Sunday, March 24, 2013

நூலிழையில்


அவன் ஒரு கைதேர்ந்த நெசவு தொழிலாளி. வீட்டு ஆசாரத்தில் குழிதறி ஒன்றும் மேல்தறி ஒன்றுமாய் போட்டு வைத்து கூட்டுறவு சொசைட்டி  மூலமாக கிடைக்கிற வேலைக்கு, நெசவு கூலிக்கு மட்டுமாய் நெய்து கொண்டு இருக்கிறான்.
விழா கால அவசரத்துக்கு மட்டும், கூட இருவரை சேர்த்துக்கொண்டு இரண்டு மட்ட தறிகளும் இயங்கும்.. இல்லாத நேரத்தில் அவனும் அவன் பொஞ்சாதியும் சேர்ந்தே  ஒப்பேத்தி விடுவார்கள்.. அவளுக்கு இப்போது நிறைமாதம் என்பதால் கூட மாட ஒத்தாசைக்கு வேலன் வந்து போவான். கருநீல உடம்பில் பொன்சரிகை வேய்த சேலை முடிகிற கட்டத்தில் இருந்தது. விளக்கு வெளிச்சத்தில் நிஜ பட்டு போல போல மின்னியது அந்த கோரா பட்டு சேலை..
இது அவனுக்கு தனி பட்ட முறையில் கிடைத்த ஆர்டர்.. பொதுவாக வருடத்தில் இரண்டு, மூன்று ஆர்டர் தான் இப்படி அரிதாக கிடைக்கும்.. நூல் கொள்முதல் செலவு போக கொஞ்சம் நல்லபடியே வரும்படி பார்க்க முடியும்.
சங்கத்தின் மூலம் கிடைக்கும் கூலியை விட மூன்று மடங்கு அதிகமே.. ஆனால் அப்படி நேரடியாக  ஆர்டர் கிடைப்பது அரிது, வியாபாரிகள், சங்கத்தின் மொத்தமாய் வாங்கி போய் விற்பனை செய்து கொள்வார்கள். விசைத்தறி காலம் என்றாலும் கைத்தறிக்கு மௌசு குறையாமல் இருப்பது அதிசயம் தான்.
கண்கள் கவனத்துடன் கூர்ந்திருக்க, கைகளும், கால்களும் தறியோடு ஓயாமல் அசைந்து கொண்டு இருந்தது. தறி இயக்கியோடு பிணைக்கப்பட்ட நீளமான கட்டையில் அதுவரை முடிந்த சேலை பகுதியை வாகாக சுருட்டி வைக்கப்பட்டு இருந்தது. பாவும், ஊடுமாய் நூல்கள் ஒன்றோடு ஒன்று சிக்கிகொள்ளாமல் அன்போடு பிணைந்து ..இனி எனக்கு பெயர் சேலையாக்கும் என பெருமை பேசிக்கொண்டதோ.. இனிய லயத்துடன் டக்கட்டி டக்கட்டி டக்ககென்ற  தறியோசை கேட்டுக்கொண்டு இருந்தது அங்கே..
கருப்பட்டி தட்டி போட்ட கடுங்காபியும், கடலை வறுத்து போட்ட காரப்பொரியும் தட்டில் ஏந்தி மெதுவான அசைவுகளில் அடுபங்கரையில் இருந்து வந்தாள் அவள்.
கிழே தரையில் அவன் கைக்கெட்டும் வண்ணம் வைத்து அருகில் கைகளை ஊன்றி சற்றே சிரமத்துடன் ஒருக்கணித்து அமர்ந்தாள், எப்படியும் இன்னும் பதினைந்து, இருபது நாட்களுக்குள் பிரசவித்து விடுவாள்.. தறி சத்தத்தோடு பிள்ளையின் வீல் வீளும் சேர்ந்தே ஒலிக்கும்.
அந்த இனிய கற்பனையில் வேலை பளுவிலும் அவன் முகம் இளகியது.
" சூடாருக்கு, குடி மாமோய், சோறு தண்ணி காணாட்டியும் இந்த கடுங்காபியும், கடலைப்பொரியும் பக்கத்தால இருக்கோணும் உனக்கு."
இது, ஏன் கெடந்து தனியா இம்புட்டு அவசரத்தில் வேலைய செய்யுதே.. மக்காநாள் வேலன் வந்ததும் பாத்துக்கிடலாம், பொழுதாகிப்போச்சு.. சமையத்துக்கு உறங்க பாரு மாமோய்" அவளுடைய ஒவ்வொரு அழைப்பு மாமோயிலும் அத்தனை அன்பு கலந்து இருக்கும்.
"விரசா முடிச்சுக்கொடுத்தா சடுதியில காசு பார்க்கலாம்மிலே.. அதோட ஒரம்பர வீட்டுக்கு  சீராட வந்த புள்ள ஆசை பட்டு கேட்டுச்சு..  விரசா முடிச்சு கொடுத்தா சந்தோசப்படும்"
சரித்தே, அடுத்தவங்க சந்தோசத்தையே பாரு, ராத்தூக்கதில உடம்பு நோவிலே அனத்துவியே, உனக்கு எங்கே தெரிய போகுது.. பொட்டச்சி நான், தான் கிடந்தது தவிக்கேன்"
நாள்பூராவும் கையும், காலும் அசைத்து வேலை செய்து அசதியில் வலி கண்ட போதும் மரம் போல தூங்கிடுவான் ...எத்தனையோ நாள் அவள் தான் கை விரல்களை, கால்களை அழுத்தி பிடித்து விடுவாள்.. பெத்தவங்க இல்லாத அவனுக்கு யாதுமாய் அவளே இருக்கிறாள்.
தலைச்சன் பிள்ளையை வயிற்றில் சுமந்தும், கணவனை தனித்து விட்டு போக மனமில்லாமல், தாய்வீடு போகவில்லை பிரசவத்துக்கு..
தறிக்குள் பிணைந்து நெய்தல் காணும் ஊடும் பாவுமாய்.. இழைத்த உணர்வோடும் இருவருக்குள்ளும்.. ஏட்டை படிக்காத போதும் மனதை படித்த தம்பதி என்றே அக்கம் பக்கத்தில் அதிசயமாய் பார்ப்பார்கள்.
"புலம்பாத புள்ள, நீ பக்கத்தில இருக்க, ஒன்னு என்ன ஒன்பது பொடவைய கூட தறியோட்டி போடுவேன்"
சரித்தே, சூடேறி போச்சுது, மிச்சமிருக்கிற சோத்திலே தண்ணிய ஊத்தி வைக்கேன், விடிஞ்சதும் கரைச்சு குடிக்க" அவள் மீண்டும் கைகளை ஊனி எழுந்து போனாள்..
அடுத்தநாள் மதியத்துக்குள் சேலை, உடுத்துகிற தகுதியை பெற்று உருவாங்கி இருந்தது. உழைப்பில் உண்டானது.. ஒரு குழந்தையை போலவே பாவிப்பான் ஒரு ஒரு உருவாக்கத்துக்கு பிறகும், சுருக்கம் நீக்கி, தோதாய் மடித்து அவளிடம் தந்தான்.. இந்தா புள்ள கொடுத்திடு, இதிலே மொதல் போட்டது போக சொளையா ஆயிரத்தி அறுநூறு நிக்கும். புள்ளத்தாச்சி உனக்கு எதுமே வாங்கி தந்தது இல்லை.
ஆசைப்பட்டத கேளு புள்ள, டவுனுக்கு போய் வாங்கியாறேன்"
"இந்தா,இந்த பேச்சே வேணா, கேட்டுக்க..கையில காசு காணும் முன்னாடி செலவுக்கு பந்தி வைக்க பாக்கிற, புள்ள பிறப்பு நேரத்தில் கைக்காசு தக்க வைக்கோணும்... பக்கத்தால தானே, தந்து போட்டு வாரேன்"
அவள் எப்போதும் அப்படித்தான்.. அது வேண்டும், இது வேண்டும் மாதிரி ஆற்பரிக்காத மனசு.பத்து ரூபாய் வீட்டு செலவுக்கு வைத்தாலும் அதில் நான்கு மிச்சம் பிடித்து உண்டியலில் சேர்ப்பாள். அவனும் தனக்காக ஏதும் செய்து கொள்ளமாட்டான், அவள் விஷயத்துக்கு மட்டும் கணக்கு பார்ப்பது இல்லை.
சேலையை எடுத்து கொண்டு, அதிர்ந்து நடந்தால் வயிற்று பிள்ளைக்கு வலிக்குமோ என மெல்லிய எட்டுக்களில், தாய்மை பொங்க அவள் நடந்து வருவது பார்க்க அழகாய் இருந்தது..
ஏனுங்க, உங்க சேலை பதவிசா, நீங்க கேட்ட மாதிரியே வந்து இருக்குங்க, இந்த நெறத்துக்கு கட்டிகிட்டா அம்சமா இருப்பீங்க, ஒருக்கா கட்டி பாத்திடுங்க " என்று நீட்டினாள்.
நெய்தவரிடம் இருந்து நேரிடையாக, புது வாசனையோடு, மொட மொடப்பாய்.. உடனே உடுத்தி பார்த்துவிடும் ஆவலில் கைகளை நீட்டி வாங்க எத்தனித்த போது
எங்கோ, தொலைவில் ஒரு குயில் விடாமல் கூவி இருவர் கவனத்தையும் திருப்பியது.
, கைபேசியில் அலார சினுங்கல்!! ..
விழிப்பு தட்டிவிட்டது..
 

-புவனா கணேஷன்

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...