Thursday, April 18, 2013

குருனைக்கட்டி

இது கதையல்ல...சமூகத்தின் அழுக்கு பக்கம், அவலத்தின் முடிச்சு

எல்லா கிராமங்களையும் போல அந்த ஊரும் மெல்ல மெல்ல வளர்ச்சி கண்டது... எப்போதோ, யாராலோ நிறுவப்பட்ட நேரு சிலைக்கு அருகே இரண்டு மணி நேரத்திற்க...ு ஒரு முறை வரும் பேருந்து, இப்போது அரைமணிக்கு ஒன்றானது.. வரும் வரை பயணிகள் காத்திருப்புக்கு சிமெண்ட் நிழற் குடை கட்டப்பட்டது.

கன்னியாஸ்திரிகள்.. சிறிய அளவில் புறநோயாளிகள் சிகிச்சை மையம் மற்றும் பால்வாடி கல்விக்கான குடில் ஒன்றை அருகே அமைத்தார்கள். சின்னதாக ஒரு பொது நூலகமும்.

இப்படியாக அந்த ஊர் எல்லை தொடங்குமிடம் கம்பிரமான அழகு கொண்டு விட்டது .. அங்கே அவள் மட்டும் ஒரு அழுக்கு புள்ளி.

அவள் அந்த ஊரை சேர்ந்தவள் இல்லை .. சில வருடங்களுக்கு முன் எங்கிருந்தோ வந்து சேர்ந்து இருந்தாள்.. யாது ஊர், என்ன பேர் எவருக்கும் தெரியாது, அதை விளக்கி சொல்கிற புத்தி அவளிடம் இல்லை... அழுக்கு மூட்டை என்று பொருள் படும் படி குருனைக்கட்டி என்றே மற்றவர் அவளை அழைக்க தொடங்கினர்.. நாளடைவில் அதுவே அவளது அழியா பெயர் ஆனது.

நிழற் குடை கட்டப்பட்ட நாளில் இருந்து அது தான் அவளது பட்டா போடாத உறைவிடம்,பசிகிறதோ இல்லையோ ஓயாமல் உண்பது மட்டுமே அவளுக்கு தெரிந்த, பிடித்த விஷயம்.. தட்டை ஏந்தி வீடுகள் தோறும் உணவு வேண்டி நிற்பாள்.செவ்வாய் கிழமை சந்தை நாட்களில் கடைகளிலும்.. "இல்லை போ" என்று எவரும் விரட்ட மாட்டார்கள் .. எதை கொடுத்தாலும் வாங்கிகொண்டு சத்தமில்லாமல் போய் விடுவாள்..

புத்தி சுவாதீனம் இருக்கிறதா இல்லையா என இனம் காணமுடியாத படி அவள் நடப்பு இருக்கும்.. சில நேரம் தன் போக்கில் தானே பேசிக்கொண்டு கிடப்பாள்.. வருட கணக்கில் பார்க்கிற அதே முகங்கள் என்பதால் எல்லோரையும் அவளால் இனம் கண்டு கொள்ள முடியும்.

ஆண்கள் என்றால் மச்சான் என்றும் பெண்கள் என்றால் மச்சி என்றும் அழைத்து பேசுவாள்..

மில்லுக்கு, டவுனுக்கு போக பஸ் பிடிக்க எவர் வந்து நின்றாலும் "மச்சான் எங்கே போறே" என்று கேட்டு வைப்பாள்.நாட்டுப்புற மனிதர்கள் சாங்கியம் பார்பார்களே " அய்யே.. நல்ல காரியத்துக்கு போகும் போது இது வேறே இப்படி கேட்டு வைக்குது" நொந்து கொண்டு போவார்கள்.. கேள்வி கேட்பதோடு சரி, பதிலை எதிர்பார்க்க மாட்டாள். வேறு எங்கோ பராக்கு பார்த்தபடி அவர்களை மறந்திடுவாள்.

விதவிதமான நிறங்களில் சேலை, யாரும் கட்டி இருந்தால் உற்று நோக்குவாள். "மச்சி சீலை நல்லா இருக்கு. "

இதில் கொடுமை என்னவென்றால் அவளிடம் பாவம் பார்த்து, நிறைய பெண்கள்.. கட்டி அழுத்து போன சில புடைவைகளை தருவார்கள்..ஆசையாய் வாங்கி கைகளில் வருடி பார்த்து நன்கு மடித்து தன் மூட்டைக்குள் பத்திரபடுத்தி கொள்வாளே அன்றி அழுக்கேறி போய் ஆங்காங்கே கிழிந்து தொங்குகிற மேலாடையை மாற்றியதே இல்லை .. என்றாவது மழை நாளில் நனையாமல் ஒதுங்க வேண்டும் என்ற கூர்மைஇல்லாமல் நின்றாள் என்றால் அது தான் அந்த வருடத்தின் அவளது குளியல்.

முப்பதின் பின்பாதியில் இருந்த அவள் அழுக்கு, வறண்டு, தோல் சுருங்கி கருத்த தேகமும், சிக்கு பிடித்து ஜடா முடியாய் தொங்கும் தலையுமாக பயம் கொள்ளவைக்கும் உருவம் அவளுடையது..

" இங்க பாரு, சாப்பிடலை.. குருனைக்கட்டியிடம் பிடித்து கொடுத்துவிடுவேன்"என்று அம்மா மார்கள்

இவளைக்காட்டி தான் சோரு ஊட்டுவார்கள் பிள்ளைகளுக்கு.

கன்னியாஸ்திரி குடிலுக்கு சாந்தா சிஸ்டர் வந்து சேர்ந்த பிறகு குருனைக்கட்டியின் வாழ்வியல் முறையில் சிறிது மாற்றம் வந்தது..

நிழற்குடையில் பேருந்துக்கு நிற்கும் போது " மச்சி எங்கே போறே" கேட்ட அவளை பார்த்த மாத்திரத்தில் அவருக்குள் ஒரு இளக்கம், தாய்மை உணர்வு .. ஆதரவின்றி கிடக்கும் ஒரு கைபிள்ளையாக தோன்றியது சிஸ்டருக்கு.

யாரும் பக்கத்தில் போகவே அருவெறுப்பு படும்படி இருக்கும் அவள் அருகில் போய் கரங்களில் தொட்டு எழுப்பி நிறுத்தி மருண்ட பார்வை பார்த்த அவளிடம் கேட்டார் சிஸ்டர்.. " என் கூட வர்றியா"

உடனே குழந்தையாய் முகம் குதுகூலம் காட்ட " திங்க கொடுபியா " என்றாள் அவள்.

இரண்டு மூன்று நாட்கள் கூட குடிலில் தங்கி இருக்க முடியவில்லை குருனைக்கட்டிக்கு .. தலை முடி நீக்கப்பட்டு மொட்டைஅடித்தையும், தேய்த்து குளிக்க செய்து வேறு உடை அனுவித்தையும் தனக்கு நடந்த பெரும் கொடுமையாகவே கருதினால் அவள்.

என்னதான் சாப்பிட கிடைத்தாலும் கட்டி போட்டு வைத்தது போல அங்கு பிடிக்காமல், அழுது ஆர்ப்பாட்டம் செய்து தன் அகமான பேருந்து நிற்கும் நிழற்குடைக்கு ஓடிவந்துவிட்டாள். சாந்தா சிஸ்டர் அவளை கட்டுபடுத்த முடியாது என தெரிந்து கொண்டார். தூரத்தில் இருந்து வேண்டியன செய்வோம் என நினைத்தும் கொண்டார்..

அப்போது தான் அது நடந்தது.

நடக்கமுடியாமல் நடந்து தெருவுக்குள் வந்தாள் அவள், கொளுத்துகிற வெயிலில் கண் எரிந்தது.

அதற்குமேல் கடக்க முடியாது என்பது போல தென்பட்ட ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து, திறந்து கிடந்த வீட்டின் உள்ளே பார்த்து குரல் கொடுத்தாள்.." மச்சி. " ...

இரவு தூங்க போகும் முன் தாழ்ப்பாள் இடுவது தான் ... மற்ற நேரங்களில் அங்கே எல்லா வீட்டின் கதவுகளும் விரியத்தான் திறந்திருக்கும்.. இருந்தும் பட்டென்று ஒருவர் வீட்டிலும் அவள் நுழைய மாட்டாள். திண்ணையோடு சரி.

குரலில் அறிந்து வட்டில் நிறைய உணவை எடுத்து வந்தாள் ராதா. வழக்கத்துக்கு மாறாய் அதை வாங்க மறுத்தாள் குருனைகட்டி " ஐயே எனக்கு இது வேணாம், புட்டு சுட்டுக்கொடு மச்சி".

"இப்போ இது தான் இருக்கு, எடுத்திட்டு போ"

"இல்ல வேணா, எனக்கு புட்டு தான் வேணும்"

அடமாய் அசைய மறுத்து இருந்தாள் அவள். முதலில் சற்று முகம் கடுத்த போதும் என்ன நினைத்தாலோ உள்ளே போய் பத்து நிமிடத்தில் ஆவிபறக்க இட்லிகளை எடுத்து வந்து தந்தாள்..

அந்த நிமிடம் குருனைக்கட்டியின் முகத்தை பார்க்க வேண்டும்.. சொர்கமே கையில் கிடைத்த பூரிப்போடு சேர்த்து பிசைந்து, கைகொள்ளும் மட்டும் அள்ளி வேக வேகமாய் உண்டு முடித்து அவள் நகர்வதையே பார்த்திருந்த ராதாவை பேச்சுக்கு இழுத்தாள் எதிர் வீட்டு மருதாயி

" வேலியிலே போறத இழுத்து விட்டுக்கிற சொல்லிட்டேன்.. இனி உன் வீட்டு திண்ணைக்கு சட்டமாய் குடி வந்துவிடுவாள் பார்த்துக்க"

"பாவமாயிருக்கு க்கா, எதோ உடம்பு முடியலை போல, வயிறு வீங்கி கிடக்கு, நடக்க முடியாம நடந்து போகுது பாரு"

ஆமா.. கணக்கில்லாம தின்னா வீங்காம என்னத்த செய்யும்." - மருதாயி

உடுமலைபேட்டை, பொள்ளாச்சி,திண்டுக்கல்,சேலத்தில் கேம்ப் பணி முடித்து, சமயம் வாய்த்ததில் கண்டு விட்டு போக வந்த சாந்தா சிஸ்டர் இப்போது குருனைக்கட்டி இருப்பதின் நிலையை பார்த்து துணுக்குற்றார்..

உடம்புக்கு எதோ பெரிதாக நோய் கண்டு இருக்க வேண்டும், அழைத்தால் மருத்துவமனை வரை வரமாட்டாள் என்பது தெரியும் என்பதால் அங்கேயே வைத்து பார்க்க முயன்றார்.. ஒரு நீண்ட போராட்டத்துக்கு பிறகு பரிசோதனையின் முடிவில் கிடைத்தது பெரும் அதிர்ச்சியாய் குருனைக்கட்டி கற்பவதி என்பதே..

கடவுளே என சாந்தா சிஸ்டர் மண்டியிட்டு, சரிந்து அப்படியே அதிரிச்சியில் உறைந்து விட்டார்..

"கடவுளே, புத்தி பிசக்கிய இவளுக்கு என்ன மாதிரி சோதனை". அவர் மனம் தங்காமல் அரற்றினார்.

ஊர் முழுக்க காட்டு தீயென பரவியது விஷயம்..

இப்படி இருக்கும் என யாரும் யூகித்து கூட பார்த்திருக்கவில்லை.. எப்படி ஒரு கேவலமானவன், இன்னும் இன்னும் வாய்க்கு வந்ததெல்லாம் சொல்லி அந்த முகம் தெரியாத காமுகனை கரித்து கொட்டி, காரி துப்பினார்கள் எல்லோரும்..

எது எப்படி என்றாலும் பிடித்த பிடியை விடாமல் அங்கிருந்து நகரமாட்டேன் என்று விட்டாள் குருனைக்கட்டி, பின் மாதங்களில் இருக்கிறாள் என்பது தவிர எப்போது பிரசவிப்பாள் என தெரிய முடியாமல் இருந்தது.

நிழற்குடைக்கு எதிரேயே நாயரின் டீ கடை.. சிஸ்டர் அவரிடம் சொல்லி வைத்தார், ஒரு கண் பார்த்து கொள்ளும்படியும், கொஞ்சம் பணமும் தந்தார்.. வேண்டியதை தர சொல்லி.. டீ கடை காரர் அதை வாங்க மறுத்து விட்டார்..

"நானும் பிள்ளை குட்டிகாரன் .. அதுக்கும் சேர்த்து கொடுத்துவிட்டு போறேன்.. பணம் எல்லாம் வேண்டாம்"

முன்னே மாதிரி தெருவில் இறங்கி நடப்பது, சந்தைகடைக்கு போவது, தன் போக்கில் பேசி கொள்வது ஏதும் இல்லாது போனது அவளிடம்.உள்ளே சிமெண்ட் பெஞ்சில் சுருண்டு கிடந்தாள் அல்லது சுவரோடு சாய்ந்த வண்ணம் விட்டத்தை வெறித்தவாறு இருந்தாள்.கால்கள் வீங்கி போய் நடப்பதை சிரமம் ஆக்கியிருந்தது அவளுக்கு..

வயிற்றில் கணம் ஏற ஏற முதுகு எலும்பில் வலி காண்பது, சுமை காலத்தில் இயல்பு எனினும் வயது போன காலத்தில் அவளுக்கு இப்படி நேர்ந்து இருப்பதால் இடுப்பில் எழும்பு விரிந்து கொடுப்பது என்பது சிரமம்..

உள்ளே என்ன வாதையோ, அதை உணர முடியாமல் சில நேரம் வாய்விட்டு தேம்பி அழுது கொண்டு இருப்பதை பார்த்து ஊரார் செய்வதறியாமல் தவித்தனர்..

நேரம் ஒதுக்கி, மகளை பார்த்து கொள்ளும் தாயாக இருந்து அவளது புரியாத வேதனைக்கு மருந்தாக அன்பு கட்டினார் சாந்தா சிஸ்டர்.. அவளுக்கும் மெல்ல மெல்ல சிஸ்டரின் அன்பு முகம் பழகிவிட்டது.. இருந்தும் அவர் கொடுக்கும் மருந்துகளையும், ஊசியையும் வெறுத்து பயந்து அலறினாள்..

நடுநிசியில் நாய்கள் கூடி குறைத்து கொண்டு இருந்த சத்தம் தவிர ஊரே அடங்கி இருந்தது. சிரமத்தோடு புரண்டு கொண்டு இருந்தாள் குருனைக்கட்டி... சின்ன சின்ன சுருக் சுருக் வலி தொடங்கியது... ஏகத்துக்கு பறந்து கடிக்கும் கொசுக்களின் கடி என்பதாக நினைத்து கொண்டு சுத்தி இருக்கும் கொசுக்களை கையில் இருந்த துணியால் விரட்டினாள்.

இப்போது வலியின் அளவில் சற்றே பெருக்கம். ஒரே நேரத்தில் தனக்கு நிறைய ஊசிகள் போட படுவதாக அதை கற்பனை செய்து கொண்டு அலற தொடங்கினாள்.. கால்களை அசைத்து முரண்டு பிடிக்க நினைத்தால் அசைக்கவே முடியாத மரண வேதனையை கால்கள் கண்டன..

பிரசவ காலத்தில் நரம்புகள் இழுத்துக்கொண்டு கால்கள் மரத்து போய் அசைக்க முடியாமல் போவது இயல்பு.. பேதை பெண்மணி அவளுக்கு என்ன புரியும். தன் கால்களை யாரோ கட்டி போட்டுவிட்டதாக நினைத்து புலம்பினாள்.. பயத்தில் கண்கள் பிதுங்கியது. அவளுக்கு தெரிந்த ஒரே உபாயமாய் உண்பது.. பரபரவென மூட்டையை பிரித்து கையில் கிடைத்த ரொட்டி துண்டுகளை எடுத்து வாய் கொள்ளுமட்டும் அடைத்து கொண்டாள்..அதற்குள் இடுப்பில் கடப்பாறையால் ஓங்கி யாரோ அடித்தார்கள்.. நங்கென்று கிளம்பிய வலியோடு.. தொண்டையில் விழுங்க முடியாத ரொட்டி துண்டுகள் அடைத்துகொண்டது... தண்ணீர் பருக வேண்டும் என்ற தவிப்பு..

அவளிடம் நீர் இருக்கவில்லை. விக்கல் எடுக்க தொடங்கியது... இடுப்பில் குறிவைத்து இப்போது பலபேர் அடிக்க தொடங்கிவிட்டார்கள்.. கால்களை வேறு கட்டி வைத்து, அலற முடியாமல் கழுத்தை யாரோ நெரிப்பது போல எல்லாம் அவள் கண்களுக்கு பிரம்மை தோன்றியது..

சாந்தா சிஸ்டர் - அன்பு முகம் தன்னை காக்கும் என அந்த கணத்திலும் தோன்றியது போலும் எப்பாடு பட்டாவது அந்த இடத்தில் இருந்து தப்பிவிட, நடக்கமுடியாத உடம்பை தரையோடு நகர்த்தி, தரங்கி தரங்கி வெளியே வந்தாள்.. வயிற்றில் சுமையோடு, இடுப்பில் வலியோடு, நீருக்கு தவித்து விக்கல் எடுக்கிற நாவுடன் நகர்ந்து கடப்பது முடியாத போதும்.. கைகளில், கால்களில் சிராய்ப்பை, ரத்தம் கசிவதை கூட பொருட்படுத்தாமல் நேரு சிலை வரை வந்து விட்டாள் ஈனசுரத்தில் இப்போது அவள் குரல் ஓலமாய் ஒலித்தது.

பனிக்குடம் உடைந்து இருக்கவேண்டும் அதற்குமேல் நகர முடியாமல் அப்படியே கிடந்து அரற்ற தொடங்கினாள்.. இடுப்புக்கு கிழே வலி இடியாய் இறங்கியது... துடி துடித்து செய்வதறியாமல் கைகளில் மண்ணை அள்ளி முகத்தில் பரபரவென தேய்த்தவாறு கதறினாள்..

சுடலையப்பர் பண்ணைக்கு பால் எடுக்க வந்து கொண்டிருந்த நாயர் அதை பார்த்ததும் சைக்கிளையும் கேனையும் அப்படியே போட்டு விட்டு குடிலை நோக்கி வேகமாய் ஓடினார்...சாந்தா சிஸ்டரும் மற்றவர்களும் வருவதற்குள் பிள்ளையின் தலை வெளியே கண்டு விட்டது.. அதற்குமேல் அங்கே இருந்து மருத்துவமனை தூக்கி செல்வது சிரமம் என புரிந்தது.. உள்ளூரில் பிரசவம் பார்க்கும் மருத்துவச்சியும் வந்து சேர்ந்திருந்தாள்.


அங்கே தெருவிளக்கு இல்லை. கையில் ராந்தல் விளக்கோடு ஊர்மக்களும் கூடிவிட்டு இருந்தனர்.எத்தனை முயன்றும் பிள்ளையை வெளியே எடுப்பது சுலபாய் இல்லை.. புத்தி கலங்கிய பெண்மணி அவளுக்கும். முக்கி முயன்று பிள்ளையை வெளியே தள்ள வேண்டும் என்பது சொன்னாலும் புரியவில்லை.. வலி ஒன்றே பிரதானமாய், துன்புறுத்த.. அலறி துடித்துக்கொண்டு இருந்தாள்.. போராட்டத்தில் மருத்துவச்சிக்கு கூட உடம்பெல்லாம் வேர்த்து, மயக்கமே வந்துவிடும் போல் இருந்தது..

குருனைக்கட்டியின் அளவில்லாத பெருந்தீனியில் பிள்ளை வயிற்றில் அதீத வளர்ச்சி கண்டு எடை கூடிய குழந்தை என்பதாலும், அதிகம் விரிந்து கொடுக்காத அவளது கற்ப வாய் வழி, பிள்ளை வெளியே வருவது சிக்கலாய் இருந்தது.

நாற்பத்தைந்து நிமிடங்கள் அரும்பாடுபட்டு முயன்றதில்.. பெயர் அற்ற தாய்க்கும், முகம் தெரியா தந்தைக்கும் ஜனித்தோம் என்பது தெரியாமல் பிள்ளை வெளியே வந்து விழுந்தது...

அடுத்த நிமிடம் குருனைகட்டியின் உடல் நடுங்க தொடங்கியது..

பிரசவித்து முடித்ததும் பெண்ணின் உடலில் குளிர்நடுக்கம் அதிகமாகவும் , பற்கள் கூட கிடுகிடுவென தந்தியடிப்பதும் நடக்கும் தான் எனினும் அவளுக்கு அதிகபடியாக தூக்கிபோட்டது.மூச்சு காற்றுக்கு சிரமபடுவதாய் நெஞ்சுக்குழி ஏறி இறங்கியது..

அவளது தலைமாட்டில் இருந்து தாங்கி பிடித்திருந்த சிஸ்டரின் முகத்தில்தான் அவள் பார்வை நிலைதிருந்தது.. பிள்ளை வெளியே வந்த வழியில் உதிரபோக்கு கட்டுபடாமல் ஆறாய் ஓடியது.. எதை செய்வது, எப்படி காப்பது என தெரியாமல் சுத்தி இருந்த அத்தனை பேறும் திகைத்து விழித்தார்கள்.

எந்த முதல் உதவிக்கும் கட்டுபடாமல் ஜன்னி கண்ட உடம்பில் வலிப்பு வர தொடங்கியது.. கை கால்கள் வெட்டி வெட்டி வாயில் நுரை தள்ள தொடங்கி இரண்டாவது நிமிடம் அங்கே குருனைகட்டி என்று அழைக்கப்பட்ட நல்ல அத்மாவுடைய வெற்று உடல் மட்டும் தரையில் கிடந்தது.. நிலைகுத்திய பார்வை சிஸ்டரை பார்த்த வண்ணமே..

ஆத்மா சாந்தியடையட்டும் என விரல்களால்.. திறந்திருந்த கண்களை மூடி நெற்றியில் சிலுவை வைத்தார் சிஸ்டர் .துணியால் சுற்றப்பட்ட குழந்தையை கைகளில் அள்ளி அணைத்து கொண்டார் தாய்க்கு தாயானவர். குழந்தையின் வீறிட்ட சத்தம் இருளை கிழித்து கொண்டு கேட்டது ....


-


 புவனா கணேஷன்

5 comments:

  1. Joe Felix
    ---------
    செம்ம ஒரு வார்த்தையால் சொல்லி முடித்திட முடியவில்லை இன்றும் இன்றும் இப்படியான பிறப்பும் இறப்பும் இயற்கையென்றே பார்க்க படுகிறது இந்த அவல நிலையை கடந்து சென்று கொண்டிருக்கும் உலகில் அதையே வலிக்கும் படியான வார்த்தைகளாய் எழுதிய உங்களுக்கு என் வணக்கங்களும் கைதட்டல்களும் சகோ செம்ம

    ReplyDelete
  2. Manju Bashini Sampathkumar
    ---------------------------
    கதையை காலையே படித்துவிட்டேன். ஆனால் மனம் முழுக்க என்னவோ துக்கம்… குருணைக்கட்டி கதையில் வரும் ஒரு கதாப்பாத்திரம் தானே என்று நினைக்க முடியாதபடி மலையளவு சோகம்… சாப்பிடக்கூட பிடிக்காமல் குருணைக்கட்டிக்காக துக்கம் அனுஷ்டிப்பது போலிருந்தது என் நிலை…

    என்ன உலகம் இது? புத்திசுவாதீனமற்று இருக்கும் ஒரு பிள்ளையை கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாது இப்படிச்செய்ய எப்படி மனம் வந்தது? எல்லோர் வீட்டிலும் பெண்கள் ஏதோ ஒரு ரூபத்தில் கண்முன் நடமாடிக்கொண்டு தானே இருக்கிறார்கள்? தாயாக, மனைவியாக, சகோதரியாக, மகளாக…. எப்படி முடிந்தது இப்படிச்செய்ய…
    வரிகள் கதையைச்சொல்லவில்லை புவன்… குருணைக்கட்டியின் நிலையை நேரில் கண்டது போல் இருந்தது வரிக்கு வரி… அவள் கர்ப்பவதி ஆனதும் தன் வாய்க்கு ருசியாக தனக்கு விருப்பமானதை கேட்டு வாங்கிச்சாப்பிட்டு… தனக்கு இப்படி ஆனது கூட தெரியாமல்… பிரசவ வலியை நுணுக்கமாக வரியில் எழுதி இருந்ததை கண்டு பிரமித்தேன் புவன்… அசாத்திய வரிகள் அவை… பிரசவ வலியையும் உடல் தரும் அவஸ்தையையும் மிக மிக அருமையாக எழுதி இருக்கே புவன் ஹாட்ஸ் ஆஃப்…

    இப்படி ஒரு நிலை அந்தப்பிள்ளைக்கு வரக்கூடாது என்று தான் சிஸ்டர் பாடுபட்டார்.. ஆனால் விதிப்பயன் யாரை விட்டது? இப்படி எல்லாம் துன்பப்பட்டு ஒரு உயிரை உலகத்துக்கு கொடுத்துவிட்டு ஓய்ந்துவிட்டாள்.. இனி என்ன ஆகும்?

    கதை நடை படிக்க படிக்க கதை போலில்லாமல் நம் கண் எதிரே ஒரு அவலம் நடக்க அதை ஒன்றும் செய்ய இயலாமல் வேடிக்கை பார்ப்பது போல் இருந்தது புவன்..

    உன்னுடைய உழைப்பு வரிக்கு வரி தெரிகிறது… நீ எழுதிய அத்தனை கதைகளுக்கு இடையில் இந்த கதை மிக மிக அற்புதம் புவன்… பெயர் அற்ற தாய்க்கும் முகம் தெரியாத தந்தைக்கும்… அங்கங்கே வார்த்தைகள் மிக அழகாய் தொடுத்திருக்கே புவன்… டீக்கடைக்காரரின் மனிதநேயம்.. பிரசவம் ஆனதும் ஏற்படும் வலிப்பும் குளிர் ஜுரமும்… அதில் துடித்து அடங்கும் உயிராக குருணைக்கட்டியின் அவலமும்… அடுத்து இனி என்னாகும் என்ற தவிப்புடன்…

    ReplyDelete
  3. Kayesye Madhu
    --------------
    ஒரு அருமையான எழுத்தாக்கத்துடன் கூடிய கனமான கதை ஒன்றைத் தந்தீர்கள்.அது கதை அல்ல. நிஜம். ஆம். நான் சென்னையில் இருக்கும்போது அருகாமை வீட்டில் இருந்த மனநலம் பாதிக்கப் பட்ட இளம் பெண்ணொருத்திக்கு நடந்த கொடுமை அது.பெண் குழந்தை ஒன்றை ஈன்றெடுத்த அந்தப்பெண்ணையும் அவளது குழந்தையையும் அவளின் ஏழை அண்ணன் இன்றும் பாதுகாத்து வருகிறார்.கதையை படித்த போது அந்த நிகழ்வு மனதிலே நிழலாட என் கண்கள் பனித்தன.

    ReplyDelete
  4. Melvin Sathya
    --------------
    இதில் ஏதோரு இடத்திலும் நிஜத்திலிருந்து விலகிச்செல்லும் உணர்வு இல்லை, சமூகம் இது போன்ற அநேகம் குருனைக்கட்டிகளை நடத்தும் விதம் இதுவே.. என் கல்லூரி காலங்களில் இது போன்ற ஒரு நிகழ்வை சந்தித்ததுண்டு.. இதே போல் திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் யாரோ எங்கிருந்தோ முருகனடி என்று சொல்லி விட்டுச்சென்ற ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண், சில காபி கடைகளில் பாத்திரம் மட்டும் கழுவி கொண்டு இருந்த நிலையில், இதே போன்ற ஒரு ஒரு நிகழ்வு.. சமூகம் என்றுமே வலி மிகுந்த சில அழுக்கு பக்கங்களை உதிர்த்து விட்டே செல்கின்றது...

    ReplyDelete
  5. இதுகெல்லாம் கமன்ட் பண்ற அளவு நான் இன்னும் வளரல. உங்க தீவிர ரசிகையாகிட்டேன். உங்கள பாலோ பண்ற ஆப்சன் எங்க இருக்குன்னு தெரியல, சீக்கிரமா சரி பண்ணுங்க, இனி உங்களோட படைப்புகள தேடி நிறைய பேர் வருவாங்க

    ReplyDelete

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...