Friday, March 21, 2014

கதையின் கதை



மரப்பாச்சிகளின் நிழலுக்கும் 
உளி அறைந்து கொண்டிருந்தவனின் 
ஊர் அது 

உடைந்தவர்களின் வார்த்தைகளுக்கு
பசை விற்பவனாகவே
அறிமுகமாகினான் மற்றொருவன்

ஊரானுக்கும் ஒட்டவந்தவனுக்குமிடையே
இளக்கமற்ற
புன்னகையை முறித்துப் போட்டான்
மூன்றாமவன்

அது
வில்லாகி
பாம்பாகி
பின்
கயிறாகத் திரிந்ததே கதை

-புவனம்

Thursday, March 6, 2014

A SEPARATION - பெர்ஷியன் மொழித் திரைப்படம்



அழிப்பான் கொண்டு தன் பக்கமிருக்கும் நியாயமின்மையை இல்லாமல் செய்ய முயலும் எதுகளிப்பையும்,
 தன்பொருட்டு குற்றத்தையும் பிறர் மேல் ஏற்றிச்சொல்லும் எக்காளத்தையும்,
தன் நிலைபாடே தனக்கு சரி என்பதாய்
சுய நலமிகளாய் உலாவும் மனித உயிரிகளின்  
அன்றாடத்தின் அடைபொருள் சொல்லும்  திரைக்கதை  

பொருளீட்டுவதில் கணவனுக்குச்  சமமாய் இயங்கும் ஈரானின் இக்காலத்து பெண்மணி சிமின்.
அடுத்த படிநிலை உய்ய நாட்டை விட்டு இடம்பெயர்வது அவள்விருப்பம்.. கணவன் நடேர்   தன் வயதான, சுயநினைவு தவறிய தன் தந்தையை தனியே விட்டு வர மறுப்பதிலும், விவாக பந்தத்தை அத்தோடு முடித்துகொள்ளத் துணிந்ததிலும் தொடங்குகிறது கதை.

தாய், தந்தை பிரிவில் எவர் பக்கம் நியாயமென தெளியாது குழம்பும் மகள் அப்போதைக்கு தந்தையுடனே தங்கி விடுகிறாள்.
தன்னையே அடையாளம் காணவியலாத, எந்நேரமும் கண்காணிப்பு தேவைப்படும் வயதான தந்தையை கவனித்துக்கொள்ள ஆள் அம்ர்த்துகிறான் நடேர்  என்பது மற்றுமொரு இடியாப்ப சிக்கலின் ஆரம்பம்.

வேலைக்கு வரும் பெண்மணியோ கர்பிணி, கணவன் அறியாது.. பணமுடைச்சிக்கலை கலையவே அந்த வேலையை தேர்ந்தெடுத்தவள்.வேலைப்பளு, உடல்நிலை ஒத்துழையாமை காரணமாய் மருத்துவம் பார்க்க செல்ல வேண்டிய நிலை அவளுக்கு.
யாருமில்லாத நேரத்தில் பெரியவர் எழுந்து வெளியே போய்விடாது இருக்க உறங்கும் அவரை எழமுடியாது கட்டிவைத்து போகிறாள் ..

மீறி எழமுயன்ற அவர் விழுந்து உயிருக்கு போராடிய நிலையில் பார்த்ததும் கொதித்து, கர்பிணி என்பதையும் மறந்து வீட்டைவிட்டு ஆவேசமாய் வெளியே தள்ளுகிறான் நடேர். 


கர்ப்பம் கலைந்த நிலையில், கடுங்கோபக்கார கணவனின் நிந்தனைக்கு பயந்து முதலாளியைக் குற்றம் சொல்லி நீதி கேட்கிறாள் அவள்..
தந்தையின் உயிர் இவளால் போகவிருந்தது...இவளே குற்றவாளி என்கிறான் அவன். 

நீதியின் முன் இருவருமே சமநிலைக் குற்றவாளிகள் என்றானதன் பின் வெளியேறப்  பிறக்கிறது பொய்க்கு மேல் பொய்.இதில் தந்தைபக்கமிருக்கும் நியாயமின்மை உறுத்துகிறது மகளுக்கு.

மொத்தத்தில் 
அத்தனை பாத்திரங்களும் குழப்பம், நெருக்கடி,நிலையின்மை, பிரச்சனை, பொய்மை இத்யாதிகளில் அடைபட இத்தனைக்கும் தானே காரணம் என இம்மியும் உணராது எவ்வித அடைபடலும் இல்லாது நிறைந்த நிம்மதியோடு உலவுவது  பெரியவர் பாத்திரமே.. 
நிலைதப்புவதை விட நினைவு தப்புவது மேல் எனப்படுவதாய்.. 

பெரும்பாலும் நம் பக்கத்துக்கு படங்களில் இருக்கும் ஜிகினாத்தனங்கள் கொஞ்சமும் இல்லாமல் கதாபாத்திரங்களின் உரையாடல்களைக் கொண்ட காட்சிகளில் நகர்த்தியே  படத்தை நிமிர்த்தமுடியும் இரானியத் திரைப்படங்கள் எப்போதும் வியப்பை தருகிறது.
2011-ன் சிறந்த வெளிநாட்டுப் படமாக ஆஸ்கார் உட்பட பல விருதுகள் வாங்கிய திரைப்படம் 

Tuesday, March 4, 2014

உடலைத் தாண்டியும் இவளென

பொய்த்த மழைக்கு 
பிறழ்ந்து 
வனந்தோறும் சுற்றித்திரியும் வெயில்
முதுகில் படர்த்திய வெம்மையை நீவும் 
கொம்புகிளைத்த மான் 

நிரம்பிய நீருக்கு
தாகிக்கும் காக்கைகளுக்கே
காத்திருக்கும்
கழுத்துவரை
கற்களிட்ட
குவளை

தனிமை தின்றது போக
எஞ்சியதன்
முத்தம் பகிர
ஆகாயத்துக்கு எவ்வியதாயொரு
ஊருணித்தவளை

வரைவில் ஏற்றிய
இத்தனைக்கும் பிறகு
தீண்டாத நிறங்களின்
தீட்டலில்
இவளும்

-புவனம் 

Monday, March 3, 2014

என்னைப்பிடித்த நிலவு

ஊர்சுற்றி வரும்போது புர்ஜ் கலிபா,ஐபின் பதுதா, எமரைட்ஸ் மால் பக்கங்களில் அடிக்கடி கண்ணில் இப்படி முதிந்த ஜோடிகள் தென்படுவார்கள்.. 

தலைப்பட்ட எல்லா கடமைகளும் முடித்தபின் இன்னமும் ருசிகுறையாத தேனிர் காலத்தை சேர்ந்து பருகும் நோக்கோடு எந்தெந்த நாட்டிலிருந்தோ வந்த ஜோடிகள் கைகோர்த்து திரியும் போது லேஸா பொறாமை கூட எட்டும்.

மிகுந்த ஈடுபாட்டோடும், ரசனையோடும் சுற்றி வரும் இவர்களை பார்க்கும் போது தோன்றும் .. ஏன் நம்ம ஊர் மக்கள் இப்படி முதிர்ச்சியை கொண்டாடுவதில்லை, ஐம்பதை தாண்டும் போதே ஏன் இப்படி அதீதமான ஓய்ச்சலோடு அப்பாடா எல்லாம் முடிந்ததென வெறும் கடமைக்காவே வாழ்வது போல்..

ஒட்டுமொத்தமாய் எல்லா கவலைகளையும் உள்ளே இழுத்துப்போட்டுக்கொள்வதும், விரைவில் நோய் தேடிக்கொள்வதும், நம்ம கையில் என்ன இருக்கு என்ற விட்டேத்தியான போக்கும் .. வயசாயிடுச்சில்ல என்ற பதத்தை அதிகம் புலங்குவதும் நம்ம ஆட்கள் தான்.

விரும்பிய வகையில் பிடித்ததை செய்து, ரசனையோடு யாரேனும் தென்பட்டால் எதிர்மறை விமர்சனத்திற்கும் குறைவில்லை " பாரேன் நிறைய சதங்கை வைத்து கொலுசு, கையில் மருதாணி, இந்த வயதில் மேலாமினுக்கிதனம் தேவையா " , சில பெண்களே அடுத்த பெண்களை பார்த்து, வயதை முன்வைத்து ஊர் பக்கம் விமர்ச்சிப்பதை பார்க்க கடுப்படிக்கும் ...

வயதில் என்ன இருக்கு
வாழும் வரை கையில் அள்ளிய
ஈரமணலில் பதம் செய்யலாம்
புன்னகைக்கும் பதுமைகளை

புதுமைப்பித்தனில் செல்லம்மாவில் மூன்று விஷயம் பிடித்தது

* கதை முடியும் இடத்தில் இருந்து தொடங்கிய போதும் ,
முடிவே தெரிந்த பின்னும் சுவரசியத்தின் சொட்டு மாறாமல் கதை நகர்ந்த விதம்.

* நோய் படுக்கையில் கிடக்கும் பழுத்த இல்லாளுடன் அவளின் இறுதி சுவாசிப்பு வரை முதிர்ந்த காதலோடு கணவர்.

* கடைசி நிமிடம் வரை தாய்மடிக்கும், புதுபுடவைக்குமான ஆசைகளோடு உயிர்த்திருக்கும், தலை நிமிர்த்தி நிலைக்கும் வரை தன் உடல் சுத்தம் முதற்கொண்டு தனக்கானதை தானே செய்துகொள்ள விழையும் செல்லம்மாவின் வீம்பு சுயம்.


எழுதி எத்தனை வருடங்கள் ஆன பின்பும் புதுமைப்பித்தன் ஈர்க்கும் எழுத்தில்

//மனசில் வருத்தமில்லாமல், பிலாக்கணம்
தொடுக்கும் ஒரு பெண்ணின் அழுகையில் வெளிப்பட்ட வேஷத்தை மறைப்பதற்கு வெளியில் இரட்டைச்
சங்கு பிலாக்கணம் தொடுத்தது.//

இந்த கடைசி வரியில் எஞ்சியிருக்கிறது நிதர்சனத்தின் உயிர்

Why did you come to my house - கொரியன் திரைபடம்






தொடர்ந்து பின் துரத்தும் தோல்விகளில் விரக்தியடைந்த ஒருவன் வாழ்வில் கிஞ்சித்தும் படிப்பற்று தற்கொலைக்கு முயல்கிறான். ஆறுமுறை அதிலும் தோற்றவனை எழாவது முறை ஏமாற்றாமல் உயிரை அறுக்க கயிறு கழுத்தில் இறுகிகொண்டிருக்கும் வேலையில், அவன் மரணத்தை துளைக்கும் கதவுகளைத் திறந்து வீட்டிற்க்குள் வருகிறாள் ஒருத்தி..

அவளால், அதே கயிற்றில் கை, கால்கள் பிணைக்கப்பட்டு சொந்த வீட்டிலேயே சிறை வைக்கபடுகிறான் அவன்

எதிர்வீட்டில் வசிப்பவனை வேவுபார்க்க இந்த வீட்டை தேர்ந்தெடுத்தவள் அவள்.பள்ளி நாட்களில் நேர்ந்த இனகவர்ச்சிப் பிடிப்பை காதல் என்றும், அதில் தான் தோல்வியடைந்தவள் என்றும் ஏய்த்தவன் எதிர்வீட்டில் இருப்பவன். அவனை கொன்றுவிடுவதே தன் வாழ்வின் லட்சியம் என்கிறாள்.

அந்த பெண்ணின் துறுதுறுக்கும் குழந்தை முகம்.எந்நேரமும் கண்காணித்து கொண்டிருந்த எதிர்வீட்டு வாசி நெருப்பில் மாட்டிகொண்டதும் பதறி ஓடி காப்பது, நிறைவேறாத ஆசைகளை கண்களில் தேக்கியவளாகவே இறந்தகாலத்தில் வாழ்பவள் அவள்.

இவ்விருவரின் உலகத்தில் நடந்தவைகளுக்கும் நடக்கபோவதுகளுக்கும் ஊடே இழையோடும் புரிந்துணர்வு ..
எந்த அடைப்புக்குறிக்குள்ளும் புகுத்த முடியாத அன்பை சொல்லும் கதை..

சின்ன சின்னதாய்

*ஒற்றை நூல் பிடியில் 
காற்றாடிச் சிலும்பலாய் 
திமிர்ந்தலையும் ஞாபகங்கள்
வண்ணம் தீட்டிக்கொள்ளலாம் பிடித்த பச்சையில்

*பாதம் கொப்பளிக்கும் சூட்டோடும்
நிழலோடிய புத்தியோடும் 
கோவில் பிராகாரத்தை சுற்றி வரும்பொழுதோ 
அல்லது
நடைபாதையில் 
நடுவழியில் ஒற்றைச் செருப்பு 
அறுந்தபொழுதோ
தலையில் இருந்து காலுக்கு
இறங்கிய கனத்தை இங்கே
கழற்றி விடவும்


*அட ! லேசா...
லேசா தூறல் இந்நாட்களின் மேல் 
போதுமாயிருக்கிறது அதுவாக தேங்கிவிட

*நம்மை நாமே
தீட்டும் ஓவியம்
இந்நாள்வரை 
பார்த்தேயிராதவர்களின்
உருவிலிக்கு பொருத்திப்பார்க்கும்
முகமூடி

*அள்ளிச் சுருளப் போர்த்திய குளிரில்
மோதிக் குலவும் மற்றுமொரு 
மழைத்த நாள் 
நீளும் தண் மத்தம்

*தூண்டிலின் தினவுக்கு 
திக்கித்த மீன்களுக்கிடையில் 
கூடையின் விளிம்பைத் தாண்ட 
திமிரும் மீனாகிறது 
தினத்தையொட்டி கொண்டாடப்படும் 
காதல்

*நம் அந்த நேரத்து மனநிலையை கண்ணாடியாய் காட்டும் எழுத்தோ, ஓவியாமோ எது ஒன்றோ எளிதில் நம்மை, மனதைத் தொடும் .. 
தளர்ந்த மனநிலையில் வாரி அணைக்கும் இசையோ சொல்லோ எது ஒன்றோ
நுரைக் குமிழியின் மதர்வில் 
மற்றும் 
பசி நேரத்து பால் குரலில் 

நார்த் 24 காதம்


சந்தர்ப்ப சூழ்நிலையால் தொடர்பே இல்லாத மூன்று பேர் சந்திக்க நேரும் பயணத்தில் விரிகிறது நார்த் 24 காதம் 

இவன் இப்படித்தான் என வரையறுத்து காட்ட நகர்த்திய முதல் சில காட்சிகள் .. இயல்பில் இருந்து வழுவிய ஒருவன் தனக்கே உரியதான இருள் உலகத்தில் வெளிச்சம் புகுவதை விரும்பாதவனாக, சுற்றிலும் சீரான உய்வோடு சுழலும் நடைமுறைக்குள் தன்னை புகுத்திக்கொள்ளாதவனாக இருப்பதை காட்டுகிறது.. எனினும் இந்தவகையான மன அழுத்தத்தை உடைத்து வெளியேறவே விரும்புகிறான் என்பதால் மருத்தவரை தொடர்ந்து சந்திக்கிறான்..

எது எப்படி இருந்தாலும் பெர்பெக்ஸன் பேர்வழிகள் வேலையில் உப்பிட்டு பிழிந்தெடுத்த புளியாய் இருப்பார்கள் என்பதால் அவன் நல்ல ஒரு பதவியில் இருப்பதும் வியப்பான விஷயம் இல்லை.

கம்பனி தன்னை வெளியூருக்கு அனுப்புவதை விரும்பாமல் வேலையை விட நினைப்பதும், தான் வேலையை விடவிருப்பது மற்றவர்க்கு அதீத மகிழ்ச்சியை தருகிறது என்பதால் முரண்டி வெளியூர் பயணிப்பது இப்படியாக நுணுக்கமாய் செதுக்கப்பட்ட பாத்திரத்தில் ஹீரோயிஸ ஆர்பாட்டம் இல்லாமல் மிக இயல்பு நாயகன் ..

எப்பேர்பட்ட மனிதனிடத்திலும் மறைந்திருக்கும் தாய்மை அல்லது கருணை உணர்வே பெரியவர் தவற விட்ட கைபேசியை கொடுக்க ரயிலை விட்டு இறங்கவும், பின்பு மரணச்செய்தியை மறைக்கவும் அவனை உந்தியது எனலாம்.

அடுத்து கவர்ந்த காட்சி .. பைக்கில் லிப்ட் கேட்ட பயணத்தில் நாயகி காணாமல் போவதும் பெரியவரும், நாயகனும் தேடிக்கண்டு பதறி என்னாவாச்சு என்கிற போது நாயகி கூலா செருப்பு பிஞ்சிடுச்சு என்பதும் .. கடத்தியவனை செருப்பால் அடித்து துரத்தினேன் எனும் அளவு கூலான பாத்திரம் அவள்..

அசராமல் பிரச்சனைகளை அனுபவ அறிவால் நிதானமாக அனுகுபவர் பெரியவர் மற்றும் மனைவி மேல் வைத்திருக்கும் அன்பு , உண்ட கையின் விரல்களில் ஒட்டியிருக்கும் கடைசி துணுக்கு வரை ருசித்து வாழும் நாயகி இவர்களால் இறுக்கத்தில் இருந்து இயல்புக்கு மாறியவனின் கதை.

முதல் முறையாக வட்டத்தில் இருந்து வெளியே வந்தவன் திறந்தவெளி காட்சிகளில் காண்பதும், கனிவதையும் எவ்வளவு அழகாக சொல்ல முடிந்திருக்கிறது திரைக்கதையில்.

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...