Friday, May 31, 2013

இசைந்ததுவும்



கலைக்கூத்தாடியின் கைக்குழையும்
வித்தை எந்தியவனின் சொற்கள்
ஏணியில் ஏற்றி
நெளிநாகத்தில் இறக்கியாடும்
சொக்கலாட்டம்

மையம் கொண்டாடும் காற்றோடு கூடி
மையலில் வீழ்ந்தாடும் மழையின்
கடைசி சொட்டு ஈரம் தொட்டு
எழுத எத்தனித்தப்  பெயரின்
காந்த ஊக்கியாய்
அத்தேர்ந்த இசைஞன்
இழுத்த இழுப்புக்கெல்லாம்
இயைந்து திறவும் மீட்டலோசையில்
ஆனந்த பைரவி

-புவனா கணேஷன் 

Wednesday, May 29, 2013

விதி

 

முதுகுக்கூனில் கல்லெறிந்து
 குருதிக் குமிழ்
உடைத்து உவந்தவனின்
மனையாள்
கை நிறைய கர்ப்பை அள்ளி
நெருப்பில் குழைத்தாள் ..

பணையச் சூதில்
மதி தொலைத்தவனின்
பத்தினி
மீந்திருந்த  மானத்தை
சமைத்து
காக்கைக்குச்  சோறு படைத்தாள்..

குதவையில் குடும்பத்தை வைத்து
குடி  மிதவையில் மிதந்தவனின்
துணையாள்
குடைசாய்ந்த அவரைக் கொடியை
தாலிக்கொடியில் நிமிர்த்தினாள்..

புறமுதுகிட்டது விதி!

- புவனா கணேஷன் 

Monday, May 27, 2013

வாடகை வீடு

 
கிழிக்காத நாள்காட்டியிலும்
நகர்கிறது தேதி

பற்றுப் பிரியாமல் பாத்திரத்தில் கனக்கிறது
பாலேடு

கழண்ட தாழ்ப்பாளுக்கும்
உடைந்த கதவுக்கும்
உரிமைப் போர்

வாயில் போட்டாலும்
வயிற்றை நிறைக்காத
வாய் - கா தகராறு

உடன் பிறந்தோனும்
ஒன்று விட்ட சோதரனும்
அண்டை நிலத்தோனும்
அன்னியனாக

நீதிமன்ற படிக்கட்டும்
கால் செருப்பும்
தேயத்தேய
வாய்தா
வக்கீலுக்கு வரும்படி

பங்காளியும் செத்துப்போனான்
பகுத்தாளியும் செத்தேப் போனான்..


-புவனா கணேஷன்

குங்குமம் தோழி

மே மாதம்  "குங்குமம் தோழி" இதழின் ஒரு கேள்வி ஒரு மனசு பகுதியில் புவனமும்
 

உவகைச்சாரல்



புல்லோடு பயில் கொண்டு
ஊறிச்  சலனித்த பனித்துளியின்
முத்த ஈரம்

சிடுக்கிடும் காற்றோடு
சப்திக்கும் குழல் நகை 

உருவிலி காணாததொரு
உவத்தல் மொழி மோனம்

விழித்துயிர்த்த நுண்ணுணர்வை
தீண்டி திகைக்கச் செய்யும்
ஒற்றை விரல்

மண் வாசம் அள்ளி நுகரும்
மழை மோகம்

கவிதைக்கு வாழ்க்கைப்பட்டவள்
சூல் கொண்டதன்
சுவை முடிச்சு

- புவனா கணேஷன்

Wednesday, May 22, 2013

அனாதைக்கூடு




சிறகுச் சீமாட்டிகள் புணர்ந்ததின்
கூட்டுத் தொகைப் பெருக்கம்
கழிந்ததைச் சுட்டும்
அடையாளச் சுவடுகள்

பாதசாரிகள் அள்ளி உண்டதில்
இரைந்த கூட்டாஞ்சோறு கதைகளின்
மிச்சில்

வாமனன் தலைப் பட்டு பெயர்ந்த
வானத்துண்டு

பாட்டனின் நிலத்தில் பிடாரிக்கூத்து
பேரனின் கடவுச்சீட்டுக்கு
அகதி முத்திரை

-புவனா கணேஷன்

என்னென்பது

வானத்தின் வைபவம்..
கூடிக் குழுமிய மேகங்களுக்குப் போட்டியாக
வீதிக்குளியலை விரும்பாத பலரும்
குடைவாசிகளாய் உலாவியதொரு
மாலைத் தொட்டு
இதுகாறும்..

 நீ நின்ற இடத்தின் நிழலையும்
பெயர்த்தே நகர்வது
களவாடலில் சேர்த்தியா!!

ஓர் இரவுச்சொல்லுக்கு
இறக்கை புணரமைத்து
உன் இருப்பிடம் நோக்கி
பறக்கச் செய்திருந்தேன்..

நீயோ!

பேரத்திற்கு மசிந்த துயிலோடு
இமை மூடிய லயிப்பில்..

உறக்கத்துள் ஊடிக் கலந்து
கனவில் சொன்னது
காலையில் காலாவதியாகும் என்றறிந்தே
இருப்பினும்

வாசல் விரிய நானிட்ட கோலத்தின் வடிவு கூடிப் போனது
என் மிகைச்சொல்லா!
உன் பதில்ச்சொல்லா!

-புவனா கணேஷன்

Saturday, May 11, 2013

வேரிலிருந்து விழும் நிழல்


அம்மாவின் நிழல் பேசி

தந்தை- படித்து பாதியில் மூடிவைக்கும் புத்தகப் பக்கத்தின் அடையாள குறியீடாய் இருப்பவள் தாய்.

தன் நான்கு சுவர்களுக்குள் நகரும் உயிரிகளையே உலகமென்று எண்ணுபவள்.

வெகு ருசி எனும் ஒற்றை வார்த்தைக்குச்செவி குளிர, வலியில் மூட்டு முனகுவதையும்தாங்கி அடுக்களையில் நிற்பவள்.

"அப்பாவை போலவே பொண்ணும் நெருப்புக்கோழி " அங்கலாய்த்தபடியே கை பொறுக்காதசூட்டில் உணவையும் பிசைந்தே தருபவள்.

வெளியே விளையாட போகத் தோன்றாது சோம்பிக்கிடந்த ஒரு மாலைக்கு மறுநாள் மசூதிக்கு அழைத்துப்போய் மந்திரித்து விட்ட பின்பே அமைதி அடைந்தவள் .

அம்மை கண்டபோதும், மஞ்சள் காமாலைக்கு நிறம் வாங்கிய போதும்.. மகளுக்கான பத்திய சமையலையே மொத்த வீட்டுக்கும் என்றாக்கியவள்.

அபூர்வமாய் விடுமுறை நாட்களில் வீட்டோடு தங்கிவிட்ட போதும் .. அதிரும் இசையும், புத்தகமுமாக நேரம் கழிக்கையில்ஆசையாக அருகமர்ந்து பேசத்துடித்தவள்.

"ம்மா, சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லாதம்மா" - முகம் சிடுசிடுக்கையில்..

" எல்லா நாளும் எல்லோரும் வெளியே போய்டறீங்க, நான் தனியே வீட்டில், புதுசா எந்த விஷயத்தை தெரிஞ்சுகிட்டுவந்து பேச" பொட்டில் அறைவதான கேள்வி.

காகிதம் நிறைக்க வேறுவேறு ஸ்டைலில் கையெழுத்து போட்டுக்கொண்டு இருந்தாள்.

- "என்னம்மா இது ?"

- " இல்ல, கொரியர் கொடுக்கிறவன் கையெழுத்துக் கேட்டான், அதான் எப்படி போட்டா நல்லாருக்குன்னு போட்டு பார்க்கிறேன்"

மணமான பின்பு தான் மகளானவளுக்கு தாய் வீடு சொர்க்கம் என்பது விளங்கும் .. என்ன தான் கணவன் தங்கத்தட்டில் வைத்து தாங்கினாலும் ..

தனக்கான பேறுகாலத்துக்குகூட அவள் அத்தனை வலி கண்டிருப்பாளா தெரியாது .. மகளுக்கு நேரம் நெருங்கியதும் படபடப்பில் செய்வதறியாது கண்கலங்கி ஒரு முழு நாளும் மருத்துவமனையில் இங்கும் அங்கும் அலைச்சலில் நீர் அருந்தக் கூட மறந்தவள்..

மகளாய் இருந்தவளும் தாயான பின்பே கேட்கத் தோன்றியது " அம்மா சொல்லு உனக்கு என்ன பிடிக்கும்?"

மடை திறந்து அவள் கொட்டத் தொடங்கிய தருணமே உச்சம் தலையில் உரைத்தது.

தினமும் அலைப்பேசியில்குரல்வழி நிறைந்தாலும்" எப்போ வருவே " அலுக்காமல் இதே கேள்வி.

மகன்களை பெற்றத் தாய் கூடுதலாகக் கொடுத்து வைத்தவள் .. எந்த நேரமும் மகன் வீடே என்ற உரிமையின் சாசனம் இருக்கவே செய்யும்.

மகளைப் பெற்ற தாய், மருமகன் வீட்டில் ஒரு வேளை தங்கவும் தயக்கமே, பொருத்திக்கொள்ள முடியாத சங்கடம் இருக்கும்.

இந்நாட்களில் சின்ன மகள்கள் .. எனக்காகவென சின்ன சின்னதாய் இயன்றதை செய்யும் போது மனம்குறுகவேசெய்கிறது .. இதில் துளியளவு அம்மாவுக்கு என கவனம் வைக்காமல் இருந்ததை நினைத்து. தாய்மையால் அழகாகிறது உலகம்..

அம்மாவைப்போலவே நானும் மகள்களை பெற்றத் தாயாக..

 



வேரிலிருந்து விழும் நிழல் ..

- புவனா கணேஷன்

Wednesday, May 8, 2013

உயிர்த்தலின் நிறம்


சலங்கைக்கு சபிக்கப்பட்டவள்
குளியலறையின்
குழாய் நீர் ஓசைக்கு
கால்கொலுசில் கூட்டிய
ஜதி..

தன்னைப் போன்றதொரு
ஜீவியின் முகபாவத்தை
கண்ணாடியில்
வியந்துப் பார்த்தப் பறவையின்
சிலிர்ப்பு..

நிறம் கவ்வும் வண்ணத்துப்பூச்சி
மலர்வசம் கொண்டப் பித்து..

விழிவிசை படகசைவில்
உவகை நீர் சிலும்பல் !

 

- புவனா கணேஷன்

Tuesday, May 7, 2013

சுயம் என்ற தன்மயா

:: சுயம் என்ற தன்மயா ::
 


குறை பிரசவத்தில்
வலிப்பதில்லையாம்!
நெளி நாவின் நர்த்தனம் 

சுடுசூளைக்குளியல்
வார்ப்பிரும்பின் வலிமை

உறைந்து போனதில் குறைந்த வெப்பம்
உயிர் இடப்பெயரலின் மசகு

கிட்டாது இருப்பினும்
வியாபித்தே இருப்பது
நிழல்

நிதானித்தத் தெரிவையின்
தியானிப்பு
மகிழ் தெளிந்த விம்பம்

விரல் சொடுக்கில்
இயைந்து இசைந்து அணுக்கமாய்
ஓர் ஓசை

எவ்வகை இரைச்சலிலும்
தனித்தே சிமிட்டும் எனக்கான
இசை

சொந்த அடிசிலில் எழுதியது
எவருக்கான பதம்!!

தீண்டிவிட்ட வினைப்போக்கின்
எதிர்வினைகாண் சுடரொளிரும்
தீபத்தின் மிளிர்வு

நானாகிய நான் ...


-புவனா கணேஷன்

நினைவின் கூடு

 
 
அத்தோடு நில்லாமல்
பரண்மேல் கிடப்பெல்லாம்
தூசி தட்டி தும்மல்
கிளப்புவதோ

பழுத்த இல்லாளோடும்
பிசின் முறியா காதல்

ஒட்ட பிழிந்திடுனும்
ஓரம் காயா ஈரம்

மழை நனைத்த நிசியில்
நுணல் எழுப்பும் கூப்பாடு

தீரா பசி
உன் வரமா சாபமா !

குடைந்த வண்டும்
குழப்பத்தில் மாம்பழமும்

வேர் வாசமோ
விதை வாட்டமோ

மறதி இட்டுக்கொள்
மதில் மேல் பூனையே..

-புவனா கணேஷன்

நின்னோடு

குழல் குலாவி
மடல் முகர்ந்து
நுதல் நீவி
விழி ஊர்ந்து
சுவாசம் உரசி
ஊறும் மொழி
புலன் விரவி
இலை
குவிந்து உதிர்த்த
துளி வார்த்தை
மீண்டும் மீண்டும் உச்சரிப்பினும்
வேண்டும் வேண்டும்
என்பதுவாய் ...

-புவனா கணேஷன்

Wednesday, May 1, 2013

கடைநிலை உழைப்பாளர்களை நினைவு கூறும் நாள்


குர்கானில் வசித்த வருடங்களில் கணவரோடு அல்லாமல் தனித்து நான் மட்டும் வெளியே எங்கே போவதாக இருந்தாலும் பயணிப்பது சைக்கிள் ரிக்சாவில் தான்..

அங்கே ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடம் போக ஒன்று சொந்த வாகனம் இருக்க வேண்டும் அல்லது முக்கு, முனை தி...ரும்பல்களில் எல்லாம் ரிக்சா மட்டுமே.. குறைந்த அளவு கட்டணம் ஐந்து ரூபாய் இருந்தது.

பெரும்பாலும் பிஹாரி அல்லது பெங்காலி ஆட்கள் தான் அங்கே ரிக்சா ஓட்டியது..தனியே போவதால் சற்றே கவனமாய் வயது முதிர்ந்தவரின் வண்டியாக தேடி ஏறுவேன்.

நம்மை வைத்து ஒரு வயதானவர் வண்டி மிதிப்பதா என்றே நினைத்தாலும் வேறு வழி இல்லை.. பாதுகாப்பு குறைச்சல் அத்தோடு அது அவருக்கு வரும்படி...

கடைநிலை உழைப்பாளிகள் அங்கே எந்த மொழியை கொண்டவர் எனினும் ஹிந்தி நன்கு பேசுவர்.. தொடர்ந்து போவதால் என்முகம் சிலருக்கு பழகி விட்டு இருந்தது... ஏறியதில் இருந்து இறங்குமிடம் வரும் வரை அவர் அவர் சொந்த கதையை சொல்லுவார்கள்..

படிப்பு வாசனை அறவே இருக்காது, சிறு வயதில் திருமணம் முடிந்து இருக்கும்.. குறைந்தது 7 அல்லது 8 குழந்தைகள் இருக்கும்... வறுமையை போர்த்தி சொந்த ஊரில் பிழைக்க முடியாமல் குடும்பத்துடன் மொத்தமாக பஞ்சம் பிழைக்க இடம்பெயர்ந்தவர்கள் .

மானைவிமார்கள் எல்லாம் அங்கே மற்ற வீடுகளில் வீட்டு வேலை செய்ய, பிள்ளை கண்மணிகளை வருடத்திற்கு இவ்வளவு என ஒரு குறிப்பிட தொகைக்கு வீட்டுவேலைக்கு, வாடகைக்கு பெரிய பெரிய வீடுகளில் விட்டு விடுவார்கள்.. வருடம் ஒரு முறை தந்தையானவர் பிள்ளை கண்மணியை சந்தித்து குசலம் விசாரித்தும், விசாரிக்காமலும் முதலாளியிடம் இருந்து பிள்ளைக்கான வாடகை பணத்தை வசூலித்து வருவார்.

அங்கே திறந்தவெளி மைதானம் நிறைய.. பொதுவாக பெரிய பெரிய விழாக்கள், திருமணம் எல்லாம் மைதானத்தில் பந்தல் இட்டே நடத்தப்படும்.. அம்மாதிரி மைதானங்களின் மூலையில் தற்காலிக குடில் அமைத்து இம்மக்கள் உறைவிடம் செய்து கொள்வார்கள்..

அங்கே, எங்கள் வீட்டுக்கு மேல்வேலை செய்ய ஒரு அம்மா வருவார்... பெங்காலி பெண்மணி,நடுத்தர வயது.. வேலை சுத்தம், கை சுத்தம்.. கேட்டை திறந்து உள்ளே வரும் போதே சுருட்டு வாசனை தூக்கி அடிக்கும்..

அளவுக்கு அதிகமாக அவர் கை நடுங்குவதாக தோன்றும் சிலவேளை.. அம்மாஜி என் இப்படி கை நடுங்குதென கேட்டால்

" அது ஒன்னும் இல்லை , இன்னைக்கு இன்னும் சாராயம் குடிக்கவில்லை" அனாயசமாக சொல்வார்.

கடைநிலை உழைப்பாளர்களை நினைவு கூறும் நாள்
 
 - புவனா கணேஷன்



தூரிகா மொழிபெயர்த்தாள் !


தூரிகா மொழிபெயர்த்தாள் !

நிறங்களின் கூட்டுக்கலவை
புலம்பல்கள்

சிரபுஞ்சிக்கும் சஹாராவுக்குமான
விரவுதல் நெகிழ்த்தி

தேவைக்கு திறந்த குழாயில்
வராத நீரும்
வறண்ட ஓசையும்

கைக்குள் கட்டுண்ட நிலவு
உருகி கசிந்து
உறைந்து போவதற்குமுன்

இருந்தும் விளங்கா பொருளோடு

வீதியில் விரித்த கடையில்
அவன் ஓவியமும்....

-புவனா கணேஷன்

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...