Tuesday, May 7, 2013

சுயம் என்ற தன்மயா

:: சுயம் என்ற தன்மயா ::
 


குறை பிரசவத்தில்
வலிப்பதில்லையாம்!
நெளி நாவின் நர்த்தனம் 

சுடுசூளைக்குளியல்
வார்ப்பிரும்பின் வலிமை

உறைந்து போனதில் குறைந்த வெப்பம்
உயிர் இடப்பெயரலின் மசகு

கிட்டாது இருப்பினும்
வியாபித்தே இருப்பது
நிழல்

நிதானித்தத் தெரிவையின்
தியானிப்பு
மகிழ் தெளிந்த விம்பம்

விரல் சொடுக்கில்
இயைந்து இசைந்து அணுக்கமாய்
ஓர் ஓசை

எவ்வகை இரைச்சலிலும்
தனித்தே சிமிட்டும் எனக்கான
இசை

சொந்த அடிசிலில் எழுதியது
எவருக்கான பதம்!!

தீண்டிவிட்ட வினைப்போக்கின்
எதிர்வினைகாண் சுடரொளிரும்
தீபத்தின் மிளிர்வு

நானாகிய நான் ...


-புவனா கணேஷன்

8 comments:

  1. வாய்மையே வெல்லும் ::

    சூப்பர் அக்கா ,,,

    சுயத்தை தொலைத்து ....

    ReplyDelete
  2. Bhuvana Ganeshan சுயம் தொலைவதில்லை வாய்மை .. அது நம் நிழல்

    ReplyDelete
  3. குழந்தைநிலா ஹேமா ::

    நெளி நாவின் நர்த்தனத்தை பொறுத்துக்கொள்ளும் சூளைக்குள் புடம் போடும் பெண்மை இசையின் துணையோடு.....அழகான தேர்ந்தெடுத்த வாழ்த்தைகள் புவனா....பாராட்டுக்கள் !

    ReplyDelete
  4. Bhuvana Ganeshan ::

    ம் , ஆமாம் ஹேம்ஸ், சமூக நாக்கிற்கு அடுத்தவரை குறை சொல்லி வார்த்தைகளை பிரசவிக்க வலிப்பது இல்லை ... சுயம் காலில் மிதி படுவது போல தான் குழந்தைநிலா ஹேமா

    ReplyDelete
  5. Anu Saran ::

    இப்படியும் ஒரு தெரிவையின் உணர்வினை பதம் பேசும்
    கொடூரங்களிலும் தீண்டிவிட்ட வினைப்போக்கினிலும்
    எதிர்வினைகாண் சுடரொளிரும் தீபத்தின் மிளிர்வாய் மிளிர்வாள் அவள் நிதானித்து" என்ன லாவகம் வார்த்தை உபயோகத்தில் அதிநன்று ,,, பேரிளம் பெண்ணெனப் பிறப்பதே யாதிலும் பெருமை ,,பொறுமைக்கேயான எல்லையவள்" பொங்கிவிட்டால் நர்த்தனம் தான்

    தன்மயா என்ற பெயர் அக நானூறில் கூறப்பட்ட தூயத்தமிழ் பெயர் ,,,சுயம் என்ற பொருளைக் கொண்டது

    அயினி, வல்சி, தாரம், நிமிரல், அடிசில், மூரல், புகர்வை, புகவு, பதம், மேய்பதம், ஆர்பதம் இவையெல்லாமே உணவுக்கான பொருளையே குறிப்பதாகும்

    சொந்த அடிசிலில் எழுதியது
    எவருக்கான பதம்!!///// இந்த வரியில் பதம் என்கிற உரிச் சொல் உணவைச் சார்ந்ததா இல்லை பதப்படுத்துதலை(பக்குவப்படுத்துதலை) சார்ந்துவருமா,,,,

    அறிந்துக்கொள்ள வேண்டியே ஒரு ஆர்வம் அவ்வளவே

    ReplyDelete
  6. Bhuvana Ganeshan ::

    இலக்கண பதம் Anu Saran

    ReplyDelete

  7. Anu Saran :: பதம் சொல் கிளவி மொழி ம்ம்ம்

    பகுபதம் அண்ட் பகாப்பதம் தொல்காப்பியர் கிரேட்

    ReplyDelete
  8. தூரிகா அழகாக வர்ணங்களின் புலம்பல்களை காதுகொடுத்துக்கேட்டு வகைப்படுத்தியது அன்று…

    இன்று சுயம் அறிய முற்படும் தன்மயாவின் மனம் பேசுகிறது இன்று….

    அற்புதம் என்று சொல்லி முடித்துவிடமுடியவில்லை புவன்….

    பிறக்கும்போதே தொடங்கிவிடுகிறது இந்த வேறுபாடு… ஆண்கள் பெண்கள் இருவருமே சமம் சமம் என்று சொல்லும் சொற்கள் தேய்ந்து தேய்ந்து…
    பெண் இன்னும் முடங்கி முடக்கி கிடக்கப்படுகிறாள் என்பதே உரக்க உரைக்கும் சத்தியம் என்பதை வரிக்கு வரி சொல்லிச்செல்கிறது புவன்…

    வயித்துல இருக்கிறது பெண்ணா.. ஐயோ ரெண்டாவதும் பொண்ணா அழிச்சிரு.. இன்னமும் கிராமப்புறங்களில் நடக்கும் அவலம் இது… பெண்கள் மட்டும் சதையும் உணர்வும் ரத்தமும் மனமும் கொண்ட மனித இனம் தானே என்பதை அறிய மறுக்கும் ஒரு சிலருக்கு சரியான சாட்டையடி வரிகள் இவை…

    பொண்ணா.. அதிகம் படிக்க வைக்காதே.. சீக்கிரம் கல்யாணத்தை முடிச்சுக்கொடுத்துரு…

    தன்னை, தன் திறமைகளை, தன் ஆசைகளை, தன் விருப்பங்களை வெளிப்படுத்த இயலாமல், வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்காமல், வெளிப்படுத்தவிடாது முடக்கிப்போகும் சமூகத்தை சொடக்குப்போட்டு அழைத்து கேள்விகள் கேட்கவைக்கிறது வரிகள் இங்கு அழுத்தமாக…. ஆணித்தரமாக…

    கல்யாணம் ஆகிப்போகும் பெண் வேரோடு பிடுங்கப்பட்ட செடியாக கணவன் வீடு புகும்போது அங்கே அன்பும் அரவணைப்பும் கிடைத்தால் ஆச்சு.. அப்படி கிடைக்கவில்லையென்றால் அவலங்கள் அரங்கேறும் தினம் தினம் அவஸ்தைகள்….

    தன்னை தொலைத்து.. தன் சுயம் தொலைத்து…. ஒவ்வொரு அரிசியிலும் நம் பேரு இருக்கும்னு சொல்வாங்க.. நாம் சாப்பிடும் சாப்பாட்டில் நம் பேர் இருக்கும்னு.. ஆனால் பெண்களுக்கு? வாய்க்குள் இட்டு விழுங்கும்வரை தட்டில் இருக்கும் சாப்பாடு அவர்களுக்கு சொந்தமில்ல.. இது நான் உணர்ந்தது..

    பெண்கள் தான் எத்தனை உயர்ந்தவர்கள்.. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையில் இருந்து அனுசரித்துப்போகும் வரை பெண்களின் பங்கு அதிகமாகிறது ஒரு குடும்பத்தில்… கோபத்தை, சந்தோஷத்தை, விருப்பங்களை, ஆசைகளை இப்படி எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்துக்கொண்டே திரும்பிப்பார்க்கும்போது நமக்கே தெரியாமல் நம் சுயத்தையும் விட்டுவிட்டோமோ என்ற அச்சம் தலைதூக்குகிறது…

    இல்லை அப்படி இல்லை என்று சொல்லும் வரிகள் அசத்தல் புவன்.. சுயம் தொலைவதில்லை.. மனசுக்குள் அடங்கி அடங்கி நீறுபூத்த நெருப்பாய் அடக்கப்பட்ட சுயம் நிழலாய் தொடர்ந்துக்கொண்டே.. இருட்டிலும் வெளிச்சத்தை அடக்கியதாய்…. காற்றுக்குழிழ்கள் அல்ல சுயம் அடக்கி வைத்தால் அடங்கிவிட… என்றாவது பொறுக்க இயலாத சூழலில் வெடித்துவிடும் அபாயம் உண்டு என்று நச் என்று சொன்னதுப்பா கவிதை வரிகள்.. கனல் கக்குகிறது.. சுயத்தை அறியவைக்கும் முயற்சியில் வெற்றியும் பெறச்செய்கிறது.. பூவுக்குள் புயலை அடக்கியதுப்போல்…

    கம்பீரமாக தலைநிமிர்த்தி சொல்கிறது.. நானாகிய நான்.. இதில் அகங்காரம் துளியும் இல்லை… நெஞ்சை நிமிர்த்தும் சுயம்… சல்யூட்பா…

    அற்புதம் புவன்.. ஹாட்ஸ் ஆஃப்….

    ReplyDelete

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...