Monday, February 11, 2013

ஆதிரா பறந்தாள்...


அடைவு அரூபமற்ற கூறுகளைச்சுமந்து ..
கோல உருளைக்குள் சதுர பிம்பங்களைத்தாண்டி ...
சகுனி சாணக்கியர் கொற்றம் கொட்டில்கள் தாண்டி..
மந்தாரை கூனிகளின் சூழ்ச்சி வலைத்தாண்டி..
மாய யாக்கைக்குள் வினைத்திரிபுகளைத்தாண்டி... 


கல்லாய் சமைந்த அகலிகை செதுங்கி
சுதந்திரா சிலை என
காட்சிக்கு வைக்கப்பட்டதைத்தாண்டி... 

 
ஒற்றை சீதையை ஒழுங்காய்ப்பேணாத
ராமன் பிறப்புகளைத்தாண்டி... 

போருக்கு புற முதுகிட்டு
சமாதானம் பேசி
சங்கறுக்கும் வீரர் கூடங்களைத்தாண்டி...

ஊன் உருக்கி, உயிரை உறிஞ்சி
குருதியில் நனைந்து
உரம் ஏற்றிக்கொள்ளும்
விஷ வேர்களைத்தாண்டி..

தலைக்கு மேலே கொக்கு பறந்தால்
கண் சூட்டில் கருக்கி வீழ்த்தும்
கொங்கணவர்களைத்தாண்டி...

ஏகலைவன்களின் கட்டைவிரல்கள்
கூடைக்கூடையாய்
கள்ளச்சந்தைக்கு கடத்தப்படுவதைத்தாண்டி...
 
நைச்சியம் பேசி
கர்ணகுண்டலங்களை
கொய்தும் நயங்கள் தாண்டி...

காக்கை வாய்க்கு போன வடை
தட்டிப்பறித்த நரிக்குப்பின்னால்
வட்டமிடும் வல்லூருக்கூட்டங்களைத்தாண்டி...

முறைக்கெட்ட கோவலன்கள் குளிர்காய
ஊரை கொளுத்தி நெருப்பு மூட்டும்
சதி மணிகளைத்தாண்டி...

அணு உலையில் பூத்த
கருஞ்ச்சாம்பல் பூக்களைத்தாண்டி...

ஆதிரா பறக்கிறாள்,

அடுத்த கண்டம் நோக்கி,
அங்காவது சுத்தமான காற்றை
சுவாசத்தில் வாங்கிக்கொள்ள .... 
 
( புவனா கணேஷன் )



 

1 comment:

  1. அருமையான கவிதை! உங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது! சென்று பார்க்கவும்! http://blogintamil.blogspot.in/2014/02/blog-post_11.html நன்றி!

    ReplyDelete

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...