Thursday, October 24, 2013

கதவுக்கு அப்பால்





மனதின் உள்ளே மூச்சுமுட்டுகிற புழுக்கம் தான் வெளியே பரவியதோ!
 தலையில் தணலைக்  கொட்டியது போல வெந்து வழிந்தது.

"ச்சு, இந்த நேரத்தில் கரண்ட் வேறே, எப்போதான் வருமோ" சுவாசிப்பதே கடினமாய் புழுங்கியது அறை. எல்லா வீடுகளையும் போல ஜன்னல் இருக்கவே செய்தது.. திறந்து வைத்தால் தென்னைமரக் காற்று ஜிவ்வுன்னு வரவே செய்யும் 

"எதிர் வீட்டில் அவன் சிவப்புதோல்ன்னு பார்கிறியோ" பள்ளி இறுதி முடித்த சின்ன பையன் அவன் ..அவனைக்கூட விடாமல் சேர்த்து வைத்து பேசுவதில் அப்படி என்ன பேரின்பமஅசோகனுக்கு.சொல்லில் அறைந்த ஜன்னல் அதன் பிறகு திறப்பதே இல்லை.. இது மட்டும் சொந்த வீடாக இருந்திருந்தால் ஆணி வைத்து அறைந்து ஜன்னலை திறக்க முடியாமல் செய்தாலும் செய்திருப்பான்.


கணவனைப் பற்றியே நினைப்பே கசந்தது... கழண்டு விடுவது போல வலித்த இடுப்பும். " என்ன மாதிரி மனிதன், ஆறு மாத கருவை சுமப்பவள் என்ற அடிப்படை கழிவிரக்கம் கூட இல்லாமல் மிருகத்தனமாய் ... மிருகம் கூட தன் இணையிடம் இப்படி நடக்குமா தெரியாது "

புனிதா கருத்தரித்தது இது மூன்றாவது தடவை.. முதல் இரண்டு தடவைகள் போல் இல்லாமல் ஆறு மாதங்களை கடந்தது பெரிய விஷயம்.

"ஏன் தாயி, இப்படி பலகீனமா இருக்கியே, ஊரிலே இருந்து யார்னா  இட்டாந்து வச்சுக்கலாமில்ல, கண்ணெல்லாம் உள்ள போயி பார்க்கவே பாவமா கிடக்க" .. இரண்டு நிமிஷம் நின்று பேச வாய்க்கும் ஒரே ஜீவன் கீரைக்காரம்மா வாஞ்சையோடு சொல்வது.

மெல்லிதாய் சிரித்து.. இல்ல ஆச்சி, அம்மாவுக்கு முடியாது என்பதோடு பேச்சை நிறுத்திக் கொள்வாள். மனதுக்குள் ஆசையாய் இருக்கும், ஊருக்கு போகணும்  அம்மா கைச் சமையலை, காரச்சட்டினியை சுவைக்கணும், தங்கைகளோடு வாய் ஓயாமல் கதைப் பேசணும் இப்படி எல்லாம், எங்கே கொடுப்பினைவந்திருந்த தந்தை கேட்கவே செய்தார்..

"புள்ளைய கொஞ்ச நாள் கூட்டி போகலாம்ன்னு மாப்ள, மசக்கைக் கழிய கூட்டிட்டு வந்து விடறேன்"

வழக்கம் போல் கண்களை இடுக்கி பதில் சொன்னான் அசோகன் 

"கூட்டிட்டு போகலாம், திருப்பி அனுப்பிற எண்ணம் வேண்டாம்" பதில் பேசாமல் திரும்பி போனார் அப்பா..வேறு என்ன செய்வார்.. காலம் காலமாய் முதுகில் சுமக்கும் கட்டுச்சொல் இருக்கவே இருக்கு, வாழாவெட்டி, அடுத்து  பிறந்த தங்கைகள் வாழ்வு. 

பெருமூச்செறிந்தாள் ..இறுக்கிப் பிடித்த ஆடையை கொஞ்சம் தளர்த்தினாள் எரிச்சல் குறையலாம்.. அசோகன் எந்த நேரம் வந்து நிற்கும் அபாயம் உள்ளது..திடுமென வர நேர்ந்தால் தளர்ந்த ஆடைக்கு ஒரு பாட்டு வாங்க வேண்டி இருக்கும். கைக்கு கிடைக்கும் லஞ்ச பணத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சுத்துவது இல்லை.. அடிக்கடி வீட்டு பக்கம் வந்து பத்திரப்படுத்திவிட்டு போவான்.

 நிறைய நீர் அடித்து முகத்தை கழுவியதும் வியர்வை கொஞ்சம் மட்டுபட்டதாய் இருந்தது.துடைக்காமல் ஈரத்தோடு இருப்பதும் நன்றாகவேதளர்ந்து தரையில் சுவரோடு சாய்ந்து  கால்களை நீட்டி அமர்ந்தாள்.

 மூடியிருக்கும் கதவைத் தாண்டி சாலையின் வாகன இரைச்சல். இந்த குடியிருப்பில் ஹவுஸ் ஓனர் தவிர குடித்தனக்காரர்கள் மட்டும் எட்டு வீடுகள்.ஒருவரோடு ஒருவர் கலந்து  அத்தனை பேரும் தாயா பிள்ளையா பழகுவார்கள்.ஹவுஸ் ஓனர் வேறு, குடிந்தனக்காரர்கள் வேறு என்பதே இல்லை .. அசோகன் குணமறிந்து அவளிடம் மட்டும் சற்று ஒதுக்கம் கட்டுவார்கள்.. வாசல் தெளிக்க இறங்கினால் ஒருவரோடு ஒருவர் கேலியும் கும்மியுமாய் சிரித்து வம்புகிழுத்து. அவர்களோடு கலவ முடியாவிட்டாலும் காதில் கேட்டு ரசிக்க கிட்டும்..

இவளைக் கண்டால் சிநேகப்புன்னகை உதிர்பதோடு சரி.. அத்தனை பேருக்கும் அத்துப்படி அசோகன் வீட்டில் இருந்து நான்கு மூலையிலும் ஸ்பீக்கர் அதிர அதிர பாட்டு சத்தம் கேட்கிறது எனில்  புனிதாவை அவன் நைய்ய புடைகிறான் என்றே அர்த்தம்.. வலியில் துடித்து அவள் அலறுவது வெளியில் கேட்காமல் இருக்கவே சத்தமாய் ஸ்பீக்கர் அதிர்வது.

காலையில் வீங்கிய முகத்தோடு வாசலில் கோலமிடும் போது பாவமாய் பார்வை பரிமாறல்கள் இருக்கும் .மற்றபடி துணிந்து யாரும் கிட்டே போய் அவனை கேட்பதில்லை .. "உனக்கென்ன என் பொண்டாட்டி மேல் அப்படி ஒரு அக்கறை" கூசாமல் கேட்கக்கூடியவன் தவிர போலீஸ்காரன் என்பதால் அதிகம் பிரச்சனை என்று வைத்து கொள்வதில்லை..

நெருங்கிப் பேசுவது என்றால் ஹௌஸ் ஓனர் அம்மாதான்.. அதுவும் அன்றைக்கு அப்புறம் குறைந்து போனது. " தீ” மிதி பார்க்க கோவிலுக்கு போறோம் எல்லோரும், நீயும் வந்தா நல்லாத்தான் இருக்கும் ம்ம் சரி இந்த சாவிய   அப்பா வந்தா கொடுத்திடு , சுகர் மாத்திரைய நேரத்துக்கு போடச் சொல்லு "  தந்து விட்டு போயிருந்தாள் . குடித்தனக்காரர்கள் அத்தனை பேரும் அவரை அப்பா என்றே அழைப்பது.

சாவி வாங்க அவர் வருவதற்குள் அசோகன் வந்து விட்டு இருந்தான்.. மாட்டியிருந்த சாவியை எடுத்து கொடுத்தவன் அவன் தான் . எதார்த்தமாக கை நீட்டி வாங்கியவரிடம்  " இந்தச் சாவிய என் பொண்டாட்டி கொடுத்திருந்தாலும் இப்படித் தான் கை உரச வாங்கி இருப்பீங்களோ" அதை கேட்டு பெரியவர் அதிர்ந்தே போனார் .சரி போதையில் பேசறான் என்பதாக நகர்ந்து விட்டார்.

சுத்தி இத்தனை பேர் இருந்தும் வாய் வார்த்தைக்கு கூட யாரும் இல்லாமல் போனது..  என்ன கேடுக்கு இந்த வாழ்க்கை ..

அவன் வீடு வரும் போதும் அவள் எப்படி இருந்தாலும் குற்றம் " அடச்சே, வீட்டுக்கு வந்தா உன் எண்ணை வழியிற மூஞ்சியத்தான் பார்க்க வேண்டி இருக்கு. ஏண்டி இப்படி அடிபட்ட பஞ்ச பரதேசி மாதிரி நிக்கிற " என்பான் அதற்கு மாறாக இருந்தாலும் "எவனுக்கு இந்த அலங்காரம்" என்றே விஷம் கக்கும் .. பதிலுக்கு ஒரு வார்த்தை வாயைத் திறந்தால் வீட்டில் ஸ்பீக்கர் அதிரும்.

 இரண்டு வருட தாம்பத்தியத்தில் பல தடவைகள் தற்கொலை எண்ணம் தோன்றி வழக்கம் போல கைவிடுபவள் . "தற்கொலை செய்து கொள்வதற்கு கூட தைரியம் வேணும்.. நம்மைப் போல பிள்ளைப் பூச்சிக்கு  மரணம் கூட கிட்ட வாய்க்காது "..

மின்விசிறி சுழலத் தொடங்கியது. விட்டத்தில் சுழற்சியை வெறித்தபடியே தரையில் சாய்ந்தவள் எப்படியோ தூங்கி போயிருக்கிறாள். தலைக்கு மேல் யார் யாரோ திமுதிமுவென ஓடுவது போல ஒலித்தது.. கூடவே குவியலாய் சத்தம் ." தூக்குங்க, தூக்குங்க.. தண்ணிய கொடுங்க"

திறக்க முடியாமல் கண்களை திறந்து சுழற்றினாள்.. எங்கே என்ன நடக்குது, யாருக்கு என்ன. அவசரமாய் எழுந்து கொள்ள நினைத்த போதும் முடியாமல் அதுவரை வெறுந்தரையில் கிடந்தது கால் மரத்து முரண்டியது

---                                  ---                  ---                      ------

அதற்கு மேல் வண்டியை செலுத்த முடியாதோ என்றிருந்தது.  காலையில் இருந்து உணவெடுக்காத வெறும் வயிறு வேறு சுருட்டி இழுத்தது .விரதம் பழக்கம் தான்.. இன்று ஏனோ உடலை அசத்தியது...அல்லது இந்த பாக்கை இப்போது போட்டு இருக்கக் கூடாதோ? எப்படியோ இந்த பழக்கம் அவனிடம் தொற்றிக்கொண்டு விட்டது


தரிசனம் முடிந்ததும் கோவிலோடு திரும்பி இருக்கலாம்... நண்பனை பார்க்கவென கிளம்பியதே தப்போஓரங்கட்டி மரநிழலில் நிறுத்தினான்.
 நெஞ்சும்தொண்டையும் சேர்ந்து காந்தியது . என்ன மாதிரி உபாதை என
இனம் காண முடியாதபடி என்னவோ செய்தது.
நிற்கும் இடத்தில் இருந்து நேர் எதிரே தெரிந்த கட்டிடத்தில் ஒரு பெரியவர்
தென்பட்டார்.. கண்ணை சுத்தி வெள்ளை நிறத்தில் பூச்சி பறப்பது போன்று ஒரு பிரமை .. தட்டுத் தடுமாறி கேட்டைத் திறந்து பெரியவர் இருக்கும் இடம் வரை வந்து விட்டவனைக் கண்டு கிழவர் திகைத்தே போனார்..

யாரோகண்மண் தெரியாமல் குடித்தவன்உள்ளே வரை வந்து விட்டான் ..

அந்த நேரத்தில் குடியிருப்பில் ஒருவரும் வெளியே தென்படவில்லைஅவர் வீடுமே கூட மூடி இருந்ததுஉள்ளே மருமகள் உறங்குவாளா இருக்கும்..
கைக் கால் விழுந்த பிறகு இவருக்கு இந்த இடமும்சாய்வு நாற்காலியும் தான் சொந்தம்.. வருகிறவனை எதிர்கொள்ள தன் பிரம்பை இடது கையில் எடுத்து
 கெட்டியாக பிடித்தவண்ணம் புருவத்தைச் சுருக்கி கூர்ந்தார்.


வந்தவன்வார்த்தை வராதவனைப் போல சைகையில் தண்ணீர் என்பதைப்
 போல் சைகை காட்டினான்.. அவருக்கு பக்கத்தில் இருந்த குவளையில்
 தண்ணீர் தீர்ந்து விட்டு இருந்தது,, இருந்திருந்தாலுமே கொடுத்திருப்பாரா
 என்பது சந்தேகம்.


அவனை அங்கிருந்து விரட்டி விடக்குறியாய் இருந்தார் கிழவனார்..அவனோ அப்படியே சுருண்டு அமர்ந்தான் . இது ஏதடா வம்புஅவர் பயம் அவருக்குதானே இந்த வீட்டு வாசலுக்கு ஒரு உபரிமருமகள் பூதாங்கி பார்த்தால் சாமியாடிவிடுவாள்.

கையில் இருந்த பிரம்பால் நெம்பி விரட்டினார்.."போப்பா போவேறே
 எங்கவாவதும்கிளம்பு " உடைந்த குரலை எழுப்பி அவரால் இவ்வளவே
மிரட்ட முடிந்தது . கம்பால் நெட்டித் தள்ளியதில் எழுந்து விட்டான் தான்,
நடக்க முடியுமென தோணவில்லைஇரண்டே எட்டு எடுத்து வைத்தவன்
அடுத்த வீட்டு வாசலில் குப்புற விழுந்தான்.

 அவன் விழுந்ததும்,கிழவனார் பெரிதும் பயந்தே போனார்சாய்வு நாற்காலியின் இரும்புப் பிடியில் பிரம்பால் தட்டியப் படியே முடிந்த அளவு சத்தம்
எழுப்பினார் .. மாடியில் புகைத்துக் கொண்டு இருந்த ஹவுஸ் ஓனர் தான்
முதலில் ஓடிவந்தவர்.. அவர் குரலுக்கு மற்றவர்களும்

டேய் மாதவா தண்ணீர் கொண்டு வாபேரனுக்கு குரல் கொடுத்த படியே விழுந்து கிடந்தவனை புரட்டிப் போட்டார்.. அரைமயக்கத்தில் இருந்தவன் தண்ணீர் தொண்டையில் கொஞ்சம் இறங்கியதும் மெல்ல முனகினான்.." நான் தான்
மாதவன்.. சார் மாதவன் நான் " என்பதற்கு மேல் வாய் கோணி இழுத்தது ..

சொல்லுப்பாஎன்னாச்சு.. உன்பேரும் மாதவனா விசாரித்தபடியே நெஞ்சில் முதுகில் தடவி கொடுத்தார் ஹவுஸ் ஓனர்..வினாடிக்குள் என்ன நடக்கிறது என்றே எவரும் யூகிக்கும் முன்  அவன் உடம்பு தூக்கிப் போட்டது .. குருதியோடு சேர்ந்து வாயிலெடுத்தான்.. கண்கள் சொருகி இரண்டு நிமிடத்துக்குள்
அது நடந்தது.

புனிதா கதவை திறந்த போது அவள் கண்டக் காட்சி இதுவே.. மிக மிக அருகில் துடிக்க துடிக்க ஒரு மரணத்தை கண்டதும் அவள் பூஞ்சை மனம்
நிலைகொள்ளாமல் அதிர்ந்தது.. அப்படியே சரிந்து விழுந்தாள்.



அடுத்த இரண்டு மணி நேரத்தில் அந்த இடத்தில் ஒரு திடீர் மரணம் நிகழ்ந்ததன் சுவடே இல்லை. போலீஸ் ஸ்டேஷனுக்குப் பின்னே அமைந்த குடியிருப்புத் தவிர ஹவுஸ் ஓனருக்கு ஸ்டேஷனில் அத...்தனைப் பேரையும் தெரியும் என்பதால் சிக்கல் ஏதுமின்றி இறந்தவனின் அடையாள அட்டையைக் கொண்டு அவன் வீட்டுக்குத் தகவல் சொல்லி எல்லாம் முடிந்தது. அவ்விடம் சுத்தமாக நீரடித்து க் கழுவி விடபட்டிருந்தது.

முன் மாலையில் வீடு திரும்பினான் அசோகன்.. அதீத டிராஃபிக் ரோட்டில் பணி.

நாள் முழுக்க வெயிலில் நின்றதன் களைப்பைத் தவிர சாதாரணமான முகபாவத்துடன் அவன் இருப்பதை வரும்போதே பார்த்து விட்டார் ஹவுஸ் ஓனர் ..

அவன் வீட்டு வாசலில் நடந்த அசம்பாவிதம் முறையாகத் தெரிவித்து விடவேண்டும் என்பது அவர் நினைப்பு.
கைக் கால் முகம் கழுவி வருவதற்குள் உணவைச் சுடவைக்க அடுக்களையில் இருந்தாள் புனிதா.. அப்படி ஒரு உடல் வலி, தலைத் தூக்க முடியாத அளவு கனத்தது. காய்ச்சல் தானோ என்றிருந்தது. அடுக்களைச் சுவரில் சாய்ந்த வண்ணமே நின்றவளுக்கு கணவனிடம் ஹவுஸ் ஓனர் நடந்ததை விவரிப்பது கேட்டது .. திக்கென்றது ..
வந்ததும் ஏன் சொல்லலைன்னு எகிறப்போகிறான்.. நிறைய தண்ணீர் குடித்தப்பின் சற்று நிதானித்து உணவோடு முன்னறைக்கு வந்தவள் கண்டது கையில் சுருட்டிப் பிடித்த பெல்டோடு கண்கள் சிவக்க அவன்..

"என்னடி நாடகம் இதெல்லாம், யாரவன் உன்னைப் பார்க்க வந்தவன்" தலைமுடி கொத்தாகப் பிடிக்கப்பட்டது..
"அய்யோம்மா சத்தியமாய் எனக்கு எதுவும்" முடிக்கு முன் முதல் அறை விழுந்தது.. ருத்ரம் அவன் கண்களில் " இத்தனை வீட்டை விட்டு இங்க வந்தானாம், இவளுக்கு ஒண்ணுமே தெரியாதாம், யாரிடம் கதை? .. இதுதானா நீ பிள்ளைப் பெறப் போகும் சேதி .. வார்த்தைகளின் விஷம் செவிப்புலனை அடைத்தது. பிறகு சௌந்தரராஜன் தன் அழுத்தமான குரலில் அந்த அறையின் நான்கு மூலை ஸ்பீக்கரிலும் பாடினார்.

வெளியே சிலர் கரித்துக் கொட்டினர் .. " பாவி இவனெல்லாம் மனுஷனா, கையில் கெட்ட வியாதி வர. இப்படிப்பட்ட ஆட்களுக்கு எல்லாம் ஒன்னும் நடக்கமாட்டேங்குதே"

கொஞ்ச நேரத்தில் செருப்பை மாட்டிக்கொண்டு அவன் கிளம்பிவிட்டான்.. அடுத்த வினாடி சாத்திக்கொள்ளும் கதவு திறந்தே கிடந்தது. இன்னமும் சத்தமாய் பாடல் நிறுத்தப்படாமலும்.

திறந்திருந்த கதவு வழியே எட்டிப் பார்த்த ஆச்சி அலறினார்..

காலுக்கடியில் குருதிப்பெருக.. உயிர் அறுக்கும் வலியோடு திணறிக்கொண்டு இருந்தாள் புனிதா..





 ** இது புனைவில்லை என்பதால் வேறென்னச் சொல்ல
கண்களில் நேர் குத்துகிற காட்சிக் கோர்வைகளின் நிழற்படம் கதையாகிவிடுகிறது .. ஜென்மத்துக்குக் கல்யாணம்னு ஒண்ணு கூடவே கூடாது, கன்யாஸ்திரியாக போய்விட இருபது வயது வரை தீவிரமாய் நினைக்க வைத்தது புனிதாவினால் ஏற்பட்ட தாக்கம்.
இருபதுக்குப் பின் என்னவென்று கேட்டால் !

காலமும், சூழலும் மாற்றக்கூடும் நமக்கான காட்சிகளை !!!!

--புவனம்
 
 
 


Tuesday, October 22, 2013

நிழல் முகம்



அனேக கண்கள் சிகப்பேறியும்
மதத்தலின்  கண்கள் பசலை பேசியும்
மற்றதன்  கண்களில்
நீலம் பாய்ந்துமாய்
நுறைத்திருந்தது கறுத்த இரவு
பார்வையற்றவளின்
நிரண்டிய கனவில்
தரையிறங்கிய மொத்த
ஆகாயமும்
முத்தத்தின் நீளத்துக்கு
துயிலத் தெரிந்த
நத்தைக்குள் சுருண்டது

வெட்டிவேரின் வாசத்துக்கு
முகஞ்சிடுக்கும்
எருக்கலஞ்செடியையும்
நனைத்தே ஊர்கிற காற்று
மேலும் சற்று சிலுப்பியது

உதிர்மணலடுக்கின் கீழ்
ஊற்றுத்  துளிகளின்
கர்வத்தோடே
கன்னிமை நெகிழ்த்த தந்தது
அவ்விரவு

-புவனம்

Thursday, October 10, 2013

காட்சிக்கு வெளியே



உறக்கமும் விழிப்புமென
களிம்பேறிய பாத்திரங்கள்
அதங்கம்  பூச மறந்த நாடகங்களில்

 தரையிறங்கிய பின்பும்
 மேல்நோக்கும் நோவில்
 பால் வற்றிய வெற்றிடத்தின்
பசித்த படிமம்

கருணைக் கொலைக்கென
பழக்கிய கத்தி
கதவுகளற்ற பிணவறைக்குள்
மழுங்க நேரலாம்

அந்தரங்கங்களை திறவுவதற்க்கான
சாட்சி ஒப்பமாய்
 நிரம்பவே நெளிகிறது
கைக்குள் ரேகைகள்

 கண்துடைப்புக்கேனும்
ஒற்றை விரலை
மிச்சம் வைத்துத் தீர்ந்து போ

-புவனம்

Thursday, October 3, 2013

நான் என்பதிலிருந்த நீ



இரும்புப் பிடியில்
சிக்குண்டு சிணுங்கிய
முற்றத்து ஊஞ்சல்

அணில் கொறித்த பழத்தை
நாவின் நீர் கலவ
பங்குண்டதன் தோட்டம்

நான் ஏற்ற ஏற்ற
நீ ஊதி அணைத்த விளையாட்டில்
முகம் திரிந்த
மாடத்து விளக்கு

கருவேப்பிலை தாளிப்புடன்
காதல் வாசம் பிடித்த
சமையல் மேடை

மழைக்கு பிந்தைய இரவுகளில்
வானம் போர்த்தி துயின்ற
மொட்டை மாடி

இங்கு தான் எங்கோ
முன்னாட்களின்
உயிர் இருத்திப் போகும்
நீ
தூரத்தில் தேய்ந்த புள்ளியாவதை
வெறித்தவண்ணம்
நான்
புலம் திரும்பவியலா
சுட்ட மண்கூடு
 
-புவனம்

Tuesday, October 1, 2013

திரிபின் சிறகுகள்





உருபடாமல் உள்ளே திரண்டதன் கசகு
சுருளத் திரட்டி எதிர் எறிந்த பந்து
எந்நேரமும் திரும்பக் கூடலாம்

எவரும் நடாத முட்புதரில்
கிளைத்திருக்கிறது ...
முரண்டுதலின் காரணி

நேற்றைக்குப் பின்னான இன்றிலும்
திமிர்ந்தலையும் பசி
உண்ணச் சொல்கிறது
ஒரு சொட்டு துரோகத்தை

கனன்றெரியும் தீச்சுடரின்
கண நேரப் புணர்ச்சிக்குப் பின்னான
விட்டில் பூச்சியின் நிறமே
தோய்கிறது வளர்பிறை இரவுகளில்

தனக்கான காட்சிகளில்
நிரம்பிக்கொள்ளும்
வெற்று வெளியின்
உரிந்த தொலியென
தட்டான்களின் படிமலர்ச்சி

நீந்தத் தேவையில்லை இனி ...

 
-புவனம்

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...