அழிப்பான் கொண்டு தன் பக்கமிருக்கும் நியாயமின்மையை இல்லாமல் செய்ய முயலும் எதுகளிப்பையும்,
தன்பொருட்டு குற்றத்தையும் பிறர் மேல் ஏற்றிச்சொல்லும் எக்காளத்தையும்,
தன் நிலைபாடே தனக்கு சரி என்பதாய்
சுய நலமிகளாய் உலாவும் மனித உயிரிகளின்
அன்றாடத்தின் அடைபொருள் சொல்லும் திரைக்கதை
பொருளீட்டுவதில் கணவனுக்குச் சமமாய் இயங்கும் ஈரானின் இக்காலத்து பெண்மணி சிமின்.
அடுத்த படிநிலை உய்ய நாட்டை விட்டு இடம்பெயர்வது அவள்விருப்பம்.. கணவன் நடேர் தன் வயதான, சுயநினைவு தவறிய தன் தந்தையை தனியே விட்டு வர மறுப்பதிலும், விவாக பந்தத்தை அத்தோடு முடித்துகொள்ளத் துணிந்ததிலும் தொடங்குகிறது கதை.
தாய், தந்தை பிரிவில் எவர் பக்கம் நியாயமென தெளியாது குழம்பும் மகள் அப்போதைக்கு தந்தையுடனே தங்கி விடுகிறாள்.
தன்னையே அடையாளம் காணவியலாத, எந்நேரமும் கண்காணிப்பு தேவைப்படும் வயதான தந்தையை கவனித்துக்கொள்ள ஆள் அம்ர்த்துகிறான் நடேர் என்பது மற்றுமொரு இடியாப்ப சிக்கலின் ஆரம்பம்.
வேலைக்கு வரும் பெண்மணியோ கர்பிணி, கணவன் அறியாது.. பணமுடைச்சிக்கலை கலையவே அந்த வேலையை தேர்ந்தெடுத்தவள்.வேலைப்பளு, உடல்நிலை ஒத்துழையாமை காரணமாய் மருத்துவம் பார்க்க செல்ல வேண்டிய நிலை அவளுக்கு.
யாருமில்லாத நேரத்தில் பெரியவர் எழுந்து வெளியே போய்விடாது இருக்க உறங்கும் அவரை எழமுடியாது கட்டிவைத்து போகிறாள் ..
மீறி எழமுயன்ற அவர் விழுந்து உயிருக்கு போராடிய நிலையில் பார்த்ததும் கொதித்து, கர்பிணி என்பதையும் மறந்து வீட்டைவிட்டு ஆவேசமாய் வெளியே தள்ளுகிறான் நடேர்.
கர்ப்பம் கலைந்த நிலையில், கடுங்கோபக்கார கணவனின் நிந்தனைக்கு பயந்து முதலாளியைக் குற்றம் சொல்லி நீதி கேட்கிறாள் அவள்..
தந்தையின் உயிர் இவளால் போகவிருந்தது...இவளே குற்றவாளி என்கிறான் அவன்.
நீதியின் முன் இருவருமே சமநிலைக் குற்றவாளிகள் என்றானதன் பின் வெளியேறப் பிறக்கிறது பொய்க்கு மேல் பொய்.இதில் தந்தைபக்கமிருக்கும் நியாயமின்மை உறுத்துகிறது மகளுக்கு.
மொத்தத்தில்
அத்தனை பாத்திரங்களும் குழப்பம், நெருக்கடி,நிலையின்மை, பிரச்சனை, பொய்மை இத்யாதிகளில் அடைபட இத்தனைக்கும் தானே காரணம் என இம்மியும் உணராது எவ்வித அடைபடலும் இல்லாது நிறைந்த நிம்மதியோடு உலவுவது பெரியவர் பாத்திரமே..
நிலைதப்புவதை விட நினைவு தப்புவது மேல் எனப்படுவதாய்..
பெரும்பாலும் நம் பக்கத்துக்கு படங்களில் இருக்கும் ஜிகினாத்தனங்கள் கொஞ்சமும் இல்லாமல் கதாபாத்திரங்களின் உரையாடல்களைக் கொண்ட காட்சிகளில் நகர்த்தியே படத்தை நிமிர்த்தமுடியும் இரானியத் திரைப்படங்கள் எப்போதும் வியப்பை தருகிறது.
2011-ன் சிறந்த வெளிநாட்டுப் படமாக ஆஸ்கார் உட்பட பல விருதுகள் வாங்கிய திரைப்படம்
நல்ல விமர்சனம்...
ReplyDeleteநல்ல விமர்சனம்...
ReplyDelete