Thursday, March 21, 2019

FEB2016 - STORY

எப்போதும் எதாவது ஆஃபர் வேறு இருந்து தொலைக்குமா. வாங்க திட்டமிட்டு போனதற்கு மேலாக
பொருட்கள் வாங்கிவிடுவேன். சுமைகூலிக்கு பிடித்த கேடாய் தூக்கி வர டாக்ஸி பிடிப்பது தான் லுலு போனால்.
போன வாரத்தில் அதிசயத்தக்கதாய் தேவையானதை மட்டும் வாங்கி பில் போட்டுவிட்டு பார்த்தால் இரண்டே பையில் நிறைந்திருந்தது. கைக்கொரு பையாக தூக்கிக்கொண்டு ட்ரைன் பிடித்து வந்து இறங்கியாச்சு.
மெட்ரோ ஸ்டேஷனில் இருந்து வீடிருக்கும் அரை கிலோமீட்டர் தூரத்துக்கு மிஞ்சிப்போனால் நான்கே கிலோ எடை இருக்கும் பைகளை தூக்கி நடக்க முடியவில்லை. முதுகில் வலி தொடங்கியது. இவ்வளவு குறைவான வெயிட்டை தூக்க முடியாத அளவுக்கா இத்துப்போயிருக்கிறது பலம்.முடியவே முடியாது. தூக்கியே ஆகனுமென வீம்பு பிடிவாதமாய் எடுத்துவந்து சேர்பதற்குள் போதும் போதுமென்றானது.

இப்படி ஒரு வீம்பு பிடிவாதத்தோடு தான் அப்போதும் வினையை தேடிக்கொண்டது.
டெல்லியில் என்பதால் டீச்சர்ஸ் சல்வாரில் வருவதும் தடையில்லை. வீட்டில் மேல்வேலைக்கும் ஒரு பெங்காலிஅம்மாவைஅமர்த்தியிருந்ததால் ஒரு குழந்தை மட்டும் இருக்கும் போது அப்படி க்ரச்சில் விட்டு ஸ்கூலுக்கு வேலைக்கு போனதில் பெரிசா சிரமம் இருக்கவில்லை.

இரண்டாவது பிரசவத்தின் போதும் அடுத்து எதிர்பாராத ஒன்றின் கருக்கலைப்பினாலும் ஏகத்துக்கு பலவீனப்பட்டிருந்த சமயம். சென்னையில்
மீண்டும் வேலைக்கு போக இறங்கியபோது "இதெல்லாம் தேவையில்லாத வேலை. அப்படி என்ன அவசியம் வேலைபார்க்க. அந்த பணத்தை வேணும்னா நானே தரேன். அநாவசியமா ரிஸ்க் எடுக்காதேன்னு இவர் சொல்லியும்
" இல்லை முடியாது. சுய சம்பாத்தியத்துக்கு மட்டும் இல்லை வேலை பார்பது ஒரு தனித்தெம்பு போய்தான் ஆவேனென பிடிவாதமாய் சேர்ந்தது தான்.

அதிகாலையில் எழுந்து அரக்கப்பறக்க இரண்டு வேலைக்கும் சமைத்து எடுத்து, இரண்டு குழந்தைகளையும் எழுப்பி கிளப்பி உண்ணக்கொடுத்து அதிலும் சின்னதா தொட்டதற்கெல்லாம் அநியாய்திற்கு அடம்பிடிக்கும். நானும் கிளம்பி போதாக்குறைக்கு உடம்பில் புடவையை வேறு அள்ளிச் சுற்றிக் கொண்டு கஷ்டமான பார்டே அதுதான். எவ்வளவு வேகமாய் சுழலும் போதும் காலையில் ப்ரேக்பாஸ்ட் அள்ளிப்போட்டுக்கொள்ள நேரமிருக்காது. பெரியவள் அதே பள்ளியில் படிக்க. சின்னவளுக்கு அங்கேயே டே கேர் இருக்க. பன்னிரண்டு மணி வரை நர்ஸரி லெவலுக்கு க்ளாஸ் டீச்சராகவும் பிறகு பிரைமரி லெவலுக்கு சப்ஜெக்ட் டீச்சராகவும் இருவேறு பொறுப்புகள்.

மிஸ் மிஸ்ஸென மூச்சுக்கு முன்னூறு மிஸ் போட்டு ஒரு பூப்பந்தை போல சுற்றி வரும் பிள்ளைகளை பார்ப்பதில் சிரமம் எல்லாம் கரைந்து போகும். "அதிலும் அருகே வந்து தொட்டுத் தொட்டு பார்த்து கண்களை விரித்து ஆயிரம் கதைபேசுகிற சின்ன மொட்டுக்களுக்கு மிஸ் என்றால் ஒரு தேவதையை பார்பது போல. எதையாவதும் வரைந்து கொண்டுதரும் போது சந்தோச முகம் காட்டி அதை வாங்கிக்கொண்டாலே போதும். உலகத்தையே வென்ற பூரிப்பு இருக்கும் குட்டீஸுக்கு.
" நான் என் மிஸ் சொன்னா மட்டும் தான் கேட்பேன்னு இப்ப எல்லாம் கேரட் சாப்பிட ஆரம்பிச்சிட்டா மிஸ். உங்களன்னா அவ்வளவு பிடிக்குது, எங்க மிஸ் சொல்ற மாதிரி கதைசொல்லுமான்னு ஓயாம மிஸ் புராணம் " என அம்மாக்கள் பட்டியலிடும்போதும் மனம் சிறகடிக்கும். வேறென்ன வேண்டியிருக்கு.

அப்படி சமயங்களில் பிள்ளைகளோடு விளையாடுவது தான். "சரியா செஞ்சிட்டா மிஸ் இப்ப தூக்கி சுத்துவேன்" இந்த சலுகை தட்டாமாலை சுற்றும் விளையாட்டு என் க்ளாஸ் பிள்ளைகளுக்கு ரொம்பவே பிடித்தம். இதற்கே நான் நீ என போட்டிப்போட்டுக்கொண்டு சொல்வதை எல்லாம் சமத்தாய் செய்வார்கள். அப்படி தூக்கி விசிறியாய் ஒரு சுற்றுச் சுற்றி இறக்கிவிட ஹோவென வகுப்பே இரைந்து ஆர்ப்பரித்து கொண்டாடும். எந்த பிள்ளையையும் முன்னே இருந்து தூக்குவது அத்தனை சிரமாமானது இல்லை. திரும்பி நிற்க பின்னாலிருந்து தூக்கும் போது மூச்சைக் கூட்டி பலத்தை பிரோயிகித்து தான் தூக்கமுடியும் தானே. அப்படி தூக்கியதில் தான் எங்கோ எசக்கிபிசக்கி பிடித்துகொண்டு வலி காணுகிறதென முதலில் அசட்டையாக விட்டு பின்னே படுக்கையில் கிடந்தால் வலி, எதிலாவது சாய்ந்தால் வின்னென தெரிக்கும் வலி , படியேறினால் பின்பு அதிர வேகமாய் நடந்தால் என துணுக்கு வலி பெருக்கு வலியாய் முற்றத்தொடங்கியதும் தான் விபரீதம் புரிந்தது.
வீட்டில் நானில்லாமல் ஒரு துரும்பு கூட அசைவதற்கில்லை நிலையில் நானும் உடம்புக்கு வந்து படுத்து விட்டால்!? எங்கே படுக்க. அதுதான் முதுகுத்தண்டில் வலி பின்னி எடுக்கிறதே. இவர் வேற " அதான் திமிரெடுத்து சொன்னதையும் கேக்காம நீயா தேடிகிட்டது தான் இப்ப அனுபவி" இப்படி பேச
"அதற்கு முடியாதபோது ஆதரவாய் இருக்கிறதை விட்டு இப்படி குத்திக்காட்டி பேசுவது என்ன ஆண்புத்தியோவென பதிலுக்கு பதில் முறைத்துக்கொண்டு
எனக்கு வந்த நோய்தானே நானே என்னை பார்த்துக்கொள்வேன் யார் உதவியும் தேவையில்லை எனும் ரோசம் மேலிட ட்ரீட்மெண்ட்க்கு போனேன். தினமும் ஒரு மணி நேரம் பிஸியோதெர்பி. ஹப்பா உயிர் போய் மீளும் கொடிய வலியோடு
இருக்கும் பயிற்சி. பின்பு அல்ட்ரா சோனிக் லேசர் ட்ரீட்மெண்ட் என எதோ செய்யப்பட்டது. அதன் சூடு உள்ளே துளைத்து எழும்பையும் ஊடுருவுவதாய் இருந்தது. வலி மந்தித்துப் போக தந்திருந்த மாத்திரை உபயத்தில் தான் உறக்கமே.

அன்று ஞாயிற்றுக்கிழமை. சிக்கிரமே எழவேண்டிய அவசியம் இல்லை.அதிகாலையிலேயே மாத்திரை வீரியம் குறையத்தொடங்கி.. வலியில் முனகி லேசாக திரும்பி படுக்கவும் உடல் ஒத்துழைக்காத போதும் மூளை மட்டும் விழித்துக்கொண்டது. அட இன்னைக்கு டிசம்பர் ஆறு. ரஞ்சித்ற்கு ராத்திரியே பிறந்தநாள் வாழ்த்து சொல்லாமல் தூங்கிவிட்ட குற்ற உணர்வு தாக்க இப்ப எழுந்து மெசெஜாவதும் அனுப்பனுமென புத்தி சொல்ல கண்களோ திறக்கவும் முடியாமல் கனன்று எரிந்தது. உடலோ ஒரு பொட்டும் அசைக்க முடியவில்லை. உயிர்வரை வலி தாக்கிக்கொண்டிருக்க.
என்ன கொடுமை இது. இப்படியே படுக்கையை விட்டு எழக்கூட முடியாத நோயாளி ஆகிவிடுவேனா. அப்ப இதுங்க கதி !? அருகே உறங்கிக்கிண்டிருக்கும் பிள்ளைகளை பார்த்து கண்ணீர் முட்டியது.
மனம் ஏதேதோ நினைத்து மிரண்டது.
படுக்கையில் விழுந்த நோயாளின்னா எத்தனை நாள் யார் வைத்து பார்ப்பா.?? பாத்ரூம் போகக்கூட அடுத்தவரின் துணையில்லாமல் ஆகாதுபோல ஆகப்போகிறதா.? அப்படி ஒரு நிலையை. இந்த கொடூர வலியைத்தாங்கி வாழத்தான் வேணுமா !!. முதன்முறையாக தற்கொலை எண்ணம் மேலிட்டது. கண்களை திறந்தோ, படுக்கையை விட்டு எழவோ முடியாத நிலையில் எங்கிருந்து தற்கொலை செய்துகொள்வது. தற்கொலைக்கு எதிராக விவேக வியாக்கானம் பேசும் அந்த பக்கத்து மூளை ஓய்ந்துகிடந்தது போல.
சுயமாய் ஒரு ஸ்டூலில் முழுசா ஏறிவிடக்கூடிய திராணியே இல்லாதபோது ஃபேனில் தொங்கமுடிவதெல்லாம் அசாத்தியம். பின்னே மொத்தமாய் எல்லா மாத்திரைகளையும் அள்ளிக்கொட்டிகொள்வோமா.!? ம்கூகும் வேண்டாம் பட்டுன்னு உயிர்போய்ட்டா பரவாயில்லை. இப்ப இருக்கும் வலி வேதனையோடு கூடுதல் வினையை தேடிக்கொண்டு பிழைத்துக்கிடக்கும் படி ஆயிட்டா.!?
பீதியில் மனம் உரைந்தது. தற்கொலை எண்ணம் ஒரு கணநேரப் பித்துநிலை துணிச்சல் தான். சாத்தியப்படுத்தும் வரை அதே மனநிலையை தொடராதவர்கள் பிழைத்தார்கள்.
அரைத்தூக்கமும் வலி மயக்கமுமாய் மீண்டும் கண் அசந்துவிட்டேன் போல. சின்ன கரங்களால் தோளில் குலுக்கி அசைத்து எழுப்பிக்கொண்டிருந்தாள் சின்னவள். இரவில் சாப்பிடாமல் உறங்கியவளுக்கு விடியலில் பசித்திருக்கிறது. அவளுக்கு சாப்பிட கொடுக்க வேண்டும். தலையோ தூக்கமாட்டாத கனத்துடன். கண்கள் எரிச்சலோடு பொங்கியிருக்கிறது. இமைகளை பெயர்த்துப் பிரிப்பது ரணவேதனையாய் இருக்க கைகளை ஊன்றி மிகமெதுவாய் முயன்றும் எழுவது முடியாமல் உடல் படுக்கையில் கிடக்க.
பசியென கேட்டும் அம்மா எழாத கோபம் சின்னவளின் சினுங்கலை அழுகையாக மாற்றிவிட்டது.
இவருக்கோ சீக்கிரம் எழுந்து பழக்கமேயில்லை அதும் ஞாயிறு கேட்கவே வேண்டாம்.
சண்டையிட்டு வைத்திருப்பதால் சத்தமாய் விளித்து எழுப்பவும் இஷ்டமில்லை. ஆனது ஆகட்டுமென திமிரலோடு உடலை அசைத்து எழ முனைந்தபோது பொத்தென உருண்டு தரையில் விழுந்தேன்.
அம்மா கீழே விழுந்துவிட்ட அதிர்ச்சியில் சின்னது அழுகையை நிறுத்தி விரைந்து கீழிறங்கி தூக்கவெல்லாம் முயற்சித்தது.
அந்த பிஞ்சுக்கைகள் கொடுத்த பலம் தானோ என்னவோ திரும்ப சுவரை பற்றி எழுந்து நிற்கவைத்தது. தடுமாறி அடுக்களைக்கு வந்து பாலெடுத்து அடுப்பு பற்ற வைத்து கொட்டிக் காய்ச்சியதெல்லாம் என் சுயசிந்தனைக்கு எட்டியிருக்கவே இல்லாத அனிச்சை செயல்கள். வின்னுவின்னென்று உள்ளே தெரிக்கும் வலியோடு காய்சலில் உடம்பு தீயாய் எரிந்தது மூச்சு கூட சுடுகிற அளவு. அந்த நிமிடம் யாரும் ஆதராவாய் அணைத்துக்கொள்ள மாட்டார்களாவென குழந்தையாய் மனது ஏங்கியது.
கார்ன் ப்ளேக்ஸில் பாலை ஊற்றி புள்ளைக்கு கொடுத்து முடிப்பதற்குள் ஹோவென நெஞ்சை அடைத்துக்கொண்டு துக்கம் தாக்கியது. தற்கொலையென்ன செய்து கொள்வது. உடம்பு இருக்கிற இருப்பில் தானே செத்துவிடுவேன் போலிருக்கிறதே. இதுதான் ஒருவேளை என் கடைசி நாளோ. ஜிரத்தின்வேகம் இப்படியெல்லாம் எண்ணமிட்டது.

தீயாய் உடலின் கொதிப்பு குளித்தாலாவது மட்டுப்படுமாவென ஷவரில் எவ்வளவு நேரம் நின்றேனோ.
குளிர் நடுக்கம் பாய்ந்து வெடவெடக்கத்தொடங்கிவிட்டது. ஈரத்தை துடைக்கக்கூட திராணியற்று உடுப்புக்குள் நுழைய முனைந்தபோது ஏதோ வேறுபாடு உரைத்து குளியலறைக் கண்ணாடியில் பார்க்க கோவைபழமாய் சிவந்து வீங்கியிருந்த கண்களின் மேல் மற்றும் முகத்தில் பல இடங்களில் கழுத்தில் எல்லாம் .. ஆ இது என்ன இதை அம்மை போட்டிருப்பதென சொல்லுவாங்களே ஆனால் அதும் கடும்கோடை நோய்தானே இந்த டிசம்பர் குளிர் மாதத்தில் எனக்கு எப்படி வரும் அல்லது வேறு எதுவுமா குழம்பி பின் தெளிந்து தூங்குகிறவரை எழுப்பி இப்படிக்கு இப்படி விஷயம். இங்கே தனியா என்னால் சாமாளிக்க முடியாது. பிள்ளைகள நீங்க பார்த்துக்கங்க நான் அம்மா வீட்டுக்கு போறேனென கிளம்பிவிட்டேன்.
தனியா போகாதே நான் கொண்டு விடுகிறேன்னு சொல்ல அவர் ஈகோவும். என்னால முடியல கொண்டு விடுங்கன்னு கேக்க என் ஈகோவும் இடம் கொடுக்காமல்.. நல்லவேளை எழும்போது இருந்த அளவு உடம்பு படுத்தவில்லை. ஆட்டோவில் ஏறி உட்காரும் அளவிற்கு அப்போது
திராணி இருந்தது. ஆட்டோவில் ஒவ்வொரு அசங்களுக்கும் முதுகுத்தண்டில் ஆணிபாய்வதாய் இருந்தது. கிடையாய் உட்காரவெல்லாம் முடியாமல் அப்படியே சாய்ந்துகிடந்தேன்.
கே கே நகரில் அம்மா வீடு உறங்க போகிற நேரம் தவிர்த்து மற்ற நேரமெல்லாம் திறந்தே கிடைக்கும் கதவுகள்.

உள்ளே நுழைந்ததும் அம்மா மடியில் விழுந்தேன் ஒரு பெருங் கதறலோடு.
என்னாச்சு ஏன் ஏன்னு தவித்து பதறிப்போனாள் அம்மா. பெற்று வளர்த்த இத்தனை நாட்களில் நான் அப்படி அழுது அவள் பார்த்ததேயில்லை. உயிர் பயம், உடல் வாதை, எதிர்காலத்தை குறித்த திகைப்பு பிள்ளைகளின் கதி இன்னும் ஏதேதோ தான் அப்படி கதறச்செய்ததோ. அழாதே அழாதே என அறற்றிக்கொண்டே ஒரு கட்டத்துக்கு மேல் தாங்காமல் அம்மாவும் சேர்ந்து அழத்தொடங்கினாள்.

வேப்பிலைகளை பரப்பி மேலே வெள்ளை வேஷ்டியை விரித்துப் படுக்கவைத்திருந்தாள். ஒரு மணி நேரம் கூட ஆகியிருக்காது. சின்னவள் அம்மாவேதான் வேணும்ன்னு கத்தி ஊரைக்கூட்றா. இங்கேயே இருக்கட்டுமென கொண்டுவந்து விட்டுவிட்டுப்போனார். பத்து நாட்கள் முடிவதற்குள் " அப்பா காலைலயும் ஸ்கூலுக்கும் திருப்பி நைட்டுக்கும் தோசையை ஊத்தி அதில சக்கரையை தடவி தரார் பாட்டி எனக்கு பிடிக்கவே இல்ல. அம்மா எப்ப வருவா இல்ல நானே அங்க வந்திட்றேன் அம்மாவ எனக்கு பார்க்கனும்ன்னு பெரியவளும் தொடங்கிட்டா.

அன்றைக்கு இருந்த நிலைமைக்கு வந்து விழுந்து கதற எனக்கு அம்மா இல்லாதிருந்தால் நான் என்ன ஆகியிருப்பேன். இல்லை நினைத்த கணக்காய் தற்கொலை செய்துகொண்டிருந்தால் நான் பெத்ததுகள் கதியும் என்ன ஆகியிருக்கும். யாரும் திடமிருக்கும் போது அவரவர் காலில் நின்று கொள்ளக்கூடியவர்கள் தான். ஆனால் உடம்புக்கு முடியாத போதும் உடைந்து போகிற போதும் எவ்வளவு வயதேறிவிட்ட பிள்ளையானாலும் அம்மாவைத்தான் தேடித்தவிக்கும்.

முழுக்க முகம் வாய்பகுதியெல்லாம் பொரிந்திருந்ததால் திட உணவை விழுங்கமுடியாத நிலை. பத்திய சாப்பாட்டை கூழாக கரைத்து அம்மா ஊட்டுவாள். வீட்டில் மற்றவர்களுக்கும் தாளிப்பே இல்லாத உணவுதான்.காலையிலேயே சீவிய இளநீர்களை வாங்கிவந்து விடுவார் அப்பா. ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கு துளையிட்டு பருகத்தந்து. மஞ்சள் நீரில் நனைத்து உலர்த்திய வேஷ்டியில் போர்த்திவிட்டு இரவில் வலியில் முனகினால் அம்மா எழுந்து முதுகில் தடவிக்கொடுத்துக்கொண்டிருப்பாள். அப்பா கால்களை அழுத்திவிட்டுக்கொண்டிருப்பார். கட்டிக்கொடுத்து இரண்டு பிள்ளைகளையும் பெற்றுவிட்ட மகளேயாயினும் மீண்டும் ஒரு குழந்தை நிலையில் வைத்துப் பார்த்துக்கொண்டார்கள் இருவரும்.

ஓய்வென்றால் அதுதான் ஓய்வு. கண்களின் மேல் பொரிந்திருந்ததால் புத்தகங்களையோ போனையோ தொடக்கூட இல்லை. தரையில் கிடந்த அந்த ஒரு மாதமும் வலி மெல்ல மெல்ல குறைந்து குனிந்து நிமிரவும் இயலும் படி இலகுவானது.

முழுக்க குணமாகி அம்மா வீட்டிலிருந்து விருகம்பாக்கம் வீட்டிற்கு திரும்பியதும் முதல் வேலையாக ஒரு மாதச் சம்பளத்தையும் விட்டுக்கொடுத்து ஸ்கூலில் இருந்து நின்று கொள்ள லெட்டர் எழுதிக்கொடுத்தேன். வேண்டாம் இருக்கிற தெம்புக்கு ஒரு நேரத்தில் ஒரு தேரை கட்டி இழுக்க முடிந்தால் போதுமானதென்றுதான்.
அன்றைக்கு பிறகு தன்னலத்தை பார்த்துக்கொள்வது தான் எனக்கு முதல். எந்த காரணத்தைக்கொண்டும் எதையும் அளவுக்குமீறி இழுத்துப்போட்டுக்கொண்டெல்லாம் செய்வதில்லை. எப்ப முடிகிறதோ அப்ப செய்வது அல்லாவிட்டால் போட்டே வைத்திருப்பது. கூடவே மகள்கள் வளர வளர டிபெண்ட் பண்ணாமல் தானே அவங்கவங்க வேலைகளையும் கொஞ்சம் வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்யவும் பழக்கிவிட்டேன். பாத் ரூம் கழுவுகிற வேலை முதற்கொண்டு விடுமுறை காலங்களில் பிள்ளைகளுக்குத் தருவேன்.

இன்றளவும் அதிக எடை தூக்கினாலோ உடல் பலகீனப்பட்டிருக்கும் போதோ முதுகுத்தண்டில் வலி துளைக்கும். இரண்டு வழிகளில் அதை விரட்டிவிடும் யுக்தி பயின்றிருக்கிறேன்.
முதலாவது உடம்பிற்கு நோயை பழக்கிக்கொடுப்பது.
இரண்டாவது நீ என்ன டேஷுக்கு என்னை ஆட்டிப்படைப்பது போவென துச்சமாய் மதித்து நோயை கண்டுகொள்ளாமல் வேறு எதிலாவது கவனத்தை திருப்புவது.

வீட்டுப்பெண்கள் நலத்தோடு இருந்தால் தானே வீடு சரியான கதியில் சுழலும். இந்த விஷயத்தில் பெண்கள் கட்டாயம் சுயநலமிகளாக இருந்தே ஆகனும். என்னைப்போல.

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...