Wednesday, February 6, 2013

வெசனத்தை என்ன சொல்ல?...


 நித்தம் நித்தம் தீவாளி கணக்கா...
பை நெறைய காத்தை ரொப்பி...
ஒடச்சு,வெடிச்சு...விளையாடிப்புட்டேன்...
ஏஞ்சாமி அது தப்பா?

காத்துக்கும்,கருப்புக்கும் ஏன் மேல கோவமாம்..
கங்கணம் கட்டி நிக்குதாமா வாசலுக்கு அந்தால..
தெக்கால வீட்டோரம்…
கீத்து வேஞ்ச,பந்தலிலே….
உள்ளர வச்சு அடச்சுப்புட்டாக ….
என்னத்த நான் சொல்ல...
ஆத்தி, நானே கருப்புதேன் ...
இனி எந்த கருப்பு எனை பிடிக்க...


கருக்கலிலே தட்டி எழுப்பி,
தலயோட தண்ணி ஊத்தி,
அரைப்படி.. மஞ்சளிலே, உடம்பெல்லாம்
சாயம் பூசி,
கூடி நின்னு குளிக்கவச்சு,
உடுத்திக்கிட புதுசா துணி ...
வெவரம் ஒன்னும் வெளங்கலியே,
விசாரிச்சா வைவாகளோ?...

தக்க வச்ச காசை எல்லாம்
தலைச்சீரா மாத்திபுட அப்பாரு
சொல்லி விட்டு சித்தப்பு, சந்தைக்கு...
அத்தைமாரும் வந்தாக
தட்டு நெறய சீரோட....
அப்புச்சி பேசிறது வாய்க்கா, வரப்பை தாண்டி
அடுத்த பட்டிக்கு எதிரொலிக்க,
அம்புட்டு பேரும் விழுந்து..விழுந்து சிரிக்காக,
என்னைய மட்டும் விட்டுப்புட்டு....  


சுட சுட பணியாரம், புட்டு
சுட்டு போட்டபலகாரம்...
தட்டு தட்டாஅடுக்கினாலும்
ஒன்னோடும் ஒட்டாம எங்கிட்டோ நெனைக்கேன் நான்...
காக்கா கடி நெல்லி, ஏறி பறிச்ச கொடுக்காபுளி.
பங்கு போட்டு தின்ன ருசிக்கு,
மத்ததெல்லாம்...எம்புட்டு...

முச்சந்தி முனையிலே,என்சோட்டு புள்ளைக…
குதிச்சு, குதிச்சு...நொண்டி ஆட...
பருப்புக்குள்ளே...அரிசி பொருக்கி, இங்கிட்டு
நான் மட்டும் குத்தவைக்க...
என்ன குத்தம் செஞ்சேனோ....  



தொணைக்கு தங்கிக்கிடகுச்சு வீட்டுக்குள்ளே ,
அப்பத்தா வந்திட்டா.....
ரோட்டா நெறைய காபித்தண்ணி....
இடிச்சு, திங்க பாக்கு வெத்தலை...
கொதப்பிக்கிட்டே பேசி தள்ளுதா,
அவோளோட பழங்கதைய...
வசமாத்தேன் மாட்டிகிட்டேன்,
வீம்பு பண்ணி எதை மாத்த....  


பொழுதும் போயிடுச்சு...
சாமம் தொடங்கிடுச்சு...
ஊரும் அடங்கிடுச்சு...
வந்திட்ட ஒறம்பற...
அசாரத்திலே மொடங்கிக்கிட,
பேசி பேசி அலுத்துப்போன அப்பத்தாவும் உறங்கிப்போக,
அவ சொன்ன கதை முச்சூடும் உள்ளுக்குள்ளே பயம் கிளப்ப...
கொட்ட கொட்ட முழிச்சுகிட்டு,
விட்டத்த பார்த்து கெடக்கேனே....

தூரந்தள்ளி...அந்தள்ளைல,எங்கனையோ..
ஊளை சத்தம்....
கும்மிருட்டு கண்ணுக்குளே கிடந்தாட…

எரவாரம்,சொருக்கி வச்ச வேப்பிலை..காத்திலாட,
மூளையிலே சாத்தி வச்ச விலக்குமாறு..
கரு,கரு இருட்டுக்குள்ளே கருப்பா மாறி...
...பீதியிலே கொரவளை நெரிய 


விருக்கினு பாய்ந்துஅப்பத்தா கையப்பிடிக்க,
வெடுக்கின்னு தட்டிவிட்டா...
சுருக்குனு வஞ்சுபுட்டா...
"ஏலே கூறுகெட்ட பயபுள்ளே,
தீட்டு,சாங்கியம் செய்யாம,
தொடதே லே,எட்டப்போ….. "

தோட்டசெடி பூபெய்தால்...
தூக்கி வச்ச தலைக்கு மேல,
என்னிய மட்டும் ஓரங்கட்ட
எங்கன படிச்ச சொல்லாயி......
 

 
( புவனா கணேஷன் )


 

1 comment:

  1. அருமை!
    இதுக்கும் மேல இந்த கவிதைய பாராட்டி என்னனு சொல்ல...
    வார்த்த ஒன்னும் தோனல....
    நல்லா எழுதுற தாயி.

    ReplyDelete

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...