Tuesday, February 26, 2013

காதலாய்

இதயஈர்ப்பு விசை நீ..
உன் வெட்கம் புசித்தும் பசித்திருக்கிறேன் ..
உயிர் வினையூக்கி உன்  விழியசைவு..
சிறகடிக்கும் கற்பனைக்கு வானவில்லின் வண்ணமிட்டு
இறகுகள்  செப்பனிட்டு காத்திருக்கிறேன்..
என் எழுத்துக்காதலுக்குள்  கவிதையாய் வந்துவிடு..




-புவனா கணேஷன்  
 

Saturday, February 23, 2013

அவன்

வெறுப்பு விருப்புகளுக்கு ஏற்ப
சுழலாத திசைமானி..

சுமக்கும் கப்பலாய்
செலுத்தும் மாலுமியாய்..

மூழ்கி பயணிப்பது
முடிவறியா பெருங்கடலில்
தாகம் தீர்க்க ஒரு துளி தேடி..
 
நெடுவழி தோறும்
முரண்கள் குறுக்கே..

முடங்கிவிடாத
கவனம் ஒருபுறம்..
முந்தி செல்லுதலில்
வேகம் ஒருபுறம்..
 
 ஈர நிலம் தேடி
விதைந்து
கூட்டத்தை சமைக்க
ஒற்றை நெல்மணி..
 
சுடுதனலோ
கடுங்குளிரோ
குடைநிழலாவது அவனது மாட்சி..
 
கடந்த பாதையில்
பாத சுவடுகள்
பதிந்ததா
அழிந்ததா..
கணக்கீடு காண
தகையா பொழுதுகள்..
 
அவனாய் இருத்தலின் கற்பனை..
 
தரைத்தட்டிய கப்பலை
கண்ணுற்ற பிரமிப்பு !!
 
 
 
புவனா கணேஷன்

 

Friday, February 22, 2013

தனை மறந்த

நரை கூடி, மூப்பில் தோய்ந்த
நடை தளர்ந்து, நாராய் தேய்ந்த
மெய் கூடுக்குள்
உயிர் குழந்தை

மடி தந்து
தாலாட்டி
தலை கோதி
நித்திரையின் நீளம் கூடச்செய்வாள் கனவுத்தாய்...

-புவனா கணேஷன்

Thursday, February 21, 2013

வினோதம் நீ

கவனி ரோமியோ..
 
இது நாள் வரை என் பெயரெச்சம் தெரியாது உனக்கு
 
போகும் இடமெல்லாம்
பின் ஊர்ந்து வழிந்து
வினையெச்சம் செய்கிறாய் நீ
 
எரிச்சல் எரிச்சலாய் அடுக்கு தொடர்
காண்கிறேன் உன்னால்
 
உடனே உன் தொடர்நிலை வினைக்கு முற்று செய்
 
தறிகெட்ட மனதை அடக்கி
தன்னிலை மோகம் விட்டொழித்து
தெரிநிலை கொள்
 
இனியும் இது போல உவமை செய்தால்
உவமேயம் கெட்டுவிடும் எச்சரிக்கை
 
 

 
மீன் விற்கும் இரட்டை கிளவிக்கு
சொன்னால் உன்னை
கூறுபோட்டுவிடுவாள்
 
என்ன !! திமிரா !!
ஆம் நிலையணி என்ற திமிர் எனக்கு
 
அமிலம் வீசி என்னை
திரிபு செய்ய போகிறாயா
 
ஆக்கப்பிறந்தவளை அழிக்கவென
உருவகித்த
 உன் ஜென்மத்தையும் மனிதன் என்பதா !!!!!
 
புவனா கணேஷன்

Wednesday, February 20, 2013

நாழிகை பொழுதில்


போர் தொழில் செய்யும் அவன் வில்லாளன்
உருகெழு தோற்றமும், உடைவாளின் வீச்சும்
மிடுக்கு தெறிக்கும் மல்லர் குலத்தோன்..

நிந்தியன் அவன் வேல் வீச்சுக்கு முன் அகலவன்
தாங்காது திரும்புவான் புறமுதுகிட்டு வந்த வழிநோக்கி
கிடுகுப்படையை கிடுகிடுக்க செய்து வெற்றி முடி சூடி
வியன்நெடும் பணைத்தோள் ஆடுநடை வீரன் அவன்
பரி மேலமர்ந்து பாய்ந்து விரைந்தான்
போர்க்களம் விட்டு...
 
மாலை மயங்கி இருள்தழுவி முயங்கிய நேரம் 
இரவாய் சமைந்தது பொழுது
முழு மதி இரவாம் அன்று
இருளை கிழித்தவண்ணம் ஒலி ததும்பும் வெளிச்ச கீற்றில்
நாலு கால் பாய்ச்சல் வேகம் கண்டது அவன் குதிரை...
 
நொடிப்பொழுது பார்வை சுழன்றதில் கண்டிட்டான்
கண்ணெட்டும் தூரத்தில் அதிசய நிகழ்வுதனை
என்ன இது ..

தடாகத்தில் தெரிவது இரு முழு நிலவுகளின் வடிவு பிம்பங்கள்..
எப்படி சாத்தியம் ..


கண் துஞ்சா அயர்வில் களைத்ததில் புலப்படுவது
காட்சிபிழை போலும்..

எனினும் ஒரு நொடி மெய் விதிர்த்துப் போனான்..
தலைவனின் மனபோக்கு பாடம் போலும்
கடிவாளம் இல்லாமலே கட்டுப்பட்டது குதிரை...

நிதானித்து மீண்டும் ஒருமுறை உறுத்த விழிகளில் உற்று நோக்கினான்
உண்மையே கண்டது ….

வான் தவழும் நிலவோடு போட்டியிடும் குளிர் சாரல் ஒளி அழகாய்
தடாகத்தின் பக்கம் நிற்பது நங்கை நிலவு ..

தடாகம் நிரம்பி பூத்த தாமரைகளின் மேல்துஞ்சும் பனித்துளி தொட்டு சித்திரம் வரைந்தவண்ணம்..
 
நங்கை அவளும் அது சமையம் அரவம் கேட்டு துணுக்குற்று திரும்பினாள்...

துளியளவும் அசராத மிடுக்கிட்ட மென் தோற்றம் அவள் கொண்டது..
 
 
 
பேதையின் உயிருண்ணும் கண்கள் ஊடுருவி கூர்ந்தது அவனை

ஒற்றை பார்வை இத்துணை வீழ்த்துமா!!

யான் மெல்லியல் பித்து போற்றுபவன்  அல்லவே.. 
 
இருந்தும் அலையுறும் மனப்போக்கை என்னவென்று சொல்வது

இந்த விழிப்போர்  கண்டிட்ட வான்மதியும் சற்று சொக்கித்தான் போனாள்..

மேக திரைக்குள் முகம் மூடி மறைந்திட்டாள் சிலநொடி நேரம்

சற்றே நெருக்கி அருகில் செல்ல எத்தனித்து இரு அடி முன் எட்டு வைத்தான் வில்லாளன்...

யாழின் நரம்புகள் துடித்து இசை கசிவது போல்
மான்விழி மங்கையின் கண்களில் நவரசம் துடித்தது
இரண்டடி பின்னோக்கி நகர்ந்திட்டாள் மருட்சி காட்டாமல் ..

எடுத்த அடி நகராமல் நிலைத்து விட்டான் வில்லாளன்

வெற்றியை மட்டுமே சுமந்து பண்பட்டவன் 
 தோற்றுவிட தயார் என அறிவிப்பது போல...

சுடர்நங்கை நேர்நோக்கு பார்வையில்
வீசிய கூரம்பு அவன் விழுபுண் நெஞ்சிலே
பாய்ந்து வீழ்த்தியது ..

எடை கூடி
கனத்தது இதயம்
இந்நாழிகை தொட்டு எதை சுமக்கிறான் அவன்...

 
 -புவனா கணேஷன்
 
 
சங்ககால தமிழ் சொல்லாடல்களை கலந்து புனைந்த குறுங்கதை
மள்ளர் - வீரர்
அகவலன் - பகைவன்
ஆடுநடை - பெருமித நடை
நல்லிசை - புகழ்
வியன்நெடும் - நெடுக வளர்ந்த
பணைத்தோள் - கம்பீரமான புஜம்
கிடுகுப்படையை - கேடயம் தாங்கிய படை

 
 
 

Monday, February 18, 2013

--- ஆப்பம் விக்கும் முத்தழகி ---

உமி நீக்கி தவிடெடுத்த
பச்சரிசி வெள்ளந்தியா
பல் அழகு
சொல்லழகி..
...
ஊறவச்ச உளுந்து ஒருபடிக்கு
ஒசந்ததை போல்
கரிசனம் காட்டும்
அன்பழகி..

வெந்தைய கசப்பா கவலை கண்டாலும்
வெளிக்காட்டாத
வீம்பழகி...

பதமாய் சேர்த்து அரைச்சு எடுத்த மாவ
சட்டியிலே பொத்தி வச்சு
மக்காநாள் திறந்ததிலே
பொங்கி பூத்த
சிரிப்பழகி...
 பத்த வச்ச அடுப்புக்குள்ளே
முட்டி நிக்கும் நெருப்பு போல
ஊறு கண்டா கோவம் கொட்டி
மத்த நேரம் பாசம் கொட்டும்
கண்ணழகி...

தண்ணியில விட்ட எண்ணை துளியா
தனிச்சு மிளிரும்
தன்மையழகி...

சூடான ஆப்ப கல்லில்
சொக்கி உறைந்த மாவு கணக்கா
தக்கவைக்கும்
நட்பழகி...

பஞ்சு பஞ்சாய் சுட்டு போட்ட ஆப்பம் போல
பரிவு காட்டும் வாஞ்சைமிகு
வஞ்சியழகி...

தெளிவெடுத்த தேங்காய் பால்
மனசழகி...

இனிப்பான தெவிட்டாத
தேன்சுவையாய் தீம்பாவை
குண அழகி...

கொள்ளையழகே

 கூடை தூக்கி
ஆப்பம் விக்கும் முத்தழகி... 


 

 ( புவனா கணேஷன்) 

வாழ்க்கை

எங்கோ எதற்கோ போடப்பட்ட முடிச்சுகளில்
அவிழ மாட்டாமல் அடம்பிடிக்கும் சிக்கல்கள்...

கல்விழுந்த சலனங்களையும்
தாங்கி பிடிக்கும் நீர்நிலை...

முடிவிலி பாதைகளில்
முந்தியடித்த ஓட்டம்...

கூட்டாளி தேடியே
அச்சாணி இழக்கும் வண்டிகள்...

தேடல்களில் தேய்ந்து
கிடங்குகளில் முடங்கி
செலவழிந்த கணங்கள்....

ஆதாரங்களுக்கு கடவுச்சொல்
அரிதாரங்ககளுக்கு பெயர்ச்சொல்
சேதாரம் உண்டெனில் வினைச்சொல்
தீர்ந்தே போனால் திரிபுச்சொல்..
 

 வெள்ளைத்தாள் முழுக்க
வினை கலந்த வினவுகள்..
விடை தெளிந்து நிரப்பும் முன்னே
முடிந்து போகும் தேர்வு நேரம்...

தொடக்க நிலையில் பயிற்சி..
தொடரும் நிலையில் பரிசோதனை
முடிவு நிலையில்... தனக்கான
அடையாள அர்த்தத்தை
அகராதியில் தேடும் -- வாழ்க்கை --

புவனா கணேஷன்

காதல்

சித்தார்த்தனின் காதல் புத்தம் ஆனது

நரேந்திரனின் காதல் விவேகானந்தம் கண்டது

வாசுகி மணாளன் நேசம் வள்ளுவம் சொன்னது

மீசை கவியின் நேசம் கவிதைக்கண்ணம்மா

காந்தியின் காதல் சுதந்திரம் சுவாசித்தது

போஸ் சொன்ன காதல் அஞ்சாமை என்பது

அம்பேத்கர் நேசம் தீண்டாமை ஒழித்தது

மேரி கியூரி காதல் வேதியியல் மொழிந்தது

முத்துலட்சுமி அம்மை காதல் பெண்மை பேசியது 
 
புத்தக காதல் அறிவை கூட்டியது

வித்தகர் காதல் விருட்சங்களை கண்டது ....
 
♥ நலமுடன் காதல் ...
- புவனா கணேஷன்



நாங்கள் பசித்திருக்கிறோம்...

யாரோ தேடிய இரைக்கு
நாங்கள் பசித்திருக்கிறோம்...

கூடுகளில் அடையாத பறவைகள்...
சிப்பிகளுக்கு வேண்டாமல் சிதறிய முத்துக்கள்...
 
 எவராலும் இதுவரை பெயரிடப்படவில்லை...
ஏனோ அது தேவையும் இல்லை... 
 
 
உண்ண கொடுத்தவரே
உயிரை கொடுத்தவர்
என்றால்
வீதிகள் தோறும்
பெறோர் கண்டோம்...

பாதையில் தூங்கினாலும்
சொப்பனம் வருதே...
கிட்டாததெல்லாம் கிட்டியது
விடியும் வரை...

( புவனா கணேஷன் )

Monday, February 11, 2013

ஆதிரா பறந்தாள்...


அடைவு அரூபமற்ற கூறுகளைச்சுமந்து ..
கோல உருளைக்குள் சதுர பிம்பங்களைத்தாண்டி ...
சகுனி சாணக்கியர் கொற்றம் கொட்டில்கள் தாண்டி..
மந்தாரை கூனிகளின் சூழ்ச்சி வலைத்தாண்டி..
மாய யாக்கைக்குள் வினைத்திரிபுகளைத்தாண்டி... 


கல்லாய் சமைந்த அகலிகை செதுங்கி
சுதந்திரா சிலை என
காட்சிக்கு வைக்கப்பட்டதைத்தாண்டி... 

 
ஒற்றை சீதையை ஒழுங்காய்ப்பேணாத
ராமன் பிறப்புகளைத்தாண்டி... 

போருக்கு புற முதுகிட்டு
சமாதானம் பேசி
சங்கறுக்கும் வீரர் கூடங்களைத்தாண்டி...

ஊன் உருக்கி, உயிரை உறிஞ்சி
குருதியில் நனைந்து
உரம் ஏற்றிக்கொள்ளும்
விஷ வேர்களைத்தாண்டி..

தலைக்கு மேலே கொக்கு பறந்தால்
கண் சூட்டில் கருக்கி வீழ்த்தும்
கொங்கணவர்களைத்தாண்டி...

ஏகலைவன்களின் கட்டைவிரல்கள்
கூடைக்கூடையாய்
கள்ளச்சந்தைக்கு கடத்தப்படுவதைத்தாண்டி...
 
நைச்சியம் பேசி
கர்ணகுண்டலங்களை
கொய்தும் நயங்கள் தாண்டி...

காக்கை வாய்க்கு போன வடை
தட்டிப்பறித்த நரிக்குப்பின்னால்
வட்டமிடும் வல்லூருக்கூட்டங்களைத்தாண்டி...

முறைக்கெட்ட கோவலன்கள் குளிர்காய
ஊரை கொளுத்தி நெருப்பு மூட்டும்
சதி மணிகளைத்தாண்டி...

அணு உலையில் பூத்த
கருஞ்ச்சாம்பல் பூக்களைத்தாண்டி...

ஆதிரா பறக்கிறாள்,

அடுத்த கண்டம் நோக்கி,
அங்காவது சுத்தமான காற்றை
சுவாசத்தில் வாங்கிக்கொள்ள .... 
 
( புவனா கணேஷன் )



 

Wednesday, February 6, 2013

வெசனத்தை என்ன சொல்ல?...


 நித்தம் நித்தம் தீவாளி கணக்கா...
பை நெறைய காத்தை ரொப்பி...
ஒடச்சு,வெடிச்சு...விளையாடிப்புட்டேன்...
ஏஞ்சாமி அது தப்பா?

காத்துக்கும்,கருப்புக்கும் ஏன் மேல கோவமாம்..
கங்கணம் கட்டி நிக்குதாமா வாசலுக்கு அந்தால..
தெக்கால வீட்டோரம்…
கீத்து வேஞ்ச,பந்தலிலே….
உள்ளர வச்சு அடச்சுப்புட்டாக ….
என்னத்த நான் சொல்ல...
ஆத்தி, நானே கருப்புதேன் ...
இனி எந்த கருப்பு எனை பிடிக்க...


கருக்கலிலே தட்டி எழுப்பி,
தலயோட தண்ணி ஊத்தி,
அரைப்படி.. மஞ்சளிலே, உடம்பெல்லாம்
சாயம் பூசி,
கூடி நின்னு குளிக்கவச்சு,
உடுத்திக்கிட புதுசா துணி ...
வெவரம் ஒன்னும் வெளங்கலியே,
விசாரிச்சா வைவாகளோ?...

தக்க வச்ச காசை எல்லாம்
தலைச்சீரா மாத்திபுட அப்பாரு
சொல்லி விட்டு சித்தப்பு, சந்தைக்கு...
அத்தைமாரும் வந்தாக
தட்டு நெறய சீரோட....
அப்புச்சி பேசிறது வாய்க்கா, வரப்பை தாண்டி
அடுத்த பட்டிக்கு எதிரொலிக்க,
அம்புட்டு பேரும் விழுந்து..விழுந்து சிரிக்காக,
என்னைய மட்டும் விட்டுப்புட்டு....  


சுட சுட பணியாரம், புட்டு
சுட்டு போட்டபலகாரம்...
தட்டு தட்டாஅடுக்கினாலும்
ஒன்னோடும் ஒட்டாம எங்கிட்டோ நெனைக்கேன் நான்...
காக்கா கடி நெல்லி, ஏறி பறிச்ச கொடுக்காபுளி.
பங்கு போட்டு தின்ன ருசிக்கு,
மத்ததெல்லாம்...எம்புட்டு...

முச்சந்தி முனையிலே,என்சோட்டு புள்ளைக…
குதிச்சு, குதிச்சு...நொண்டி ஆட...
பருப்புக்குள்ளே...அரிசி பொருக்கி, இங்கிட்டு
நான் மட்டும் குத்தவைக்க...
என்ன குத்தம் செஞ்சேனோ....  



தொணைக்கு தங்கிக்கிடகுச்சு வீட்டுக்குள்ளே ,
அப்பத்தா வந்திட்டா.....
ரோட்டா நெறைய காபித்தண்ணி....
இடிச்சு, திங்க பாக்கு வெத்தலை...
கொதப்பிக்கிட்டே பேசி தள்ளுதா,
அவோளோட பழங்கதைய...
வசமாத்தேன் மாட்டிகிட்டேன்,
வீம்பு பண்ணி எதை மாத்த....  


பொழுதும் போயிடுச்சு...
சாமம் தொடங்கிடுச்சு...
ஊரும் அடங்கிடுச்சு...
வந்திட்ட ஒறம்பற...
அசாரத்திலே மொடங்கிக்கிட,
பேசி பேசி அலுத்துப்போன அப்பத்தாவும் உறங்கிப்போக,
அவ சொன்ன கதை முச்சூடும் உள்ளுக்குள்ளே பயம் கிளப்ப...
கொட்ட கொட்ட முழிச்சுகிட்டு,
விட்டத்த பார்த்து கெடக்கேனே....

தூரந்தள்ளி...அந்தள்ளைல,எங்கனையோ..
ஊளை சத்தம்....
கும்மிருட்டு கண்ணுக்குளே கிடந்தாட…

எரவாரம்,சொருக்கி வச்ச வேப்பிலை..காத்திலாட,
மூளையிலே சாத்தி வச்ச விலக்குமாறு..
கரு,கரு இருட்டுக்குள்ளே கருப்பா மாறி...
...பீதியிலே கொரவளை நெரிய 


விருக்கினு பாய்ந்துஅப்பத்தா கையப்பிடிக்க,
வெடுக்கின்னு தட்டிவிட்டா...
சுருக்குனு வஞ்சுபுட்டா...
"ஏலே கூறுகெட்ட பயபுள்ளே,
தீட்டு,சாங்கியம் செய்யாம,
தொடதே லே,எட்டப்போ….. "

தோட்டசெடி பூபெய்தால்...
தூக்கி வச்ச தலைக்கு மேல,
என்னிய மட்டும் ஓரங்கட்ட
எங்கன படிச்ச சொல்லாயி......
 

 
( புவனா கணேஷன் )


 

பெண்ணோவியம்



கற்பனையில், உரு வாங்கி,
கனவுகளில் மொழி வாங்கி...
உயிர்த்தாய்,
... உயிர்பித்தாய்
என்னையும் சேர்த்து...

( புவனா கணேசன் )

காதலாகி,கசிந்து....

நெருப்புக்குச்சியும்
நீர்த்துளியும் கொண்ட காதலாய்,
உயிரனைத்த
மெய்யுறு...

... அலையுற்ற மிதவை என் மீது,
நச்சென நிலையுற்ற நங்கூரம்....

கடல்நீரோடு கொண்ட தீரா காதலில்,
வானம் அள்ளி வீசிய நிலா சாரலாய்
முத்த கீற்றுகள்.....

ஒரு கோடி வார்த்தைகள் பொய்த்து போக,
ஒரு விரல் ஸ்பரிசத்தில் கிறங்க மூழ்கடித்தாய்...

வெள்ளை காகித தாள் என்மீது,
எழுதுபொருள் அவன், இட்டு நிரப்பிய
காதல்...உள்வாங்கி,
கசிந்தேன் கவிதையாக...
 
( புவனா கணேஷன் )
 

அம்மா


தன்னில் சுமந்த சுகம்,
மண்ணில் விதைத்த துளிர்,
இரண்டும் வாடாது காத்திடும் தாய்மை...

( புவனா கணேஷன் )

 

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...