Tuesday, March 26, 2019

நானென்பதும்.. எனதென்பதும் DEC2017

பத்தாம்வகுப்பில் #நான்முதுமையடைந்தால்ங்கிற தலைப்பில் பேச்சுப்போட்டியில்  முதல் பரிசு வாங்கியிருந்தேன். இப்ப யோசிச்சுப்பார்த்தா அதில என்ன பேசியிருந்தேன், எதைக்கொண்டு முதல்பரிசு தந்தாங்கன்னு சுத்தமா நினைவு வரமாட்டேங்குது. சரி போகட்டும். நிசமாவே முதுமையடைகிற காலத்தை எப்படி எதிர்நோக்குவதுன்னு முன்னமே யோசிச்சு சரியா திட்டமிட்டுக்கிறது நல்லதுன்னு  தோணும். முக்கியமா தனித்திருத்தலுக்கு. என்னய்யா இதெல்லாமுமா ஒரு விஷயம்... இதுக்கெல்லாமா Trial version. அதது  காலத்தால் கற்றுக்கொடுக்கப்படும். வேற option எதுவும் இல்லைன்னா தானா இதற்கு பழகிக்குவோம்ன்னு இருந்தாலும்கூட ஆயிரத்தெட்டு options இருந்தாலும் தனித்திருத்தலை தேர்ந்தெடுக்கிற கெத்து தனி தான்.
கன்ச்சுவோட அம்மா மாதிரி..
தனி மனுஷி அவங்க. பிள்ளைகள் நால்வரும் நல்ல நிலமையில் சொகுசு வாழ்க்கையில் இருந்தாலும் எவர் கைச்சாவி முடுக்குதலுக்குமான பொம்மை வாழ்கை வாழ்ந்துவிடக்கூடாதெனும் பிடிவாதத்தோடு,
  வயதேற்றமும் நோய்பிடிப்பும்  அவங்களுக்கு  ஒரு பொருட்டே இல்லை. கிராமத்துவீட்டில் தனியே தான் வசிக்கிறார். அடப்போங்கப்பா நாலும் ஆம்பிள பிள்ளைங்களா பெத்து வளர்த்து ஆளாக்கியாச்சு. . யார்க்கிட்டயும் போய் நின்னு பிழைக்கனும்ன்னு இல்லை. இதான் என் இடம். இங்க வருவதுன்னா வாங்க.  உங்க இடத்திற்கெல்லாம் வந்தால் மூனு நாளைக்கு மேல் ஒப்பாதுன்னு கிளம்பி கிராமத்து வீட்டுக்கே போய்விடுவார். நிலமும் அந்த வீடும் கடைசிமட்டும் துணை. முடியாம கிடக்கிற காலத்தில வந்து தூக்கிபோட்டு போங்க அவ்வளவுதான்.. அதுவரைக்கும் நான் தனிங்கிற அவங்க கெத்து எனக்கு பிடித்தமானது.

இந்த வருடம் முடிவதற்குள்
இது  இதையெல்லாம் செய்து பார்த்துவிட வேண்டும்ன்னு ஒரு லிஸ்ட் வைத்திருந்தேன். அதில் தனித்திருத்தலுக்குப்பழகுதலும் ஒன்னு.
 அறிந்தவர் தெரிந்தவர் எவரும் இல்லாத புது இடத்திற்கு தனியே போய், தனியே சுற்றி, தனியே தங்கி தூங்கி என்பது... இதில் தூங்கி மட்டும்தான் இடிக்க மற்றதெல்லாம்  முன்னமே பழக்கிக்கொண்டதுதான்னாலும்  தாளிட்ட அறைக்குள் தனியே கிடந்து இரவில்  உறங்கினதே இல்லை. அறைக்குள் தாளிட்டுக்கொண்டு இரவின் இருளில் தனியேன்னு நினைத்தாலே ஏதேதோ கற்பனைகள் செய்து மனம் மருட்டும்.  அப்படியொரு வாய்ப்பு கிட்டியதே இல்லைங்கிறதால தானோ என்னவோ தனியே உறங்குவதன்மீது அப்பியிருக்கும் பயம் போகாமலே இருந்தது.

என்பதால்தான் இந்த விடுப்பு தினங்களில் ஒரு தனிப்பயணத்திற்கு திட்டமிட்டேன். கூடவே
ம்ம்ம் என்றால் சுணங்கிக்கொண்டும் வீம்பு பிடிவாதத்தோடு எல்லாவற்றையும் பிடித்துவைத்துக்கொண்டும் முரண்டும் மனதை திருப்ப உகந்த ஒரே யுக்தி எனக்கு meditation. முறைப்படி பற்றிக்கொண்டதால் வீட்டின் ஒரு மூலையில் இருந்து  கூட முயன்று பார்க்கலாம் தான்  என்றாலும் மனம் ஒன்றினால் தானே.. சரிதான் அதற்குரிய சூழலுக்கு எங்கே போகலாம்ன்னு யோசிச்சப்ப ஏன் கூடாது  திருவண்ணாமலைன்னு தோன்ற
 இரண்டு நாட்கள் முழுமையான தியானத்திற்கு ரமணாஷ்ரமத்தை தெரிவு செய்தேன்.இதுதான் முதல்முறை அங்கே போனது.
 உண்மையிலேயே மிகச்சரியான இடத்தேர்வு. அருமையான சூழல். பிரமாதமான தியானம். மனசு இலவம்பஞ்சைப்போல லேசா லேசான்னு இருக்கு இப்ப.
தங்குவதற்கும் சுலபமாய் பக்கத்திலேயே சேஷாத்ரியில் அறை கிடைத்தது. நாள் வாடகை நானுத்தி ஐம்பதில் மிக சுத்தமான பெரிய படுக்கையோடு கூடிய அறை , எல்லாக்கதவுகளுக்கும் நேர்த்தியாக வலையடித்த,
ஹீட்டர் வசதியோடு கூடவே கேண்டீன் வசதியோடும், கோயில் மணியோசையோடும், இரவு நடை சாத்துக்கிற வரை எவரோ ஒரு பெண்மணி கணீர் குரலில் கீர்த்தனைகள் பாடிக்கொண்டிருப்பதை  கேட்க முடியும்படியும் அழகான சூழலில் அமைந்த  இராத்தங்கல். என்றாலும் அசந்து தூக்கம்வரும்வரை அறைக்குள் நடைபழகி, புத்தகம் படித்து, பாட்டுகேட்டு, விளக்கை எரியவிட்டு வெளிச்சத்தில் கிடந்து அரைகுறையாக உறங்கி அவ்வப்போது விழித்தென வெற்றிகரமாக ஒரு இரவை ஓட்டியாச்சு.

எதிர்பாராத வகையில்  சுவையான பயணமா அமைந்தது. குறிப்பா நான்கு விசயங்கள்.
ஆழ்ந்துபோகச்செய்கிற தியானம்
சுவையான சாப்பாடு
அதிகாலையில் தொடங்கிய ஆறுகிலோமீட்டர் குட்டி ட்ரெக்கிங் அனுபவம்
 மற்றும் புதுப்புது ப்ரண்ட்ஸ் ..

கூடுதலாக இரண்டு நாட்கள் கிடைத்திருந்தால் வாடகைக்கு சைக்கிள் எடுத்துக்கொண்டு கிரிவலப்பாதையில் சுற்றிவருவதும், மருதம் புவிதம் பள்ளிகளுக்கு ஒரு விசிட் அடிப்பதும் திட்டத்தில் வைத்திருந்தேன்.  இன்றைக்கு நந்திதா குட்டியின் பிறந்தநாள் வேறு கூடவே கடமையும் வீடும் வா வா என்றதால் சென்னைக்கு திரும்பவேண்டியாதாகிவிட்டது.
இந்த வருடத்தில் போன ஊர்களில் தாரசுரத்திற்கும், பாண்டி ஆரோவில்லுக்கும் அடுத்து மீண்டும் போகனும்ன்னு நினைக்க வைக்கிற மற்றுமொரு ஊர் #திருவண்ணாமலை.

படம் - 1.கந்தாஸ்ரம தியான மண்டபத்திற்கு ஏறும் மலைப்பாதையின் தொடக்கம்
2 &3 இடைப்பாதைகள்
PhotoPhotoPhoto
12/27/17
3 Photos - View album

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...