Tuesday, March 26, 2019

Patience Stone - JUNE2017

Patience Stone

சுதந்திர ஆகாயத்தில் பறவைகள் பறப்பதுபோன்ற குறியீட்டு திரையுடன் தொடங்குகிறது படம்.
போர் சூழ் நிலத்தில் நகர்கிற படம். ஆனால்  நேரடி போர்க்காட்சிகள் இல்லை எனினும் தத்ரூபமாக இயற்கையின் பேரழிவுகளை
நீர் வரட்சி, பற்றி எரிகின்ற தீப்பிழம்பு, எங்கோ கேட்கிற வெடிச்சத்தங்களும் கறுகிய சாம்பலின் நிலச்சூட்டிலும்
ஆகச்சேர்த்து  பஞ்ச பூதங்களும் படத்தில் குறியீடாகியிருப்பதை கண்டுகொள்ளலாம்.

வழக்கம்போல மத சமூக  கலாச்சார முன்னிருத்தல்களில் பின்நகர்ந்து நிற்கும்  தனிமனித ஆண் பெண் வாழ்வியிலைத்தான் இப்படமும் சொல்கிறது.

போர் மூண்ட நிலம் அழிவை கண்டிருக்கும், அங்கு வசிப்பவர்களை அச்சமுறச்செய்திருக்கும்,
தளரச்செய்திருக்கும். மாறாக இந்த படத்தின் கதைப்பெண்ணுக்கு அவளுக்கே அவளை அடையாளம் காட்டுகிறது,
திடத்தை தருக்கிறது.
பத்துவருட மணவாழ்க்கையில் அழுத்திவைத்த பேசத்துணியாதவைகளையும் படம் முழுக்க பேசிப்பேசி தீர்க்கிறாள்.

ஒரு கல்லை முன்னிறுத்தி அதனிடம் மனதை அழுத்தி பாரமாக்கும் எவ்வித ரகசியங்களையும் சொல்லி சுக்குநூறாக்கிவிடலாம் என்கிறாள் கதைப்பெண்ணின் அத்தை.

கழுத்தில் குண்டடி பட்டு சுவாசித்தலைத் தவிர மற்ற சுரனையற்றுக்கிடக்கும் கதைப்பெண்ணின் கணவன் இங்கே அந்த கல்லாகிறான்.

 படத்தில் எல்லோரும் பெயரிலிகள் என்பதால் இவளை கதைப்பெண் என்றே விளிக்கலாம்.

செக்ஸ் - வழக்கத்திலும் வழக்கமாக இது ஆணுக்கே உரித்தானது உரிமையானது. தட்டிப்பறிப்பதிலும் ஆணவத்தோடு ஆட்கொள்வதிலும்
தேவைக்கு போர்த்திக்கொள்வதற்கும் அவனுக்கே அங்கிகரிப்பை தந்திருக்கிறது சமூகம். பெண்ணுக்கு பாலுணர்வு மேலெலுவதே, அந்த நினைப்பே, அதை வெளிப்படையாக பேசத்துணிவதே பாவச்செயல் என்பதான கட்டமைப்பை இந்த கதைப்பெண் உடைக்கிறாள்.

காலம்காலமாய் உள்ளுற்றி வைத்திருக்கும் கலாச்சார கற்பித்தல்கள் அவ்வப்போது அவளுள் குற்றவுணர்வை எழும்பச்செய்கிறது என்றாலும் துணிந்து உடைத்தே விடுகிறாள்.

பெண்ணுக்கு பிடித்தமாய் முயக்கத்தோடு கலவுதல் தெரியாதவன்  போர் செய்யவே லாயக்கு எனும் இடித்துரைத்தல் வருகிறது படத்தில்.

அத்துமீறி வீட்டிற்குள் நுழையும் இராணுவ வீரர்களிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள கைக்குபின்னே ஒளித்துவைத்திருக்கும் கத்தியைக்காட்டிலும் கூர்மையான தாக்குதலில் தன்னை ஒரு விலைமகளென சொல்லிக்கொள்கிறாள். இது ஆணின் ஆணவத்திற்கு தரும்  மற்றுமொரு அடி.
 கன்னிப்பெண்களை கற்பழிப்பதிலேயே தன் ஆண்மையின் ஆணவத்தை நிரூபிக்க விரும்பும்  'இவன்கள்' விலைமகள்களை கற்பழிக்க விரும்புவதில்லை என்பதாக.

இரண்டாவது முறையாக பணத்தோடு வருகிற அந்த இளம் ராணுவ வீரனோடான உறவுதலை, சொல்லாமல் சொல்வதாக
கண்ணாடி முன் நின்று  புன்னகையோடு தன்னை திருத்திகொள்ளும் கதைப்பெண்ணின் நிமிர்வில்,அவ்விதம் உறவாடியதை நகைச்சுவையோடு அந்த கல்லானாலும் கணவனிடம் பகிர்ந்துகொள்வதை
 அழகாக காட்சியாக்கியிருக்கிறார் இயக்குனர். கதைப்பெண்ணாக நடித்திருக்கும் Golshifteh Farahani உணர்வுகளின் பாவத்தை தத்ரூபமாக முகத்தில் காட்டியிருகிறார். பணையம் ஆவதை தடுக்க அப்பாவின் பந்தயப்பறவையை பூனைக்கு உண்ணக்கொடுத்ததை சொல்லும் போது அந்த கண்கள். வாவ்.

 அனாதையான, எதிர்க்கும் பலமற்ற பண மதிப்பு இல்லாத, பேச்சு திக்கித் திணரும் அந்த இளம் இராணுவ வீரன் மூலம்  தனிமனிதன் மீது சமூகம் கல்லெறிவதை சொல்கிறது படம். அந்த சமூகம் பெண்ணின் மீது எறிகின்ற பெருங்கல் இனவிருத்திக்கு உதவாத மலடி என்ற சொல்லில் வதைப்பது. ஆணின் மீது மலடன் எனும் கல்லை எப்போதுமே எறிந்திடாத சமூகம், தன் சுயமரியாதை மீது செய்யும் பெரும் தாக்குதலுக்கு தக்க பதிலடியாக,  எவனோ முகமறியாதவன்- எவனவனென தெரிந்துகொள்ள அவசியமுமில்லாத மாற்றானோடு புணர்ந்து இருபிள்ளைகளை பெற்றுக்கொண்டதை திணக்கத்தோடு சொல்லிமுடிக்கிறாள் கதைப்பெண்.

போர்செய்ய மட்டுமே லாயக்கான அந்த கல்லானாலும் கணவன் எதன் குறியீடு என்றால் சமூக கலாச்சார மதப்போர் என்பது ஆக்கத்தின் சாந்த முகமில்லை அழித்தலின் குரூர முகமென்பதே.

படத்தின் தொடக்கத்தில் திருத்தமாக மூடப்பட்டிருக்கும் திரையோடான சாளரம், போர்வினை கண்டபின்  எவ்விதமான மூடல்களும் இல்லாத உடைந்த  சிதறல்களுக்குப் பின் தெளிவான காட்சிப்படிமமாக கல்கணவனின் மரணித்த கண்களையும் கதைப்பெண்ணின் உயிர்ப்பு மிகுந்த கண்களையும் காட்டி முடிகிறது.

 தன் எழுத்தில் உருவான patience Stone ஐ பெர்சியன் மொழியில்   திரையிலும்  சாரம் குறையாமல் தந்திருக்கும் எழுத்தாளர்/ இயக்குனர் Atiq Rahimi மேலும் சொல்வது ஒரு நாட்டின் முன்னேற்றத்தை நிர்மாணிப்பது போரோ துப்பாக்கி முனையோ மத சமூக கலாச்சார கட்டமைவுகளோ இல்லை. அந்த நாட்டில் வசிக்கும் கடைக்குடிமகளின் முன்னேற்றம், மன மாற்றம் மற்றும் செய்யத்துணிதலே ஆகும்.
Photo

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...