Thursday, March 21, 2019

#புத்தகம்ஸ் - இருத்தலற்ற மனிதனும் தேய்மையுற்ற கண்ணாடியும்

இருத்தலற்ற மனிதனும் தேய்மையுற்ற கண்ணாடியும்

வாழும் நாட்கள் முழுக்க தன்னை குறித்த பிறரின் எண்ணம் என்னவாக இருக்கும்.எதை நாம் விரும்பினால் உலகம் எல்லி நகையாடும், எதை நாம் வெறுத்தால் உலகம் ஏசுமென தனக்கான வாழும் முறைமையில் மற்றவர்களை பிரதி எடுத்தே நகலாய் வாழ்க்கையை தொலைக்கிறான். வாழ்ந்திருத்தல் என்பது பிழைத்திருக்கிறோம் என்பதானால்  இறந்துவிடாமல் தக்கவைத்துக் கொண்டிருக்கிறோம் என்றாகிறது.
உயிர்த்திருக்கும் நாட்களில் பசையற்றுக் கழியும் ஜீவிதம் மனிதனுக்கு மரணித்த பிறகு!! ??

இறந்தவன் சென்றடைய சொர்க்கமென்றும் நரகமென்றும் இருப்பதாகவொரு  நம்பிக்கையூறல் வாழ்ந்த போது தன்னையே பிரதிபலித்து முழுமையாக வாழந்துபட இயலவில்லையோ அவ்வாறே  தான் மடிந்தபின் சொர்க்கமா நரகமா என்பது அவரவர் தேர்வில்லை என்பதில் தொடங்குகிறது இக்கதை.

நரக வாழ்க்கையாயிருக்கிறதென சிலர் புலம்பக் கேட்டிருக்கலாம். அந்நரக வாழ்க்கை எப்படியானதென நாடக வடிவில்
தத்துவார்த்த. பிரெஞ்ச்  எழுத்தாளரான ழான்-போல் சார்த்ர் எழுதிய 'No Exit' ப்ரெஞ்சிலிருந்து தமிழில் வெ.ஶ்ரீ ராம் மொழிபெயர்த்த 'மீள முடியுமா' புத்தகத்திலிருந்து.

காட்சியின் முதல் படிவத்தில் நரகத்திற்குள் நுழைபவன் கார்சென். நரகம் எப்படியானது என்பதை ஒற்றை அறைக்குள் வரையறுத்துவிடுகிறார் ஆசிரியர்.

*ஒரு முறை உள் நுழைந்தால் உள்ளிருந்து திறக்கமுடியாதபடி, வெளியேற முடியாத கதவுகளோடானது அவ்வறை. *
*எந்நேரமும் கண்களை கூசுகிற அணைக்கவே முடியாத மின் விளக்கு ஒன்றுண்டு. என்பது தவிர ஒரு வெண்கலச் சிலையும், காகிதம் வெட்டும் கத்தி ஒன்றும
**யாராலும் விரும்பவே முடியாத அளவு பழமையான மூன்று இருக்கைகளும் (வெவ்வேறு நிறங்களில்) *
*அத்தோடு *
*நரகத்தின் பணியாளரை தேவையான போது அழைக்கவென ( எப்பொழுது அழுத்தினாலும் வேலையே செய்யாத) ஒரு அழைப்பு மணியும். இவ்வளவே நரகத்தின் அந்த அறைக்குள் கார்சன் அடைக்கபடும்முன் இருக்கும் பொருட்கள்.

உள்நுழைந்ததும் மூச்சுமுட்டுகிற அளவுக்கு உஷ்ணம் தாக்குகிற மூடிய அவ்வறையை அவன் வெறுக்கிறான்.
* வசதியோடு கண்களை மூடி கிடந்துறங்க படுக்கையற்ற வெறும் இருக்கை வசதி கோபத்தை தூண்டுகிறது. கூடவே அங்கே எவரும் கண்களை சிமிட்டக்கூட இயலாது.*
*(உறக்கம் மறுக்கப்படுவது மிகக்கொடுமையான தண்டனை, உறக்க நேரம் மனிதனுக்கான தப்பித்தல் அவகாசம். தன்னை துறத்துகிற அல்லது தான் துறத்திக்கொண்டிருக்கிற எதிலெல்லாமிருந்தோ தப்பித்தலே தூக்கம் என்கிறான்). *
இது தவிர அந்த அணையா விளக்கு அவனுள் உஷ்ணத்தை கூட்டி, கண்களை மூடிக்கொண்டாலும் விழிக்குள் எரிந்து, அவன் தன்னுள் அமிழ்ந்துபோக தடையாய் இருக்கிறது.

* அவனுக்கு வேண்டிய இருட்டை திரட்டிக்கொள்ள   ஒரே கையிருப்பான அந்த வெங்கலச் சிலையை விளக்கின் மேல் எடுத்து வீசி அதை அணைத்துவிட வேண்டுமென்ற வேகம் எழும்புகிறது என்றாலும் சிலை தூக்க முடியாத அளவு கணம். இவை எல்லாவற்றிலும் அதிகமான துன்பம்.. செய்ய ஒன்றுமில்லாத அந்த தனிமை சூழல் அவனை பித்துபிடிக்கச் செய்துவிடுமோ அளவுக்கு அச்சத்தை கூட்டியது. *

*நல்லவேளையாக அப்படி நடக்காமல் அடுத்து இனேஸ் எனும் பெயரோடிருந்தவள்  அவ்வறையில் அடைக்கபடுகிறாள். இறந்துபட்ட தன்னோடு அறைவாசியாக வந்துசேர்கிற துணைக்குக்குரிய மரியாதையையும் பங்களிப்பையும் தர அவன் தயாராகிறான். அதை ஏற்கவோ பதில் வினையாக திருப்பித்தரவோ அவள் விரும்பவில்லை என்பதோடு  சிடுக்கிட்ட குணத்தோடும் இருக்கிறாள். *
அய்யஹோ இதற்கு முன்பிருந்த தனிமையே மேல் எனும் நிலைக்கு ஆகிறான் அவன்.

*தன்னையே நொந்துகொள்கிற மிகுதாழ்வுணர்ச்சியோடு கார்சன், *
*தன் மமதையில் காழ்ப்புணர்ச்சியோடு இனேஸ் *
இவ்விருவரோடு மூன்றாவதும் கடைசியுமாக வந்துசேர்கிறாள் எஸ்தெல்.
மிகுந்த சுயநலமியாக அவள் குணம் சொல்லப்படுகிறது.

*முற்றிலும் முரண்படுகிற, ஒருவரோடு ஒருவர் முரண்டுகிற அம்மூவரும் சேர்ந்திருத்தல் என்பதே நரகத்தின் ஆகப்பெருந்தண்டனை. *
எவ்விதமான உடல்வாதையையும் தண்டனையாக தராத நரகம் ஒருவரையொருவர் மனதால் குத்திக்கிழிக்கும் குரூரத்தில் ஏற்றியிருக்கிறது.
மனிதன் அழிந்துபடுவது உடலால் அல்ல தன்னுள் ஊறும் குணத்தால்.

*ஒவ்வொரு மனிதனும் ஏதோவொரு பற்றின் பெயரில் எவரையோ துணையாகக் கொள்கிறான். துணையோடு சிடுக்கமும் உறவுப் பிணக்கமும் ஆவதெதனால் *
என்பதையெல்லாம் இம்மூன்று பாத்திரங்களில் துலக்கிவிடுகிறார் ழான் போல் சார்த்ர்

தன்னை தானே புரிந்துகொள்வதைக் காட்டிலும் பிறர் தன்னை மிகச்சரியாக புரிந்து இயைந்து நடத்தல் வேண்டுமென எதிர்நோக்கலின் அதீதம்.
* தன்னைத் திணிக்தலும்
* எந்நேரமும் பிறரைச் சார்ந்திருத்தல்

காகிதமே இல்லாத அந்த அறையில் காகிதம் வெட்டுக்கத்தி எதற்கு.
ஆதுவே பாவனை.  இல்லாதவைகளையே வெட்டி துகளாக்கி வெற்றுவெளி நிரப்பும் மனிதனின் பாவனை.

மனிதனின் குணத்தை அடையாளமிட கண்ணாடியை ஒரு சிறந்த ஆகுபொருளாக்கியிருக்கிறார் ஆசிரியர்.

கதை தொடங்கி கார்செனை காட்சிபடுத்தும் போதே
"என்ன!! ஒரு கண்ணாடி கூட இல்லாத அறை ! எப்படி
 தன்னைத்தானே பார்த்துகொள்ளவது" என்றும்.

அடுத்து "நான் எல்லாமும் தெரிந்தவள் ஏனெனில் நான் கண்ணாடியில் பார்த்துகொள்பவள்" என்று இனேஸும்,

"என்னை தன்னந்தனியே விடுவதெனில்
குறைந்தபட்சம் ஒரு கண்ணாடியாவது கொடுங்களேன். நான் என் படுக்கையறையில் ஆறு வெவ்வேறு கோணங்களை பிரதிபலிக்கும் கண்ணாடிகளை வைத்திருந்தேன். அவைகள் என்னை சோர்ந்துவிடாமல் விழிப்போடு இருக்க வைத்தது" என்கிறாள் எஸ்தெல்.

அடுத்தவர் கண்வழியே எந்நேரமும் நம்மை பார்த்துகொள்ளவதை
"நீ பார்க்கத்துடிக்கும் கண்ணாடி உன் உண்மை வடிவத்தையே காட்டுமெனில் என்னைக் கண்ணாடியாக்கி என் கண்களில் உனைக்காண், நான் உன் குரூர முகத்தை பிரதிபலிப்பேன்" என்கிறாள் இனேஸ்.

இறுதியிலும் இறுதியான 'பொருள்,' விளக்கம் அந்த வெங்கலச் சிலையில்.
பார்க்க எத்தனை அழகாக இருக்கிறது (மனிதன் கொண்ட கர்வத்தைப்போல )
இருக்கும் இடத்தைவிட்டு அசைக்கவொண்ணாத, எக்காரியத்திற்கும் எடுத்துபயன்படுத்த இயலாத மேலும் உயிர்ப்பற்ற அழிவும் இல்லாத சிலை..

ழான் போல் சார்த்ர்
சிறந்த மனோவியல் கூறுகளை ஆழமுற சொல்லியிருப்பதை பிரெஞ்ச் மொழியில் மூலத்தில் இருந்து அடிருசியை அறியவாவதும் இம்மொழியில் விரைவில் பாண்டித்தியம் பெறவேண்டும்.



No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...