Thursday, March 21, 2019

AUG 2015 - Vadodara trip

விமானம் தரையிறங்கி இமிக்ரேஷன் இத்யாதிகளை முடித்துக்கொண்டு வெளியே வர இரவு மணி சரியாக ஒன்று. இரவுணவு உண்ணாததால் பசியாறத் தேடினால் அஹமதாபாத் விமான நிலையத்தில் உணவு விடுதியே தென்படவில்லை. அளவிலும் சிறிதே.

மழைதூறி முடித்திருந்த இதமான குளிர்மை. மெய்யாலுமே குப்பையில்லாமல் சுத்தமாகவே தெரிந்த சீரான சாலை.
அங்கிருந்து வடோதராவில் தங்குமிடம் அழைத்துச்செல்ல கார் புக் ஆகியிருந்தது. சரி வழியில் பார்த்து கொள்ளலாமென பார்த்தால் அந்நேரத்தில் எல்லா கடைகளும் அடைப்பு. நல்லவேளையாக அஹமதாபாத் ரெயில் நிலையத்திற்கு எதிரே அத்தனை சுறுசுறுப்பாய்  கூட்டம் நிரம்பி வழிய விழித்திருந்தது ஒரு  உணவகம்.
உள்ளே போனால் நான்கு பேர் கொண்ட ஒரு டேபிளில் அகால நேரத்திலும் பொரித்த கோழிக்கால்களை பதம் பார்த்துகொண்டிருக்க எஞ்சியிருந்த மற்றவர்கள் தேனீரை அதும் கப்பில் அல்லாமல் ஒரே மாதிரி அத்தனைபேரும் சாசரில் ஊற்றி உறிஞ்சிக்குடிப்பதைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது.  அதுதான் இங்கே பழக்கம் போல. மதுவிளக்குப் பகுதி என்பதால் ஞாயிறு இரவென்ற போதும் மனிதவாடை சுத்தமாகவே இருந்தது. பரவாயில்லை.

உணவு அட்டவணைப்பலகை முழுக்க முழுக்க குஜராத்தியில் எழுதபட்டிருந்தது. வழியே பார்த்த அடைத்திருந்த அத்தனை சின்னச்சின்னக் கடைகளிலும் மருந்துக்கு கூட ஆங்கிலம் இல்லை பெயர் பலகைகளில் குஜராத்தி மொழியில் தான் எழுதபட்டிருந்தது.

சப்பாத்தி தனியாகவும் அதற்கு தொடுகறி தனியாகவும் விலைகொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது. ஆர்டர் செய்த சன்னா மசாலாவில் கொட்டிவைத்த எண்ணெய் தவிர உப்பும் இல்லை உரப்புமில்லை. இருந்தும் நானாவது ஒரு சப்பாத்தியை முழுதாக விழுங்கி வைத்தேன் .. கணேசன் மென்று முழுங்கி மூன்றே வாய்தான் ஒதுக்கிவிட்டு. உறிஞ்சுக்குடித்த கூட்டத்தை பார்த்து தேனீர் கொண்டுவரச் சொல்லத் துணிந்தார் போலும். இரண்டே மிடறில் மிச்சம் வைத்து
எழுந்து வெளியே வந்தாயிற்று. அத்தனை சுவை!

வழியில் நடுநிசியில் பயணித்த இருசக்கர ஓட்டிகளை செக்கிங்கோ, வசூலோ ..காவல்துறை தன் கடமையை செய்து கொண்டிருந்தது.

பத்தே நிமிடத்தில் நெடுஞ்சாலை தொடங்கிவிட வடோதராவை அடைய ஒன்றரை மணி நேரம் பயணிக்க வேண்டும். அதற்குள் வரும் இரண்டு சுங்கச்சாவடிகளுக்கு ஒரே கட்டணம்.
சாலை நெடுக சீராக, நல்ல விளக்கு வெளிச்சம். வழி நெடுக கண்ணுக்கு குளிர்ச்சியாக பசுஞ்செடிகள் பராமரிப்பு. எல்லாமே பரவாயில்லை.

காய்கறிகளை ஏற்றிச்செல்லும் நிறைய லாரிகளையும் , இரவோடிரவாக அச்சடித்து சுடச்சுட செய்திகளை அள்ளிச்செல்லும் தினசரி நாளிதழ்களை சுமந்த வேனையும் வேடிக்கைபார்க்க வாய்த்தது.

வடோதரா பார்டர் தொடக்கத்திலேயே மஹி ரிவர் எனும் போர்ட் கண்ணில் பட்டது. அடர்ந்த இரவில் விரியும் நீர்நிலையை பார்பது அத்தனை ரம்மியமானது. இனிதான் வெளிச்சத்தில் பார்க்கவேண்டும்.
விடியல் நேரத்தில் பார்க்க வாய்த்தால் இன்னும் அள்ளும்.

அதிகாலை மூன்றுக்குள் தங்குமிடம் அடைந்து அரைகுறையாய் உறங்கி முதல் நாள் அலுவலை பார்க்க கணேசன் கிளம்பியாயிற்று. வழமைபோல் நான் தான் தனியே ஊரைச் சுற்றிக்கொள்ள வேண்டுமாம்.. வடக்கே குப்பைகொட்டிய அனுபவம் இருப்பதால் இங்கே பழகிக்கொள்ளுதல் அத்தனை கடினமாய் இராதென நினைக்கிறேன். பார்ப்போம். பழகுவோம்

#Vadodara_trip 

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...