சந்தர்ப்ப சூழ்நிலையால் தொடர்பே இல்லாத மூன்று பேர் சந்திக்க நேரும் பயணத்தில் விரிகிறது நார்த் 24 காதம்
இவன் இப்படித்தான் என வரையறுத்து காட்ட நகர்த்திய முதல் சில காட்சிகள் .. இயல்பில் இருந்து வழுவிய ஒருவன் தனக்கே உரியதான இருள் உலகத்தில் வெளிச்சம் புகுவதை விரும்பாதவனாக, சுற்றிலும் சீரான உய்வோடு சுழலும் நடைமுறைக்குள் தன்னை புகுத்திக்கொள்ளாதவனாக இருப்பதை காட்டுகிறது.. எனினும் இந்தவகையான மன அழுத்தத்தை உடைத்து வெளியேறவே விரும்புகிறான் என்பதால் மருத்தவரை தொடர்ந்து சந்திக்கிறான்..
எது எப்படி இருந்தாலும் பெர்பெக்ஸன் பேர்வழிகள் வேலையில் உப்பிட்டு பிழிந்தெடுத்த புளியாய் இருப்பார்கள் என்பதால் அவன் நல்ல ஒரு பதவியில் இருப்பதும் வியப்பான விஷயம் இல்லை.
கம்பனி தன்னை வெளியூருக்கு அனுப்புவதை விரும்பாமல் வேலையை விட நினைப்பதும், தான் வேலையை விடவிருப்பது மற்றவர்க்கு அதீத மகிழ்ச்சியை தருகிறது என்பதால் முரண்டி வெளியூர் பயணிப்பது இப்படியாக நுணுக்கமாய் செதுக்கப்பட்ட பாத்திரத்தில் ஹீரோயிஸ ஆர்பாட்டம் இல்லாமல் மிக இயல்பு நாயகன் ..
எப்பேர்பட்ட மனிதனிடத்திலும் மறைந்திருக்கும் தாய்மை அல்லது கருணை உணர்வே பெரியவர் தவற விட்ட கைபேசியை கொடுக்க ரயிலை விட்டு இறங்கவும், பின்பு மரணச்செய்தியை மறைக்கவும் அவனை உந்தியது எனலாம்.
அடுத்து கவர்ந்த காட்சி .. பைக்கில் லிப்ட் கேட்ட பயணத்தில் நாயகி காணாமல் போவதும் பெரியவரும், நாயகனும் தேடிக்கண்டு பதறி என்னாவாச்சு என்கிற போது நாயகி கூலா செருப்பு பிஞ்சிடுச்சு என்பதும் .. கடத்தியவனை செருப்பால் அடித்து துரத்தினேன் எனும் அளவு கூலான பாத்திரம் அவள்..
அசராமல் பிரச்சனைகளை அனுபவ அறிவால் நிதானமாக அனுகுபவர் பெரியவர் மற்றும் மனைவி மேல் வைத்திருக்கும் அன்பு , உண்ட கையின் விரல்களில் ஒட்டியிருக்கும் கடைசி துணுக்கு வரை ருசித்து வாழும் நாயகி இவர்களால் இறுக்கத்தில் இருந்து இயல்புக்கு மாறியவனின் கதை.
முதல் முறையாக வட்டத்தில் இருந்து வெளியே வந்தவன் திறந்தவெளி காட்சிகளில் காண்பதும், கனிவதையும் எவ்வளவு அழகாக சொல்ல முடிந்திருக்கிறது திரைக்கதையில்.
No comments:
Post a Comment