Monday, April 29, 2013

வாழ்வுநிலை


உரக்க நிசப்தத்தில் உலகம்
உனக்கானது ஒரு மிடறில் விழுங்கல்

துவராடையில் துருத்தி நிற்கும்
தனைமறந்த தான்

 உதிர் இலை சருகுக்கும்
இடம்பெயர் காற்றுக்குமான
இரகசிய ஒப்பந்தம்

அரும்பு மொட்டாகி
முகை முகிழ்ந்து
மலர் மகிழ்ந்து
அலர் முகிந்து
வீ தொட்டு
செம்மல் இடுங்கால்

ஏகாந்தத்தில் தொலைந்து
இமைபொழுதும் திரும்புதல் வேண்டாத...


 


**பூவின் வாழ்வுநிலையில்
--------------------------------------------
1.வீ -வாடும்நிலை
2.செம்மல் -இறுதிநிலை

2 comments:

  1. நிலைகளைச் சொல்லப் போனால் நிறைய இருக்கிறது
    உங்களின் கவி அழகு கோர்க்கப்பட்ட விதமழகு கொஞ்சம்
    வருத்தம்தான் பிறப்பிருந்தால் இறப்பிருக்கும் என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய வருத்தம்தான் ம்ம்ம்ம்
    மனித வாழ்வியலுக்கும் பொருந்தும் உதாரணக்கவிதை ம்ம்ம்ம்

    அரும்பு - அரும்பும் தோன்றுநிலை
    நனை - அரும்பு வெளியில் நனையும் நிலை
    முகை - நனை முத்தாகும் நிலை
    மொக்குள் - "முகை மொக்குள் உள்ளது நாற்றம்" - திருக்குறள் (நாற்றத்தின் உள்ளடக்க நிலை)
    முகிழ் - மணத்துடன் முகிழ்த்தல்
    மொட்டு - கண்ணுக்குத் தெரியும் மொட்டு
    போது - மொட்டு மலரும்பொழுது காணப்படும் புடைநிலை
    அலர் - மலர்ந்த நிலை
    மலர்- மலரும் பூ
    பூ - பூத்த மலர்
    வீ - உதிரும் பூ
    பொதும்பர் - பூக்கள் பலவாகக் குலுங்கும் நிலை
    பொம்மல் - உதிர்ந்து கிடக்கும் புதுப் பூக்கள்
    செம்மல் - உதிர்ந்த பூ பழம்பூவாய்ச் செந்நிறம் பெற்று அழுகும் நிலை

    அனு-Anu Saran

    ReplyDelete
  2. சிந்தனைத்துளிர் இங்கே மணம் பரப்பிக்கொண்டு.. பூவாய் இருந்துப்பார்.. அதன் வாழ்வும் வீழ்வும் எத்தனை நொடிகள் எத்தனை நிமிடங்கள்…. என்று சொல்லிச்செல்லும் மெல்லிய கவிதை வரிகள் புவன்…

    உலகமே இரண்டே இரண்டு ஆப்ஷனில் இயங்கிக்கொண்டு இருக்கிறது… நியாயமான ஆசை… பேராசை என்று.. நியாயமான ஆசை பசிக்கும் வயிற்றுக்கு சோறு… பேராசை.. அடுத்தவன் பொருளை அபகரித்து தான் நன்றாய் வாழ்வது.. நேர்மைக்கும் அதர்மத்துக்கும் இடையில் உலகம் சுழன்றுக்கொண்டு எப்போதும்போல்….

    இந்த அவசர யுகத்தில் தான் தனக்கு என்று தான் மனிதன் ஓடிக்கொண்டு இருக்கிறான்.. முதலில் தன் வயிற்றுப்பசியைப்போக்கிக்கொள்கிறான்.. பின் தன்னைச்சுற்றி இருக்கும் தன் உறவுகளின் விருப்பங்களை நிறைவேற்றுகிறான்… இப்படியே ஒரு இயந்திரத்தனமான வாழ்வில்….

    தன்னையே தான் அறிய முயலும் ஒரு அற்புத முயற்சி தான் இந்த கவிதை வரிகள் சொல்லுவது….

    எத்தனை கூர்மையான கண்ணோட்டம்.. உதிர் இலை சருகுக்கும் இடம் பெயரும் காற்றுக்கும் ரகசிய ஒப்பந்தம்… இயற்கையின் அழகிய யாருமறியா விஷயம் இது… உதிரும் சருகு…. நிலைத்து ஒரே இடத்தில் நிற்காது சுழன்றுக்கொண்டே இருக்கும் காற்று உதிரும் இலைச்சருகை இடம் மாற்றிக்கொண்டு போகும் அதிசயம்…

    மலரின் ஒரு நாள் வாழ்க்கை…. நுணுக்கமான நோக்குதல்… மொட்டு மலராகி.. மலர் வாடி மண்ணில் வீழ அதிக காலம் பிடிப்பதில்லை.. ஒரே ஒரு நாளின் அதிசயம் இவை எல்லாம்…

    மலரின் இந்த வாழ்வைப்போல் மனிதனின் மனதில் எங்கோ ஒரு ஓரத்தில் இந்த சின்ன ஆசை…. நிகழாது இருந்தாலும் நிகழ்ந்தால் எத்தனை நலமாய் இருக்கும் என்று நினைக்கும் ஆசை.. தன்னையே தான் மறந்து ஏகாந்தத்தில் தன்னை தொலைத்து… தானே மீள விரும்பாத அந்த அற்புத சில நொடிகளை வேண்டி நிற்கும் அற்புதமான கவிதை வரிகள்…

    உன் யோசனைகளின் துளிர் தான் இந்த கவிதை புவன்… உன் எல்லா கவிதைக்கும் நீ தேர்ந்தெடுக்கும் படம் பேசுவதை நான் உணர்ந்திருக்கிறேன்.. கவிதை வரிகள் சிறப்பா? அதற்காக தேர்ந்தெடுக்கும் படம் சிறப்பா என்று யூகிக்கமுடியாத அளவு பர்ஃபெக்ட்… படம் என்னை வசீகரித்து வரிகளில் என்னை அமிழ்த்தி ஏகாந்ததில் தொலைத்தது… மீள விரும்பாது இன்னும் வரிகளில் நான்….

    -Manju Bashini Sampathkumar

    ReplyDelete

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...