங்கிடனுமென்பதுதான்.
 ஆஃபிஸ் விட்டு வந்து  பேப்பரும் பென்ஸிலுமாகத்தான் உட்கார்ந்திருப்பார். என்னதான் அதென பார்த்தால் விதவிதமாய் அறைகளின் அமைப்போடு  வீட்டின் வடிவமைப்புதான் இருக்கும்.எப்போதும் வீட்டை பற்றி தான் பேச்சுமிருக்கும். கல்யாணம் முடிந்து ஹனிமூனுக்கெல்லாம் போகலை. விடுமுறை வந்தால் போதும் மனையாளை பின்னால உட்கார்த்தி வைத்து பைக்கில் நகர்வலம் கிளம்பியதெல்லாம் வீடுகளை பார்க்கவே. புதிதாய் எங்கே கட்டிடங்கள்  விலைக்கு என்றாலும் அங்கே எங்கள் கால்தடம் கட்டாயம் இருக்கும்.
ஏன்ப்பா தூக்கத்தில் கூட உங்களுக்கு செங்கல்லும் சிமெண்ட்டும் கட்டிடமும் தான் கனவில் வருமாவென கிண்டலித்ததுண்டு. இன்னும் சில வருடங்களில்
குர்கான் நல்ல வளர்ச்சியடைந்திடும் புதுப்புது நிறுவனங்கள் மொய்க்கும் பகுதியாகுமென அவரின் முன்னோக்கும் புத்தியில் ஆருடம் கணித்து டெல்லியில் இருந்து அங்கே சுலபமாய் போய்வர வழித்தடத்தில் இருக்கும் துவாரகாவில், எடுத்த எடுப்பிலேயே இருக்கும் பதினொன்னாவது செக்டரில் வீடு வாங்கலாம் என்றார். அப்படி அங்கே வீடு தேட  ஒன்றிரண்டு ப்ரோக்கர்களுக்கு சொல்லிவைத்திருந்தால் பரவாயில்லை ஊரிலிருக்கும் அத்தனை ப்ரோக்கர்களிடத்தும் போதாக்குறைக்கு ப்ராப்பர்டி டைம்ஸிலும் விளம்பரமாக பதினொன்னில் வீடு வேண்டுமென போட ப்ரோக்கர்களுக்குள் லிங்க் இருக்கும் போல
" ஏம்ப்பா பதினொன்னில் வீடிருந்தா சொல்லு என்கிட்ட கஷ்டமர் இருக்கு"
"அட நானும் அதான்ப்பா பார்த்திட்டு இருக்கேன் என்கிட்டையும் பதினொன்னுக்கு ஆளிருக்கு"
அட உனக்குமா எனக்கும் எனக்கும்ன்னு அடுத்தடுத்த ப்ரோக்கர்களுக்குள் இதே பேச்சாய் மாற ஏ இவ்வளவு டிமாண்ட் இருக்கு!! அப்போ பதினொன்னில் எதோ மேட்டரிருக்கும்போலவென ப்ரோக்கர்கள் கூடிக்கலந்து பேசி அடுத்த பத்தே நாளில் பதினொன்னாவது செக்டரில் மட்டும் இருமடங்கு விலை ஏறிப்போகும் படி ஆன பெத்த பெருமைக்குரியவர் நம்ம ஆளுதான்.
முதன்முதலாய் சொந்தமாக வாங்கப்போகும் வீடு பார்த்துப் பார்த்து மனசுக்கு நிறைவானபடி இருக்கனுமென
நிறைமாத வயிற்றோடெல்லாம் வீடு வீடாய் ஏறி இறங்கியிருக்கிறோம். இப்படியாக பெரியவள் பிறந்து முதலாம் வருடம் முடிந்த சில மாதங்களில் குர்கானில்  எங்கள் முதல் சொந்த வீடு
வாங்க வாய்த்தது. என் அப்பாவிடமிருந்தோ அல்லது அவர் அப்பாவிடமிருந்தோ ஒரு நயா பைசா வாங்காமல் தன் சொந்த சம்பாத்தியத்தில் சேர்த்ததும் பேங்க் லோனுமாகக்கொண்டு புத்தம் புதிய மூன்று தளங்களோடான தனி வீட்டை ஒரு பஞ்சாபியிடமிருந்து வாங்கியிருந்தோம்.அருமையாய் நினைத்தபடியே அமைந்திருந்தது.
கீழ் தளத்தில் நாங்கள் இருக்கவும் மீதம் இருதளங்களை வாடகைக்கு விட்டு அந்த பணத்தை கொண்டு பேங்க் லோன் கட்டவும் முடிந்தது. பிரமாதமான வீடு.
வேலை மாறி ஊரும் மாற்றும் சூழல் வந்தபோதும் விற்றுவிட்டே போகலாமென முடிவெடுத்தப்போது அந்த வீட்டை விட மனசே இல்லை எனக்கு. ஆனால் என்ன செய்ய "அப்படியே வாடகைக்கு தந்து போனாலும் ஹரியானா ப்ராப்ர்டி டீலர்கள் மோசம். இப்படி ஒரு லட்டு மாதிரி வீடு. ஓனர் பக்கத்தில் இல்லாமல் இருக்கிறதென மோப்பம் பிடித்தால் குண்டர்கள் உதவியோடு தங்களுதாக்கிக்கிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள். ஹரியானா போலிசும் டம்மி. வெளியூர் ஆட்களான நாம கோர்டு கேசுன்னு அலைந்து மாளாது அதிலேயே வயசேறிடும்.
அந்த பஞ்சாபி நமக்கு வீட்டை விற்றுவிட்டு போனதுக்கு அதே தான் காரணம்" என்று சொன்னதையும் மறுக்கமுடியாது.
வீட்டை விற்று பெங்கலூருக்கு இடம் பெயர்ந்திருந்த போது. இங்கே நாம வசிக்கப்போவது குறுகிய காலம் தான். சொந்த வீடு இங்கே எடுப்பது பிரோய்ஜனப்படாது சென்னையிலேயே வாங்கிக்கொள்வோமென அலைந்த போது  அடுத்த குழந்தையோட டர்ன். மீண்டும் வயிற்றை தள்ளியபடியே தேடி அலைந்து விருகம்பாக்கம் ஏரியாவில் ப்ளாட் எடுத்தோம். அம்மா வீட்டுக்கும் பக்கமாய் எனக்கிருந்தது. வீடு முடிந்ததா அடுத்து  அங்கே இங்கே போக  வசதிக்கு வாங்கியது ஃபோர்ட் ஃபியஸ்டா. கார் லோனெடுத்து தான். இப்படியாக பெருக்கிக்கொண்ட கடனெல்லாம் அடைகிற சமயம் வந்த போது அப்பாடா ஏதோ செட்டிலாயிட்டோம் இனியாவது கொஞ்சம் ஊர் சுற்றலாம் ஒரே ஒரு ஃபாரின் டூர் போகலாம் - இப்படியெல்லாம் ஆசைப்பட்டது நானு.
அவரோ இப்ப நமக்கு இரண்டு பொண்ணுங்களாயிட்டாங்க ஆளுக்கொரு வீடுன்னு கொடுக்க கணக்காக நாம இப்போ அடுத்த வீடு வாங்கனுமென இறங்கிவிட்டார்.
ஹவுஸ் லோனுங்கிற பெயரில் ஏத்திக்கிற கடனில் அடைக்கிற அசல் சொற்பம் தானே அநியாய்திற்கு வட்டியா அள்ளிக்கொடுத்து கழுத்தை நெறிக்கிற கடன் சுமையை கூட்டிக்கிட்டாவது இன்னொரு வீடு வாங்காட்டி என்னவென கேட்டால்
அப்போதான் ஒரு கமிட்மெண்ட் இருக்கும் அதை அடைக்கவாவது சேமிக்கனும்ன்னு உந்துதல் இருக்குமென
பதில்மொழி வரும்.
இப்படியாக விடுமுறை தினங்கள் எல்லாம் இரண்டு பிள்ளைகளையும்
சேர்த்துக்கொண்டு கார்வலமாய் அடுத்தவீடு தேடி உலவல். ஹைய்யோ ரியல் எஸ்டேட்காரன் கூட இவ்வளவெல்லாம் வீடுகளுக்கு மெனக்கெட்டிருக்க மாட்டான் போல, ப்ரசெண்ட்டென்ஸில் இல்லாது ஃபியூட்டசர்டென்சில் மட்டுமே யோசிக்கும் எனக்கு வாய்த்த  மனிதரே என்றதற்கு இப்ப நான் இன்வெஸ்ட் பண்றதெல்லாம் உனக்கு அப்படிதான் இருக்கும் இன்னும் சில வருடங்கள் கழித்து ஏன்னு புரியுமென்றார்.
ஆச்சா, இரண்டரை படுக்கையறைகளோடு இரண்டாவது ஃப்ளாட்டும்  இனிதே வாங்கி  கைகொள்ளாக் கடனோடு இழுவையில் இருக்கும் போதே ஐம்பது ஏக்கரில்  
இரண்டாயிரத்து ஐந்நூறு வீடுகளோடு கட்டப்பட்டுக்கொண்டிருந்த ஒரு
கேட்டட் கம்யூனிட்டியில் பெர்சனல் லோன் எடுத்தாவது  தானும் ஒன்றை வாங்கிப்போட உத்தேசித்திருந்தார். அதற்கு அவர் சொன்ன காரணமோ
"நமக்கு இருப்பது இரண்டும் பெண்கள் எப்படியும் சிலவருடங்களுக்கு பிறகு நம்மைவிட்டு போய்விடக்கூடியவர்கள். பின்ன தனியே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கும்படி நாம  வாழவேண்டியிருக்கும் ரிட்டயர்மெண்ட் லைப்பை இப்படி உள்ளேயே எல்லா வசதிகளும் அடங்கியிருக்கிற நிறைய வீடுகள் இருக்கிற கேட்டட் கம்யூனிட்டியில் என்றால் தனிமையே தெரியாது " என்பதுதான்.
அப்படியாக மூன்றாவதாக அந்த ப்ளாட்டை வாங்கியான போது  ஒரு வீட்டை வாங்க இரண்டு பார்க்கிங் வாங்க யோசிக்க வேண்டியதன் அவசியம் எங்கிருந்து வந்ததுமேன் எனக்கேட்டால் "இப்பசரி நாளைக்கு பிள்ளைகளும் வளர்ந்து காரோட்டுகிற காலத்தில் இவ்வளவு அதிகம் வீடுகளை கொண்ட இடத்தில் பார்க்கிங் கிடைப்பது கஷ்டம். அதான் இப்பவே வாங்கிட்றது பெட்டர் " தொலைநோக்க வேண்டியதுதான் ஆனா இதெல்லாம் கொஞ்சமில்லை ரொம்பவே ஓவர்ன்னு மனதிற்குள்  மட்டும் நினைத்துக்கொண்டேன்.
கன்ச்சுவுடைய அப்பா காலமானதன் பின் அம்மா மட்டும் தனியாக கிராமத்து வீட்டில் தான் இருப்பேனென அடமாய் அங்கேயே இருக்கிற மனுஷி. சர்க்கரை பீபி எல்லாம் துரத்த நெய்வேலி NLC ஹாஸ்பிடலுக்கு மாதம் தவறாமல் மருந்து மாத்திரைக்கு போகிறவர் அந்நாட்களில் மட்டும் அங்கே NLC குடியிருப்பில் வசிக்கும் இருமகன்களில் ( இவருடைய அண்ணன்கள்) யாராவது ஒருவர் வீட்டில் தாங்கிக்கொள்வார்.
ஒரு சமயம் அப்படியாக போயிருக்கும் போது "சூடா ஒரு டீக்குடிக்கனும் போலருந்தது. கோபால் வீட்டுக்கு போனா பூட்டியிருந்தது சரிதான்னு அடுத்தவன் வீட்டுக்கு போனா அவுகளும் எங்க போனாங்களோ.பூட்டிக்கிடந்தது
சர்க்கரை கனமாயிடுச்சோ என்னவோ
 ஊசியும் போட்டுக்கிட்டதால கிறுகிறுன்னு வந்துச்சா பூட்ன வூட்டு வாசல்யே படுத்துட்டேன்  பக்கத்தூட்டு அம்மாதான் பார்த்திட்டு டீ வச்சுக்குடுத்ததென  இவரின் அம்மா
போனில் பேசியபோது
 சொன்னதைகேட்டதும் மனதிற்குள் தவித்திருக்கும் போல. நான்கு பிள்ளைகளை பெற்று கடும் உழைப்பில் தேய்ந்த அம்மாவின் கடைசி காலம், முடியாட்டி போய்கிடக்க வீடில்லாத ஒரு  ஆற்றாமை, குறையோடு இருந்துவிடக்கூடதென இங்கிருந்து லீவ்வெடுத்துக்கொண்டு போய் தங்கியிருந்து பில்டரை பார்த்து நெய்வேலியில் ஒரு ப்ளாட் எடுத்து வீட்டைக்கட்ட ஆயத்தம் செய்த பிறகே திரும்பினார்
 வீடும் கட்டியானபின்  அவசரத்துக்கு டீ வைத்துக்கொள்ள தண்ணீர் கெட்டில் இண்டக்ஷன் ஸ்டெவ் முதற்கொண்டு அத்தனை சமையல் சாதனங்களும்  கட்டில் சோபா  சகலமும் வாங்கிப்போட்டு செளபாக்கிய இல்லமென அவங்க அம்மாவின் பெயரையும் பெரிதாகப்பொரித்து " இந்தா சாவி இது உன் வீடு இனி ஹாஸ்பிடலுக்கு வரும் போது ஊரிலிருந்து யாரையாவது துணைக்கு கூட்டிக்கிட்டு வந்து இங்கே தங்கிக்க. இல்ல அல்லாடாம இங்கேயே தங்கிருந்துனாலும் உன் இஷ்டமென"  கொடுத்தார்.
படிக்கிற காலத்தில் வசதி போறாமையால் டிப்ளமா மட்டுமே முடித்திருந்தவர் கல்யாணத்திற்கு பிறகே பகுதி நேரமாக அண்ணா யூனிவர்சிடியில் இஞ்சினியரிங் முடித்து, அடுத்து எம் பி ஏ படித்து அடுத்தடுத்து பி எம் பி தேர்வுகள் எழுதியென தன்முயற்சியால் தகுதிகளை உயர்த்திக்கொண்டு ஊதியத்திலும் படிநிலைகளை உயர்த்திக்கொண்டு
 இந்த வயதிற்குள்ளாக சொந்த உழைப்பில்  நிமிர்தலோடு சொத்து சேர்த்துக்கொண்டாலும் கூடவே மலையளவு வட்டியும் மடுவளவு அசலுமாக ஹவ்ஸ்லோனை திரும்ப அடைக்க மாசம் மாசம் ஒரு பெருந்தொகையை கணிசமாக வெட்டிவைக்க வேண்டிய சுமையும் தலைக்கு மேல் இருக்கவே செய்கிறது.
பாதை சீராக இருந்து பயணிப்பதில் வேகம் தடையுறாத போது எந்த தலைச் சுமையும் பெரிதுபடாது. ஆனால் மனுஷப்பிறவிகள் வாழ்க்கை அப்படி சீரானது மட்டுமில்லையே.
ஏதாவது ஒரு கட்டத்தில்  இயல்பான வாழ்க்கை சட்டென ஸ்ட்ரக் ஆகி கொஞ்சம் தடுமாறிப்போகச் செய்யும் தானே. இதை அப்படியான நேரமெனவும் கொள்ளலாம்.
முன்ன ஓய்வேயில்லாம ஓடிக்கிட்டே இருக்கேன் என்பது மாறி இந்த வருடம் தொடங்கிய நாளிலிருந்து என்னடா ஓய்வு இது துருப்பிடிக்கச்செய்யும் ஓய்வென அவருக்கே மனதில் தோன்றிவிடக்கூடிய அளவு வீட்டிலிருக்கும்படியானது.
ஆயில் பெட்ரோ ரீபைனரி நிறுவங்கள் எல்லாம்  தொங்கு முகத்தோடு
கவிழ்ந்துகிடக்க, நிறுவனத்தில் இஞ்சினியரிங் யூனிட் மொத்தமும் இழுத்துமூடப்பட, வேலையிழப்பு..
ஆயில் நிறுவனங்களின் இந்த நிலை மாறி நிமிர ஒரு வருடமும் ஆகலாம். உடனே அடுத்த வேலை கிட்டுவது கடினமெனும் சூழல், ஹவ்ஸ் லோன்,
இனி அடுத்து ஊரில் ஸ்கூலில் குட்டீஸ கொண்டு சேர்க்க சில லகரங்கள் எண்ணி வைக்க வேண்டியிருப்பது, இங்கிருந்து டெண்டை தூக்கின பிறகு சென்னையில் போய் அடுத்தென்ன செய்வது! இப்படியான சிக்கல்கள் நெருக்கும் போதும்.
கூட  சோர்வையோ அவநம்பிக்கையையோ காட்டிக்கொள்வதே இல்லை.
இந்த துறையின் ஒட்டுமொத்த சரிவில் வேலையிழந்த பலரைப்போலவே நாமும் இந்த சூழ்நிலையை எதிர்கொண்டுதானே ஆகணும் அத்தோடு இது வாழ்கையின் அடுத்த படிக்கு நகர நேர்ந்த ஒரு பெரிய சேஞ் என பாஸிட்டிவாக கொள்வோம்
நிலமை சீராகி அடுத்து வேலையில் அமரும் நாள் வரை சமாளிக்கபார்ப்போம். அப்படியும் முடியாது ரொம்பவும் நெருக்கலான நிலை என்றால் எதாவது ஒரு வீட்டை விற்றாவது சமாளிப்போம். இதில் கலவரப்பட்டு ஆகப்போவது ஒன்றுமில்லையெனும் திடத்தோடு
சம்பாத்தியம் இருந்துகொண்டிருந்த போன வருடத்திற்கும் சம்பாத்தியம் நின்று போயிருக்கிற இந்த வருடத்திற்கும் ஒரு இணுக்கு கூட வித்தியாசம் வந்துவிடாமல் மனையாளையும் மகள்களையும்  அதே கண்களில் அதே கணக்காய் வைத்துப் பார்த்துக்கொள்ளும் மனிதரை நான் கொண்ட அந்நாளும்  இதேநாள்.

பல மேடுகளைப் பெயர்த்து 
சில பள்ளங்களை சமனித்தபடி 
 தொடர் நீளப் பயணத்தின்
தூர அளவீட்டுக் கணக்கில் 
மற்றுமொரு மைல்கல்லாய்
மண நாள்

படம் : நாளையும் மீளுமெனும் மகிழ்வொளியை பிடித்து வைத்ததும் நானே
Photo

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...