Thursday, March 21, 2019

நானென்பதும்.. எனதென்பதும்

உறங்கப் போகும் முன் தவறாமல் செய்வது..
அன்று செய்த செலவுகள், செய்து முடித்த வேலைகளை எழுதுவது.(இந்த எழுதி வைத்து செய்யும் பழக்கம் கணேசனிடம் இருந்து வந்தது. கடைக்கு கிளம்பும் போது கூட எதை வாங்கவேண்டியது என்ன நிறம் என முன்பே தீர்மானித்து எழுதி வைத்து கண்கட்டிய குதிரை கணக்காய் அதை மட்டும் வாங்கி வருவார்.. என்னை போல விண்டோ ஷாப்பிங் நேர விரய பேச்சே இல்லை)
நாளை செய்ய வேண்டியவைகளை பட்டியலிடுவதும் குழந்தைகளுக்கான சார்ட், சர்குலர்ஸ் மேலும் மறக்காமல் இருக்க வேண்டியனவெல்லாம் படுக்கையறை கதவில் ஒட்டிவைப்பதும் அடுத்த வேலை. கடைசியாக அலாரத்தை முடுக்குவது.
ஐந்து முப்பதற்கு எழுந்துகொள்ள வேண்டுமெனில் ஐந்திலிருந்தே அலாரத்தை அலர விடுவதும் ஒவ்வொரு ஐந்து நிமிடத்துக்கும் ஆஃப் செய்து தூங்கி விழித்து தூக்க கலக்கத்தை விரட்டுகிற விளையாட்டு அலாரத்தோடு நடக்கும்.
ஐந்து இருபத்திஐந்திலிருந்து தியானித்து முப்பதில் அந்த நாள் தொடங்கிவிடும்.

இதையும் தாண்டி பல சமயம் நடுஜாமத்தில் இரண்டரை அல்லது மூன்றுக்கு முடுக்காத மற்றும் அலராத அலராத்துக்கே சொல்லிவைத்த மாதிரி விழிப்பு தட்டும். கண்ணுக்கு என்ன பசை போட்டு ஒட்டினாலும் மூடிக்கொள்ளாத விழிப்பு அது.. வெறுமனே படுக்கையில் கிடக்கவும் பிடிக்காமல் எழுந்து விடும் அந்நேரமே வாசிப்புக்கும், எழுதுகிறேன் என்ற பெயரில் கிறுக்குவதற்கும் ஒதுக்கிய நேரம். கடிகார முள் ஐந்து முப்பதை தொடும்வரை அது நீடிக்கும்.

அந்தந்த நேரத்தை பகுத்து ஒதுக்கி எதையும் செய்ய பழகிக்கொண்டால் எல்லாம் நலம். குழந்தைகளுக்குமே..

எப்படி இவ்வளவு படம் பார்க்க முடிகிறதென ஒரு நண்பி கேட்டாள். மதியம் க்ளாத் ஃபோல்டிங் அயர்னிங் மாதிரியானவைகளை செய்யும் நேரம் அதே கல்லில் இன்னொரு மாங்காயை ருசித்து விடலாம்.. படம் பார்பது தவிர தனியே வீட்டில் சுற்றிக்கொண்டிருக்கும் பொழுதெல்லாம் பாடல்களை ஓட விடுவது. நேற்று கூட ஒரு படம் பார்த்தேன். வாயை மூடிப் பேசவும் படத்தின் பெயர். அதிக செலவில்லாத ஸீரியல் தர படமே பட் ஒக்கே... அளவில்லாத மற்றும் அனாவசிய பேச்சை தவிர்பது படத்தின் கரு. ஒயாத வாய்பேசியாய் எந்நேரமும் கதைத்துகொண்டிருக்கும் உன்னை மாதிரி ஆளுங்களுக்கு தான் எடுத்திருப்பான் போல அந்த படம் என்றாள் தானு.. எனக்கு வாய்த்த தங்கை. கிட்டதட்ட அப்படித்தான் ஆகிறது.

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...