Showing posts with label TRAVELER'S JOURNAL. Show all posts
Showing posts with label TRAVELER'S JOURNAL. Show all posts

Tuesday, March 26, 2019

#கொழுக்குமலைப்பயணத்தில் DEC2017

#கொழுக்குமலைப்பயணத்தில்
சனியன்று முன்மாழைப்பொழுதில்
மற்றவர்கள் ஓய்வில் இருக்க சும்மா அருகே இருக்கும் ஏலக்காட்டிற்குள் நடந்துவிட்டு வரலாமென  நாங்க ஒரு ஆறுபேர் கிளம்பினோமா..  மனித நடமாட்ட இருக்கிற தூரம் வரைக்கும் திட்டமிட்டு தான்.  ஆனால்
இன்னும் கொஞ்சம் முன்னே சென்று தான் பார்ப்போமென  தீர்மானித்து அடங்காத ஆவலாதிகளாய் அடர்வுகாட்டுக்குள் போகப்போக ஓங்கார ஓசையுடன் நீர் கொட்டுகிற சத்தம் வேறு ஈர்த்ததா. அருகே போய் பார்த்துவிடும் ஆர்வத்தில் ஒரு மலைமுகட்டில் இருந்து இறங்கி அடுத்ததில் ஏறி அதிலிருந்தும் இறங்கி என ஒரு சாகச முயற்சிக்கு  பிற்பாடு கண்ட நீரோட்டம்.   ப்ப்ப்ப்ப்ப்ப்பா  செம ஜில்.. முதலில் அச்சமூட்டிய குளிர்நீர் மெல்ல மெல்ல ஈர்த்துக்கொள்ள மாற்றுடை இல்லாத யோசனையே இல்லாமல் தன்மயத்தின் அளவுதலில் நீரோடு  நேரம் போவதே தெரியாமல்,
திரும்பி வரவே மனமில்லாமல்,  ஆனால் இருளத்தொடங்குமுன் போயாகவேண்டுமேன்னு  கிளம்பினால்..  திக்கு தெரியாமல் ஒரு பத்து இருபது நிமிடங்கள்  கொஞ்சம் திணறி, திகைத்து, தொலைந்து இதெல்லாமும் ஜோரான அனுபவங்கள் தாம். ஒருவழியாக போனபாதையை நூல் பிடித்து ஏறி  இருப்பிடத்தை சேர்ந்தோம் பொழுதோடு. 😎😎
Photo

#கொழுக்குமலை_குழுப்பயணம் DEC2017

#கொழுக்குமலை_குழுப்பயணம்

முகநூலில் சரவ், விஜிலா க்ரூப்பில்,  அடிக்கடி மலைக்காடுகளில் சுற்றித்திரிந்த பயணங்களின் பிற்பாடு, பயணப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் போடுகிற போஸ்டெல்லாம் பார்த்து நிச்சயம் இந்த குழுவோடு சேர்ந்து ஒரு பயணமாவது போயே ஆகவேண்டுமென ஆழமாய் தோன்றிவிட்டது.
அவர்களின் wild Tourism பக்கத்தில் அடுத்த பயணத்திட்டம் கொழுக்குமலைக்கு என்ற அறிவிப்பை கண்டதும் ..
நமக்குதான் மனசு சொல்றதையே கேளுன்னு கால்களும் சொல்லுமே. மறுயோசனை இல்லாமல் கிளம்பியாகிவிட்டது.

 விஜிலாவை ஒருமுறை சந்தித்திருக்கிறேன் என்பதைத் தவிர அந்த குழுப்பயணத்தில் முழுமுற்றிலும்  எல்லோருமே எனக்கு புதியவர்கள்.

  அக்கம்பக்கத்திலோ அலுவலங்களிலோ அல்லது வேறு எங்குமோ எம்மாதிரியும்
புதியவர்களோடு இணக்கத்தோடு பழகுதலில், சுளுவாய் நண்பர்களாகி விடுவதில்  மற்ற எந்த சூழலிற்கும் இல்லாத சிறப்பு பயணப்பட்டிருக்கும் போது கிட்டிவிடும்.
அன்றாடத்தின் ஓட்டத்திற்காக அவரவர் மாட்டிக்கொண்டிருக்கும் முகமூடிகளை எல்லாம் வீசி எறிந்துவிட்டு தனக்கே தனக்கானதான நேரத்தை  உள்ளிருக்கும் குழந்தைமையை கொண்டாடுகின்ற
மனநிலையோடு சுற்றிக்கொண்டிருப்பர். என்பதால்தான் போலும் இரண்டு நாள் பயணம் முடிந்து அவரவர் கூட்டிற்கு திரும்பும் போது எவருமே புதியவர்கள் என்றிருக்கவில்லை. இன்னும் கேட்டால் ஒருமையில் விளித்துக்கொள்ளும் அளவு அணுக்கம் உண்டாகியிருந்தது.
அப்பதான் அறிமுகமாகி இரண்டு நாட்கள் பயணத்தில் மனதிற்கு மிக நெருக்கமாகிவிட்ட ஒருவரைப்பற்றி சொல்லியே ஆகனும்.
தனி போஸ்டா பின்ன எழுதறேன்.

குழுவில் என்னோடு பயணித்தவர்களில் இருவர் மட்டுமே குடும்ப சகிதமாய் வந்திருந்தவர்கள். மற்ற அனைவரும் தனித்தனியாய் தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த,
அதுவும் மூன்று தலைமுறை வயதிற்குரியவர்களும் குழுமிய பயணம் என்பதால் அதற்கேற்றவாறு ரிசார்ட் தங்கல், சூரியோதயம் காணல்,  மெது நடை, tea factory visit,  ஜீப்சவாரி, boating என இலகுவாக திட்டம் செய்திருந்தார்கள்.

ஹைலைட் என்னன்னா விடியலுக்கு முன் கிளம்பிய off Road jeep safari. ப்ப்பா ஒரு ரோலர் ஹோஸ்டரில் ஏறி இறங்கிய எஃபக்டை காட்டிவிட்டது. அதிலும் அந்த ஜீப் ட்ரைவர் அவ்வளவு கரடுமுரடான மலை உச்சியில் திக் திக் ரிவர்ஸ் எல்லாம் எடுத்து ஓட்டி அசத்திவிட்டார்.
 அழகிய சூழலில் ஒரு அட்வெண்ட்சர் பயணமாகியதை நான் ரொம்பவே எஞ்சாய் செய்தேன்.

இடையே கிடைத்த கேப்பில் ட்ரெக்கிங்கில் ஆர்வம் பிடித்த சிலரோடு சேர்ந்து போய் காட்டுக்குள் குட்டியாய் தொலைந்து மீளும் அனுபவத்தையும் சேர்த்துக்கிட்டாச்சு.

இந்த பயணகுழுவினை நேர்த்தியாக யாதொரு சிக்கலும் இல்லாமல் சீராக திட்டமிட்டு செய்யும் இந்த இருவரையும் பாராட்டியே ஆகணும்.. ..
இந்த பெண் விஜிலா காலில் சக்கரத்தைதான் கட்டிக்கொண்டு வினையாற்றுமோ தெரியாது. செம நேர்த்தியான coordination. இந்த மனிதரும் தான்..
இத்தனை பேரையும் ஒருங்கிணைத்து ஓரிடத்தில் சேர்த்து, எவருக்கும் எந்த அதிருப்தியும் நேராமல் பார்த்துப்பார்த்து கவனித்து
 திருப்பி அழைத்து வருவதென்பது சுலபமான காரியமில்லை.   இத்தனைக்கும் இந்த பயணத்தையும், அதிலும்  தரம் குறையாத வசதிகளோடும்,  வேளாவேளைக்கு சைவம் அசைவமென்று அவரவர்க்கு தேவையான, ருசியான உணவோடும்
வண்டிவாகன இன்னபிற செலவுகளையும் கணக்கிட்டால் லாபமாக அவர்களுக்கு எஞ்சுவது ஏதுமில்லை. அப்படியே எஞ்சுவதையும் மருத்துவமனையின் Rehabilitation Centerக்கு செலவிடுகிறார்கள் என்றால் Great! 👌👏👏
Salute Guys.
Photo

கொழுக்குமலை பயணம். 2017 DEC

வாழ்வில் 'முதன்முறையாக' எனும்  பதத்திற்கே இருக்கும் தனி
 Kickன் மேல் எனக்கு அலாதி காதல். அதன் feel இருக்கே. அதற்கு ஈடு இணையே கிடையாது. அது முதுகுத்தண்டில் இருந்து உச்சந்தலைக்கு ஊடுருவிப் பரவும்  ஜில்லிப்பு.
இந்த வருடமானது அப்படியான நிறைய kick அனுபவங்களை கொட்டிதந்திருக்கிறது. அவைகள் எல்லாவற்றுக்கும் சிகரத்தின் சிகரமாக..  மலை உச்சியிலிருந்து எழும் சூரியோதயம் காண வாய்த்தது இந்த வார இறுதி #கொழுக்குமலை_பயணம்.

இதற்காக இதுவரை கடற்கரைக்கு மட்டுமே எப்பொழுதும்  ஓடியிருக்கிறேன். ஆனால் கடல் மட்டத்தில் இருந்து 7500 அடி உயரத்தில் அதும் உச்சந்தலையிகிருந்து  உள்ளங்கால் வரை உறைய வைத்த கடுங்குளிரில் வெடவெடத்துக்கொண்டே.. கால்களுக்கு கீழே பஞ்சுப்பொதியலாய் மேகங்கள் ஓடுகின்ற சிலிர்பனுவத்தோடு ..
 கைபேசியில் படமாக்கிக் கொள்ளக்கூட கடினமாக இருந்த கைநடுக்கத்தோடு ...
 ப்ப்ப்ப்ப்பா Chanceless. அப்படி ஒரு திமிர்தலோடு எழுந்தான் உதயன். அதற்கு பின் தளிர்மஞ்சளேறிய வானம். கண்கள் கோடி கொண்டு அள்ளிக்கொண்டாயிற்று.
இதற்காக பயணப்பட்ட மலைப்பாதை ஒன்றும் அப்படி சுலபமானது இல்லை. கடினத்திலும் கடினமான என்பதிலும் இருந்தது ' முதன்முறையாக'...

மீதி பிறகு..
படம் : கைபேசி_க்ளிக்
Photo

THEKKADY TRIP - NOV 2017

And into the Forest i Go, to Lose my Mind
And Find my Soul.
#Thekkady
04 - 11 - 2017
Photo

KARNATAKA TRIP - AUG 2017

நண்பிகள் நாங்கள் மூவர். மூவரில் ஒருவருடைய கார். முழுக்க டீசல் நிரப்பிக்கொண்டு, நாள் வாடகை கணக்கில் ஒரு ஓட்டுநரை அமர்த்திக்கொண்டு மனம்போன போக்கில் குழைத்து கொண்டாட ரோட் ட்ரிப் கிளம்பினோம்.திடுமென தான்.  விடுமுறை நாட்களில் பகுதி நேர ஓட்டுனராகவும் மற்றபடி எதோ ஒரு அலுவலகத்தில் கணக்கராகவும் பணியாற்றும்
கன்னட இளைஞன் எங்களுக்கு வாய்த்த ட்ரைவர். தேவைக்கு அதிகமாக  ஒற்றை வார்த்தையும் வைக்காத, அனாவசியமாக பார்வையைக்கூட திருப்பாமல்,கருமமே கருத்தாக, நேர்த்தியாக வாகனத்தை செலுத்தியவனுக்கு. 👏👏.

முன்கூட்டியே பெரிதாக திட்டமிடப்படாத சட்டென தொடங்கிய #பயணம் என்பதால் சரியான, பிடித்தமாதிரியான தங்ககத்தை தேர்வுசெய்வது மட்டும் முடியாமல் ஆனது. அத்தனை ஹோம் ஸ்டேக்களும் புக் ஆகியிருந்தது. விடுமுறை கால நெருக்கடி.👎 இராத்தங்கலுக்கு  கிடைத்த இடத்தில் காசு கூடுதல் வசதி மகா மட்டம் என்ற போதிலும் சகித்து சமாளித்துவிட்டோம். மொத்த பயணத்திலும் அதுமட்டுமே குறை.

காபி விளைகிற நிலத்தில் நினைத்த இடத்தில் எல்லாம் கணக்கில்லாமல் எத்தனையோ தடவைகள் பருகியபோதும் குறைவில்லாத ருசியின் போதையை ஏற்றிக்கொண்டே இருந்தது சிக்மகளூர், சக்கேலேஸ்பூரில் பில்டர் காபி. 👌👌

சிக்மகளூர் வெறும் வார்த்தைகளில் விளக்கி சொல்லிவிடமுடியாத பிரமாதமான, தவறாமல் பார்த்துவிட வேண்டிய அற்புதமான மலைக்காடு.
இங்கே சுற்றுலா காணுமிடங்களான முல்லியங்கிரி, பாபா புதன்கிரி இவைகளையும் தாண்டி மேலே மேலே உயரத்திற்கு கண்களும் மனமும் குளிரக்குளிர பயணப்பட்டு
உயரமுகத்தில் நின்று  சுற்றிச் சூழ்ந்த அற்புதத்தில் கொஞ்ச நேரம் மெய்மறக்கக்கூடுமெனில் திரும்பிவரும் பொழுது உடலும் மனமும் பஞ்சுப்பொதியல் போல் லேசாகி அப்படியொரு அலாதியை தருகிறது. நிஜம். குறைந்த பட்சம் மூன்று நாட்கள் போதவே செய்யாது எனும்படியான சிக்மகளூர். அருமையான ட்ரெக்கிங் ஸ்பாட். நிறைய சைக்கிள், பைக் சவாரி ஆண்கள்,பெண்கள்,நண்பர்கள் கூட்டம் தான் அதிகம். குளிர்மையான குளிரோடு அப்படியொரு மலை பிரதேசம்.. வாழ்வின் அந்த  அற்புத கணங்களை கொண்டாட.. கூட மனதிற்கு பிடித்தமான துணையோடு பயணப்படுவதென்றால்  நாம் யாரை தேர்ந்தெடுப்போம்!! அது அவரவர் தேர்வென அங்கே ஒருவனை கண்டபோது தோன்றியது.    காரின் நான்கு பக்க சாளரங்களையும் முழுக்க திறந்துவிட்டபடி, அவ்வளவு சத்தமாய் இசையை வழியவிட்டபடி
அவன் தன் நாயோடு மலை உச்சிக்கு போய்க்கொண்டிருந்தான். ஆஹா💖

சொல்ல நிறைய நிறைய கதைகளையும் சுகமான பயண அனுபவங்களையும் திரட்டிக்கொண்டு, இனி அடுத்த மீட்டலுக்கான இடைவெளி விட்டு அவரவர் இடத்திற்கு, நடப்பிற்கு திரும்பிவிட்டோம். மீ, சுகிர்தா, வீனா 💞
Photo

KARNATAKA TRIP - CHIKMAGALUR AUG2017

#யட்சி இவள்
என்னவொரு ஒய்யாரம்
பாதி கண் சொக்கிய மோனம்
மார்பகங்களை பூக்காளால் போர்த்திய ரவிக்கை,
கால் மெட்டியிலிருந்து கை மோதிரம் வரை ..
ஒவ்வொரு அணுவாக நுணுக்கி ரசித்து வடிவாக்கியவன் ரசிகன் 👏👏

#சிக்மகளூர்
#கர்நாடகா
Photo

THANJAI TRIP - கங்கைகொண்ட சோழபுரம்-AUG2017

நான்கு நாட்கள் தொடர்விடுமுறையில்
சோழர் கால பெருங்கோவில்களை சுற்றிவரலாமென திட்டமிட்டோம். அதன்படி முதலில் தொட்டது கங்கைகொண்ட சோழபுரம்.
பாரதிதாசனின் இருண்ட வீட்டை வாசித்த பிறகுதான் குடும்ப விளக்கு கூடுதலாய் மனதிற்கு பதமாகும் என்பதுபோல முதலில் ராஜ ராஜ சோழன் காலத்து கட்டுமானக் கலையை கண்டுவிட்டு ராஜேந்தர சோழன் கால கங்கைகொண்ட புரத்திற்கு வந்திருக்கலாமோவென பட்டது. இங்கு கண்ட பிரம்மிப்பின் உணர்வை அடுத்து போன தஞ்சை பெரியகோவிலில் பெரிதாக உணர முடியவில்லை என்பதால்.

இவ்விரண்டு இடங்களைக் காட்டிலும் மீண்டும் ஒருமுறை போயே ஆகவேண்டும் எனும் எண்ணத்தை தந்தது தாரசுரம்.

சோழனின் வெற்றிகொண்டான் ஊரிலிருந்து காதல் கொண்டான் ஊரை நோக்கி நகரும் வழிகளில் வேறென்னென்ன விஷேச தளங்களை பார்க்கலாமென கூகுளாரின் உதவியுடன் படம் போட்டு வைத்திருந்தேன்.

வழியில் அணைக்கரை எனும் ஊர் வழியே காரை செலுத்தினோம்.
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே வெள்ளைக்காரன் அவன் காலத்தில்  அட்டகாசமாய் கட்டிவைத்திருந்த அணை.
குமிக்கிமணியாறு எனும் பெத்த பெயரை பலகையில் மட்டும் தாங்கி சொட்டு நீரும் இல்லாமல் வெற்றுப்பள்ளமும் மிகக்குருகிய அணைக்கட்டு பாதையில் போக வர வாகனங்கள் முக்கி திணருதலும் அங்கே காட்சியாகி கிடந்தன. மீண்டும் இங்கே சொல்லத் தோன்றுவது இதுதான். ஆக்குதலுக்கு மெனக்கெட்டவர்களின் அளவில் துணுக்கு கூட அதனை பராமரிப்பதற்கு நம்ம மக்கள் மெனக்கெடுவதில்லை.

சின்ன வயதில் அப்பா கூட்டிப்போன கோவில்களில் மிக பிடித்தமானது திருநாகேஸ்வரம் ராகு கோவில். கிராபிக்ஸ் கதைகளில் சொட்டும் அதே ஆர்வம் இந்த கோவிலில் ராகுவுக்கு செய்யபடும் பாலாபிஷேகத்தில் கழுத்து பகுதியில் பால் நிறம் நீலமாகும் விந்தையை பார்க்க அந்த வயதில் அவ்வளவு ஆர்வமிருந்ததால் இந்த கோவில் பிடித்துப்போயிருந்தது. அந்த கதைகளை மகள்களுக்கு சொல்லியபடி மீண்டும் சுற்றிவந்தாயிற்று. போலவே

யாரும் அதிகம்போயிருக்காத மற்றுமொரு புராதன கோவிலை வழித்தடத்தில் கூகுள் உதவிகொண்டு படித்துவைத்திருந்தேன். திருநீலக்குடியில்  திருநீலகண்டேஷ்வரர் கோவில். சிவனின் உடலில் பரவிவிட்ட விஷத்தை எடுக்க இங்கே குடம் குடமாய் நல்லெண்ணெய் விட்டு அபிசேகம் செய்வார்களாம். எவ்வளவு எண்ணெய் விட்ட போதும் உடனே முழுக்க சிவலிங்கமே அதனை உறிஞ்சி கொண்டுவிடும் விந்தையென படித்ததால் இங்கும் பார்த்துவிடவேண்டுமென்றிருந்தது.

கூகுள் மேப் உதவியோடு தப்பும் தவறுமாய் சுற்றி ஒருவழியாய் இந்த சின்ன ஊரை கண்டுபிடித்தோம். "இந்த ஊர்காரர்களே இந்த கோவிலுக்கு வருவதே சந்தேகம் எங்கிருந்துப்பா பிடிச்சன்னு கன்ச்சு நொந்துகொண்டார். அப்படிதான் இருந்தது.
வெள்ளி மாலை என்ற போதும் ஒரேயொரு உள்ளூர் பெண்மணி தவிர பூசாரியும் நாங்களும் பின்னணி இசைக்கு நாதஸ்வரம் வாசித்துக்கொண்டிருந்த இசைஞரும் மட்டுமே.
பராமரிப்பு இல்லாத ஆனால் அமைதியான அந்த ஊருக்கு அளவில் பெரிய கோவிலே குளத்தோடு.
அங்கே பூசாரியே எங்களுக்கு கைடாக பின்னோடு சுற்றி வந்து நல்லெண்ணெய் கதையோடு அந்த கோயிலின் சிறப்பாக நிறைய கதைகள் சொன்னார்.

முழுக்க முழுக்க  கோவில்களை  மகள்களோடு முதன்முதலாக நிறுத்தி நிதானித்து ஒவ்வொரு கடவுளுருவுக்குப் பின்னிருக்கும் கதைகளை பேசியபடி
சிற்ப செதுக்கங்களோடு கட்டுமான கலைவடிவை ரசித்து சுற்றிவந்த இனிதான  #பயணம்.

கங்கைகொண்ட சோழபுரம்
Photo

THIRUPORUR - MAY2017

ஒரே பாட்டிலில் மாற்றி மாற்றி கூல்ட்ரிங் குடித்துக்கொண்டிருந்த சோடி. 
கோவிலுக்கு எதிர்தாப்ல நானும் தங்காச்சியும்  டாக்ஸிக்கு நிக்கும் போது பார்த்தோம்.
நான் 92 இவ 82ன்னார் தாத்தா. போட்டோ பிடிச்சுக்கிட்டாச். இரண்டு பேரும் விழுந்துருக்கோமா கொண்டா பார்க்கலாம்ன்னு வாங்கி பார்த்து பாட்டிக்கும் பாரு நாமன்னு காட்டி  பொக்கைவாய் நிறைய சிரிப்ஸ் தாத்தாக்கு. பாட்டிக்கு சரியா புரியல தலையை மட்டும் ஆட்டிக்கொண்டார். க்யூட் 💕
Photo

#கூர்க் துபரே TRIP - MAY2016

#கூர்க் துபரே
மறுகரையில் இருந்த  யானைகள்  காப்பகத்திற்கு இக்கரையில் இருந்து அழைத்துச்செல்லும் படகுகளுக்கு நீண்ட வரிசையில் காத்திருந்தவர்களுக்குப்பின் அதே வரிசையில் கால்கடுக்க நின்று படகிலேறிப் போயிருந்தால் ஒருவேளை சுவரசியமற்று போயிருக்கக்கூடும். முதலில் தயங்கினாலும் பின்
மகள்கள் விரும்பியபடி நிதானித்து  நீரில் இறங்கி வழுக்குப்பாறைகளில் தடுமாறி தாங்கி சமாளித்து ஆங்காங்கே நின்று  மீண்டும் நீரிலிறங்கியென மறுகரையை அடைந்த அந்த ஒரு மணி நேர அனுபவம் அலாதியானது. அப்படியாக பாதி தூரத்தை கடந்திருக்கையிலேயே  வயதின் இறுக்கமெல்லாம் கரைந்து கன்ச்சுவிற்குள் இருக்கும் குழந்தைமை எட்டிப்பார்க்கத்தொடங்கிவிட மகள்களோடு தானும் பிள்ளையாகி தட்டான் பிடித்து விளையாடிய போது பிடித்த படங்கள்

சென்ற வருடம் இம்மாதம்
PhotoPhotoPhoto
5/17/17
3 Photos - View album

பாண்டிச்சேரி - MAY2017

பத்துமணியானதே பார்க்காம கடலோரம் கற்பாறையில் அமர்ந்து பாட்டோடு மூழ்கி முத்தெடுத்து பசியெடுத்த பிற்பாடு லேட்டு டின்னரு
3 டேஸ்ட் ஊத்தப்பம்
#பாண்டிச்சேரி
Photo

விடியல் #Auroville - MAY2017

விடியல்
#Auroville
Photo

KODAI TREKKING - MAY2017

மலைத்தடத்தில் கண்டெடுத்த
முள்ளம்பன்றியின் முள்
விடியல்
#Auroville
Photo
Photo

KODAI TRIP - MAY 2017

கனாக்காணும் காலத்தில் என் பள்ளி கல்லூரி இருந்த போதும் நிறைய ஊர் சுற்றியிருக்கிறேன். ஆனால் அதெல்லாம் அப்பா அம்மாவோடு.
கன்ச்சு வந்தபின் அவரின் வேலைசுமையால்
 பெரும்பாலும் என் பயணம் தனியே தான் இருக்கும். தனியே என்றால் தனியே இல்லை. தலைக்கு மேல் இழுத்துச் சுமக்கும் பொறுப்புகளோடு குட்டீஸை பத்திரமாய் கூட்டிப்போய் வருகிற கவனக்குவிப்போடுமேயிருக்கும்.
இம்முறை இது தனி. தனி என்றால் தனியே தான்.
முற்றிலும் புத்தம்புதிய  சூழல் அதுவரை பார்த்தறியாத புதுமனிதர்களையும் காட்டிய எனக்கே எனக்கானதொரு பயணம்.

 பேசியில் நெட்வொர்க்கும் இணையமும் இல்லாதுபோன தொடர்பு எல்லைக்கு அப்பால்  எவ்வளவு அழகான உலகம்  விரிந்திருக்கிறதென இந்த பயணத்தில் பிரம்மிப்போடும் பெரும் உவகையோடும்
தெரிந்துகொண்டதை வார்த்தைகளைக் கொண்டு சொல்லவே இயலவில்லை. ஆனாலும்  சொல்லியே ஆக வேண்டும்.

இந்த மையம் அது அமைந்திருக்கும் இடம் அதன் குளிர்மை அமைதி அது தந்த மனநிறைவு முக்கியமாய்
 மலைக்காட்டிற்கே உரியதொரு திமிர்ந்த அழகு. மொத்தமாய் கண்களில் அள்ளிக்கொள்ள தங்கியிருந்த மூன்று நாட்கள் போதவே இல்லை. உரைக்காத வெயிலும் கூடவே சில்லிப்பும் எப்போது வேண்டுமானாலும் முகாந்தரமே இல்லாமல்   துளிர்ந்த தூரல் மழையும் இன்னும் இன்னும் போதாமையை கூட்டிக்கொண்டே இருந்ததே தவிர திகட்டலே இல்லையே.

இந்த மூன்று நாட்களுக்கு முந்தைய நாளில் தங்கியிருந்த கொடைக்கானல் மலை என்னை பெரிதும் ஈர்க்கவில்லை.ப்ப்பா சீசன் நேரம் வேறா! கால்வாசி ஜனத்தொகை இங்குதான் இருக்கும் போல. அப்படியொரு கூட்டம் நசநசப்பு  வெக்கை ட்ராபிக் நிற்க நகர இடமில்லாத அளவு. கோக்கர்ஸ் வாக் பக்கமெல்லாம் டிக்கட் வாங்கிக்கொண்டு  உள்ளே நுழையும் மக்கள் இடப்புறம் விரிந்திருக்கும் இயற்கையை நிதானமாய்  காணக்காணோம். வலப்புறம் பரப்பபட்டிருக்கும் கடைகளில் குவிந்து
வியாபார பேரத்தில் மும்முரமாய் இருந்ததை பார்க்க முடிந்தது. லேக் பக்கம் அரைமணிக்கு ஐம்பது ரூபாய்க்கு வாடகை சைக்கிள் எடுத்து சுற்றலாம் ஆனால் எங்கே!! மனிதக்கூட்டத்திற்கு இடையே நடையே பெரிய விசயம்.

மேக் மை ட்ரிப்பில் ரிவ்யூ பார்த்து இது தேறுமென தோன்றிய  பின் தான் தங்கும் அறை புக் செய்த்திருந்தேன். Valley view inn hotel. பெண்கள் மட்டும் தங்க ஏதுவாய் சிக்கலில்லாமல் தான் இருந்தது.ஆனால்
கொடுத்த காசுக்கு அறைவசதிகள் மட்டம். போகட்டும்.

மறுநாள் கிளம்பி ஜென் மையத்திற்கு போன நொடியில் இருந்து அங்கிருந்து கிளம்பின நிமிடம் வரை மறக்கவே முடியாதது.
 இந்தியன், ஈரோப்பியன், திபேத்தியனென யாருக்கும் யாரோடும் எந்த பேதமும் பாகுபாடும் இல்லாமல் மனிதம் என்ற நிறம் மட்டுமே தெரிந்த இடம்.   சுகிர்தாவை  சுகியின் இலகுவாக பழகும் நண்பர்கள் எனக்கும் நண்பர்களானதையும் நால்வருமாய் மலைக்காடெல்லாம் கணக்கில்லாமல் சுற்றிவந்ததையும் என்ன சொல்ல.

சுகியின் நண்பனுக்கு அங்கே சுற்றுவட்டார மலைக்காடுகளின் இண்டு இடுக்குகலெல்லாம் தெரிந்திருக்கிறது. காலை பசியாறலுக்கு பின் ட்ரெக்கிங் கிளம்பினோம்.
 எதிரே..
 இரோம் சர்மிளா இலகு நடை முடித்து  ஒரு பெரியவரோடு வந்துகொண்டிருந்தார்.

காட்சிப்பிரதியாய் தன்னை மற்றவர்கள் பார்ப்பதை அவர் ஒருபோதும்  விரும்புவதில்லையென சுகிர்தா சொன்னதால் மலர்ந்த புன்னகையையும் கைகுவித்த வணக்கத்தையும் அவ்விருவரையும் போலவே பதிலாகத் தந்து நாங்களும் எங்கள் பாதையில் பயணமானோம்.

 ட்ரெக்கிங் இது எனக்கு முதல் அனுபவம். நாளொன்றுக்கு ஒன்பது கிலோமீட்டர் கணக்கிற்கு ஏறி இறங்கியிருந்தாலும் களைப்போ சோர்வோ துளியும் எட்டவில்லை.  எங்களைத்தவிர வேறு ஆள் நடமாட்டமே இல்லாத, அட்டைப்பூச்சிகளும் காட்டுப்பன்றிகளும் தாக்கக்கூடிய அபாயமிருந்தும் கொஞ்சமும் திகில் எழாமல் ஆர்வத்தோடு  காட்டுப்பாதையில் ஏற முடிந்தது.மலை உச்சியை எட்டிய போது ஹப்ப்ப்பா ரம்யம்.  உள்ளே பொங்கிப்பூரித்த பிரம்மிப்பு.  உடலும் மனதும் பஞ்சு போல் இலகுவாயிருந்தாலோ என்னவோ அன்றைய நாளின் தியான நேரம் அவ்வளவு பிரமாதமானதாய் இருந்தது.
இப்படியெல்லாம் ஏறி இறங்குகிற அலைந்து திரிகிற  தெம்பு இன்னும் கொஞ்சம் வயதேறும் காலத்தில் இல்லாமலே போகும். அதற்குள் இந்த அனுபவங்களையெல்லாம் அள்ளிக்கொண்டு பொத்திவைக்க வேண்டும்.  - #ஆனந்தம்
Photo

Thursday, March 21, 2019

MAY - 2017 KODAI TRIP

கனாக்காணும் காலத்தில் என் பள்ளி கல்லூரி இருந்த போதும் நிறைய ஊர் சுற்றியிருக்கிறேன். ஆனால் அதெல்லாம் அப்பா அம்மாவோடு.
கன்ச்சு வந்தபின் அவரின் வேலைசுமையால்
 பெரும்பாலும் என் பயணம் தனியே தான் இருக்கும். தனியே என்றால் தனியே இல்லை. தலைக்கு மேல் இழுத்துச் சுமக்கும் பொறுப்புகளோடு குட்டீஸை பத்திரமாய் கூட்டிப்போய் வருகிற கவனக்குவிப்போடுமேயிருக்கும்.
இம்முறை இது தனி. தனி என்றால் தனியே தான்.
முற்றிலும் புத்தம்புதிய  சூழல் அதுவரை பார்த்தறியாத புதுமனிதர்களையும் காட்டிய எனக்கே எனக்கானதொரு பயணம்.

சுகிர்தாவை இப்பதான் முதல்முறை நேரில் பார்க்கிறேனென என்னாலயே நம்பமுடியவில்லை. எங்கு எங்கோ இருந்தும் அதிகம் பேசிக்கொண்டுமில்லாமலேயே இத்தனை அடர்வு தோழமையில். எடுத்த எடுப்பில் ஒருமையில் பேசித்திரிய முடிகிற நட்பு  வாய்ப்பது சுகம்.

 பேசியில் நெட்வொர்க்கும் இணையமும் இல்லாதுபோன தொடர்பு எல்லைக்கு அப்பால்  எவ்வளவு அழகான உலகம்  விரிந்திருக்கிறதென இந்த பயணத்தில் பிரம்மிப்போடும் பெரும் உவகையோடும்
தெரிந்துகொண்டதை வார்த்தைகளைக் கொண்டு சொல்லவே இயலவில்லை. ஆனாலும்  சொல்லியே ஆக வேண்டும்.

இந்த மையம் அது அமைந்திருக்கும் இடம் அதன் குளிர்மை அமைதி அது தந்த மனநிறைவு முக்கியமாய்
 மலைக்காட்டிற்கே உரியதொரு திமிர்ந்த அழகு. மொத்தமாய் கண்களில் அள்ளிக்கொள்ள தங்கியிருந்த மூன்று நாட்கள் போதவே இல்லை. உரைக்காத வெயிலும் கூடவே சில்லிப்பும் எப்போது வேண்டுமானாலும் முகாந்தரமே இல்லாமல்   துளிர்ந்த தூரல் மழையும் இன்னும் இன்னும் போதாமையை கூட்டிக்கொண்டே இருந்ததே தவிர திகட்டலே இல்லையே.

இந்த மூன்று நாட்களுக்கு முந்தைய நாளில் தங்கியிருந்த கொடைக்கானல் மலை என்னை பெரிதும் ஈர்க்கவில்லை.ப்ப்பா சீசன் நேரம் வேறா! கால்வாசி ஜனத்தொகை இங்குதான் இருக்கும் போல. அப்படியொரு கூட்டம் நசநசப்பு  வெக்கை ட்ராபிக் நிற்க நகர இடமில்லாத அளவு. கோக்கர்ஸ் வாக் பக்கமெல்லாம் டிக்கட் வாங்கிக்கொண்டு  உள்ளே நுழையும் மக்கள் இடப்புறம் விரிந்திருக்கும் இயற்கையை நிதானமாய்  காணக்காணோம். வலப்புறம் பரப்பபட்டிருக்கும் கடைகளில் குவிந்து
வியாபார பேரத்தில் மும்முரமாய் இருந்ததை பார்க்க முடிந்தது. லேக் பக்கம் அரைமணிக்கு ஐம்பது ரூபாய்க்கு வாடகை சைக்கிள் எடுத்து சுற்றலாம் ஆனால் எங்கே!! மனிதக்கூட்டத்திற்கு இடையே நடையே பெரிய விசயம்.

மேக் மை ட்ரிப்பில் ரிவ்யூ பார்த்து இது தேறுமென தோன்றிய  பின் தான் தங்கும் அறை புக் செய்த்திருந்தேன். Valley view inn hotel. பெண்கள் மட்டும் தங்க ஏதுவாய் சிக்கலில்லாமல் தான் இருந்தது.ஆனால்
கொடுத்த காசுக்கு அறைவசதிகள் மட்டம். போகட்டும்.

மறுநாள் கிளம்பி ஜென் மையத்திற்கு போன நொடியில் இருந்து அங்கிருந்து கிளம்பின நிமிடம் வரை மறக்கவே முடியாதது.
 இந்தியன், ஈரோப்பியன், திபேத்தியனென யாருக்கும் யாரோடும் எந்த பேதமும் பாகுபாடும் இல்லாமல் மனிதம் என்ற நிறம் மட்டுமே தெரிந்த இடம்.   சுகிர்தாவை  சுகியின் இலகுவாக பழகும் நண்பர்கள் எனக்கும் நண்பர்களானதையும் நால்வருமாய் மலைக்காடெல்லாம் கணக்கில்லாமல் சுற்றிவந்ததையும் என்ன சொல்ல.

சுகியின் நண்பனுக்கு அங்கே சுற்றுவட்டார மலைக்காடுகளின் இண்டு இடுக்குகலெல்லாம் தெரிந்திருக்கிறது. காலை பசியாறலுக்கு பின் ட்ரெக்கிங் கிளம்பினோம்.
 எதிரே..
 இரோம் சர்மிளா இலகு நடை முடித்து  ஒரு பெரியவரோடு வந்துகொண்டிருந்தார்.

காட்சிப்பிரதியாய் தன்னை மற்றவர்கள் பார்ப்பதை அவர் ஒருபோதும்  விரும்புவதில்லையென சுகிர்தா சொன்னதால் மலர்ந்த புன்னகையையும் கைகுவித்த வணக்கத்தையும் அவ்விருவரையும் போலவே பதிலாகத் தந்து நாங்களும் எங்கள் பாதையில் பயணமானோம்.

 ட்ரெக்கிங் இது எனக்கு முதல் அனுபவம். நாளொன்றுக்கு ஒன்பது கிலோமீட்டர் கணக்கிற்கு ஏறி இறங்கியிருந்தாலும் களைப்போ சோர்வோ துளியும் எட்டவில்லை.  எங்களைத்தவிர வேறு ஆள் நடமாட்டமே இல்லாத, அட்டைப்பூச்சிகளும் காட்டுப்பன்றிகளும் தாக்கக்கூடிய அபாயமிருந்தும் கொஞ்சமும் திகில் எழாமல் ஆர்வத்தோடு  காட்டுப்பாதையில் ஏற முடிந்தது.மலை உச்சியை எட்டிய போது ஹப்ப்ப்பா ரம்யம்.  உள்ளே பொங்கிப்பூரித்த பிரம்மிப்பு.  உடலும் மனதும் பஞ்சு போல் இலகுவாயிருந்தாலோ என்னவோ அன்றைய நாளின் தியான நேரம் அவ்வளவு பிரமாதமானதாய் இருந்தது.
இப்படியெல்லாம் ஏறி இறங்குகிற அலைந்து திரிகிற  தெம்பு இன்னும் கொஞ்சம் வயதேறும் காலத்தில் இல்லாமலே போகும். அதற்குள் இந்த அனுபவங்களையெல்லாம் அள்ளிக்கொண்டு பொத்திவைக்க வேண்டும்.  - #ஆனந்தம்
Photo

APRIL 2017 - ஏலகிரி பயணம்

இன்றையகாலை நடையை ஏழு மணிக்கு தொடங்கினேன்.
துளிர் வெயிலும் பனிபோர்த்தலுமாய் இந்த மலைப்பாதையில் நடக்க நன்றாகவே இருக்கிறது. ஒரு சில ஆட்டோக்களையும் நடந்துவருகிற கிராம மக்களையும் தவிர விடியல் நேரத்தில் வேறு வாகனங்களைக் காணோம்.

அருகே மஞ்சக்கொள்ளி அத்தனாவூரென இரு கிராமங்களின் வழி, தங்கியிருக்கும் ரிஸார்ட்டிலிருந்து நான்கு கிலோமீட்டர்கள் இன்றைய நடை முடித்து வந்தேன். கூட கொஞ்சம் நடந்திருக்கலாம் ஆனால் பத்ரம் தூரம் போய்விடாதே. டூரிஸ்ட் மலைபகுதிகளில் பாதுகாப்பு இருக்காது உள்ளேயே நடந்துவிட்டு வந்துவிடச்சொல்லி கன்ச்சு தைரியமூட்டி அனுப்பியதால் அத்தோடு திரும்பவேண்டியதாகிவிட்டது.
 இங்குள்ள கிராமங்கள் விவசாய நிலத்தினூடே முப்பது நாட்பது வீடுகளோடு இருக்கின்றன. பீன்ஸ் கத்திரி வெண்டை தக்காளி பெரும்பாலும் காய்கறிகள் தான். கொஞ்சமாய் நெல்லும் உண்டு.  இங்கே  வசிப்பவர்கள் பூர்வீகமாய் அப்பன் பாட்டன் காலத்திலிருந்து இங்கேயே பிறந்து வளர்ந்த மலைவாழ் பழங்குடியினர். குறைந்தது வீட்டிற்கு இரு டாகீஸ் கட்டாயமாய் வளர்க்கிறார்கள் போல. வீடுகள் நிறைந்த ஊள்ளூடிப்பாதைகள் வழியே போக டாகீஸ்ஸை நினைத்து பயந்து வந்ததால் சாலையோரமே நடந்தேன்.
அருகருகே உள்ள வீடுகளின் வாசல்களில்  மாட்டிற்கு வைக்கோல் வைத்துக்கொண்டும் பாத்திரங்கள் கழுவியபடியும் இருந்த  பெண்களை பார்க்கமுடிந்தது. 

எதிரே சால்வையை போர்த்திக்கொண்டு வந்த வயதான பெண்மணியிடம் பேசிப்பார்க்கலாமேன்னு தோன்றியதால்..
உங்களுக்கு தமிழ் தெரியுமான்னு தொடங்கினேனா.
இல்ல தமிழ் தெரியாதென தமிழிலேயே பதில் சொன்னார்.
" அப்போ நீங்க என்ன பேசுவீங்க. என்ன மொழியிலென கேட்டால்

சும்மா வா போ அப்படி இப்படின்னு தான் பேசிப்போம். இதோ இப்ப பேசறா மாதிரி தான் பேசிப்போம். தமிழெல்லாம் எங்களுக்கு எங்கே தெரியப்போகுதென்றார்  தமிழில் பேசிக்கொண்டே. பேசிக்கொண்டிருக்கும்
மொழிக்கு பெயர்தான் தமிழென நிஜத்திலயே அவருக்கு தெரிந்திருக்கவில்லை என்பது ஆச்சர்யம்.  பெயர் சாந்தாமணியாம்.  பாதையிலிருக்கும் திட்டில் அமர்ந்து கூட இரண்டு மூனு நிமிசம் பேசிக்கொண்டிருந்தேன். "வூட்லர்ந்து கொள்ளிக்கு போறேன்" வட ஆர்காடு மாவட்டகாரர்களின் வட்டார தொனிப்பு.

எட்டு பிள்ளைகளாம். கொள்ளிக்கு போய்  அங்கிருந்து நெல்லை எடுத்துப்போய் குத்தக்கொடுக்கவேண்டுமென்றார்.  மங்களம் கிராமத்திலிருக்கிறதாம் வீடு. அங்கே எத்தனை வீடுகளென்றால் ஒரு பத்திருக்குமென்றார். படம் எடுத்துக்கவா உங்களை என்றால் கொஞ்சம் சங்கோஜித்து சரி என்றார். ரொம்பவும் நசநசவென கேள்விகளாக கேட்டு கஷ்டபடுத்த வேண்டாமென தோன்றியதால் அத்தோடு நகர்ந்தாச்சு. அப்படியே கேட்டுவைத்தாலும் அதற்கெல்லாம் சாந்தாமணி அம்மைக்கு பதில் தெரியுமான்னும் தெரியல.

மேலும் நடையில் .. அரசு கிராம அலுவலகக் கட்டிடம் அருகேயே அரசு நூலகம், மிக அழகான சுத்தமான பராமரிப்புடனான கட்டிடங்களில் அரசுப் பள்ளியும் , மலைவாழ் மாணவர்கள் தங்கிப்படிக்கிற உணவு உறைவிடப் பள்ளியும் ஹாஸ்டலும் அதில் நண்டும் சிண்டுமாய் பிள்ளைகளையும் பார்த்தேன். பள்ளி திறந்தே இருக்கிறது உள்ளே ஆட்களைக்காணோம். ஷாஸ்டல் கேட் உள்பக்கமாய் பூட்டியிருக்கிறது. உள்ளே அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்த நண்டுசிண்டுகளோடு கதைத்த போது இதோ ஒம்பது மணிக்கு ஸ்கூல் திறக்கும். இப்ப சாப்ட்டு கிளம்புவோம் பரிட்சை பதினாலாம்தேதியில் முடியும் அப்புறம் ஊருக்கு போய்டுவோமென சொன்னது  ஐந்து, ஏழு படிக்கிற குட்டிகள். குக்கு என்கிற குட்டிபெண் இரண்டாம் வகுப்பாம். கூந்தலை பின்னிக்கொண்டே  ஒரு பையனின் பின்னே ஒளிந்துகொண்டு வெட்கத்தோடு பெயரைச் சொன்னது.

திரும்பி  வரும்போது மஞ்சக்கொள்ளையில் பார்த்த மற்றுமொரு பெண் சொன்னது வீட்டுக்காரரோட வேலையினால் ( ஆட்டோ மெக்கானிக்) இந்த ஊருக்கு வந்து ஆறு வருடங்களாகிறதாம். வாடகை குறைவு காய்கள் விலையெல்லாம் குறைவு. பிள்ளைகள் படிப்பது ஓரளவு இங்கே பெயர்வாங்கிய தனியார் பள்ளி ( சார்லஸ்) வேன் வந்து கூட்டிட்டு போகுமாம். இந்த ஊர் செட் ஆயிடுச்சா கேள்விக்கு இல்லை பிடிக்கலையாம். இந்த ஊர் மக்கள் ஒட்டி பழகுகிறவர்கள் இல்லையாம். பழக்க வழக்கங்களும் பிடித்தமானதாக இல்லை.  என்னமாதிரி பழக்கவழக்கமென்றால் புருசன் பொண்டாட்டின்னு கணக்கில்லாமல்  யாரும் யாரோடும் சகஜமாய் வாழ்வார்கள் - என்றது உண்மைதானா தெரியவில்லை. இங்குள்ள மலைக்குடி மக்கள்  எந்த இனம்/ வகையைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு அந்த பெண்ணுக்கு பதில் தெரிந்திருக்கவில்லை.

இந்த ஏலகிரியில் சுற்றுலா தலம் என்கிற ரீதியில் பெரிதாய் ஏதுமில்லை.ஆனால்
 நிறைய பின்தங்கிய, உள்ளடங்கிய கிராமங்கள் இருக்கும்போல. இங்குள்ள நடப்புகளை நிதானமாய் சுற்றி நிறைய தெரிந்துகொள்ள ஆர்வமாய்த்தான் இருக்கு. வாய்ப்பு கிடைக்கட்டும்.

#ஏலகிரி

ஏலகிரி பயணம்
முத்துமுத்தான ஏழு தமிழ் புலவர்கள் பெயர்களும், கடையேழு வள்ளல்களின் பெயர்களும் பதினான்கு கொண்டை ஊசி வளைவுகளுக்கும் பெயராக வைத்திருப்பது தனியழகு.
கூகுளாண்டவரின் உதவியை கொண்டு காட்டி பேகன் பாரி காரி ஓரி ஆய் இவர்களையெல்லாம் பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்ய கிடைத்ததொரு வாய்ப்பு.

பரபரப்பு இல்லாத அமைதியான சூழலில், சுத்தமான காற்றோட்டத்தில் குடும்பத்தோடு நேரம் செலவிட நல்லாவே இருக்கு. சுடும் வெயிலிருக்கு ஆனால் வெக்கையில்லை.

நாங்க தங்கியிருந்த ஸ்டெர்லிங் ஹாலிடேஸ் ரிஸார்ட்டில் உணவும், வசதிகளும்  நலம். எந்நேரமும் ஐ- பேடும் எக்ஸ் பாக்ஸும் ஆன்லைன் கேம்ஸுமாக உட்கார்ந்திருக்கும்  கோச் பொட்டேட்டோ கேர்ள்ஸை வீட்டிலிருந்து பெயர்த்து கொஞ்சம் வெளி விளையாட்டிற்கு திருப்பவும் முடிந்தது.
 தங்ககத்தில் அப்பாவும் மகள்களும் கேரம், செஸ், ஷட்டில் காக், வில் அம்பு எறிதல், ஸ்விம்மிங் என போட்டாபோட்டியோடு சேர்ந்தே நேரம் செலவிட்டமை ப்ளஸ்.

ஆறுமணியோடு ஊரே அடங்கிவிடுகிறது.கோவிலைக் கூட அந்நேரத்திலேயே அடைத்து விடுகிறார்கள்.  மலைரோட்டில் மருந்துக்கும் விளக்கொளி இல்லை. இருட்டோ இருட்டு.

இரண்டாம் நாள் அட்வென்சர் பார்க் திரில் வேலி என சுற்றினோம். பெற்றவர்களுக்கு தான் ஃசேப்டிய நினைச்சு கதிகலங்கும்   போல. ஆனால் குட்டிஸுக்கு பயமேது.  சாகச விளையாட்டுக்களை  ரொம்பவே ரசித்தார்கள். இந்த அட்வென்சர் பார்க் போகும் பாதையே நிஜத்தில் ஒரு அட்வென்சர் தான். மிகக்குறுகலான சாலை. அவ்வளவு பெரிய பெரிய ஏற்ற இறக்கங்களோடு. எதிரே வேறொரு வண்டிவந்தால் ஒதுங்கி நிற்கக் கூட வழியில்லாத பாதை. . பளபளப்பாய் எதோ பெரிய சிவன் சிலையோடு கோவில் தென்படவே அதே காட்டுப் பாதையில் அட்வெண்ட்சர் பார்க் தாண்டி  மேலும் தூரம் போய் பார்த்தோம். வண்டியெல்லாம் செல்லக்கூடிய பாதையே இல்லைபோல அது. மணல் ரோடு அதிலும் மிக சரிவு. திக் திக்கென  இருந்ததால்  அட்வெண்ட்சர் போதும் திருப்புங்க வண்டியன்னு வந்தாச்சு.திரும்பி வந்ததும் தெரிந்துகொண்டது. பிரைவட் ப்ராப்பர்ட்டியாம் அது. மிக பிரம்மாண்டமாய் ஒருவர் அந்த கோயிலை எழுப்பினாராம். பின்ன என்ன காரணமோ ஆறு மாசமாய் கோவில் பூட்டியேதான் கிடக்குதாம். அந்த ஓனர் அதன் பிறகு அந்தபக்கமே வரக்காணோமாம். ( பாவம் சரியா கல்லா கட்டத்தெரியல போல. இந்த ஜோக்கி சத்துகுருவிடம் டியூசனுக்கு போயிருந்தால் பிழைத்திருக்கலாம்ல).

லேக் போகிற ரோட்டில் சுடச்சுட மீன் வறுத்துக்கொடுக்கும் ஒரு அம்மாவின்( பெயர மறந்திட்டேனே) கடையில் நல்ல காரசாரமான நாட்டு கெளுத்தி மீன் சாப்பிட்டேன். ஜோர்

நேர்எதிரே ஒரு கடையில் பெயர் பலகை ஏதுமில்லாமல் உள்ளே வைத்து விற்பனை செய்வது  எதுவென வெளியே தெரியாமல் அட்டை பெட்டிகளுக்கு உள்ளே மட்டும் அடுக்கி வைத்து சரக்கு விற்கிறார்கள். ஆச்சர்யம்.

மலைக்குடி மக்கள் சிலர்
உருமி மாதிரி ஒரு மேளமும், சங்கும், சதங்கை மணியும்  மற்றும்பல பெயர் தெரியாத ஓசை/ இசை எழுப்பும் கருவிகளைக் கொண்டு ஒலியெழுப்பியவாரே தலையில் மஞ்சள் துணிகொண்டு வாய் கட்டப்பட்ட கூடைகளோடு கூடையின் மேல் பெரிய அரிவாளோடு கூட்டமாய் நடந்துகொண்டிருந்தார்கள்.
அவர்கள் குடுப்பத்தில் எவரின் உடல் மீதோ அம்மன் இறங்கிவிட்டதால் ( அம்மை நோய் கண்டதால்) உறவினர் எல்லொரும் அவரவர் வீட்டில் சோறு பொங்கி மஞ்சள் கலந்து உருட்டி சாமி உருண்டைகளாய் பிடித்து பிடித்து நடுவீட்டில் வைத்து படையலிட்டு பின் அம்மன் கோவிலுக்கு வந்து பொங்க வைத்து பன்றி ஆடு கோழிகளை பலி கொடுத்து. கறித்துண்டங்களை உறவுக்கூட்டத்திற்கு பகிர்ந்து கொடுத்து மற்ற சில சாங்கியங்களை செய்த பிறகு ஊர் சாமியாடிகளில் ஒருவரைக்கொண்டு ( அவர்களுக்கு தான் அம்மன் கட்டுப்பட்டு இறங்குமாம்)
  வேப்பிலை முதற்கொண்ட பூஜை செய்த பொருட்களையெல்லாம் ஓட்டத்தில் இருக்கும் நீரில் கரைத்து அம்மையை குளிரச்செய்வார்களாம் - கேட்டுத்தெரிந்து கொண்டது.

திரும்பும் போது வாங்கிவந்த மலை பலா தித்திப்பு
பயணம் சுவை.
Photo

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...